Tuesday, April 30, 2019

சீனா உதயகுமாரின் தமிழினி


சிறுகதை,கவிதை, கட்டுரை,இலக்கியம்,சினிமா  என பல்துறையில் தனது ஆளுமையை வெளிப்படுத்தும் சமரபாகு சீனா உதயகுமார், தமிழினி எனும் சிறுகதைத்தொகுப்பை அண்மையில் வெளியிட்டுள்ளார். தினக்குரல், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளிலும், ஜீவநதி,ஞானம்,ஒளி அரசி ஆகிய சஞ்சிகைகளிலும் பிரசுரமான 11 சிறுகதைகள் இத் தொகுப்பில் அடங்கி உள்ளன.

ஒன்பதாம் வகுப்பில் ஒன்றாகப் படிக்கும் தமிழினிக்கும் குமரனுக்கும் இடையிலான மென்மையான நட்பை காதல் என தவறாக வெளிப்படுத்தும் விதமாக "தமிழினி" எனும் கதை அமைந்துள்ளது.

காதலைப்பற்றி எதுவும் அறியாத  மாணவப் பருவத்தில் ஏற்படும் அன்பை காதல்,  என ஊரவர்கள் நினைக்கிறார்கள். பாடசாலையில் கடமையாற்றும்  ஆசிரியர்களும் நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாது தமிழினியையும் குமரனையும் தண்டிக்கிறார்கள். அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல்தாக்கத்தை இப்படியான ஆசிரியர்கள் அறிவதில்லை.

 தமிழினியையும் குமரனையும் சுற்றி இருப்பவர்களின் சந்தேகப்பார்வை அவர்களுக்கிடையிலான   நெருக்கத்தை அதிகரித்தது. பாலர் பருவம் தாண்டி இளமைப்பருவம் ஆரம்பிக்கையில் பெற்றோரே அவர்கள் இருவரையும் நெருங்கவிடாமல் தடுத்தனர். தமிழினி பெற்றோருடன் கிளிநொச்சிக்கு சென்றதும் அவர்களுக்கிடையிலான நட்பு முடிவுக்கு வந்தது. தமிழினியின் தொடர்பு முடிந்து விட்டது என குமரன் நினைத்திருக்கையில், 17 வருடங்களுக்குப் பின்னர்  வீதியில்  குமரனைக் கண்டாள் தமிழினி. குமரனால் முதலில் தமிழினியை அடையாளம் காண முடியவில்லை.

 குமரனின் வீட்டுக்குச் சென்ற தமிழினி அவனின் மனைவியையும் பிள்ளைகளையும் சந்தித்து அன்பாகப் பழகுகிறாள். தனது பழைய காதலைப்பற்றி தனது மனைவி ஏதும் கேட்பாளோ எனத்தெரியாது குமரன் கலங்குகிறான். அவள் கடைசிவரைகேட்காமல் தந்து கண்ணியத்தை வெளிப்படுத்துகிறாள். ஆசிரியையான தமிழினி ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை என   குமரனின் மனதில் எழுந்த அதே கேள்வி வாசகர் மனதிலும் தோன்றுகிறது. அதை எப்படிக் கேட்பது எனத் தெரியாது குமரன் தடுமாறியபோது தமிழினி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

இரண்டு பெண் பிள்ளைகளை குமரனுக்கும் அவனது மனைவிக்கும் அறிமுகப்படுத்தினாள் தமிழினி. தடுப்பு முகாமில் அனாதையாக நின்ற அநாதைச் சிறுமிகள் அவர்கள். அங்குள்ள வசதியற்ற பிள்ளைகளுக்கு  தனது வீட்டில் இலவசமாக பாடம் சொல்லிக்கொடுக்கிறாள் தமிழினி. தமிழினியின் செய்கைகளால் அவள் மீதிருந்த மதிப்பு குமரனுக்கு அதிகரிக்கிறது.

பணம் இருந்தால் எல்லாத்தையும் வாங்கிவிடலாம் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. காசிருந்தால் வாங்கக்கூடாதவற்றையும் வாங்கலாம் என்பதை “ காசிருந்தால் வாங்கலாம்” என்ற கதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கனடாவில்  வசிக்கும் தனது மகன் ரஞ்சித்துக்கு யழ்ப்பாணத்தில் ஒரு பெண்ணைப்பார்த்து மணமுடித்து  வைக்கிறாள்  பொன்னி. மருமகள் மாலியுடன் கல்கிசையில் வாங்கிய வீட்டில் குடியிருக்கிறாள் பொன்னி. மகன் ரஞ்சித் கனடாவுக்குத் திரும்பச்சென்றுவிட்டான். மருமகள் மாலி கனடாவுக்குச் செல்லும்வரை அவளுக்குத் துணையாக கல்கிசை வீட்டில் பொன்னியும் இருந்தாள்.

கர்ப்பமான மாலிக்கு எய்ட்ஸ் இருப்பது இரத்தப் பரிசோதனையில் தெரிய  வருகிறது. அழகு சொரூபியான மாலி தப்புச் செய்திருப்பாள் என பொன்னி நினைக்கிறாள். தன்னையும் மகனையும் ஏமாற்றிய விரக்தியில் மாலியைத் துன்புறுத்துகிறாள். மாலி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இதனை அறிந்த ரஞ்சுத் தாய்க்கு ஒரு கடிதம் அனுப்புகிறான். அக்கடிதத்தில் தனக்கு எய்ட்ஸ் இருப்பதை வெளிப்படுத்துகிறான்.
வெளிநாட்டு மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும்போது இரத்தப் பரிசோதனை அவசியம் என்பதை கதாசிரியர் அழுத்தமாகச் சொல்லியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகத்தை பட்டும்படாமலும் நாசூக்காக ”சுயம் உரிப்பு” எனும் கதை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் வக்கிரம் கொண்ட குடும்ப உறவுகளால் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கையில் உருவாகும் பிரச்சினைகளையும் “சுயம் உரிப்பு” சொல்கிறது. அறியாத வயதில் தெரியாமல் செய்யும் தவறுகள் எதிர்கால வாழ்க்கையிலும் தொடரும் எனக் கருதும் கயவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் கதை.

கணவனை இழந்த ஆசிரியையும் அவளின் மகளும் சந்திக்கும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை “அம்மா” எனும் கதையின் வாயிலாக அறியமுடிகிறது. கணவன் இல்லாத இளம் ஆசிரியையின் மீது சக ஆசிரியருக்கு ஏற்படும் காதல்.  அம்மாவா காதலனா என்ற புதிருக்கு மகள் எடுக்கும் முடிவு யதார்த்தமாக இருக்கிறது.

“மகேஸ்வரன் சேர்” போன்ற ஆசிரியரை இப்போது காண்பது அரிது. ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை “மகேஸ்வரன் சேர்வெளிப்படுத்துகிறது. முன்னைய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடயேயான உறவு பாடசாலையையும் தாண்டி வீடுவரை இருந்ததை ஆசிரியர் அழகாகத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், வாழ்வாதார உதவிகளை வழங்கும் அரச அலுவலகத்தில் தினசரி நடப்பதை ”கிறுக்கல் சித்திரங்கள்” எனும் கதைமூலம் பகிரங்கப்படுத்தியுள்ளார் சமரபாகு சீனா உதயகுமார். அரசாங்க வேலை கிடைக்கும் வரை கடமையைப்  பற்றிச் சிந்திப்பவர்கள் வேலை கிடைத்ததும் முழுமையாக மாறிவிடுவார்கள் என்பதை ”கிறுக்கல் சித்திரங்கள்துலாம்பரமாக தெரியப்படுத்துகிறது.

புலமைப்பரிசில் பரீட்சையில்  உள்ள நுண் அரசியலை “புலமைப்பரிசில்” எனும் கதையின்வாயிலாக தெரியக்கூடியதாக உள்ளது. சமரபாகு சீனா உதயகுமார் பிரபல கணித ஆசிரியர் ஆகையினால் புலமைப்பரிசில் பரீட்சையில் மறைந்துகிடக்கும் கட் அவுட் புள்ளியை இலகுவாக எடுத்துரைத்துள்ளார். அவர் ஒரு  ஆசிரியராக இருப்பதனால் பாடசாலைப் பிரச்சினைகள் பலவற்றை தனது கதையின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.

சாதிப் பிரச்சினையால் வடமராட்சியில் கைகூடாத காதலர்கள் பல ஆண்டுகள் கடந்து வெளிநாட்டில் திருமண பந்ததில் இணைவதை “மைதிலி”  கதை சொல்கிறது. புதிய கோணத்தில் புதிய சிந்தனையில் கதை நகர்த்தப்பட்டுள்ளது
.
சமூகத்தில் நடைபெறும் அவலங்களை சகிக்க முடியாத சமரபாகு சீனா உதயகுமார் தனது கதைகளினூடு வெளிப்படுத்தி  நியாயம் கேட்கிறார்.
வர்மா.
தினகரன்  28/04/2019

No comments: