அமெரிக்காவின் அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற FIFA உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் 'ஏ' லீக் போட்டியில், செக் குடியரசு , தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதின. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த விறுவிறுப்பான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
தங்களின் முதல் போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்த இரு அணிகளுக்கும், உலகக் கிண்ணத்தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாக இருந்தது. இந்த டிரா மூலம் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்று, தங்களின் உலகக் கிண்ண வாய்ப்பை உயிர்ப்போடு தக்கவைத்துள்ளன.
ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்தில் செக் குடியரசு அணி முன்னிலை பெற்றது. அணியின் இளம் வீரர் சோஜ்கா கொடுத்த சாதுரியமான பாஸை பயன்படுத்தி, மிச்சல் சாடிலெக் (Michal Sadílek) மிகத் துல்லியமாக கோல் அடித்து அசத்தினார். இது இந்த உலகக் கிண்ணத் தொடரின் அதிவேக கோல்களில் ஒன்றாகப் பதிவானது.
தென்னாப்பிரிக்கா அணி 60 சதவீதத்திற்கும் அதிகமான நேரம் பந்தைத் தன்வசம் வைத்திருந்த போதிலும், செக் குடியரசின் பலத்த தடுப்பாட்டத்தை மீறி அதைக் கோலாக மாற்றத் தவறியது.
75-வது நிமிடத்தில் நடுக்களத்தில் தேவையற்ற தாக்குதலில் ஈடுபட்டதற்காக செக் குடியரசு அணியின் கப்டன் கிரெய்சிக்கு நடுவர் மஞ்சள் அட்டை (Yellow Card) காண்பித்தார். போட்டியின் 83-வது நிமிடம் கிடைத்த பெனால்டி வாய்ப்பை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர மிட்ஃபீல்டர் டெபோஹோ மொகோயினா (Teboho Mokoena), பந்தை இடதுபுறம் மிக எளிதாக உதைத்து கோலாக்கினார். இதனால் ஸ்கோர் 1க்கு1 என்ற கணக்கில் சமணானது.
ஆட்டத்தின் கூடுதல் நேரம் 7 நிமிடங்கள் வழங்கப்பட்டன. 90-வது நிமிடத்திற்குப் பிறகு, செக் குடியரசு அணியின் புரோவோட் மிக நெருக்கமான தூரத்திலிருந்து அடித்த கோல் வாய்ப்பு நூலிழையில் இலக்கை விட்டு வெளியேறியது. மறுபுறம், தென்னாப்பிரிக்காவின் மாககோபா அடித்த பந்தைக் கோல்கீப்பர் திறம்பட தடுத்தார். இரு அணிகளும் வெற்றி கோலுக்காகத் தீவிரமாக முயற்சித்தும் பலன் கிடைக்காததால், இறுதியில் ஆட்டம் சமனில் முடிந்தது.
உலகக்கிண்ணம் 26,அமெரிக்கா,கனடா, மெக்ஸிகோ,விளையாட்டு, செக் குடியரசு, தென்னாப்பிரிக்கா
