Tuesday, March 15, 2011

பணிந்தது தி.மு.க.தணிந்தது பிரச்சினை


திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான தொகுதி பேரம் பற்றிய இழுபறி இரண்டு பகுதியிலும் மனக் கசப்புடன் முடிவுக்கு வந்துள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சி தீர்மானித்திருந்தது. தவிர ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்திடம் கோரிக்கை விடுத்தது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பறித்த தமிழக ஆட்சியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் தாரை வார்த்துக் கொடுக்க முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை. ஆகையினால் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை முதலிலேயே மறுக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் தான் கொடுக்கலாம் என்று கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்தார். 63 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அடம்பிடித்தது. 63 தொகுதிகளில் இருந்து ஒரு தொகுதிக்குக் குறைந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று காங்கிரஸ் விடாப்பிடியாகக் கூறியது. காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளைக் கொடுக்க விரும்பாத திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இருந்து விலகுவதாக அறிவித்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய அமைச்சர்கள் இராஜினாமாச் செய்வதற்காக டில்லியை நோக்கிப் படையெடுத்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் பின்னர் காங்கிரஸ் கட்சி கேட்ட 63 தொகுதிகளைக் கொடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் ஒப்புக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே உட்பூசல் நீண்ட காலமாகவே உள்ளது. பிரச்சினை 63 தொகுதிகள் மட்டுமல்ல, அதற்கும் அப்பால் பல பிரச்சினைகள் உள்ளன. ஸ்பெக்ரம் ஊழலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. சட்டப்படி தான் எல்லாம் நடந்தது என்று திராவிட முன்னேற்றக் கழகம் கூறுகிறது.
ராசா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அடுத்து கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தச் செய்திகள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன. போபஸ் ஊழல் வழக்கில் இருந்து சிலர் விடுவிக்கப்பட்டது போன்று ஸ்பெக்ரம் வழக்கில் இருந்து ராசாவும் வேறு சிலரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது.
ஸ்பெக்ரம் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர்பை கைவிட்டு காங்கிரஸை நிரபராதியாகக் காட்ட வேண்டும் என்று காங்கிரஸில் உள்ள சிலர் விரும்புகிறார்கள். தமிழகத்தில் திராவிடக் கழகங்களின் உதவி இன்றி காங்கிரஸ் வெற்றி பெற முடியாது. ஆகையால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு உள்ளது.
காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் வாரி வழங்கியுள்ளது. ஆட்சியில் பங்கு பற்றி தேர்தலுக்குப் பின்னர் முடிவு செய்யலாம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கூறியதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. இழப்புகளுடனும் மனக் கசப்புகளுடனும் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி சேர்ந்துள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கியதால் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் இருந்து தலா ஒரு தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் திரும்பப் பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் 121, காங்கிரஸ் 63, பாட்டாளி மக்கள் கட்சி 30, விடுதலைச் சிறுத்தைகள் 10, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 10, இந்திய முஸ்லிம் லீக் 2, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 1, தொகுதிகளில் போட்டியிடப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்ட சபையில் அறுதிப் பெரும்பான்மை மூலம் ஆட்சி அமைப்பதற்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 121 தொகுதிகளில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகம் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். 118 தொகுதிகளை விட குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தான் ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
தமிழக மக்களுக்கு வாரி வழங்கிய இலவசங்களும் சலுகைகளும் அடுத்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் தன்னை அமர்த்தும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை வைத்திருந்தார். தேர்தலுக்õன வேட்பு மனுத் தாக்கல் செய்ய முன்பே கருணாநிதியின் கனவை காங்கிரஸ் தவிடு பொடியாக்கியது. குறைந்த தொகுதியில் போட்டியிட வேண்டிய ஒப்பந்தத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தள்ளியுள்ளது காங்கிரஸ் கட்சி.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த நெருக்கடியைத் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விரும்பவில்லை. ஆகையால் தேர்தலின்போது காங்கிரஸின் வெற்றிக்காக திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் முழு மூச்சுடன் ஈடுபடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 1980ஆம் ஆண்டு 112 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது. அதன்பின் மிகக் குறைந்த தொகுதிகளில் இப்போது போட்டியிடுகிறது.
"கடவுளுடனும் மக்களுடனும் தான் கூட்டணி' என்று மேடைதோறும் முழங்கி வந்த விஜயகாந்த், திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். கடந்த தேர்தல் காலங்களில் எலியும் பூனையும் போல் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்த்த ஜெயலலிதாவும் விஜயகாந்தும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தனர்.
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டதனால் மிக அதிகம் பாதிக்கப்பட்டவர் ஜெயலலிதாதான்.
சில தொகுதிகளில் விஜயகாந்தின் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
ஜெயலலிதாவைப் பிடிக்காதவர்களும் எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் சிலரே விஜயகாந்தை ஆதரித்தனர். விஜயகாந்தும் ஜெயலலிதாவும் இணைந்ததால் விஜயகாந்துக்கு ஆதரவு தெரிவித்த எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
வர்மாவீரகேசரிவாரவெளியீடு13/03/11

No comments: