தென்னாபிரிக்கா அயர்லாந்து அணிகளுக்கிடையே கொல்கத்தாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் தென்னாபிரிக்கா 131 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்க அணியில் காயம் காரணமாக டி விலியர்ஸ் நீக்கப்பட்டு கொலின் இங்ராம் சேர்க்கப்பட்டார். அயர்லாந்து வீரர் அன்ரூ போத்தா நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் ஜோன்ஸ்டன் களமிறங்கினார்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து களத்தடுப்பைத் தேர்வு செய் தது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் னாபிரிக்கா 50 ஓவர்களில் ஏழு விக்கட்டுக்களை இழந்து 272 ஓட்டங்கள் எடுத்தது.
அம்லா, ஸ்மித் ஜோடியின் ஆரம்பத் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை. அம்லா 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். அதிரடியாக விளையாடிய வான் 41 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கலிஸ் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார். 20.3 ஓவர்களில் நான்கு விக்கட்டுக்களை இழந்து 95 ஓட்டங்கள் எடுத்தது. பிளஸிஸ் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஆறாவது விக்கட்டில் இணைந்த டுமினி, இங்ரம் ஜோடி பொறுப்புடன் விளையாடி தென்னாபிரிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. 46 ஓட்டங்கள் எடுத்த இங்ராம், ஜோன்ஸ்டனின் பந்தில் ஆட்டமிழந்தார்.
சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய டுமினி 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
50 ஓவர்களில் ஏழு விக்கட்டுக்களை இழந்த தென்னாபிரிக்கா 272 ஓட்டங்கள் எடுத்தது. 273 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து 33.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்கள் எடுத்தது.
தென்னாபிரிக்காவின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாத அயர்லாந்து வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஆட்ட நாயகனாக டுமினி தெரிவு செய்யப்பட்டார்.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்
No comments:
Post a Comment