Monday, March 16, 2015

சூடுபிடிக்கும் உலகக்கிண்ண போட்டி

நான்கு வாரங்களாக மிதமான சூட்டில் இருந்த உலகக் கோப்பை கிரிக்கெட் எனும் ஜுரம் தற்போது உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்தத் தொடரில் இங்கிலாந்து வெளியேறியதைத் தவிர எதிர்பார்த்த மற்ற அணிகள் காலிறுதிக்கு முன்னேறி விட்டன. உலகக் கோப்பை என்றாலே இருக்கும் சில
சுவாரஸ்யங்கள் இந்த முறையும் இடம்பெறாமல் இல்லை. கிறிஸ் கெயிலின் இரட்டைச் சதம், சங்ககாராவின் தொடர் சதங்கள், அநாயாசமாக 400-ஐத் தாண்டும் ஸ்கோர் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீனி போடும் சம்பவங்கள் நாக் அவுட் சுற்றில் அரங்கேறி உள்ளன. அதுகுறித்த ஒரு பார்வை.
மீண்டும் பாகிஸ்தான் தோல்வி: " உலகக் கோப்பைத் தொடர்களில் மீண்டும் ஒரு முறை பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் ஆக்ரோஷம் இந்த முறை "மிஸ்ஸிங்' என்றாலும்,
தோனியின் தலைமைப்பண்பு
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் எப்போது பார்த்தாலும் தோனியுடன் "வாய்க்கால் தகராறு' இருப்பதைப் போலவே பேட்டி கொடுப்பார். தோனியின் தலைமைப்பண்பை எல்லோரும் ஆஹா, ஓஹோவென மெச்சும்போது சேப்பல் மட்டும் "இதெல்லாம் கேப்டன்ஷியா' என்கிற ரீதியில் பதிலளிப்பார்.

 ஆனால், "முத்தரப்பு தொடருக்கு பின் ஒரு நாள் ஆட்டங்களில் இந்தியா நிறைய மாற்றம் அடைந்துள்ளது. அதற்கு காரணம் தோனியின் தலைமைப்பண்பு' என சேப்பலே தற்போது ஏகத்துக்கும் தோனியைப் புகழ்கிறார். அதற்கு, காரணம் இல்லாமல் இல்லை.
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம். அந்த அணியின் தொடக்க ஜோடியான கேப்டன் போர்ட்டர்பீல்டு, பால் ஸ்டிர்லிங் ஆகிய இருவருக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களால் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. "வேகம்' சரிப்பட்டு வராது என கணித்த தோனி, சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினிடம் பந்தைக் கொடுத்தார். அந்த ஜோடியைப் பிரித்து வைத்தார் அஸ்வின். ஆனால், அஸ்வினைப் போல ரவீந்திர ஜடேஜா நெருக்கடியை ஏற்படுத்தவில்லை என்பதால், சுரேஷ் ரெய்னாவை பந்துவீசச் சொன்னார். ரெய்னா அந்த ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார்.
யாரிடம் என்ன திறமை உள்ளது, அதை எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற கலை ஒரு கேப்டன் என்ற முறையில் தோனியிடம் நிறையவே உள்ளது. இந்த அணியா உலகக் கோப்பை வெல்லப் போகிறது என்ற கருத்தை, தனது தலைமைப் பண்பின் மூலம் மாற்றியுள்ளார் தோனி.
 கேப்டன் பொறுப்பில் மட்டுமல்ல, முன்னணி வீரர்கள் காலை வாரும்போதும், தனி ஆளாக போராடி வெற்றி தேடித் தருவது, உலகக் கோப்பைத் தொடரில் அதிக டிஸ்மிஸல்ஸ் (கைப்பற்றல்கள்) வைத்துள்ள விக்கெட் கீப்பர் என பல தளங்களில் இயங்குகிறார் தோனி. அதனால்தான் அவர் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று தருவார் என காத்திருக்கின்றனர் இந்திய ரசிகர்கள்.
இங்கிலாந்து கிரிக்கெட்டின் கருப்பு தினம்
"இங்கிலாந்து வீரர்களுக்கு இன்றைய இரவை விட, நாளைய விடியல் இன்னும் உக்கிரமாக இருக்கும். ஏனெனில், இங்கிலாந்து உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியதை நாளை, ஆஸ்திரேலிய பத்திரிகைகள் கொண்டாடித் தீர்க்கும்'.

இது, வங்கதேசத்துக்கு எதிரான கடைசிக்கு முந்தைய லீக் சுற்றில் தோல்வியடைந்ததும், சுட்டுரையில் ஒரு கிரிக்கெட் பத்திரிகையாளர் பதிவு செய்த கருத்து. அவரது கருத்துடன் ஒத்துப் போக வேண்டும்.
ஏனெனில், இங்கிலாந்தின் ஒவ்வொரு தோல்வியையும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பர். கில்கிறிஸ்ட், ஸ்டீவ் வாஹ் கூட இதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த முறை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறிய இங்கிலாந்தைப் பார்த்து பரிதாபப்படுகிறோம் என்றனர் அந்த ஜாம்பவான்கள்.
சுட்டுரையில் அந்தப் பத்திரிகையாளர் சொன்னதைப் போலவே, ஆஸ்திரேலிய பத்திரிகைகள் இங்கிலாந்தின் வெளியேற்றத்தைக் கொண்டாடின. அதேசமயம், "இங்கிலாந்து கிரிக்கெட்டின் கருப்பு தினம்' என்று பிரிட்டனில் இருந்து வெளியாகும் "கார்டியன்' பத்திரிகை தலைப்பு வெளியிட்டது.
சிக்ஸர் அடித்த அணிகள்: ஏ பிரிவில் நியூஸிலாந்தும், பி பிரிவில் இந்தியாவும் மட்டுமே குரூப் சுற்றில் தோல்வியையே சந்திக்காமல் ஆறு ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றியைப் பதிவு செய்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் வெற்றி என்பதே என்னவென்று தெரியாமல் தொடரில் இருந்து வெளியேறின.
சதத்துக்கு பஞ்சமில்லை: குரூப் சுற்றில் 42 ஆட்டங்களின் முடிவில் மொத்தம் 35 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் சங்ககரா நான்கு சதங்கள் அடித்துள்ளார். இலங்கையின் தில்ஷான், இந்தியாவின் ஷிகர் தவாண், ஜிம்பாப்வேயின் பிரன்டன் டெய்லர், வங்கதேசத்தின் முகமது மகமதுல்லா ஆகியோர் இரண்டு சதங்களை அடித்துள்ளனர். இலங்கை சார்பில் எட்டு சதங்களும், தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஐந்து சதங்களும், மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா தங்கள் பங்குக்கு தலா மூன்று சதங்களையும் விளாசியுள்ளன.
1975-இல் நடைபெற்ற முதல் உலகக் கோப்பைத் தொடரில் 6 சதங்கள் மட்டுமே பதிவாகின என்பது கொசுறு  தகவல்.
எளிதாக கடந்த 400 ரன்கள்: திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பது, இந்த உலகக் கோப்பைத் தொடரில் நிரூபணமாகி உள்ளது. ஒரு காலத்தில் 300 ரன்கள் என்பதே குதிரைக் கொம்பாக இருக்கும். ஆனால்,
இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 408 ரன்களும், அயர்லாந்துக்கு எதிராக 411 ரன்களும் குவித்தது. ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 417 ரன்கள் அடித்தது. 

கெயில் புயல்: ஒரு ஆட்டத்தில் ஆடினாலும், அந்த ஆட்டத்தை காலத்துக்கும் பேச வைத்து விடுவதே மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயிலின் தனித்துவம். ஜிம்பாப்வே பவுலர்களை கதற விட்டு 215 ரன்கள் விளாசிய கெயில், உலகக் கோப்பைத் தொடர்களில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்று அழுத்தமாக வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார்.
தவிர, ஒரு நாள் அரங்கில் இரட்டை சதம் அடித்த இந்தியர் அல்லாத முதல் வீரர் என்பதும் பெருமையே.





விடைபெறும் நேரத்தில் விளாசல்

"ஓய்வு பெற வேண்டாம் என்று மண்டியிட்டு கேட்டுக் கொண்டேன். இருந்தாலும், இவ்வளவு காலம் இலங்கை கிரிக்கெட்டுக்கு தன்னை அர்ப்பணித்த, அவரது முடிவையும் மதிக்க வேண்டும்' என்றார் இலங்கை கேப்டன் ஏஞ்சலா மேத்யூஸ். இந்த உலகக் கோப்பைத் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ள சங்ககராதான், மேத்யூஸ் சொன்ன அவர்.
ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மட்டுமல்லாது உலகக் கோப்பைத் தொடரிலும் தொடர்ந்து நான்கு சதங்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார் சங்ககாரா.  போதாக்குறைக்கு, இந்தப் போட்டியின் அதிக ரன்களைக் குவித்த பேட்ஸ்மேன்கள் வரிசையிலும், 496 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஜிம்பாப்வே அணி கேப்டன் பிரன்டன் டெய்லர் (433 ரன்கள்). இவரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்துடன் கிரிக்கெட்டுக்கு "குட் பை' சொல்லி விட்டார்.  சங்ககாராவைப் போல ஜெயவர்த்தனேவும் இந்தத் தொடருடன் கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்ல இருக்கிறார்.
அப்படியே அள்ளியது: இந்த உலகக் கோப்பைத் தொடரில் யாருமே எதிர்பாராத வகையில், சத்தமே இல்லாமல் ஒரு சாதனை அரங்கேறி உள்ளது. இந்திய அணி லீக் சுற்றில் ஆறு ஆட்டங்களிலுமே எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது. "இதெல்லாம் ஒரு சாதனையா?' என்றால், "உலகக் கோப்பைக்கு முன்னாடி நம்ம பவுலிங்க நினைச்சுப் பார்த்தா, இதுவும் ஒரு சாதனைதான்' என்கின்றனர் சமூக இணையதளங்களில் ரசிகர்கள்.
கத்துக் குட்டிகள் ஆட்டம்: இங்கிலாந்தை விட டெஸ்ட் ஆடாத அயர்லாந்தின் ஆட்டம் அபாரமாகவே இருக்கிறது என, சமூக இணையதளத்தில் ஒரு பதிவு கண்ணில் பட்டது. உண்மைதான், அயர்லாந்து அணி அதற்கு சிறந்த உதாரணம்.
சிக்ஸரில் டி வில்லியர்ஸ் நாயகன்
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனான டி வில்லியர்ஸ் இந்தத் தொடரில் இதுவரை 20 சிக்ஸர்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார். கிறிஸ் கெயில் 18 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இருவரது அணிகளும் நாக் அவுட் சுற்றில் ஆட இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் எகிறும்.

""தொடர்ந்து நான்கு சதங்கள் அடிப்பது என்பது அரிதான விஷயம். சங்ககாராவின் இந்த ஆட்டத்தை நேரில் பார்க்க நேர்ந்தது நான் செய்த அதிர்ஷ்டம்.
அவர் இதே ஆட்டத்தை உலகக் கோப்பை முழுவதும் தொடர வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து ஆட வேண்டும். ஆனால், முடிவு சங்ககாரா கையில்தான் உள்ளது.
ஜெயசூரியா, இலங்கை முன்னாள் வீரர்.

அதிக ரன் குவித்தவர்கள்
சங்ககரா இலங்கை 496
பிரன்டன் டெய்லர் ஜிம்பாப்வே 433
டி வில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்கா 417
தில்ஷான் இலங்கை 395
மகமதுல்லா வங்கதேசம் 344

தனிநபரின் அதிகபட்சம்
கிறிஸ் கெயில் மே.இ.தீவுகள் 215
டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 178
டி வில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்கா 162*
தில்ஷான் இலங்கை 161*
ஹஷிம் ஆம்லா தென் ஆப்பிரிக்கா 159

அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்
மிச்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா 16
டிரென்ட் போல்ட் நியூஸிலாந்து 15
முகமது ஷமி இந்தியா 15
ஜோஷ் டேவி ஸ்காட்லாந்து 15


No comments: