Friday, December 5, 2008
போர் முனைப்பில் உபகண்டம்
இந்திய பாகிஸ்தான் எல்லையில் இதுவரை காலமும் மையம் கொண்ட இந்திய பாகிஸ்தான் உரசல்கள் மும்பைக்குள் சதிராட்டம் ஆடியதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் அபாயம் தோன்றியுள்ளது. இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கான சகல முயற்சிகளையும் அமெரிக்கா செய்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட எல்லை தாண்டிய பயங்கரவாதம் கடல் வழியாக மும்பையில் அரங்கேறியதனால் இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளே அச்சத்தில் உறைந்துள்ளன.
வல்லரசு என்று தன்னைப் பிரகடனப்படுத்திய இந்தியாவின் வர்த்தக நகரில் மீசை முளைக்காத சில இளைஞர்கள் மூன்று நாட்கள் ஆடிய வெறியாட்டம் இந்தியாவின் பாதுகாப்பை சுக்குநூறாக்கியுள்ளது. மும்பைத் தாக்குதலின் முழுப் பொறுப்பும் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் பின்னணியில் நடைபெற்றதாக இந்தியா உறுதியாக நம்புகிறது.
இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதி, விமான நிலையங்கள்
ஆகியவற்றில் கடும் பாதுகாப்பு இருப்பதனால் இந்தியாவுக்குள் நுழை
வதற்கு கடல் மார்க்கத்தை
தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்தனர்.
பாகிஸ்தானில் பயிற்சி பெறும் தீவிரவாதிகள் கடல் வழியாக இந்தியாவுக்கு ஊடுருவுவார்கள் என்ற தகவல் இந்திய புலனாய்வுப் பிரிவுக்கு ஏற்கனவே கிடைத்து. தேசிய பாதுகாப்பு அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதே தகவலை அமெரிக்கா இரண்டு முறை இந்தியாவுக்கு வழங்கி எச்சரித்தது. உளவுத் தகவல்களை உதாசீனம் செய்ததனால் மும்பை பயங்கரவாதம் உலகையே ஆட்டிப் படைத்தது.
தாஜ், ஒபராய் ஆகிய ஹோட்டல்கள் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இருப்பதை புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தின. தாஜ் ஹோட்டல் நிர்வாகம் சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஆனால் அந்தப் பாதுகாப்புகள் போதுமானதல்ல. தாஜ் ஹோட்டலின் பின்பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை தீவிரவாதிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தினார்கள்.
மும்பையின் நட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல்கள் நடைபெற்றாலும் இத்தாக்குதல் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் எதிராக இருந்தது. அமெரிக்கர்களையும் பிரிட்டிஷ் பிரஜைகளையும் இனம் கண்டு சுட்டுக் கொன்றார்கள்.
நாரிமன் ஹவுஸில் நடைபெற்ற தாக்குதலின் மூலம் இஸ்ரேல் நாட்டுக்கெதிராகவும் தாக்குதல் நடைபெற்றது. நாரிமன் ஹவுஸ்ஸில் குடியிருப்பவர்கள் யூத மக்கள்.
இந்தியாவில் குடியேறியுள்ள யூத மக்களின் நல்வாழ்வுக்கு இஸ்ரேல் உதவி செய்து வருகிறது.
குறைந்த உறுப்பினர்களுடன் கூடிய அழிவையும் அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற தீவிரவாதிகளின் நோக்கம் நிறைவேறியுள்ளது.
பொருளாதாரத்திலும் அறிவியலிலும் மேற்கு நாடுகளுக்குப் போட்டியாக இந்தியா வளர்ந்து கொண்டு வருகிறது. இந்தியாவின் இந்த அபரிமிதமான வளர்ச்சியினால் மேற்கு நாடுகளும் அண்டை நாடான சீனாவும் கலங்கிப் போயுள்ளன. இந்தியப் பொருளாதாரத்தை சிதறடிக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரவாதிகளிடம் மேலோங்கியுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இந்தியாவுடன் நட்புறவை வளர்த்து வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவின் அணுசக்தி உற்பத்திக்கு உதவி செய்து வருகின்றன. சந்திரயான் விண்கலம் இந்திய அறிவியலை நிலவுவரை அழைத்துச் சென்றுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஏட்டிக்குப் போட்டியாக புதிய வகை ஏவுகணையினை பரீட்சித்துப் பார்த்திருந்தன. இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு முன்னால் பாகிஸ்தானின் வான்வெளி ஆய்வு பூஜ்யமாக உள்ளது.
தீவிரவாதிகளின் இலகுவான இலக்காக மும்பை உள்ளது. 1993 ஆம் ஆண்டு டிசெம்பர் 3 ஆம் திகதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடித்து 257 பேர் உயிரிழந்தனர். 2003 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி இருவேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 40 பேர் பலியானார்கள். 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி ஏழு இடங்களில் குண்டு வெடித்து 200 பேர் மரணமானார்கள்.
இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 25 பெரிய குண்டு வெடிப்புகள் நடைபெற்றன. இக்குண்டு வெடிப்புகளினால் 7000 க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க தலைமையிலான போருக்கு இந்தியா ஆதரவு வழங்கவில்லை. ஆனால் அந்த நாடுகளில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகளுக்கு இந்தியா தாராளமாக உதவி செய்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகமும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது.
ஆப்கானிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட அல்கைதா 1989 ஆம் ஆண்டு ஆரம்பமானது. 1992 ஆம் ஆண்டு அல்ஜீரியாவில் ஆர்மி இஸ்லாமிக் குரூப் ஆரம்பமானது. 1970 ஆம் ஆண்டு எகிப்தில் அல் ஜிகாத் உருவானது. 1992 ஆம் ஆண்டு இந்தியாவில் அல் உம்மா ஆரம்பிக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு ஈராக்கில் அபுநிதாஸ் முஜாகுதீன் ஈகாலிக் ஆரம்பிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு லெபனானில் அஸ்மத் அல் அன்சார் ஆரம்பிக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஹரக்கத் அல் அன்ஸார் ஆரம்பிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு அல் ஹரக்கத் அல் முஜாகிதீன் 1989 ஆம் ஆண்டு லக்ஸர் இ தொய்பா, பிலிப்பைன்ஸில் 1991 ஆம் ஆண்டு அபுசாயாம் ஆகிய இயக்கங்கள் தோற்றம் பெற்றன. இந்த இயக்கங்களை உலகின் பல நாடுகள் தடை செய்துள்ளன.
உலகில் உள்ள 65 நாடுகளில் 177 தீவிரவாத அமைப்புகள் திரைமறைவில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு எதிராக சுமார் 10 தீவிரவாத அமைப்புகள் வன்செயல்களை நடத்துகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் இரண்டு இலட்சம் அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர்.
அல்குவைதா, லக்ஸர் இ தொய்பா, அல் முஜாகிதீன் உட்பட 10 தீவிரவாத இயக்கங்களின் பார்வை இந்தியா மீது திரும்பியுள்ளது. காஷ்மீர் பிரச்சினையும் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களும் தீவிரவாதிகளை மேலும் கோபமடையச் செய்துள்ளன.
காஷ்மீர் பிரச்சினை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கைகளில் இருந்து தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்றுள்ளது. இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் ஏதாவது ஒரு மூலையில் தினமும் பயங்கரவாத சம்பவம் நடைபெறுகிறது.
இந்தியாவில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்புக்களே காரணம் என்று இந்தியா ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று பாகிஸ்தான் மறுக்கிறது. தீவிரவாதிகள் அடிக்கடி குறி வைக்கப்படும் நாடுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் உள்ளன. இந்தியாவில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று இந்தியா கூறுகின்றது. பாகிஸ்தானில் நடைபெறும் தாக்குதல்களுக்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தானால் குற்றம் சாட்ட முடியாதுள்ளது.
லக்ஸர் இ தொய்பா அமைப்பும், பாகிஸ்தானின் உளவு அமைப்பும் இணைந்தே மும்பைத் தாக்குதலை நடத்தின என்று இந்தியா கூறுகின்றது. மும்பைத் தாக்குதல் பற்றிய விசாரணைகளுக்கு உதவப் போவதாக பாகிஸ்தானின் பிரதமர் சர்தாரி அறிவித்தார். இரு நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள கசப்புணர்வை இந்த அறிவித்தல் போக்கியுள்ளதாக உலகம் நம்பிக் கொண்டிருக்கையில் பாகிஸ்தானின் ஜனாதிபதி தனது பேச்சின் தொனியையே மாற்றினார்.
இந்தியா வழங்கியுள்ள பட்டியலில் உள்ள பயங்கரவாதிகள் எவரும் பாகிஸ்தானில் இல்லை என்று பாகிஸ்தானின் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது இந்திய பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. அன்றைய அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான கோலின் பவல் இந்தியாவுக்கு விஜயம் செய்து யுத்த மேகத்தைக் கலைத்தார். இன்றும் அதேபோன்ற ஒரு நிலை தோன்றியுள்ளது.
பயங்கரவாதிகள் மும்பையின் மீது திணித்த வன்செயலினால் பாகிஸ்தானின் மீது இந்தியா தாக்குதல் நடத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க வெளியுறவுச் செயலர் கொன்டலீசா றைஸ் தனது ஐரோப்பிய விஜயத்தை ரத்துச் செய்து விட்டு இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் பயங்கரவாதிகளைத் தேடி அளிக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட ஒபாமா கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் இராணுவத் தளபதியாக இருந்த போது பாகிஸ்தானின் படைகள் கார்க்கில் எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்தன. இந்தியப் படையின் தாக்குதல் காரணமாக கார்க்கிலில் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின. கார்க்கில் போரின் போது பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைவதற்கு இந்தியப் படைகள் தயாராக இருந்தன. பாகிஸ்தானின் படைகள் பின்வாங்கியதனால் இந்தியப் படைகள் எல்லை தாண்டவில்லை.
பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தானின் அனுமதி தேவை இல்லை என்று அமெரிக்கா ஏற்கனவே கூறியுள்ளது. அந்த நிலைப்பாட்டையே இந்தியாவுக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் உதவி செய்யவில்லை என்றால் தீவிரவாதிகளைத் தேடி அழிக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாதிகளின் முகாமை அழிப்பதற்காக இந்திய இராணுவம் எல்லை தாண்டினால் அது இந்திய பாகிஸ்தான் போருக்கு காரணமானதாகி விடும்.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் தீவிரவாத மக்கள் பாகிஸ்தானில் இருந்து செயற்படுவது உலகறிந்த உண்மை. பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளும்
பாகிஸ்தானிலேயே உள்ளனர்.
உலகெங்கும் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை முடக்குவதற்கு பாகிஸ்தான் உதவி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி நடைபெற்றாலும் அங்கு ஆட்சியை நடத்துவது இராணுவம்தான் என்பது உலகறிந்த உண்மை. மும்பைத் தாக்குதலினால் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கும் சாத்தியம் அதிகரித்துள்ளது. யுத்தத்தை நிறுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளை பூண்டோடு களைவதற்கான முயற்சியை அமெரிக்கா செய்து வருகிறது.
மும்பையில் வாழும் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனால் தமது நாட்டுப் பிரஜைகளைக் கொலை செய்தவர்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்கப் போவதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. பாலஸ்தீனம், ஈரான் போன்ற நாடுகளின் மீது ஒரு கண் வைத்துள்ள இஸ்ரேல், பாகிஸ்தான் மீதும் தன் பார்வையை வைத்திருப்பது உண்மை.
பாகிஸ்தான், இந்திய எல்லையில் யுத்த மேகம் சூழ்ந்துள்ளது. அதனை களைய வேண்டிய பொறுப்பு பாகிஸ்தான் அரசுக்கு உள்ளது. யுத்தத்தைத் தவிர்ப்பதற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் விரும்பினாலும் பாகிஸ்தானின் இராணுவமும் உளவு அமைப்பும் ஒப்புதல் வழங்குமா என்ற சந்தேகம் உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைத் தாக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பயிற்சி பெறும் தீவிரவாதிகள் தான் இந்தியாவின் குண்டு வெடிப்புகளை நடத்துவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் வசிக்கும் இஸ்ரேலியர்களின் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதனால் பாகிஸ்தான் மீது மிகுந்த கோபத்தில் உள்ளது
இஸ்ரேல்.
மும்பை மீதான தாக்குதல்
காரணமாக பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வன்செயலுக்குத் துணைபோகாத நாடு பாகிஸ்தான்
என்பதை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் முடிவு கட்டுமா என்பதை அறிய உலகம் ஆவலாக உள்ளது.
ரமணி; மெட்ரோ, 05.12.2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் பயங்கரவாதிகளைத் தேடி "அளிக்கும்" உரிமை இந்தியாவுக்கு உள்ளது//
இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் பயங்கரவாதிகளைத் தேடி "அழிக்கும்" உரிமை இந்தியாவுக்கு உள்ளது
Post a Comment