தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் மருதகாசியின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. பல பிரச்சனிகள், சதிகளின் மத்தியில் மருதகாசி புகழின் உச்சியில் இருந்தா.
மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார்,
மருதகாசி. சிலருடைய சூழ்ச்சியினால், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் மருதகாசிக்கு
மோதல் ஏற்பட்டது. பிறகு உண்மையை அறிந்த மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம்,
எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்'' படத்துக்கு எல்லாப் பாடல்களையும்
எழுத வாய்ப்பளித்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசி மீது அதிக அன்பு கொண்டிருந்தார். அதனால் அவர் தயாரிக்கும் படங்களுக்கெல்லாம் மருதகாசி பாடல் எழுதுவது வழக்கம். ஒருமுறை டி.ஆர்.சுந்தரம் வெளிநாடு சென்றிருந்தபோது, மருதகாசியிடம் பொறாமை கொண்டிருந்த ஸ்டூடியோ நிர்வாகி ஒருவர், வேறொரு கவிஞருக்கு அதிக தொகையும், மருதகாசிக்கு குறைந்த தொகையும் கொடுத்தார். இதனால் மனம் நொந்த மருதகாசி, "இனி மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை'' என்ற முடிவுடன் சென்னைக்குத் திரும்பினார். வெளிநாடு சென்றிருந்த டி.ஆர்.சுந்தரம் திரும்பி வந்ததும், எம்.ஜி.ஆரையும், பானுமதியையும் வைத்து "அலிபாபாவும் 40 திருடர்களும்'' படத்தை வண்ணத்தில் தயாரிக்க முடிவு செய்தார். "அலிபாபா'' படம் ஏற்கனவே இந்தியில் வெளிவந்திருந்தது. புதிதாக ஒரு பாடலை இசை அமைப்பது என்றும், 9 பாடல்களுக்கு இந்தி அலிபாபா படத்தின் மெட்டுகளையே பயன்படுத்திக் கொள்வது என்றும் சுந்தரம் தீர்மானித்தார். பாடல்களை எழுத மருதகாசியை ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். ஆனால் நிர்வாகியோ, "மருதகாசி முன்போல் இங்கு வருவதில்லை. சென்னை கம்பெனிகளுக்கு பாட்டு எழுதுவதில் பிசியாக இருக்கிறார்!'' என்று கூறிவிட்டார். உடனே சுந்தரம், "அப்படியானால் உடுமலை நாராயணகவிக்கு போன் செய்து, பாடல்களை எழுத உடனே இங்கே வரச்சொல்லுங்கள்'' என்று உத்தரவிட்டார்.
சுந்தரம் வரச்சொன்னார் என்று அறிந்ததுமே, அவருடன் உடுமலை நாராயணகவி டெலிபோனில் தொடர்பு கொண்டார். மருதகாசியிடம் சகோதர அன்பு கொண்டவர் உடுமலை நாராயணகவி. மருதகாசிக்கும், நிர்வாகிக்கும் ஏற்பட்ட தகராறை சுந்தரத்திடம் அவர் கூறினார். "சரி. அவரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்'' என்றார், சுந்தரம். டி.ஆர்.சுந்தரத்தை உடுமலை நாராயணகவியும், மருதகாசியும் சந்தித்தனர். "அலிபாபாவில் வரும் பாடல்களுக்கு, இந்தி அலிபாபா மெட்டுகளையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்'' என்று கூறிய சுந்தரம், சில இந்தி இசைத்தட்டுகளை கவிராயரிடம் கொடுத்தார். உடனே கவிராயர், "மெட்டுக்கு பாட்டு அமைப்பது எனக்கு சரிப்படாது. புதிதாக பாட்டு எழுதுவதானால் எழுதுகிறேன். மெட்டுக்கு பாட்டு என்றால், அது மருதகாசிக்கு கைவந்த கலை'' என்றார். இதனால், "மாசில்லா உண்மைக் காதலே'', "அழகான பொண்ணுதான்... அதற்கேற்ற கண்ணுதான்...'' உள்பட 9 பாடல்களையும் மருதகாசியே எழுதினார். மாடர்ன் தியேட்டர்சுடன் மருதகாசிக்கு ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்தது. மாடர்ன் தியேட்டர் "பாசவலை'' படத்தை தயாரித்தபோது, பாடல் எழுத மருதகாசிக்கு அவசர அழைப்பு அனுப்பினார்கள். அப்போது சென்னையில் இரவு - பகலாக பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார். உடனே அவர் டி.ஆர்.சுந்தரத்துக்கு போன் செய்து, "உடனடியாக தம்பி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அனுப்பி வைக்கிறேன். அவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் அறிமுகப்படுத்தப்பட்டவர். மிக நன்றாக பாட்டு எழுதக்கூடியவர். நான் நாலைந்து நாட்களுக்குப்பின் வந்து கலந்து கொள்கிறேன்'' என்று சொன்னார். அதன்படி, பல பாட்டுகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். "குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம். குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்'' என்ற பாடல் மூலம், கல்யாணசுந்தரம் பெரும் புகழ் பெற்றார். "அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை - அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை'' என்ற மருதகாசியின் பாடலும் `ஹிட்' ஆயிற்று. உடுமலை நாராயணகவியை தன் அண்ணன் போலவும், கல்யாணசுந்தரத்தை தம்பி போலவும் கருதி பாசம் செலுத்தியவர் மருதகாசி. டைரக்டர் பீம்சிங் இயக்கத்தில் தயாரான "பதிபக்தி'' படத்துக்கு "ரெண்டும் கெட்டான் உலகம் - இதில் நித்தமும் எத்தனை கலகம்'' என்ற பாட்டை எழுதினார். இந்த பாடல் பீம்சிங்குக்கு பிடிக்கவில்லை. "இன்னும் சிறந்த பல்லவி வேண்டும்'' என்றார். மருதகாசி சிறிது யோசித்துவிட்டு, "அண்ணே! நீங்கள் எதிர்பார்ப்பது போல எழுதக்கூடியவர் தம்பி கல்யாணசுந்தரம். அவரை வைத்து எழுதிக்கொள்ளுங்கள்'' என்று கூறி, ஒதுங்கிக்கொண்டார்.
கவிஞர் மருதகாசியும், சாண்டோ சின்னப்பதேவரும் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பணியாற்றியபோதே நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். பிறகு தேவர் சென்னைக்கு வந்து, `தேவர் பிலிம்ஸ்' படக்கம்பெனியைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரை வைத்து "தாய்க்குப்பின் தாரம்'' என்ற படத்தைத் தயாரிக்கத் தீர்மானித்தார். மருதகாசியை அழைத்து, "எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி, புரட்சிகரமான கருத்துக்களுடன் ஒரு பாடலை எழுதுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார். அதன்படி மருதகாசி எழுதிய பாடல்தான், "மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே'' என்ற பாடல். 1955-ல் சிவாஜிகணேசனும், பத்மினியும் நடித்த "மங்கையர் திலகம்'' படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. இதில், சிவாஜிக்கு அண்ணியாக, குணச்சித்திர வேடத்தில் பத்மினி நடித்தார். இப்படத்தில் மருதகாசி எழுதிய "நீலவண்ண கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா!'' என்ற பாடலை, பத்மினிக்காக பாலசரஸ்வதி பாடினார். கருத்தாழம் மிக்க இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இதே படத்தில், சிவாஜி பாடுவது போல் அமைந்த "நீ வரவில்லை எனில் ஆதரவேது?'' என்ற பாடலையும் மருதகாசி எழுதினார். உருக்கமான இந்தப்பாடலை தெலுங்குப்பாடகர் சத்யம் பாடினார். எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி நடிக்க, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பெற்ற மகனை விற்ற அன்னை'' படம் சரியாக ஓடவில்லை. ஆனால், இப்படத்தில், மருதகாசி எழுதிய "தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும், கண்கள் உறங்கிடுமா?'' என்ற பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.
ஸ்ரீதரின் திரைக்கதை -வசனத்தில் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த
"உத்தமபுத்திரன்'' படத்தில், சிவாஜியும், பத்மினியும் படகில் செல்லும்போது பாடுவதுபோல
அமைந்த "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே'' என்ற பாடலை, ஜி.ராமநாதன் இசை
அமைப்பில் மருதகாசி எழுதினார். ரசிகர்களின் உள்ளத்தை அள்ளியது இப்பாடல்.
”நினைத்ததை முடிப்பவன்” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது
அதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடம் ஏற்றிருந்தார்கள். அதில் இரண்டு பாடல்கள்
எடுத்தும் அவருக்கு முழுத்திருப்தி ஏற்படாததால் எமருதகாசியைக் கூப்பிட்டார்கள்.
அதில் ஏற்கனவே கண்ணதாசன் எழுதியிருந்த “நான் பொறந்த சீமையிலே நாலு
கோடிப் பேருங்க. நாலு கோடிப் பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க” என்ற பாட்டு மிகவும் பிடித்திருந்ததால் து இந்தப் பாடல் நன்றாக
இருக்கிறது என்று மருதகாசி சொன்னார்.
ஆனால் எம்.ஜி.ஆர். பாட்டு
நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கே உரிய தனித் தன்மை அதில் இல்லையே என்றார். எப்படி என்று
மருதகாசி கேட்டபோது , ஆயிரத்தில் ஒருவன் என்பதற்கும்
நாலு கோடிப் பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா என்று
எம்.ஜி.ஆர். கேட்டார்.
பத்து நிமிடங்கள் நான் அசந்து உட்கார்ந்த மருதகாசி இவர் பழைய எம்.ஜி.ஆர்.அல்ல. ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டே. இருக்கும் மாமனிதர், என்ற எண்ணமும், அதுவரையில் அவரிடம் வைத்து இருந்த நம்பிக்கையின் உயர்வும்- அவர் மனதில் வளர்ந்து கொண்டே போயிற்று.
பிறகு அதே சூழ்நிலைக்கு ட்யூன் போட்டு மருதகாசி எழுதிய பாடல் தான் “கண்ணை நம்பாதே! என்று ஆரம்பிக்கும்
பாடல் இந்தப் பாடல் எம்.ஜி.ஆருக்கு பரி பூரண
திருப்தியளித்தது. மறுநாள் ரிக்கார்டிங்கிற்கு வந்திருந்தார். பாடல் ஒலிப்பதிவு ஆவதற்கு
ஐந்து நிமிடங்களுக்கு முன் மருதகாசியைத் தனியே அழைத்துச் சென்றார். கடைசி சரணத்தை மறுபடியும்
பாடிக் காட்டுங்கள் என்றார்.
“பொன் பொருளைக் கண்டவுடன்
வந்தவழி மறந்து விட்டு தன் வழியே போகிறவர் போகட்டுமே” என்ற வரியில் தன் வழி நல்ல வழியாக,
வந்த வழியை விட சிறந்த வழியாக இருந்தால் தன் வழியே செல்வதில் என்ன
தவறு? எனக் கேட்டார்.
பிறகு தான் “வந்த வழி மறந்து விட்டு கண்மூடிப் போகிறவர் போகட்டுமே”
என்று மாற்றினார் மருதகாசி.
எம்.ஜி.ஆர். நடித்த "மன்னாதி மன்னன்'' படத்தில் எம்.ஜி.ஆர். பாட அதற்கேற்ப பத்மினி நடனம் ஆடும் ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த பாடலுக்கான மெட்டை விஸ்வநாதன் -ராமமூர்த்தி அமைத்து விட்டனர். ஆனால் அந்த மெட்டுக்கு பல்வேறு கவிஞர்கள் எழுதிய பாடல்கள், எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை. பிறகு, விஸ்வநாதன் -ராமமூர்த்தியின் அழைப்பின் பேரில், "ஆடாத மனமும் உண்டோ?'' என்ற பாடலை, மருதகாசி எழுதினார்.
No comments:
Post a Comment