Sunday, March 20, 2011

ஜப்பானை சீரழித்த சுனாமி



இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது அமெரிக்காவினால் சின்னாபின்னமாக்கப்பட்ட ஜப்பானை சுனாமி என்ற அரக்கன் சூறையாடியுள்ளான். நிலநடுக்கம், சுனாமி என்பன ஜப்பான் மக்களுக்குப் புதியன அல்ல. நிலநடுக்கத்தால் ஜப்பான் அடிக்கடி பாதிக்கப்படுவதனால் நிலநடுக்கத்தில் இருந்து எப்படி பாதுகாப்பாகத் தப்புவது என்பது பாடசாலைக் கல்வியிலேயே உள்ளடக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பத்தில் உலகுக்கு முன்மாதிரியாகத் திகழும் ஜப்பானில், வானுயர்ந்த கட்டடங்கள் உள்ளதென்றாலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையிலேயே ஜப்பானின் வானுயர்ந்த கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆழிப்பேரலைக்கு சுனாமி என்ற பெயரை உலகுக்கு அறிமுகப்படுத்தியது ஜப்பான்தான். அடிக்கடி சிறிய சுனாமி ஜப்பானின் கடற்கரையோரங்களைத் தாக்கி அழிக்கும். கடந்த 11 ஆம் திகதி கடலில் இருந்து கிளம்பிய சுனாமி புகுஷிமா, மியாதி, ஜலேட் ஆகிய மாகாணங்களை நிர்மூலமாக்கியது.
யுரேஷியன், பசுபிக், வட அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் ஆகிய கண்டத்திட்டுக்கள் ஒன்றிணையும் மேற்குப்பகுதியில் ஜப்பான் உள்ளது. இதன் காரணமாக கண்டங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது அல்லது மோதும்போது ஏற்படும் நிலநடுக்கம் ஜப்பானைப் பாதிக்கும்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டதாலும், சுனாமியிலிருந்து தப்புவதற்கான முன்னேற்பாடுகள் பற்றி மக்கள் தெரிந்திருந்ததாலும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. 7.5 ரிச்டர் நிலநடுக்கம் ஏற்பட்டால் பாதிக்கப்படாதவகையிலேயே கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 11 ஆம் திகதி 8.9 ரிச்டர் நிலநடுக்கம் கடலில் ஏற்பட்டதால் உண்டான சுனாமி ஜப்பானின் மூன்று மாகாணங்களை அடையாளம் தெரியாது மாற்றி விட்டது.
மியாகி மாகாணத்தில் உள்ள மினாமி கன்றிக் என்ற கிராமத்தில் வசித்த 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கம் ஏற்பட்டால் தானாகவே இயக்கத்தை நிறுத்தும் புல்லட் ரயிலையும் காணவில்லை. சுனாமி கொண்டுவந்திருந்த குப்பைகள் ஆங்காங்கே படிந்திருப்பதால் அவற்றை அப்புறப்படுத்தும் வேலைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பசுபிக் திட்டு, வட அமெரிக்காவில் கண்டத்திட்டின் மீது மோதியதால் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் மற்றும் நிலநடுக்க ஆய்வாளர் பால் ஏத்ல் தெரிவித்தார். இந்த மோதல் காரணமாக ஜப்பானை எட்டு அடி நகர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பூகம்பத்தின் காரணமாக பூமியின் அச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் மூன்றில் ஒரு பங்கு மின் காந்தத்தை அணுமின் உலைகள்தான் வழங்குகின்றன. ஜப்பானில் சுமார் 50க்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்கள் உள்ளன. அகனவா அணு உலைக்கூடத்தில் உள்ள மூன்று அணுமின் உலைகள் நிலநடுக்கத்தின் காரணமாக தாமாகவே உற்பத்தியை நிறுத்திவிட்டன. 11 மின் நிலையங்கள் நிலநடுக்க அனர்த்தம் காரணமாக மூடப்பட்டுவிட்டன. நான்கு அணுமின் உலைகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
அணுமின் உலைகள் வெடித்ததனால் ஏற்பட்ட அணுக்கதிர் வீச்சின் தாக்கம் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள் அணுக்கதிர் வீச்சைத் தாங்கும் அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் அணு உலை வெடித்ததனால் தனது அணு உலைகள் பற்றி மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது அமெரிக்கா. இயற்கையின் எந்தவிதமான பாதிப்பையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஜப்பானின் அணுமின் உலைகள் வெடித்ததனால் அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகளும் அச்சத்தில் உள்ளன.
ஜப்பானில் உள்ள தமது நாட்டவரை உடனடியாக வெளியேறுமாறு வெளிநாடுகள் அறிவித்துள்ளன. ஜப்பானுக்குச் செல்லவேண்டாம் என்று பல நாடுகள் தமது நாட்டுப்பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. மீட்புப் பணியை மிகவேகமாக ஜப்பான் முடுக்கிவிட்டுள்ளது.
அணுக்கதிர் வீச்சு இரண்டொரு நாட்களில் முடிந்துவிடும் விடயமல்ல. அதன் பாதிப்பு எதிர்வரும் காலங்களின் தான் வெளியே தெரிய ஆரம்பிக்கும். புற்றுநோய் பாதிப்பு எலும்பு மச்சையில் தாக்கம் உட்பட பல நோய்கள் தோன்றும் அபாயம் உள்ளது. அணுக்கதிர் வீச்சினால் மனித உடலில் மரபணு மாற்றம் ஏற்படும். கருவில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படும். கதிர் வீச்சில் உள்ள அயோடின் மூலகத்தை விரைவில் ஏற்றுக்கொள்ளும் பசு, எருமை என்பவற்றின் பால் அதனை அப்படியே திருப்பித்தரும். ரஷ்யாவின் செர்னோபிலில் ஏற்பட்ட அணுக்கதிர் வீச்சின் போது இப்படி நடந்துள்ளது.
எதற்கும் தளராத ஜப்பான் மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்பிவிடுவார்கள். அழிந்து விட்ட நகரங்களை மீளக்கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கை ஜப்பானிய மக்களிடம் உள்ளது.
ரமணி.
சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

No comments: