Thursday, December 25, 2008

கிரிக்கெட்டை அச்சுறுத்தும்பயங்கரவாதம்


பயங்கரவாத அச்சுறுத்தல்களினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் விளையாட்டில் கிரிக்கெட் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. ரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் சில நாடுகள் பங்குபற்றவில்லை. சீனாவில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கிற்கு திபெத் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதும் எதுவித அசம்பாவிதமும் இன்றி சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், தென் கொரியா, மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்பே, கென்யா ஆகிய நாடுகளில் கிரிக்கெட்டுக்கு அதிக வரவேற்புள்ளது.
மும்பையில் நவம்பர் 26 ஆம் திகதி நடந்த தாக்குதலின் காரணமாக கிரிக்கெட் விளையாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இங்கிலாந்து அணியின் ஒத்துழைப்புடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்ததனால் பயங்கரவாதத்தை கிரிக்கெட் வென்றுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் நடந்து முடிந்த பின்னர் மும்பைத் தாக்குதல் நடைபெற்றது. பயங்கரவாதத் தாக்குதலின் கொடூரம் காரணமாக இங்கிலாந்து அணி மிகுதி இரண்டு போட்டிகளையும் ரத்துச் செய்துவிட்டு நாடு திரும்பியது.
இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையே திட்டமிடப்பட்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் உண்டானது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடந்து முடிந்தன. கிரிக்கெட் விளையாடும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நான்கு நாடுகளும் பயங்கரவாதத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் அமெரிக்கா ஆக்கிரமிப்பதற்கு இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் உதவி செய்ததால் அந்த நாட்டு வீரர்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது.
இனத்துவேசம் மேலோங்கி பெரும்பான்மை இனமான கறுப்பர்களை சிறுபான்மையின வெள்ளையர் சிறுமைப்படுத்தி ஒதுக்கியதால் கிரிக்öகட் போட்டிகளில் இருந்து தென் ஆபிரிக்கா இடை நிறுத்தப்பட்டது. இனத்துவேசம் ஒழிந்த பின்னர் தான் கிரிக்öகட் அரங்குக்கு தென்ஆபிரிக்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சிம்பாப்வேயில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சியினால் அங்குள்ள கிரிக்öகட் வீரர்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நியாயத்தைப் பேசிய வீரர்கள் தம் தாய்நாட்டிற்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.
1996 ஆம் ஆண்டு இலங்கையில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்றபோது இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதென கூறிய அவுஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இலங்கையில் விளையாட மறுத்து விட்டன. இந்திய அணி இலங்கையில் விளையாடியது.
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது குண்டு வெடித்ததினால் போட்டியை இடை நிறுத்திய அந்த அணி நாடு திரும்பியது.
2006 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க அணி இலங்கைக்கு விஜயம் செய்தது. பஸ்களில் குண்டுகள் வெடித்ததால் பாதுகாப்பு இல்லை எனக் கூறிய தென் ஆபிரிக்க அணி நாடு திரும்பியது. கிரிக்கெட் போட்டி நடைöபறாது என்பதனால் தத்தளித்த இலங்கைக்கு இந்தியா மீண்டும் கைகொடுத்தது. இந்திய அணி இலங்கைக்கு வந்து விளையாடி இங்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை என்று இரண்டாவது தடவையாக உலகத்துக்கு எடுத்துக் கூறியது.
மும்பைத் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு இந்திய அணி மறுத்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியை மூன்றாவது நாட்டிலாவது நடத்த வேண்டும் என்று விரும்பும் பாகிஸ்தான் கிரிக்கட் சபை அதற்கான கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்தியா மசிந்து கொடுப்பதாக இல்லை.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு உதவி செய்ய அர்ஜுன ரணதுங்க முன்வந்தார். பாகிஸ்தானில் இருந்து அழைப்பு வந்தால் எமது அணி பாகிஸ்தானுக்குச் செல்லும் என்று அர்ஜுன அறிவித்தார். அவர் அறிவித்து ஓரிரு நாட்களில் அர்ஜுன தலைமையிலான கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டுவிட்டது.
ஜென்டில்மன் எனப்படும் கிரிக்கெட்டை ஒரு காலத்தில் ஊழலும் ஆட்ட நிர்ணய சதியும் ஆக்கிரமித்திருந்தன. இன்று பயங்கரவாதம் கிரிக்கெட்டை ஆட்டிப் படைக்கிறது.மும்பைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிரிக்கட்டை மிக விரைவில் இந்தியா மீட்டெடுத்துவிட்டது. பயங்கரவாதத்தினால் கிரிக்கெட்டை அழித்து விட முடியாது என்ற தகவலை உறுதிபடத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த அறைகூவலுக்கு பக்கபலமாக இங்கிலாந்து அணியும் உள்ளது.
பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி உள்ள இன்னொரு நாடு பங்களாதேஷ். பங்களாதேஷிலும் அடிக்கடி குண்டு வெடிப்பு, கலவரங்களும் நடைபெறுகின்றன. இப்போது அங்கே இராணுவ ஆட்சி நடைபெறுகிறது.
கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் கென்யா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரண்டு நாடுகளிலும் பயங்கரவாத அச்சுறுத்தல், அரசியல் ரீதியான நெருக்குதல் எவையும் இல்லை.
ரமணி
மெட்ரோநியூஸ்
26 12 2008

No comments: