Monday, June 19, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -69


 புகழ்மிக்க ஏவி.எம் நிறுவனம் எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்துக்கு முன்பிருந்தே படங்களைத் தயாரித்துவந்த அந்நிறுவனம், 1952-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி வசனத்தில், கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோரின் இயக்கத்தில், பெருமாள் முதலியாருடன் இணைந்து ‘பராசக்தி’ படத்தைத் தயாரித்தது. சிவாஜி கணேசன் எனும் ஒப்பற்ற கலைஞன் நமக்கு அறிமுகமானார்.

இதையடுத்து, வீணை பாலசந்தர் இயக்கிய ‘அந்த நாள்’ எனும் பாடல்களே இல்லாத படத்தை மெய்யப்பச் செட்டியார் தயாரித்தார். சிவாஜி நாயகனாக நடித்தார். இத்தனைக்கும் சிவாஜிக்கு முன்னதாக அந்தக் கேரக்டரில் இரண்டு பேர் நடித்தார்கள். அவர்களின் நடிப்பைப் பார்த்த மெய்யப்பச் செட்டியாருக்கு திருப்தி இல்லை. ‘’கணேசனைக் கேளுங்க. அவர் நடிச்சாத்தான் நல்லாருக்கும்’’ என்று வீணை பாலசந்தரிடம் செட்டியார் சொல்ல, சிவாஜி நடித்துக் கொடுத்தார். இதையடுத்தும் பல படங்களில் சிவாஜியும் மெய்யப்பச் செட்டியாரும் இணைந்து பணியாற்றினர். 1964-ம் ஆண்டு ‘பச்சை விளக்கு’ எனும் படம் ஏவி.எம் - சிவாஜி கூட்டணியில் வந்து வாகை சூடியது.

பிறகு, 4 வருடங்கள் கழித்து, ஏவி.எம். நிறுவனமும் சிவாஜியும் இணைந்து உருவான படம் ‘உயர்ந்த மனிதன்’. இதற்குப் பின்னணியில் பல சுவாரசியங்கள் நிறைந்திருக்கின்றன.

ஏ.பி.நாகராஜன் இயக்கிய படத்தில் சிவாஜி நடித்து முடித்திருந்தார். படம் எப்படி வந்திருக்கிறது என்று முழுவதும் பார்ப்பதற்காக, ஏவி.எம் ப்ரிவியூ தியேட்டருக்கு இருவரும் வந்தார்கள். உள்ளே தியேட்டரில் ஏவி.எம் தயாரித்து முடித்திருக்கும் படத்தை மெய்யப்பச் செட்டியார் பார்த்துக்கொண்டிருந்தார். தன்னுடைய படங்களை எடுத்தவரைக்கும் பார்த்துவிட்டு, அதில் நிறைகுறைகளைச் சொல்லுவதும் பணம் செலவானாலும் பரவாயில்லை என்று சில காட்சிகளை அப்படியே தூக்கிவிட்டு, மீண்டும் எடுக்கச் சொல்லி அறிவுறுத்துவதும் செட்டியாரின் வழக்கம். அன்றைக்கும் அப்படித்தான் தான் தயாரித்த படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

 தியேட்டருக்குள் மெய்யப்பச் செட்டியார். வெளியே சிவாஜியும் ஏ.பி.நாகராஜனும். வெளியே சிவாஜி நிற்கிறார் எனும் விஷயத்தை ஏவி.எம்.செட்டியாரிடம் எவரும் சொல்லவில்லை. ஆனால் சிவாஜிக்கோ... ‘நாம் வந்து நின்றுகொண்டிருப்பதையும் காத்துக்கொண்டிருப்பதையும் செட்டியாருக்குச் சொல்லியிருப்பார்கள். ஆனால் செட்டியார் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லையே’ என்று வருத்தம். ஒருகட்டத்தில், ‘’வாங்க கிளம்பலாம்’’ என்று ஏ.பி.நாகராஜனை அழைத்துக்கொண்டு சிவாஜி சென்றுவிட்டார்.

 இந்தத் தகவல்களையெல்லாம் பிறகு அறிந்துகொண்டார் ஏவி.எம். சரவணன். ஆனால் அப்பச்சியிடம் சொல்லவும் முடியவில்லை. சிவாஜியிடம் விளக்கவும் வழியில்லை என பரிதவித்தார்.

இதுகுறித்து ஏவி.எம்.சரவணன் பேட்டி ஒன்றில் குறிப்பிடும்போது பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

’’ஏ.சி.திருலோகசந்தரும் நானும் நல்ல நண்பர்கள். தினமும் ஒருமுறையாவது பார்த்துக்கொள்வோம். போனில் பேசிக்கொள்வோம். நான் படித்த புத்தகங்களை அவனுக்குக் கொடுப்பேன். அவன் படித்துவிட்டு எனக்கு சில புத்தகங்களை அறிமுகப்படுத்துவான். இப்படியிருக்க, ஏ.சி.திருலோகசந்தரைப் பார்க்க, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றேன். அது, சிவாஜி சார் நடிக்கும் படம். திருலோக்கைப் பார்த்துவிட்டுக் கிளம்பும் வேளையில், சிவாஜி சாரைப் பார்க்காமல், பேசாமல் போனால் மரியாதையாக இருக்காது என்று என்னை சிவாஜி சாரிடம் திருலோக் அழைத்துச் சென்றான். விஷயத்தையும் அவரிடம் சொன்னான். நானும் அன்று ப்ரிவியூ தியேட்டர் சம்பவத்தை விளக்கிச் சொன்னேன். ‘நீங்கள் வாசலில் காத்திருக்கும் விஷயத்தை அப்பச்சிக்கு யாரும் சொல்லவே இல்லை. ஒருவேளை சொல்லியிருந்தால், எங்கள் கம்பெனி படத்தை நாங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்வோமே என்று அப்பச்சி ரொம்பவே வருத்தப்பட்டார்’’ என்று சொன்னேன்.

முழுவதையும் கேட்ட சிவாஜி சார், இரண்டு நிமிடம் மெளனமாக இருந்தார். பிறகு, ‘’சரவணன்... அப்பச்சிகிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிருங்க’’ என்றார். ‘’இதெல்லாம் பெரிய வார்த்தை சார்’’ என்று சொல்லிக் கிளம்பினேன். மீண்டும் என்னை அழைத்தார். ‘’அப்பச்சிகிட்ட சேர்ந்து படம் பண்ணி ரொம்ப வருஷமாச்சு, ஒரு படம் பண்ணலாமான்னு நான் கேட்டேன்னு கேளுங்க. அப்பச்சிக்கு விருப்பம் இருந்தா, உடனே கால்ஷீட் அட்ஜஸ்ட் பண்ணித் தர்றேன்’’ என்றார் சிவாஜி சார்.

இந்த விஷயத்தை உடனே வீட்டுக்குச் சென்று அப்பச்சியிடம் சொன்னேன். ‘நமக்கும் கணேசனுக்கும் எந்த சண்டையோ பூசலோ கிடையாது. ஒரு சின்ன ‘மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்’ ஆகிப்போச்சு. அவ்ளோதான். தாராளமா சேர்ந்து பண்ணலாம்’ என்று அப்பச்சி சொல்ல, அதை சிவாஜி சாரிடம் தெரியப்படுத்தினேன்’’ என்றார் ஏவி.எம். சரவணன்.

இரண்டுநாள் கழித்து, சிவாஜி சாரிடம், ‘உத்தர் புருஷ்’ எனும் வங்கப்படத்தின் ரீமேக் வாங்கி வைத்திருப்பதையும் அதை ஒருமுறை பார்த்துவிட்டு பிடித்திருந்தால், அதையே படமாக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. சிவாஜியும் படத்தைப் பார்த்தார். படம் முடிந்து எழுந்திருக்கும்போது, ‘’சரவணன்... அந்த டாக்டரைக் கேரக்டரை நான் பண்ணட்டுமா? ரொம்ப நல்லாருக்கே அந்தக் கேரக்டர்’’ என்று தன் விருப்பத்தை சிவாஜி சார் சொன்னார். ‘’டாக்டர் கேரக்டர்ல நீங்க நடிச்சா, ஹீரோவா யாரைப் போடமுடியும் சார்?’’ என்று விளக்கிச் சொல்லி, நாயகனாக நடிக்க ஒப்புக்கொள்ளச் செய்தார்கள். ‘’அந்த டாக்டர் கேரக்டரை யார் பண்றா?’’ என்று சிவாஜி சார் கேட்க, ‘’அசோகன் பண்றாரு’’ என்று சொல்லப்பட்டது. சற்றே மெளனமானார். அந்த மெளனத்துக்குக் காரணம் உண்டு.

சில வருடங்களாக, அசோகனும் சிவாஜியும் பேசிக்கொள்வதில்லை. ஏதோவொரு பிணக்கு. மனக்கசப்பு. ஆனாலும் அசோகன் நடிக்கிறார் என்றதும் ஏற்றுக்கொண்டார் சிவாஜி. ஏவி.எம்.சரவணனும் அசோகனும் மிக நெருங்கிய நண்பர்கள். ஏவி.எம். படத்தில் ஒருகாட்சியிலாவாது அசோகன் வந்துவிடுவார்.

அடுத்து... ‘’நம்ம திருலோக்தானே (ஏ.சி.திருலோகசந்தர்) டைரக்ட் பண்றான்’’ என்று கேட்டார் சிவாஜி. ‘கிருஷ்ணன் - பஞ்சு’ என்று தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டும் மெளனமானார் சிவாஜி. ‘’அடுத்த படம் வேணா சேர்ந்து பண்ணலாமா. கிருஷ்ணன் அண்ணன் என்னைப் புரிஞ்சிக்குவாரு. ஆனா பஞ்சு அண்ணன் வெடுக்குவெடுக்குன்னு கோபமாப் பேசுவாரு. அதான் யோசனையா இருக்கு’’ என்று சிவாஜி சார் சொல்ல, ‘கிருஷ்ணன் - பஞ்சுதான் இயக்குகிறார்கள். ஒரு பிரச்சினையும் வராமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’ என்று ஏவி.எம். தரப்பில் உறுதி சொல்ல, ஒருவழியாக இதற்கும் சம்மதித்தார் சிவாஜி கணேசன்.

நடிகர் திலகம் சம்பளம் எவ்வளவு என்று விவாதிக்கப்பட்டது. அதற்கு முந்தைய படங்களில், குறிப்பாக ஏ.பி.நாகராஜன் இயக்கிய படங்களான ‘திருவிளையாடல்’ முதலான படங்களுக்கு, நடிகர் திலகத்துக்கு 2 லட்ச ரூபாய் கொடுத்திருப்பது தெரியவந்தது. அதேபோல, முந்தைய வருடம் வந்த கறுப்பு வெள்ளைப் படங்களுக்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கினார். ‘உயர்ந்த மனிதன்’ கறுப்பு வெள்ளைப் படம். எனவே, சிவாஜிக்கு சம்பளமாக, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. முன் தொகையாக பத்தாயிரம் ரூபாயுடன் ஏவி.எம்.சரவணன் செல்ல, சிவாஜியின் சகோதரர் முன் தொகையை வாங்க மறுத்துவிட்டார் என்று ஏவி.எம். சரவணன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

‘’எங்கிட்ட ரெண்டு கண்டிஷன் போட்டு அதை உங்ககிட்ட சொல்லச் சொல்லிருக்காரு. ஒன்னு... சம்பளம் இவ்ளோ வேணும், அவ்ளோ வேணும்னு கேக்கக் கூடாது. ஏவி.எம் என்ன தருதோ அதான் சம்பளம். அடுத்த கண்டிஷன்... அட்வான்ஸெல்லாம் வேணாம். படத்துல முழுசா நடிச்சு, படம் மொத்தத்தையும் எடுத்து வியாபாரமான பிறகு கொடுத்தாப் போதும்னு சொல்லச் சொல்லிட்டாரு. இதைக் கேட்டு நெகிழ்ந்து போனேன். அப்பச்சியிடம் சொன்னபோது, ‘கணேசனுக்கு நம்ம மேலயும் நம்ம கம்பெனி மேலயும் தனி மரியாதையும் நன்றியும் எப்பவுமே உண்டு’ என நெக்குருகிச் சொன்னார்” என்கிறார் ஏவி.எம்.சரவணன்.

இப்படியாக உருவாகி, வெற்றிக்கொடி நாட்டியதுதான் ‘உயர்ந்த மனிதன்’. படம் குறித்த இன்னொரு ஆச்சரியத்தையும் ஏவி.எம்.சரவணன் தெரிவித்தார்.

‘’படத்துல கால்மணி நேரம் ஒரு காட்சி வரும். அந்தக் காட்சி மொத்தமும் ஸ்கோர் பண்ணிட்டுப் போக வேண்டியவர் அசோகன்தான். ஒரு டேக், ரெண்டு டேக், மூணு டேக்னு போயிகிட்டே இருக்கு. கிருஷ்ணன் - பஞ்சுவுக்கு திருப்தியே வரலை. சிவாஜி சார், தான் நடிக்காத காட்சிகள்தானேன்னு வெளியே போகமாட்டார். டைரக்டர் சொன்னாத்தான் கிளம்புவார். இதையெல்லாம் பாத்துக்கிட்டே இருந்த சிவாஜி சார், என்னைக் கூப்பிட்டு, ‘பிரமாதமான சீன். மொத்த ஆடியன்ஸும் கைத்தட்டப்போறாங்க. இவன் என்னடான்னா இப்படிப் பண்ணிட்டிருக்கான். நான் நடிச்சுக் காட்டட்டுமானு டைரக்டர்கள்கிட்ட கேட்டுச் சொல்லுங்க’ என்று சொன்னார். இயக்குநர்களும் ஏற்றுக் கொண்டார்கள். அசோகன் நடிக்க வேண்டிய வசனத்தை அப்படியே நடித்துக் காட்டினார் சிவாஜி சார். நடித்து முடித்ததும் எல்லோரும் கைத்தட்டினோம். பிறகு அசோகன் வந்தார். சிவாஜி சொல்லிக்கொடுத்தபடியே நடித்தார். எல்லோரும் பாராட்டினார்கள். ஆனாலும் அசோகனுக்கு ஒரு சின்ன சந்தேகம்... இயக்குநர்களிடம் சென்று, மெதுவாக... சன்னமான குரலில்... ‘நடிப்பு நல்லாருந்துச்சா சார். கணேசன் வேணும்னே நான் சொதப்பணும்னு பண்ணிட்டானா?’ என்று கேட்க, ‘யோவ்... இந்த சீன்ல படம் பாக்கறவங்க உன் நடிப்பைத் தவிர வேற யாரையுமே நோட் பண்ணமாட்டாங்க. அற்புதமா பண்ணிக்கொடுத்துருக்காருய்யா’ என்று கிருஷ்ணன் - பஞ்சு சொன்னதும் ஒருமாதிரியாகிவிட்டது நண்பன் அசோகனுக்கு. 

படமெல்லாம் எடுத்து முடித்து போட்டுப் பார்த்தோம். சிவாஜி சாரும் வந்திருந்தார். எல்லோரும் வந்திருந்தார்கள். படம் முடிந்ததும் அசோகன் ஓடிவந்து சிவாஜி சார் முன்பு நின்றார். கரகரவென கண்ணீர். அப்படியே நடிகர் திலகத்தைக் கட்டியணைத்துக் கொண்டார்’’ என்று பழைய நினைவுகளை... குறிப்பாக... ‘உயர்ந்த மனிதன்’ நினைவுகளை பேட்டிகளிலும் மேடைகளிலும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் ஏவி.எம்.சரவணன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 125-வது படமான ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் பின்னணியில்... உருவான அடித்தளத்தில்... ஆயிரமாயிரம் பண்புகள் நிரவியிருக்கின்றன, பார்த்தீர்களா!

No comments: