Thursday, April 19, 2018

ரெய்னா,கம்பீர் சாதனைகளை முறியடித்த விராட் கோஹ்லி



ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் சாதனைகளை முறியடித்து, பெங்களூரு அணியின் கப்டன் விராட் கோஹ்லி தனி மனிதராக ஜொலித்து வருகிறார்.
11-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. மும்பையில்  நடந்த 14-வது போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 46 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கப்டன் விராட் கோஹ்லி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளுக்கு 92 ஓட்டங்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன், ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்சமாக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்தார். ரெய்னா 163 இன்னிங்ஸ்களில் விளையாடி 4,558 ஓட்டங்கள் சேர்த்து இருந்தார்.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான   போட்டியில் விராட் கோஹ்லி 92 ஓட்டங்கள் சேர்த்தன் மூலம் ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்சமாக 4,619 ஓட்டங்கள் சேர்த்து தற்போது விராட் கோஹ்லி முதலிடத்தில் இருக்கிறார். இதற்காக அவருக்கு   ஒரேஞ் நிற தொப்பி வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து ஒரே அணிக்காக விளையாடி விரைவில் 5 ஆயிரம் ஓட்டங்கள் எட்டப்போகும் முதல் வீரரும் கோஹ்லி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியில், ரெய்னா 4,558 ஓட்டங்களுடன் 2-ம் இடத்திலும், ரோகித் சர்மா 4,345 ஓட்டங்களுடன் 3-ம் இடத்திலும், கம்பீர் 4,210 ஓட்டங்களுடன் 4-ம் இடத்திலும், டேவிட் வார்னர் 4014 ஓட்டங்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிகமான அரைசதம்அடித்தவர்கள் பட்டியலில் டெல்லி டேர்டெவில்ஸ் கப்டன் கவுதம் கம்பீர் 53 அரை சதங்களுடன் முதலிடத்தில் இருந்தார். ஆனால்,   விராட் கோஹ்லி தனது 54-வது அரைசதம் அடித்தது கம்பீரின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த ஐபிஎல் போட்டிகளில் இதுவரை தனிஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன், பெங்களூரு அணிக்கு எதிராக 92 ஓட்டங்கள் சேர்த்தே அதிகபட்சமாக இருந்தது.

ஆனால் அந்த சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் கப்டன் ரோகித் சர்மா முறியடித்தார். பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 94 ஓட்டங்கள் சேர்த்ததே நடப்பு ஐபிஎல் போட்டியில் தனி ஒரு வீரரின் அதிகபட்சமாகும்



No comments: