Saturday, April 13, 2019

டோனியைக் கோபப்பட வைத்தவர்


கப்டன் கூல் எனப் பெயர் பெற்றவர் டோனி. எந்தச் சந்தர்ப்பத்திலும் பதற்றப்படாமல், கோபப்படாமல் இருப்பவ்ர். கப்டன் என்றால் டோனியைப்போல இருக்க வேண்டும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட டோனியே கோபப்படுமளவுக்கு நடுவர் ஒருவர் செயற்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 6 பந்துகளில் 18 ஓட்டங்கள். பென் ஸ்டோக்ஸ் பந்துவீச வந்தார். முதல் பந்தில் ஜடேஜா கீழே விழுந்தாலும் பந்தை ஸ்ட்ரெய்ட் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். அடுத்த பால் நோ பால். ஒரு ஓட்டம் அடித்துவிட்டு ஓடினார் ஜடேஜா.. ஸ்ட்ரைக்கிற்கு வந்தார் டோனி. ஃப்ரீ ஹிட்டில் இரண்டு ஓட்டங்கள் அடித்தார் டோனி. 4 பந்துகளில் 8 ஓட்டங்கள் அடிக்க வேண்டும். டோனி க்ளீன் போல்டு. 43 பந்துகளில் 58 ஓட்டங்கள் அடித்திருந்தார் டோனி. இதில் 32 ரன்கள் ஓடி ஓடி எடுத்தது. சான்ட்னர் க்ரீஸுக்கு வந்தார். ஸ்டோக்ஸ் வீசிய நான்காவது பந்து இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸாக வரை அதை 2 ஓட்டங்களுக்கு அடித்துவிட்டு ஓடினார் சான்ட்னர். இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸாக வந்த பந்தை முதலில் `நோ பால்காட்டிய அம்பயர், லெக் அம்பயரை பார்த்ததும் முடிவை மாற்றிக்கொண்டு `நோ பால்இல்லை என்று மறுத்துவிட்டார். இதனால் Dugout-ல் இருந்த டோனி கடுப்பானார். கைகளை உயர்த்தி `நோ பால்எனச் சத்தம் போட்டவர் ஒரு கட்டத்தில் மைதானத்துக்குள் வந்தார்.

இரண்டு அம்பயர்களுடனும் வாக்குவாதம் செய்தார். நோ பால் காட்டிய அம்பயரை கைகளை நீட்டி பேசிக்கொண்டிருந்தார் டோனி. ஆனால், நோ பாலாக அது அறிவிக்கப்படவில்லை. இதனால் 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை என ஆட்டம் மாறியது. அடுத்த பந்தில் 2 ஓட்டங்கள் அடித்தார் சான்ட்னர். கடைசி பந்தில் 4 ஓட்டங்கள் தேவை. ஆனால், அடுத்த பந்தை வைடாக வீசினார் ஸ்டோக்ஸ். இதனால் கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவை என ஆட்டம் பரபரப்பின் உச்சத்தைத்தொட்டது. இரண்டு ஓட்டங்கள் அடித்தால் ஆட்டம் டை-யாகும், சூப்பர் ஓவருக்குப் போகும் என விறுவிறுப்பு கூடியது. ஆனால், கடைசி பந்தை ஸ்ட்ரெய்ட் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் சான்ட்னர். சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றது. டோனி மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்றார்.

கள நடுவர்களின் முடிவுகள் இந்தத் தொடரில் தொடர்ச்சியாகச் சர்ச்சையாகி வருகிறது. பெங்களுரூ - மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் கடைசிப் பந்தில் நோ பால் வீசப்பட்டும் அதை நடுவர்கள் கவனிக்காமல் விட்டது சர்ச்சையானது. கடைசிப் பந்தில் பெங்களூர் வெற்றிபெற 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: