Sunday, December 21, 2008
ஈடாடுகிறது இந்தியப் பெரும் சுவர்
இந்திய அணியை சரிய விடாது நிமிர்த்திப் பிடித்த இந்தியப் பெருஞ்சுவர் என வர்ணிக்கப்பட்ட ராகுல் ட்ராவிட் இன்று எதிரணி வீரர்களின் பந்துகளைச் சந்திக்க முடியாது தடுமாறுகிறார்.
மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர் இந்திய அணியின் வெற்றிக்காக பங்களிப்புச் செய்தவர். களத்தடுப்பில் அக்கறையுடன் செயற்பட்டவர், ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக அசத்தியவர். விக்கெட் கீப்பராக கண்ணும் கருத்துமாக பந்துகளைப் பிடித்து எதிரணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தவர் என பல சிறப்புக்களைப் பெற்ற ராகுல் ட்ராவிட்டின் நிலை பரிதாபமாக உள்ளது.
கங்குலி, சச்சின், ட்ராவிட் ஆகிய மூவரையும் மும்மூர்த்திகள் என இந்தியப் பத்திரிகைகள் குறிப்பிட்டன.
இவர்கள் மூவரும் சோபிக்கத் தவறிய போது சகல ஊடகங்களும் மிக மோசமாக விமர்சித்தன. இவர்கள் விரைவில் ஓய்வு பெறவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. மிகச் சிறந்த வீரர்கள் சிலவேளை தடுமாறுவது சகஜம் ஆகையினால் இவர்கள் மூவருக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற கருத்தும் ஓங்கி ஒலித்தது.
இளம் இந்திய வீரர்களின் எழுச்சி பழைய வீரர்களை தடுமாறச் செய்தது. புதியவர்களின் விஸ்வரூபத்தினால் பழைய வீரர்கள் மனதளவில்
பாதிக்கப்பட்டனர். அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரின் பின்னர் ஓய்வு பெறப் போவதாக கங்குலி அறிவித்தார். கங்குலியை முந்திக் கொண்டு டெஸ்ட் அணித் தலைவர் கும்ப்ளே ஓய்வு பெற்று விட்டார். மூத்த வீரர்கள் ஓய்வு பெறவேண்டும் என தாம் வற்புறுத்தவில்லை என இந்திய கிரிக்கெட் சபை மீண்டும் மீண்டும் கூறி வந்த
போதும் கும்ப்ளேயின் அவசர ஓய்வின்
காரணம் புரியவில்லை.
கங்குலியும் கும்ப்ளேயும் ஓய்வு பெற்று விட்டனர். அடுத்து ஓய்வு பெறப் போவது ட்ராவிட்டா?
லக்ஷ்மனா? என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஓய்வு பெறுவோர் பட்டியலில் சச்சினின் பெயர் இடம்பெறவில்லை. சச்சின் மீது சகலரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின் திறமைகாட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின் சதமடித்து விமர்சகர்களின் வாயை அடைத்து விட்டார். ட்ராவிட்டும் லக்ஷ்மனும் சிறப்பாக விளையாட வேண்டும் என்றுதான் அவர்களது ரசிகர்கள் விரும்புகிறார்கள். ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியாது அவர்கள் தவிக்கின்றனர். 2008 ஆம் ஆண்டு ட்ராவிட்டுக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ட்ராவிட் 669 ஓட்டங்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒரே ஒரு சதம் மட்டும் அடித்துள்ளார். கடைசியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 127 ஓட்டங்களை மட்டும் எடுத்துள்ளார். எட்டு இன்னிங்ஸ்களில் 76 ஓட்டங்கள் எடுத்தார். இதில் பெங்களூரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 51 ஓட்டங்களே அண்மையில் அவர் எடுத்த அதிகமான ஓட்டமாகும்.
5, 39, 11, 11, 0, 3, 3, 4 இவையெல்லாம் ட்ராவிட்டின் ஓட்ட எண்ணிக்கை என்றால் நம்ப முடியாதுள்ளது.
25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 சதங்களுடன் 10,373 ஓட்டங்கள் எடுத்த வீரர் இவ்வளவு மோசமாக விளையாடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. 52.12 என்ற சராசரி ஓட்ட விகிதத்தை உடைய ட்ராவிட் 2008 ஆம் ஆண்டு 27.87 சராசரி ஓட்ட விகிதத்தை எடுத்திருப்பதனால் அவரது ஆட்டம் முடிவுக்கு வருகிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்த ட்ராவிட் மோசமான நிலையில் ஓய்வு பெறக் கூடாது. சிறிது காலம் கடுமையான பயிற்சி எடுத்து உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட வேண்டும். கிரிக்கெட்டில் தனது முத்திரையை மீண்டும் பதித்து விட்டு ஓய்வு பெற்றால் அவருடைய மதிப்பு இன்னமும் அதிகரிக்கும்.
ரமணி
மெட்ரோநியூஸ் 19 12 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment