Friday, March 11, 2011

தடுமாறி வென்றது இந்தியா

இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கிடையே டெல்லியில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. பங்களாதேஷ், அயர்லாந்து ஆகியவற்றுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி சமநிலையில் முடிந்தது.
இங்கிலாந்து, மே. இந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்தது நெதர்லாந்து. நெதர்லாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் முனாப் பட்டேலுக்கு ஓய்வளிக்கப்பட்டு நெஹ்ரா அணியில் இடம்பிடித்தார். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்கள் எடுத்தது.
நெதர்லாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான எரிக் ஸிவர்க்கின்ஸ் கிரவெஸ்ஸி ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியது. இந்திய வீரர்களின் பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்டு இருவரும் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். சவ்லா இந்த ஜோடியைப் பிரித்தார். எரிக் ஸிவர்க் கின்ஸ்கி 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நெதர்லாந்து வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது ஆட்டமிழந்தனர். 38.1 ஓவர்களில் ஏழு விக்கெட்டை இழந்த நெதர்லாந்து 127 ஓட்டங்கள் எடுத்தது. அணித் தலைவர் பீட்டர் பொரன், முடாசர் புகாரி இணை நின்று நிதானமாக விளையாடி நெதர்லாந்தின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து 189 ஓட்டங்கள் எடுத்தது.
சகிர்கான் மூன்று விக்கெட்டுகளையும், சவ்லா, யுவராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
190 என்ற இலகுவான இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்தியா ஐந்து விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷேவாக் சச்சின் ஜோடி அதிரடியாக விளையாடி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் ஷேவாக். அவர் ஆட்டமிழந்ததும் யூசுப் பதான் களம் புகுந்தார். யூசுப்பின் அதிரடி இந்திய அணியின் வெற்றியை இலகுபடுத்தும் என்று ரசிகர்கள் நம்பினார்கள். சச்சின் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரசிகர்கள் நம்பிக்கை வைத்த யூசுப்பதான் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் மூவரையும் நெதர்லாந்து வீரர் சீலர் வெளியேற்றினார். கோக்லி 12, கம்பீர் 28 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்திய ரசிகர்கள் நிலை குலைந்தனர். யுவராஜ் சிங், டோனி இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். யுவராஜ் சிங் அரைச் சதம் அடிப்பதற்காக டோனி ஒரு ஓவரில் ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. கிருகர் பந்தை பவுண்டரிக்கு அடித்த யுவராஜ் அரைச் சதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார்.
யுவராஜ் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்கள் எடுத்தார். டோனி ஆட்டமிழக்காது 19 ஓட்டங்கள் எடுத்தார். 36.3 ஓவர்கள் பந்து வீசிய நெதர்லாந்து வீரர்கள் நான்கு உதிரிகளை மட்டும் விட்டுக் கொடுத்தனர். யுவராஜ் சிங் 48 ஆவது அரைச்சதம் அடித்தார்.
269 ஒருநாள் போட்டியில் விளையாடிய யுவராஜ் சிங் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் அரங்கில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 14 ஆவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் யுவராஜ் சிங். ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதியில் விளையாடி தகுதி பெற்ற முதலாவது அணியாக இந்தியா தெரிவானது
.ரமணிசூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

No comments: