Wednesday, September 20, 2023

சிங்கப்பூரின் ஜனாதிபதியான இலங்கைத் தமிழன்


  சிங்கப்பூரின்  9ஆவது ஜனாதிபதியாக  தர்மன் சண்முகரத்னம் பதவி ஏற்றுள்ளார். ஊரெழுவைப் பூர்வீகமாகக்கொண்ட அவரது குடும்பம் பல வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தது. அவர் சிங்கப்பூரில் பிறந்து ,வளர்ந்து,  படித்து பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றார்.  

 தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் குட்டி நாடு சிங்கப்பூர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே கூட 60 லட்சத்திற்குள்ளாகவே இருக்கும்.   தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக  இருக்கிறது. சிங்கப்பூரின்  அபரிமிதமான வளர்ச்சி உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியது. சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இருந்த  ஹலீமா யாக்கோப்பின் பாதவிக் காலம் கடந்த 13 ஆம் திகதியுடன்  நிறைவடைந்தது. முன்னதாக  புதிய ஜனாதிபதியத் தேர்வு செய்வதர்கான தேர்தல் நடைபெற்றது.    தர்மன் சண்முகரத்னம், இங் கொக் சொங், டான் கின் லியான் ஆகியோர்ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டனர்.       தர்மன் சண்முகரத்னமுக்கு 70.40% (1,746,427 வாக்குகள்) வாக்குகள் கிடைத்து மிகப்பெரிய வெற்றிய்யைப் பெற்றார்.   அவரை எதிர்த்து போட்டியிட்ட இங் கொக் சொங் 15.72% , டான் கின் லியான்     13.88% வாக்குகள் பெற்றனர்.

  66 வயதான தர்மன் சண்முகரத்னம் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவர். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்த இவர் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆவர்.  இவர் பொருளாதாரத்தில் முதுகலை ஆய்வுப் பட்டத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.  வழக்கறிஞரான இவரது மனைவி ஜேன் யுமிகோ இட்டோகி  சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் சிங்கப்பூரில் சமூக நிறுவனங்களிலும் லாப நோக்கற்ற கலைத் துறையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் , மூன்று மகன்கள் உள்ளனர்.

2001ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து இருந்து முதலில் எம்பியாகத் தெரிவானார். அதன் பிறகு தொடர்ச்சியாக 2006, 2011, 2015, 2020ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று எம்பியானார்.  அந்நாட்டில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர்  2015- 2023 வரை சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும், 2011 முதல் 2023 வரை சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும், 2011 முதல் 2019 மே மாதம் வரை சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும் பணியாற்றியவர்.  பிரதமரின் ஆலோசகராகவும் செயற்பட்டார். சிங்கப்பூரில் இதுவரை சீனாவைச் சேர்ந்தவர்களே அதிக அளவில்ஜனாதிபதியாகத்  தேர்வுசெய்யப்பட்டுவந்தனர்.

சிங்கப்பூரில் பிப்ரவரி 25, 1957 இல் பிறந்த தர்மன், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரர் ஆவார். இவர் பொருளாதார நிபுணர் மட்டுமில்லை. ஒரு நல்ல விளையாட்டு வீரர் ,கவிஞர் ஆவார்.

சிங்கப்பூரில் நோயியலின் தந்தை" என்று அழைக்கப்படும் மருத்துவ விஞ்ஞானி எமரிட்டஸ் பேராசிரியர் கே. சண்முகரத்தினம், சிங்கப்பூரில் புற்றுநோய் பதிவேட்டை நிறுவியவர் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல் தொடர்பான பல சர்வதேச அமைப்புகளுக்கு தலைமை தாங்கியவர். இவரின் மூன்று குழந்தைகளில் ஒருவர் தான் தர்மன்.

ஆங்கிலோ-சீனப் பள்ளியில் பயின்ற தர்மன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (LSE) இல் பொருளாதாரத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.  (LSE பின்னர் 2011 இல் அவருக்கு கௌரவ பெல்லோஷிப்பை வழங்கியது). பின்னர் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள வொல்ப்சன் கல்லூரிக்குச் சென்றார், அங்கு பொருளாதாரத்தில் முதுகலை தத்துவப் பட்டம் பெற்றார்.

பின்னர் அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் மாணவரானார், அங்கு அவர் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MPA) முடித்தார் மற்றும் Lucius N. Littauer Fellows விருதைப் பெற்றவர் (கல்வித் திறன் மற்றும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் MPA மாணவர்களுக்கு வழங்கப்பட்டது).தொழில் ரீதியாக ஒரு பொருளாதார நிபுணரான தர்மன், தனது பணி வாழ்க்கையை முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் தொடர்புடைய பொது சேவையில் செலவிட்டார். அவர் பல்வேறு உயர்மட்ட சர்வதேச கவுன்சில்கள் மற்றும் பேனல்களுக்கு தலைமை தாங்கினார்.

ஜூன் 2023 இல், தர்மன் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக இருக்க விரும்புவதாக அறிவித்தார்.ஜனாதிபதி பதவி ஒரு கட்சி சார்பற்ற அலுவலகம் என்பதால், அரசாங்கத்தின் அனைத்து பதவிகளிலிருந்தும் மற்றும் சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சியின் (PAP) உறுப்பினர் பதவியிலிருந்தும் ஜூலை 2023 இல் ராஜினாமா செய்தார். 

1970 களில் இங்கிலாந்தில் படிக்கும் போது ஒரு மாணவர் செயற்பாட்டாளரான, தர்மன் முதலில் சோசலிச நம்பிக்கைகளைக் கொண்டிருந்தார், பொருளாதாரம் குறித்த அவரது கருத்துக்கள் அவரது பணி வாழ்க்கையின் போது உருவாகின.

1992 இல் MAS இன் பொருளாதாரத் துறையின் இயக்குநராகப் பணியாற்றியபோது, சிங்கப்பூரின் 1992 இரண்டாம் காலாண்டு ஃபிளாஷ் GDP வளர்ச்சிக் கணிப்புகளை உள்ளூர் செய்தித்தாளில் வெளியிட்டது தொடர்பான வழக்கில், அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் (OSA) கீழ் தர்மன் மீது குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கில் அவருக்கு 1,500 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.ஆனால் அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவர் பொதுத் துறைக்கு சேவையாற்றினார் மற்றும் அரசாங்கத்தில் பல்வேறு அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார்.

பின்னர் ஆளும் மக்கள் செயல் கட்சியில் (PAP) சேர்ந்து, 2001 இல் அரசியல்வாதியாக அறிமுகமான அவர், 2003 இல் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார், 2008 வரை இந்தப் பொறுப்பில் பணியாற்றினார்.

தர்மன் பல்வேறு உயர்மட்ட சர்வதேச கவுன்சில்கள் மற்றும் பேனல்களுக்கு தலைமை தாங்கினார்.

பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதித் தலைவர்களின் உலகளாவிய கவுன்சிலான முப்பது குழுவின் அறங்காவலர் குழுவின் தலைவராக பணியாற்றியுள்ளார்.

தர்மன் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும், 2024 ஆம் ஆண்டு ஐ.நா. உச்சிமாநாட்டில் பயனுள்ள பரிந்துரைகளை வழங்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

2011 முதல் 2014 வரை, அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொள்கை ஆலோசனைக் குழுவான சர்வதேச நாணய மற்றும் நிதிக் குழுவின் (IMFC) தலைவராக இருந்து, முதல் ஆசியத் தலைவராக ஆனார்.

2019 முதல் 2022 வரை, ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) மனித மேம்பாட்டு அறிக்கையின் (HDR) ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராக இருந்தார்.

தனது இளமை பருவத்தில் தர்மன் ஒரு சுறுசுறுப்பான விளையாட்டு வீரர். கல்வியின் ஒரு வடிவமாக விளையாட்டைப் பற்றி அவர் பேசினார்.

குழந்தைகள் அணியாக இருப்பதன் மதிப்பைக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதன் மூலம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்கிறார்கள், நிபுணத்துவத்தை வளர்க்க இது சிறந்த வழி. மேலும், போட்டியில் விழுந்து அல்லது தோல்வியடைந்து தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் திறனை பெறுகிறார்கள்,என்று அவர் கூறினார்.அவர் 2002 முதல் சைனீஸ் கலிகிராஃபியும் ஆர்வத்துடன் கற்று வருகிறார்.

தர்மன் அரசு சாரா நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகத்தின் கல்வி செயல்திறன் மற்றும் அபிலாஷைகளை உயர்த்த முயற்சிக்கும் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டு சங்கத்தின் (SINDA) அறங்காவலர் குழுவின் தலைவராகவும் உள்ளார்.

COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து சிங்கப்பூரர்களுக்கான திறன்கள் மற்றும் வேலைகளை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ஓங் டெங் சியோங் லேபர் லீடர்ஷிப் இன்ஸ்டிடியூட் மற்றும் தேசிய வேலை வாய்ப்பு கவுன்சிலுக்கும் அவர் தலைமை தாங்கினார். சர்வதேச மேடைகளில் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் அரசியல்வாதியான எஸ் ஆர் நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் 2009 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரின் ஜனாதிபதியாகப்  பணியாற்றினார், அதே சமயம் தேவன் நாயர் என்று அழைக்கப்படும் மலையாளி வம்சாவளியைச் சேர்ந்த செங்கரா வீட்டில் தேவன் நாயர் 1981 முதல் 85 வரை சிங்கப்பூரின் மூன்றாவது ஜனாதிபயாகப் பணியாற்றினார்.

No comments: