Sunday, March 6, 2011

காங்கிரஸின் நிபந்தனையால்தடைப்பட்ட பேச்சுவார்த்தை


திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறி நிலையில் இருக்கும் போது அவசர அவசரமாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு 37 தொகுதிகளை வாரி வழங்கி காங்கிரஸை மட்டுமல்லாது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் முதல்வர் கருணாநிதி. தமிழகத் தேர்தல் கூட்டணிக்கு கருணாநிதியே தலைமை வகிப்பார். சோனியாவும், கருணாநிதியும் தொலைபேசியில் உரையாடி தொகுதிகள் பற்றிய உடன்பாட்டை முடித்த பின்னரே தமிழக காங்கிரஸுடன் ஒப்பந்தம் செய்வது வழமை. இந்த முறை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ள ஐவர் கொண்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தொகுதி உடன்பாடு பற்றிய காங்கிரஸ் கட்சியின் நிபந்தனைகளை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. தொகுதிப் பங்கீட்டின் போதே ஆட்சியில் பங்கு என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. ஆட்சியில் பங்கு கொடுப்பதற்குத் திரõவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. திராவிடக் கட்சிகளின் தயவிலேதான் காங்கிரஸ் கட்சி தமிழகத் தேர்தல்களில் வெற்றி பெற்றது. தனித்துப் போட்டியிட்டால். காங்கிரஸ் கட்சியினால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியாது.
கூட்டணி இல்லாது எல்லாக் கட்சிகளும் தனித்து போட்டியிடும் சூழல் தமிழகத்தில் இல்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் வெற்றி பெறலாம் என்பது காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும். தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா முழங்குகிறார். ராகுல் காந்தியின் குரலாகவே யுவராஜ் செயற்படுகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் அதிக தொகுதிகளைக் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சிக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி எதிர்பார்த்தது போல் அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவியது. நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதற்கு பலமுறை முயற்சி செய்தது.
பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் இணைப்பதற்கு முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சி அணி மாறியதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க காங்கிரஸும் தயாராக இல்லை. தனக்கு ஏற்பட்ட அவமானங்களை ஒரு பொருட்டாக மதிக்காத பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைவதற்கு முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் அதிக தொகுதிகளுக்கு ஆப்பு வைப்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக தொகுதிகளை வாரி வழங்கியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். கடந்த சட்ட சபைத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கியது. திராவிட முன்னேற்றக் கழகம் அதில் 18 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக தொகுதிகளை வழங்கியதால் காங்கிரஸை மட்டுமல்லாது ஜெயலலிதாவையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
ஜெயலலிதாவுடன் இரண்டறக் கலந்திருக்கும் வைகோ அதிக தொகுதிகளைக் கேட்டு வருகிறார். வைகோவுக்கு அதிக தொகுதிகளைக் கொடுக்க ஜெயலலிதா தயாராக இல்லை. வைகோவின் ஆதரவினால் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றி பெற்ற களம் ஒன்று இருந்தது. இப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை இன்றி வெற்றி பெற முடியாத நிலையில் உள்ளார் வைகோ. வைகோவின் நெருக்கமான அரசியல் தலைவர்களில் பலர் வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சங்கமமாகியுள்ளனர். வைகோவின் தற்போதைய பலம் ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும். ஆகையினால் அதிக தொகுதிகள் ஒதுக்க மாட்டார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு முதல்வர் கருணாநிதி கொடுத்த தொகுதி தொகையை ஒப்பிட்டு தனக்கும் அதிக தொகுதி வேண்டும் என்று வைகோ கேட்க வேண்டும் என்பதே கருணாநிதியின் எதிர்பார்ப்பு.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் இணையாக வளர்ந்து வருகிறார் விஜயகாந்த். விஜயகாந்தின் கட்சித் தலைவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியை விட பலம் வாய்ந்த தனக்கு அதிக தொகுதி தேவை என்று விஜயகாந்த், ஜெயலலிதாவிடம் கோர வேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விஜயகாந்துடன் கூட்டணி அமைத்தால் சில வேளை பாட்டாளி மக்கள் கட்சி அந்தப் பக்கம் பாயக் கூடும். அப்போது 31 தொகுதிகளை விட குறைந்த தொகுதிகளைக் காங்கிரஸ் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற மறைமுக எச்சரிக்கையை விட்டுள்ளார் கருணாநிதி.
கருணாநிதியும், ஜெயலலிதாவும் பெரிய கட்சிகளுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விஜயகாந்துக்காக ஜெயலலிதாவும் காங்கிரஸும் கதவைத் திறந்து வைத்துள்ளன. விஜயகாந்த் முடிவை அறிவித்த பின்னரே கூட்டணிக் கட்சிகள் பற்றிய உண்மை நிலைவரம் அம்பலமாகும். பெரும் எதிர்பார்ப்புடன் மீனவர்களுக்காக நாகபட்டினத்தில் விஜயகாந்த் நடத்திய கூட்டம் எதிர்பார்த்த அரசியல் மாற்றம் எதனையும் ஏற்படுத்தவில்லை. ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் விஜயின் பின்னால் அணி திரண்டனர். அரசியல் பற்றிய முக்கிய முடிவை விஜய் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியது.
தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதும் தாக்கப்படும் போதும் முதல்வர் கருணாநிதி அறிக்கை விடுவதும் பிரதமருக்கும் கடிதம் எழுதுவதும் வழமையானது. பிரதமருக்கும் முதல்வருக்கும் தந்தி அனுப்பும் படி கூறினார் விஜய். இதனை அவர் அறிக்கையாகவே வெளியிட்டிருக்கலாம். விஜயின் அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து விட்டனர்.
விஜயின் பின்னால் ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த ரசிகர்களால் உடனடியாக எந்தவிதமான அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. விஜய் ரசிகர்கள் பல கட்சிகளில் உள்ளனர். அவர்களைத் தனது பக்கம் திருப்புவதற்குரிய வேலைத் திட்டத்தை விஜய் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக விஜய் பிரசாரம் செய்வார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. விஜயின் தகப்பன் மூன்று முறை ஜெயலலிதாவை சந்தித்துள்ளார்.
அரசியல் சினிமா என்ற இரட்டைக் குதிரையில் வெற்றிகரமாகச் சவாரி செய்யும் கருணாநிதிக்கு எதிராக, பலமான அரசியல் கூட்டணியையும் விஜயகாந்த், விஜய் போன்ற சினிமா பிரபலங்களையும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார் ஜெயலலிதா.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 28/02/11

No comments: