பாகிஸ்தான் இலங்கை ஆகியவற்றுக்கிடையே ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்கள் எடுத்தது.
இரு அணிகளும் உலகக் கிண்ணப் போட்டியின் முதலாவது போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றிக் காக களமிறங்கின. இலங்கை கனடாவுக்கு எதிராக 332 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் கென்யாவுக்கு எதிராக 317 ஓட்டங்கள் எடுத்தது. முதலாவது போட்டியில் துடுப்பாட்டத்தில் தமது பலத்தை நிரூபித்த இரு அணிகளும் மோதிய இப்போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தின.
பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் சாமர கபுகெதர, மெண்டிஸ் நீக்கப்பட்டு சாமர சில்வா, ரங்கன ஹேரத் ஆகியோர் விளையாடினர். முதுகு வலியால் அவதிப்பட்ட மலிங்க குணமடையாததால் அணியில் இடம்பெறவில்லை.
பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அஹமது ஷெசாத், பெரேராவின் பந்தை சங்கக்காரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தõர். குலசேகரவின் பந்தில் அடுத்தடுத்து சிக்ஸர் பவுண்டேரி அடித்து ஆடிய முஹம்மது ஹபீஸ் 32 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். கம்ரன் அக்மல் சிறிது நேரம் மிரட்டி விட்டு 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
20.2 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 105 ஓட்டங்கள் எடுத்தி ருந்த போது யூனுஸ்கானுடன் மிஷ்பா உல் ஹக் இணைந்தார். அனுபவ வீரர்க ளான இவர்கள் இணைந்து பொறுப்பாக விளையாடினர்.
ஒருநாள் அரங்கில் 41 ஆவது அரைச் சதமடித்த யூனுஸ்கான் ஹேரத்தின் பந் தை மஹேலவிடம் பிடிகொடுத்து 72 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பவர் பிளே யில் வீசிய முரளியின் பந்தில் பாகிஸ்தான் வீரர் அதிக ஓட்டங்களை அடிக்கவில்லை.
10 ஓட்டங்கள் எடுத்த உமர் அக்மல் முரளியின் பந்தில் ஆட்டமிழந்தார். அப்ரிடி 16, அப்துல் ரஸாக் மூன்று ஓட்டங்கள் எடுத்தனர். பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழந்த போதும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்கள் எடுத்தார். 50 ஓவர்களில் பாகிஸ்தான் ஏழு விக்öகட்டுகளை இழந்து 277 ஓட்டங்கள் எடுத்தது.
பெரேரா, ஹேரத் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் மத்தியூஸ், முரளி ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். 278 என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 50 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்தது 266 ஓட்டங்கள் எடுத்து 11 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தரங்க, டில்ஷான் ஆகியோர் நல்ல முறையில் விளையாடினர். இருவரும் இணைந்து 14.2 ஓவர்களில் 76 ஓட்டங்கள் எடுத்தனர். தரங்க 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டில்ஷான் 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மஹேல இரண்டு ஓட்டங்களுடனும் சமரவீர ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
அணித்தலைவர் சங்கக்கார, சமரவீர ஜோடி சிறிது நேரம் நிதானமாகத் துடுப்பெடுத்தாடியது. 45 ஓட்டங்கள் எடுத்த சங்கக்கார, அப்ரிடியின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க இலங்கையின் ஆதிக்கம் ஆட்டம் கண்டது.
18 ஓட்டங்கள் எடுத்த மத்தியூஸையும் அப்ரிடி வெளியேற்ற இலங்கையின் உற்சாகம் களை இழந்தது. எட்டு ஓட்டங்களை எடுத்த பெரேரா அக்மலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். சிறிது நேரம் போராடிய சாமர சில்வா 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் இலங்கைக்கு 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இரண்டு விக்கட்டுகள் கைவசம் இருந்தன. உமர்குல் வீசிய முதல் பந்தில் ஓட்டம் எடுக்கவில்லை. இரண்டாவது பந்தில் ஹேரத் ஒரு ஓட்டம் எடுத்தார். மூன்றாவது பந்தில் குலசேகர பௌண்டரி அடித்தார். நான்காவது பந்தில் ஓட்டம் எடுக்கவில்லை. ஐந்தாவது பந்தில் குலசேகர ஆட்டமிழந்தார். ஆறாவது பந்தில் ஒரு ஓட்டம் எடுக்கப்பட்டது.
50 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 266 ஓட்டங்கள் எடுத்த இலங்கை 11 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
அப்ரிடி நான்கு விக்கட்டுகளை அக்தர் 2 விக்கட்டுகளையும் உமர்குல், மொஹமட் ஹபிஸ், அப்துல் ரஹ்மான் ஆகி யோர் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக அப்ரிடி தேர்வு செய்யப்பட்டார். இலங்கை வீரர்கள் 9 உதிரிகளையும் பாகிஸ்தான் வீரர்கள் 29 உதிரிகளையும் விட்டுக் கொடுத்தனர்.
பெட் பறந்தது
42 ஓவது ஓவரில் அப்ரிடி வீசிய பந்தை அடிக்க முற்பட்டார் சாமர சில்வா. அப்போது அவரது கையில் இருந்து நழுவிய பெட் ஸ்கொயா லெக் திசையில் நின்ற நடுவர் ஹார்பரை நோக்கி பறந்தது. சாதுர்யமாக விலகியதால் காயமின்றி தப்பினார்.
முரளிதரன் 2 ஆவது இடம்
பாகிஸ்தான் வீரர் உமர்குல்லின் விக்கட்டை கைப்பற்றிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், உலகக் கிண்ண போட்டிகளில் அதிக விக்öகட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் 2 ஆவது இடத்துக்கு முன்னேறினார். இவர் 33 போட்டியில் 56 விக்கட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் முன்னாள் பாகிஸ்தான் தலைவர் வசிம்அக்ரம் (55 விக்கட்) 3 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் (71 விக்கட்) நீடிக்கிறார்.
தொடரும் ஆதிக்கம்
உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றிநடை தொடர்கிறது. ஏழாவது முறையாக இலங்கையை வீழ்த்தியது. முன்னதாக கடந்த 1975, 83, 87, 92 இல் நடந்த உலகக் கிண்ணத் தொடர்களில் பாகிஸ்தான் அணி இலங்கையை ஆறு முறை வீழ்த்தியது.
அப்ரிடி 300
இலங்கை அணிக்கு எதிராக சுழலில் அசத்திய பாகிஸ்தானின் சகலதுறை ஆட்டக்காரரான அப்ரிடி, ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில் தனது 300 ஆவது விக்கட்டை பதிவு செய்தார்.
இதுவரை 314 போட்டியில் பங்கேற்று 301 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 300 விக்கட்டுக்கு மேல் கைப்பற்றிய 3 ஆவது பாகிஸ்தான் வீரர் மற்றும் 11 ஆவது சர்வதேச வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
குழப்பத்தை ஏற்படுத்திய ரன்அவுட்
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தில் ஈடுபட்டபோது 14 ஆவது ஓவரில் முஹம்மட் ஹபீஸ், முரளிதரன் வீசிய பந்தை ஸ்வீப் செய்து ஷார்ட் பைன் லெக்கில் திருப்பினார். ஆனால் பீல்டர் கைக்கு சென்றதால் அவர் ரன் எடுக்க முயற்சிக்கவில்லை. அதே சமயம் எதிர்முனையில் நின்ற கம்ரன் அக்மல், முஹம்மது ஹபீஸ் பக்கம் வேகமாக ஓடி வந்துவிட்டார்.
ஆனால் ஹபீசும் ஒரு அடி கூட நகரவில்லை. இருவரும் ஒரே முனையில் நின்றனர். இதையடுத்து விக்கட் காப்பாளர் சங்கக்கார தன் கைக்கு வந்த பந்தை துடுப்பாட்ட வீரர் இல்லாது இருந்த எதிர்முனையில் இருந்த பந்து வீச்சாளரான முரளிதரனை நோக்கி வீசினார். ஆனால் பந்து முரளியின் கைக்கு எட்டவில்லை.
இதனை கவனித்த முஹம்மது ஹபீஸ் ஓரிரு அடி தூரம் ஓட முயற்சித்து விட்டு, மீண்டும் தனது கிரீசை நோக்கியே திரும்பினார். இதற்குள் இலங்கை வீரர்கள் எதிர்முனையில் ரன்அவுட் செய்தனர். ஆனால் எந்த துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்தாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அதனால் நடுவர்கள் ஆலோசனைக்குப் பிறகு சில அடி தூரம் கிரீசை விட்டு நகர்ந்த ஹபீஸ் ஆட்டமிழந்தார் என்று அறிவித்தனர்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்
No comments:
Post a Comment