நியூஸிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையே பல்லேகலயில் நடைபெற்ற உலகக் கிண்ண ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து 110 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
கென்யாவுக்கு எதிராக 312 ஓட்டங்கள் அடித்து 205 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது பாகிஸ்தான். இலங்கைக்கு எதிரான பரபரப்பான போட்டியில் 11 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. கனடாவுக்கு எதிராக 184 ஓட்டங்கள் எடுத்த பாகிஸ்தான் 138 ஓட்டங்களால் கனடாவைச் சுருட்டி 46 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
கென்யாவையும் சிம்பாப்வேயையும் தலா 10 விக்கெட்களினால் வீழ்த்திய நியூஸிலாந்து அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏழு விக்கெட்களினால் தோல்வியடைந்தது.
பாகிஸ்தானுடனான போட்டியில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கியது நியூஸிலாந்து.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்கள் எடுத்தது.
நியூஸிலாந்து அணியில் ஜெசி ரைடர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஜேக்கப் ஓரம் விளையாடினார். பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், சயித் அஜ்மல் ஆகியோர் நீக்கப்பட்டு சொஹிப் அக்தர், அப்துர் ரெஹ்மான் ஆகியோர் இடம்பிடித்தனர்.
அக்தர் வீசிய முதல் ஓவரில் சிக்ஸர் அடித்து தனது கணக்கை ஆரம்பித்த பிரைண்டன் மெக்லம் அடுத்த பந்தை சொஹிப் அக்தரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
குப்தில் ரொஸ் டெய்லர் ஜோடி பொறுப்பாக விளையாடியது. டெய்லர் ஓட்டம் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டம் இழக்கும் வாய்ப்பை அக்மல் தவறவிட்டதால் அதன் பின் அவர் ஆடிய விஸ்வரூப விளையாட்டு நியூஸிலாந்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
கண்டத்தில் இருந்து தப்பிய டெய்லர் முதலில் அடக்கி வாசித்தார். பின்னர் அவர் ஆடிய ருத்ர தாண்டவம் பாகிஸ்தான் அணிக்கு தோல்வியை ஏற்படுத்தியது.
அரைச் சதம் கடந்த குப்தில் 57 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். முதலாவது விக்கெட்டை எட்டு ஓட்டங்களில் இழந்த நியூஸிலாந்து தனது இரண்டாவது விக்கெட்டை 55 ஓட்டங்களில் இழந்தது. பிராங்ளின் ஒரு ஓட்டத்துடனும் ஸ்டைரிஸ் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 41.6 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது.
71 பந்தில் அரைச் சதம் கடந்த டெய்லர் அதன் பின் அதிரடியில் இறங்கினார். டெய்லர் மெக்லம் ஜோடி 24 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்தது. நதன் மெக்லம் 19 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
நதன் மெக்லம் வெளியேறியதும் ஜேகப் ஓரம் களம் புகுந்தார். இவர்கள் இருவரும் இணைந்து பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களைத் துவம்சம் செய்தனர். 27 பந்துகளில் 85 ஓட்டங்கள் எடுத்து நியூஸிலாந்து ரசிகர்களை குஷிப் படுத்தியது. 9 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார் ஓரம். இதேநேரம், 17 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்தார் டெய்லர்.
அக்தர் வீசிய 47 ஆவது ஓவரில் மூன்று சிக்ஸர் இரண்டு பவுண்டரி உட்பட 28 ஓட்டங்கள் எடுத்தார். கடைசிப் பந்தை சிக்ஸருக்கு விரட்டிய டெய்லர் 117 பந்துகளில் நான்கு சிக்ஸர், ஆறு பவுண்டரி அடங்கலாக சதமடித்தார். இது அவரது, ஒருநாள் போட்டியில் நான்காவது சதமாகும்.
அப்துர் ரெஹ்மான் வீசிய 50 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் அடித்த ஓரம், 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
50 ஓவர்களில் நியூஸிலாந்து ஏழு விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்கள் எடுத்தது. டெய்லர் ஆட்டமிழக்காது 131 ஓட்டங்கள் எடுத்தார். ஏழு சிக்ஸர், எட்டு பவுண்டரிகள் இவற்றுள் அடங்கும். மில்ஸ் ஆட்டமிழக்காது ஏழு ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசி ஆறு ஓவர்களில் நியூஸிலாந்து 114 ஓட்டங்கள் எடுத்தது.
46 ஆவது ஓவரில் ஆறு விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்கள் எடுத்த நியூஸிலாந்து 50 ஆவது ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்கள் எடுத்து பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தது.
கடைசி நான்கு ஓவர்களில் 92 ஓட்டங்கள் எடுத்தனர் நியூஸிலாந்து வீரர்கள். அக்தரின் ஒரு ஓவரில் 28 ஓட்டங்களையும் ரசாக்கின் ஒரு ஓவரில் 30 ஓட்டங்களையும் அடித்தனர்.
303 என்ற பிரமாண்டமான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 41.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 192 ஓட்டங்கள் எடுத்தது. சௌதியின் வேகம் பாகிஸ்தான் வீரர்களைத் தடுமாறச் செய்தது.
பாகிஸ்தான் அணியின் ஆறு விக்கெட்டுகள் 66 ஓட்டங்களில் வீழ்ந்தன. உமர் அக்மல் 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
போராடிய அப்துர் ரஸாக் 62 ஓட்டங்கள் எடுத்தார். இவர் ஒரு நாள் போட்டியில் 5000 ஓட்டங்களைக் கடந்தார். உமர் குல் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்கள் எடுத்தார். ஏனையவர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை டெய்லர் பெற்றார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்
No comments:
Post a Comment