இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையே பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலகக் கிண்ணப் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.
இந்தியா வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் 49 ஆவது ஓவரில் அடிக்கப்பட்ட இரண்டு சிக்ஸர்களும் 50 ஆவது ஓவரில் அடிக்கப்பட்ட ஒரு சிக்ஸரும் இந்தியாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டன.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 49.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்கள் எடுத்தது.
ஷேவாக்கும் சச்சினும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் புகுந்தனர். அன்டர்ஸன் வீசிய முதலாவது ஓவரில் மூன்று முறை ஷேவாக் தப்பிப் பிழைத்தார் என்றாலும் அவர் தனது அதிரடியைத் தொடர்ந்தார்.
ஷேவாக் சச்சின் ஜோடி 46 ஓட்டங்கள் எடுத்தது. பிரெஸ்னனின் பந்தை பிரையரிடம் பிடிகொடுத்து ஷேவாக் ஆட்டமிழந்தார். 26 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஷேவாக் ஆறு சிக்ஸர்கள் அடங்கலாக 35 ஓட்டங்கள் எடுத்தார்.
சச்சின், கம்பீர் ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தது. இவர்கள் இருவரும் இணைந்து 134 ஓட்டங்களை எடுத்தனர்.
அதிரடியாக 22 ஆவது அரைச் சதத்தை அடித்த கம்பீர் ஸ்வான் பந்தில் ஆட்டமிழந்தார். 61 பந்துகளுக்கு முகம் கொடுத்த கம்பீர் ஐந்து பௌண்டரிகள் அடங்லாக 51 ஓட்டங்கள் அடித்தார்.
சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் அரங்கில் 47 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் பெற்ற ஐந்தாவது சதமாகும். 103 பந்துகளுக்கு முகம் கொடுத்த சச்சின் நான்கு சிக்ஸர், எட்டு பௌண்டரிகளுடன் சதமடித்தார்.
சச்சின், யுவராஜ் ஜோடி 56 ஓட்டங்களை எடுத்தது. சச்சின் டெண்டுல்கர் 120 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 115 பந்துகளுக்கு முகம் கொடுத்த சச்சின் ஐந்து சிக்ஸர், பத்து பௌண்டரிகள் அடங்கலாக 120 ஓட்டங்கள் எடுத்தார்.
யுவராஜ் சிங் 58 ஓட்டங்களிலும் டோனி 31 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யூசுப் பதான் 14 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கங்களுடன் நடையைக்கட்ட 49.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா.
இந்தியாவின் நான்காவது விக்கட்டும் ஐந்தாவது விக்கட்டும் 305 ஓட்டங்களில் வீழ்ந்தன. அடுத்து வந்த ஆறு வீரர்களும் 33 ஓட்டங்களையே அடித்தனர்.
10 ஓவர்கள் பந்துவீசிய பிரஸ்னன் 48 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கட்டுக்களை வீழ்த்தினார். ஒரு ஓவரை ஓட்டமற்ற ஓவராக வீசினார்.
339 என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 338 ஓட்டங்கள் எடுத்து போட்டியை சமநிலையில் முடித்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஸ்ட்ராஸ் பீட்டர்ஸன் ஆகியோர் சிறந்த அடித்தளத்தை இட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து 68 ஓட்டங்கள் எடுத்தனர். முனாப் பட்டேல் இவர்களைப் பிரித்தார். 22 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்த பீட்டர்ஸன் ஆட்டமிழந்தார். டிராட் அதிக நேரம் நீடிக்கவில்லை. 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 16.4 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 111 ஓட்டங்கள் எடுத்தபோது ஸ்ட் ரான்ஸுடன் ஜோடி சேர்ந்தார் பெல். இவர்கள் இருவரையும் பிரிப்பதற்கு இந்தியப் பந்து வீச்சாளர்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வீணாயின.
மூன்றாவது விக்கட்டில் இவர்கள் இருவரும் இணைந்து 26 ஓவர்களில் 170 ஓட்டங்கள் எடுத்தனர்.
69 ஓட்டங்களில் பெல் ஆட்டமிழந்தார். ஸ்ட்ராஸ் ஆறாவது சதத்தை அடித்தார். 99 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஸ்ட்ராஸ் 13 பௌண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் எடுத்தார்.
ஸ்ட்ராஸ் 158 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். கொலிங்வூட் 1, பிளாயர் 8, யாட் 13 ஓட்டங்களில் ஆட்டம் இழக்க இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.
கடைசி இரண்டு ஓவர்களில் 29 ஓட்டங்கள் தேவைப்பட்டது. சவ்லாவின் பந்து வீச்சில் ஸ்வான், பிரிஸ்ரன் ஆகியோர் தலா ஒரு சிக்ஸர் அடிக்க இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகமானார்கள். 49 ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் பிரிஸ்ரன் ஆட்டமிழந்ததும் இந்திய ரசிகர்கள் உற்சாகமானார்கள்.
கடைசி ஓவரில் வெற்றி பெற 14 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் முனாப் பட்டேல் பந்து வீசினார். முதலாவது பந்தில் ஒரு ஓட்டம், இரண்டாது பந்தில் இரண்டு ஓட்டங்கள், மூன்றாவது பந்தில் அஜ்மல் ஷாஸாத் அபாரமான சிக்ஸர் அடிக்க இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகமானார்கள். இரண்டு பந்தில் நான்கு ஓட்டங்கள் என்ற நிலையில் பந்தை எதிர்கொண்ட ஸ்வான் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசிப் பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒரே ஒரு ஓட்டத்தை மட்டும் இங்கிலாந்து எடுத்தது. பிரமாண்டமான இலக்கை விரட்டியும் வெல்ல முடியாது சமநிலையில் முடிந்தது. இங்கிலாந்து ஆட்டநாயகனாக ஸ்ட்ராஸ் தேர்வு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்
No comments:
Post a Comment