தமிழகத்தையும் தாண்டி இந்திய அரசியலைப் புரட்டிப்போட்ட கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் இரு கண்களாகப் போற்றும் தொண்டர்கள் நிறைந்த கட்சி. தேசியக் கட்சிகளை அரவணைத்து அரசியல் செய்தவர் எம்.ஜி.ஆர். மோடியா? லேடியா? எனச் சவால்விட்டு வெற்றிக் கொடி நாட்டியவர் ஜெயலலிதா.
தமிழகத்தில் தாமரையை மலரவைக்க முயற்சி செய்த்து தோற்றுப் போனவர் தமிழிசை. அரசியலில் அதிரடி காட்டி தன்னை முன்னிலைப் படுத்தும் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் அண்ணாமலையால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி ஏற்படும்போது டில்லித் தலைவர்களின் முடிவே இறுதியானது. அண்ணாமலையின் தன்னிச்சையான நடவடிக்கையால் டில்லித் தலைமை அதிர்சிசையடைந்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட பெரியகட்சி பாரதீய ஜனதா என்ற போதையில் அண்ணாமலை மிதக்கிறார்.எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கும் பொருத்தம் சரியில்லை. அண்ணாமலையின் அத்து மீறிய பேச்சை அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தைவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். எடப்பாடி, அண்ணாமலை மோதல் உச்சத்தில் உள்ளது. டில்லித் தலைவர்களுக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழாக்த்துகும் இடையிலான உறவு சுமுகமாக உள்ளது. அண்ணாமலையுடனான உறவில் பாரிய விரிசல் விழுந்துள்ளது.
இராமேஸ்வரத்தில் இருந்து அண்ணாமலை பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து நடைபெறும் பாத யாத்திரை எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லை என்றால் பாரதீய ஜனதாவால் தமிழகத்தில் எதனையும் வெற்றிகரமாகச் செய்ய முடியாது என்பதை பாத யாத்திரை உணர்த்தியுள்ளது. பாதயாத்திரை செல்வதைவிட கரவனில் அதிக நேரத்தை அண்ணாமலை செலவிடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதயாத்திரைக்கிடையில் மதுரையில் அண்ணாமலை கொடுத்த பேச்சால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
"ஓ .பன்னீர்செல்வத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. என்டிஏ கூட்டணி குறித்து முடிவு செய்வோம். அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல விஷயங்களை செய்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கவே நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதற்குத்தான் பாரதீய ஜனதாவில் இணைந்தேன் . கட்சியின் தொண்டனாக தலைமை சொல்வதை கேட்பேன். அவர்கள் சொல்வதை கேட்டு அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லி போவதில், அங்கே பதவி பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். தமிழ்நாட்டில்தான் நான் அரசியல் செய்வேன்," என்று அண்ணாமலை கூறி உள்ளார்.
பன்னீர்ச்செல்வத்தை அண்ணாமலை புகழ்ந்து பேசியதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. நடைப்பயணத்திற்கு இடையே அண்ணாமலை ஓ பன்னீர்செல்வத்திற்கு போன் செய்து நீண்ட நேரம் ஆலோசனை செய்துள்ளாராம். இவர்கள் என்ன பேசினார்கள், ஏன் பேசினார்கள் என்ற விபரம் எதுவும் வெளியாகவில்லை.
அண்ணாமலை எல்லை மீறிவிட்டதாக எடப்பாடி கருதுகிறார். அண்ணாமலையின் திருகுதாளங்கள் அனைத்தும் டெல்லிக்குத் தெரியும். தமிழக பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களும் அண்ணாமலையைப் பற்றிடில்லுக்குப் புகாரளித்துள்ளனர்.
அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துள்ளார்."மோடி ஜிக்கு எங்க தலைவரோட அருமை தெரியுது, அண்ணாமலைக்கு தெரியலனா நாங்க என்ன சொல்றது. அரசியல் கத்துக்குட்டிக்கு நாங்கள் பதில் சொல்லத் தேவையில்லை. அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி எங்கள் மீது துரும்பை வீசினால் மீண்டும் நாங்கள் இரும்பை வீசுவோம்," என்று செல்லூர் ராஜு காட்டமாக பதிலளித்துள்ளார்.
செல்லூர் ராஜுக்கு அண்ணாமலை அளித்த பதிலில், விஞ்ஞானி செல்லூர் ராஜு கெல்லாம் பதில் சொல்லி என்னோட தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை , என்று கூறினார்.
அண்ணாமலையின் இந்த பேட்டியை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் பற்றி அண்ணாமலை இப்படி பேசி இருக்க கூடாது. அவர் எல்லை மீறிவிட்டார் என்ற கோபத்தில் இருக்கிறாராம்.
பாரதீய ஜனதாவின் மதுரை மாநகர் தலைவர் மகா.சுசீந்திரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவருடைய விமர்சனம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கொந்தளிக்கச் செய்துள்ளது.
சுசீந்திரனின் அரிக்கையில், " இனிவரும் காலங்களில் திமுக. அதிமுக கட்சிகள் கூட்டணியின்றி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் 17% சதவீத வாக்கு வங்கிகளை கடந்து செல்கின்ற பாஜகவுடன் போட்டியிட தயாரா? நாங்கள் தேர்தல் களத்தில் பணிபுரிபவர்கள். உங்களுடைய பலமும், பலவீனமும் எங்களுக்கு தெரியும். ஆளும்கட்சி செய்கின்ற ஊழல்களை கண்டறிந்து DMK File 1 & DMK File 2 என்று நடவடிக்கை எடுத்து ஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பிய எங்களுக்கு அதிமுகவின் ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தேடி எடுத்து எங்களுடைய தலைமைக்கு அனுப்ப எவ்வளவு நேரமாகும் என்று கருதுகிறீர்கள். மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம், எனக் குறிபிடப்பட்டுள்ளது.
சுசீந்திரன் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர். அண்ணாமலையின் அனுமதி இன்றி இவர் அறிக்கை வெளியிட இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் பாஜக மீது எடப்பாடி கோபமாக இருக்கிறாராம்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை தொட்டால் அண்ணாமலை கெட்டார் என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பாஜக நிர்வாகி கரு நாகராஜன் பதிலடி கொடுத்திருந்தார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி இடையே கடும் வார்த்தை போர் நடந்து வருகிறது. அண்ணாமலிக்கு ஆதரவாக சிலர் பேசுவதை டில்லி விரும்பவில்லை.
தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் . அப்போதுதான் இன்றைக்கு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் பாஜக ஆட்சியில் அமரும் காலம் வரும். அப்போதுதான் பாஜகவின் செல்வாக்கு உயரும் என்று அண்ணாமலை நினைக்கிறார் . ஆனால் பாஜகவின் மற்ற மூத்த நிர்வாகிகள் இதற்கு உடன்படவில்லை. குறிப்பாக பாஜக டெல்லி தலைமையும் கூட இதற்கு உடன்படவில்லை. அதனால் அதிமுகவை அனுசரித்துச் செல்ல அண்ணாமலைக்கு அறிவுறுத்தி வருகிறது. அதே நேரம் அதிமுகவை சீண்டும் வேலையை செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலைக்கு தலைமை அறிவுறுத்தி இருக்கிறதோ என்னவோ அந்த வேலையை அண்ணாமலை அடிக்கடி செய்து கொண்டே இருக்கிறார்.
ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கும் இடையேயான மோதல் வலுத்தது. இதற்கு அடுத்தபடியாக பாஜகவின் தொழில்நுட்ப அணி தலைவர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த போது ரொம்பவே கொந்தளித்து விட்டார் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன், சசிகலா புஷ்பா
உள்ளிட்ட அதிமுகவினர் பாஜகவுக்கு சென்ற போது அதிமுகவில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. அதே பாஜகவினர் அதிமுகவிற்கு சென்றபோது ரொம்பவே கொந்தளித்தார் அண்ணாமலை. இதனால் இரு கட்சிக்கும் இடையே மோதல் உச்சகட்டத்திற்கு சென்றது. மாறி மாறி இருகட்சியினரும் வசை பாடிக்கொண்டிருந்தனர்.
ஆனாலும், அண்ணாமலையை மாற்றுவதற்கு டில்லி விரும்பவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகத் தினமும் ஒரு குற்றம் சுமத்தி அண்ணாமலை செய்யும் அலப்பறையை டில்லி விரும்புகிறது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகையில் இந்த மோதல் முடிவுக்கு வந்துவிடும்.
No comments:
Post a Comment