Thursday, August 31, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 79

தமிழ்த் திரை உலகில் தெளிவான  உச்சரிக்கும் நடிகைகளில் பண்டரிபாயும் ஒருவர். ஆரம்பத்தில் கதாநாயகியாக  ரசிகர்களின் மனதில்  நின்ற பண்டரிபாய்,  பிற்காலத்தில் பராசக்தியில் சிவாஜியின் ஜோடியாக நடித்தவர் . பின்னர்  தெய்வமகனில்  சிவாஜியின் மனைவியாகவும்,  இரட்டை வேடசிவாஜிக்கு அம்மாவாகவும் நடித்தார்.

தேன்மொழியாள்’ பண்டரிபாய் 14 வயதில் நடிக்கத் தொடங்கினார்.ஏழு  மொழிகளில் 1500 க்கு  மேற்பட்ட  படங்களில் நடித்து சாதனை படைத்தார். சிவாஜிகணேசனின் முதல் படமான பராசக்தியில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்ற பெருமைக்கு உரியவர் பண்டரிபாய். பிறகு அவருக்கு தங்கையாக, அக்காவாக, அண்ணியாக, அம்மாவாகவும் நடித்தார். பண்டரிபாயின் சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பத்கல் என்ற கிராமம். 1930ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தார். தந்தை ரங்காராவ். தாயார் காவேரிபாய். பண்டரிபாயுடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர். பண்டரிபாயின் தந்தை ஓவிய ஆசிரியர். என்றாலும் நாடகத்தன் மீது அபார மோகம். எனவே, வேலையை விட்டு விலகி, நாடகக் கம்பனி ஆரம்பித்தார். எனினும் தன் மகள்கள் யாரும் நாடகத்தில் நடிக்கக் கூடாது என்பதில் உறுதி கொண்டிருந்தார்.

நாடகத்துக்கு பதிலாக, மகள்களுக்குக் கதாகாலட்சேபம் கற்றுக் கொடுத்தார். பண்டரிபாய் தன் 10 வயதிலேயே கன்னடத்திலும், மராத்தியிலும் கதாகாலட்சேபம் செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்றார். இவ்வளவு சிறப்பாக காலட்சேபம் செய்கிற பண்டரிபாய் சினிமாவில் நடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று அவரது அண்ணன் நினைத்தார்.

அவருடைய ர் முயற்சியால் “வாணி” என்ற கன்னட படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு பண்டரிபாய்க்கு கிடைத்தது. ஹரிதாஸ் எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் மெகாஹிட் படத்தில் பண்டரிபாய்க்கு ஒரு சிறு வேடம் கிடைத்தது. தமிழில் அது தான் அவருக்கு முதல் படம். படத்தின் முதல் காட்சியில் “வாழ்விலோர் திருநாள்” என்று பாடிக் கொண்டே குதிரையில் வருவார் பாகவதர். பெண்களை துரத்துவார். ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் பண்டரிபாயை விரட்டிக் கொண்டு போவார். அவரை துயில் உரிய முயற்சிப்பார். பிறகு ஒரு மோதிரத்தை பரிசளிப்பார்.

இந்தக் காட்சியில் பண்டரிபாய் நடித்தார். அப்போது அவருக்கு வயது 14 தான்.

பிறகு ஏ. வி. எம். தயாரித்த “வேதாள உலகம்” என்ற படத்தில் காளியாகத் தோன்றினார் பிறகு, வைஜயந்தி மாலா கதாநாயகியாக அறிமுகமான “வாழ்க்கை” படத்தில் இரண்டாவது கதாநாயகியாக பண்டரிபாய் நடிப்பதாக இருந்தது. ஆனால் தமிழில் சரிவர பேச வராததால் அந்த வேடத்தில் டி. கே. எஸ். நாடகக் குழுவைச் சேர்ந்த எம். எஸ். திரவுபதி நடித்தார். “வாழ்க்கை” படம் “ஜீவிதம்” என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட போது இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.பண்டரிபாய்க்கு தமிழ் கற்றுக் கொடுக்க பி. டி. சம்பந்தம் என்ற நடிகரை ஏ. வி. எம். நிறுவனம் ஏற்பாடு செய்தது.  என்றாலும் பண்டரிபாயிடம் இருந்து தமிழ் வார்த்தை தெலுங்கில் தான் வந்தது .பி டி சம்பந்தம் பண்டரிபாயிடமிருந்து தெலுங்கை கற்றுக்கொண்டது தான் மிச்சம் .பின்னர் சகஸ்ரநாமத்திடம் தமிழ் கற்றார் 

விரைவிலேயே தமிழில் அழகாக வசனம் பேச பண்டரிபாய் கற்றுக் கொண்டார்.   சின்ன வேடங்களில் நடித்த படங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் பண்டரிபாய் முக்கிய வேடத்தில் நடித்த முதல் தமிழ்ப் படம் பராசக்தி தான். அதில் சிறப்பாக நடித்ததுடன் கலைஞரின் வசனங்களை தெளிவாகவும், இனிமையாகவும் பேசி தேன்மொழியாள் என்று போற்றப்பட்டார்.

தொடர்ந்து சிவாஜிகணேசனுடன் பல படங்களில் பண்டரிபாய் நடித்தார். “கண்கள்” படத்தில் தங்கை, “திரும்பிப்பார்” படத்தில் அக்காள், “அந்தநாள்” படத்தில் மனைவி..... இப்படி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார். கன்னட உலகில் ராஜ்குமார் அறிமுகமான முதல் படத்தில் ராஜ்குமாருக்கும் ஜோடியாக நடித்தவர் பண்டரிபாய்.

  தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர், நடிகைகள் தோன்றி மறைந்தாலும் அவர்களின் புகழ் என்றைக்கும் மாறாமல் காலங்காலமாக நின்னு பேசும். அவர்கள் செய்த சாதனைகள் என்றும் அழியாமல் வரலாற்றில் எழுதி வைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் மிகவும் பெருமைக்குரிய நடிகையாக கருதப்படுபவர் நடிகை பண்டரிபாய்.

சிவாஜிகணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ காலத்திலேயே பண்டரிபாய், தமிழிலும் நடிக்க வந்துவிட்டார். படத்தில் குணசேகரனுக்கும் தங்கை கல்யாணிக்கும்தான் முக்கியத்துவம் என்றாலும் பண்டரிபாய் தன் பாந்தமான நடிப்பால் வெகுவாகவே கவர்ந்திருப்பார். ‘புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே...’ என்று பாடி நம் மனங்களையெல்லாம் ஈர்த்திருப்பார்.

பிறகு பல படங்களில் நாயகியாகத்தான் நடித்தார். தமிழில் பாடல்களே இல்லாமல் வந்த முதல் படமான ‘அந்தநாள்’ படத்தில் சிவாஜியின் மனைவியாக நடித்துக் கலக்கியிருப்பார். ‘சிவாஜியைக் கொலை செய்தது யார்?’ என்ற விசாரணையுடன் தொடங்கும் படத்தின் முடிவில், பண்டரிபாய் சொல்லும் வார்த்தைகளும் அட்சரம் பிசகாமல் பேசுகிற தமிழ் உச்சரிப்பும் வசனங்களும் அப்போதே பிரமிக்கவைத்தன.

குணசித்திரக் கதாபாத்திரங்கள் கிடைத்தன. அம்மா கதாபாத்திரத்துக்கு நடிக்க, கண்ணாம்பாவும் எம்.வி.ராஜம்மாவும் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்தை நிரப்புவதற்கு பண்டரிபாய் பொருத்தமானவர் என தமிழ் சினிமா முடிவு செய்தது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர் என அறுபதுகளின் மத்தியில் இருந்து தொண்ணூறுகள் வரைக்கும் ‘அம்மா... அம்மா... அம்மா...’ என்றே வாழ்ந்துகாட்டினார் பண்டரிபாய். ‘தெய்வமகன்’ படத்தில் வேறொரு அம்மா. ‘அடிமைப்பெண்’ படத்தில் இன்னொரு முகம் காட்டும் அம்மா. ‘கெளரவம்’ படத்தில் சாந்தமும் பணிவும் கொண்டு புருஷனின் எல்லையை மீறாத, மகன் மீது நேசம் கொண்ட பாவப்பட்ட அம்மா. திருடனாக வந்தவன் காயத்துடன் வந்திருக்க அவனுக்கு அடைக்கலம் கொடுத்து, அவனைக் காப்பாற்றி, பிறகு அவனும் தன் பிள்ளைதான் எனத் தெரியவரும் போது, கலங்கித் தவித்து, ‘காணாமல் போன மகன் கிடைத்துவிட்டான்’ என்கிற பூரிப்பைக் காட்டுகிற அம்மா... என்று பண்டரிபாய் எடுத்துக்கொண்ட அம்மா கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப, தன் உடல்மொழியை மாற்றினார். குரலின் ஏற்ற இறக்கங்களுக்கு உயிர் கொடுத்தார். நிறைய பட விமர்சனங்களில், பண்டரிபாயின் நடிப்பும் தமிழ் உச்சரிப்பும் ரொம்பவே பாராட்டப்பட்டன.

‘நம்நாடு’ படத்தில் பண்டரிபாய் பேசப்பட்டார். ’எங்க வீட்டு பிள்ளை’யில் எம்ஜிஆரின் அக்காவாக, கொடுமைக்கார நம்பியாரின் மனைவியாக பரிதாபப்பட வைத்திருப்பார். ‘வசந்தமாளிகை’ படத்தில் பண்டரிபாயின் நடிப்பும் சிவாஜிக்கும் அவருக்குமான காட்சிகளும் நெகிழவைத்துவிடும். மாலைக்கண் நோயுடன் போராடுகிற சிவாஜிக்கு அம்மாவாக பண்டரிபாய் நடிப்பில் வெளுத்துவாங்கியிருப்பார். ‘நான் வாழவைப்பேன்’ படத்திலும் சிவாஜிக்கு அம்மாவாக, வாழ்ந்திருப்பார். 

எம்ஜிஆருடன் ‘அன்னமிட்ட கை’, ‘இதயக்கனி’, ‘நேற்று இன்று நாளை’ முதலான படங்களில் தன் நடிப்பால் தனி முத்திரை பதித்தார். திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயிலில் கவிஞர் வாலி எழுதிய பாடல் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு கோயிலில், சினிமாப் பாடல் ஒன்று பொறிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. ரஜினி நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் உருவான ’மன்னன்’ படத்தையும் பாடல்களையும் எப்படி மறக்கமுடியும்?

இசைஞானி இளையராஜா இசையில், கே.ஜே.ஜேசுதாஸின் குரலில், கால்கள் நடக்க முடியாமல் இருக்க, கைகள் செயலிழந்துவிட... ரஜினிகாந்த் தூக்கிக்கொண்டு கோயிலுக்குச் செல்ல, குளிப்பாட்டிவிட, தலைவாரிவிட... ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே...’ என்ற அந்தப் பாடலும் பண்டரிபாயின் நடிப்பும் நம்மை கண்கலங்கச் செய்துவிடும். பார்க்கின்ற ரசிகர்களின் அம்மாக்கள் அங்கே பிம்பமாக, அவரவருக்குத் தெரிந்தார்கள். இன்றைக்கு, அந்தக் காட்சியை கவனித்துப் பார்த்தால், பண்டரிபாயின் முகமும் கண்களும் புன்னகையும் கைகளும் கைவிரல்களும் தனித்தனியே நடித்து, தாய்மையை நமக்குள் தளும்பத்தளும்பக் கொடுத்திருக்கும்!

 

No comments: