Monday, March 28, 2011

வெளியேறியது இங்கிலாந்துசாதித்தது இலங்கை


இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற நான்காவது காலிறுதிப் போட்டியில் 10 விக்கட்டுகளினால் வெற்றி பெற்ற இலங்கை அரையிறுதியில் விளையாடத் தெரிவாகியுள்ளது. முதல் சுற்றில் தட்டுத் தடுமாறி காலிறுதியில் நுழைந்த இங்கிலாந்து, இலங்கையின் போராட்டத்துக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாது வீழ்ந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களை எடுத்தது. ஆர். பிரேமதாஸ மைதானத்தில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணி அதிக ஓட்டங்கள் குவித்தால் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணி தோல்வியடைவது வழமை. இலங்கை அணி வீரர்களின் துல்லியமான பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாத இங்கிலாந்து குறைந்த ஓட்டங்களையே பெற முடிந்தது. அணித் தலைவர் ஸ்ட்ரோஸ் பெல் ஜோடியின் எதிர்பார்ப்பை டில்ஷான் முறியடித்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் டில்ஷான், ஆரம்ப பந்துவீச்சாளராகக் களத்தில் புகுந்து ஸ்ட்ரோட்ஸை ஐந்து ஓட்டங்களுடன் வெளியேற்றினார். 19 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஸ்ட்ரோஸ் ஐந்து ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். இங்கிலாந்து அணியின் முதல் ஜோடி 48 பந்துகளைச் சந்தித்து 29 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. பெல்லுடன் ஜோடி ஜொணதன்ட்ரொட் ஸ்ட்ரோஸ் இணைந்தபோது 25 ஓட்டங்கள் எடுத்த பெல் மத்தியூஸின் பந்தில் சாமர சில்வாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஜொனதன் ட்ரொட், ரவி போபரா ஜோடி ஓரளவு தாக்குப் பிடித்து ஓட்டங்களைக் குவிக்க முனைந்தது. முரளிதரனின் பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்த ரவி போபரா ஆட்டமிழந்தார். ஜொனதன் ட்ரொட்டுடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையூட்டினர். 97 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர்கள் 91 ஓட்டங்களை வேகமாகக் குவித்தன. 55 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்த மோர்கன் மாலிங்கவின் பந்தை மத்தியூஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களம் புகுந்த வீரர்கள் சோபிக்கவில்லை. தனி ஆளாகப் போராடிய ஜொனதன் ட்ரொட் 86 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்த இங்கிலாந்து 229 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து வீரர்கள் பௌண்ட்டரிகள் அடிப்பதற்குத் திணறினர். ஒரு சிக்ஸர் கூட அவர்களால் அடிக்க முடியவில்லை. 230 என்ற வெற்றி இலக்குடன் களம் புகுந்த இலங்கை, விக்கட் இழப்பின்றி 231 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 39.3 ஓவர்களில் இலங்கை அணி வெற்றி இலக்கை அடைந்து 36 ஆவது ஓவரில் டில்ஷான் பௌண்டரி அடித்து 10 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த உலகக் கிண்ணப் போட்டியில் டில்ஷான் அடித்த இரண்டாவது சதம் இது. மறுபுறத்தில் தரங்க சதமடிக்க இரண்டு ஓடடங்கள் தேவைப்பட்டது. வெற்றி பெற மூன்று ஓட்டங்கள் தேவை. இந்த நிலையில் பௌண்டரி அடித்த தரங்க சதத்துடன் வெற்றி இலக்கை எட்டினார். மோர்கன் 13, 33, 34 ஓட்டங்களில் இருந்தபோது அவரை ஆட்டமிழக்கும் வாய்ப்பை இலங்கை வீரர்கள் கோட்டைவிட்டனர். எல்.பி.டபிள்யூ. ஆட்டமிழப்பில் நடுவரின் கருணையால் தப்பிப் பிøழத்த மோர்கன் அரைச்சதம் அடித்தார். டில்ஷான் 102 ஓட்டங்களும் தரங்க 108 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.

ரமணி

சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

No comments: