உலக கோப்பையில் சதம் விளாச வேண்டும் என்பது ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் மிகப் பெரிய லட்சியக் கனவாகவே இருக்கும். மிக அரிதான சாதனையாக கருதப்பட்ட அந்த விஷயம் நடப்பு உலக கோப்பையில் சர்வ சாதாரணமாகி விட்டது. லீக் சுற்றில் நடந்த 42 ஆட்டங்களில் 35 சதம் விளாசப்பட்டுள்ளது. 1975ல் நடந்த முதல் உலக கோப்பையில் மொத்தம் 6 சதம் மட்டுமே அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் சங்கக்கரா தொடர்ச்சியாக 4 சதம் விளாசி உலக கோப்பையில் மட்டுமல்ல, ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே ஈடு இணையற்ற சாதனையை படைத்துள்ளார்.
தில்ஷன் (இலங்கை), தவான் (இந்தியா), பிரெண்டன் டெய்லர் (ஜிம்பாப்வே), மகமதுல்லா (வங்கதேசம்) ஆகியோர் தலா 2 சதம் விளாசி உள்ளனர். 35 சதத்தில் இலங்கை 8, தென் ஆப்ரிக்கா 5, இந்தியா 4, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா கணக்கில் தலா 3 சதம். வங்கதேசம், இங்கிலாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வேக்கு தலா 2. நியூசிலாந்து, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஸ்காட்லாந்து சார்பில் தலா ஒரு சதம் விளாசப்பட்டுள்ளது.
பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய 2வது உலக கோப்பையில் (இங்கிலாந்து, 1979) அடிக்கப்பட்டது 2 சதம் மட்டுமே. அதன் பிறகு 1983ல் 8 சதம், 1987ல் 11 என்று ஏறுமுகமாக இருந்தது 1992ல் 8ஆக சரிந்தது. 2003ல் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா இணைந்து நடத்திய தொடரில் 21 ஆக உயர்ந்த சத எண்ணிக்கை, 2007ல் (வெஸ்ட் இண்டீஸ்) 20 ஆனது. இந்தியா, வங்கதேசம், இலங்கை இணைந்து நடத்திய கடந்த உலக கோப்பையில் 24 சதம் அடிக்கப்பட்ட நிலையில், தற்போது லீக் சுற்றில் மட்டுமே 35 சதமாக எகிறியிருக்கிறது.
No comments:
Post a Comment