தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான தொகுதிப் பங்கீடு மனக் கசப்புகளுடன் முடிவுக்கு வந்துள்ளது. ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த் இணைந்துவிட்டார் என்றதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் வெற்றிக் களிப்பில் மிதந்தனர். விஜயகாந்துக்கு 41 தொகுதிகளை அள்ளிக் கொடுத்த ஜெயலலிதா இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு குறைந்த தொகுதிகளைக் கொடுத்தார். மிகுந்த போராட்டத்தின் பின் இடதுசாரிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் தொகுதிகளைக் கொடுத்தார் ஜெயலலிதா. தமிழக அரசியலில் புதிதாகக் களமிறங்கி தேர்தலில் நூற்றுக்கணக்கான வாக்குகளைப் பெற்ற சரத்குமாருக்கு செங்கம்பளம் விரித்த ஜெயலலிதா வைகோ என்ற பலம் வாய்ந்த மனிதரைக் கண்டு கொள்ளவேயில்லை. வைகோவுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் போட்டியில் தொகுதிகளை அறிவித்தார் ஜெயலலிதா. இடதுசாரிகள் வெற்றி பெற்ற நாடுகளிலும் விஜயகாந்துக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளிலும் ஜெயலலிதா கண் வைத்ததனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் ஒருதலைப்பட்சமான முடிவினால் மூன்றாவது அணி உருவாகும் நிலை ஏற்பட்டது. விஜயகாந்த், இடதுசாரிகள் இணைந்து மூன்றாவது அணி உருவானால் தனது கனவு பொய்த்து விடும் என்பதை உணர்ந்த ஜெயலலிதா அவர்கள் கேட்ட தொகுதிகளைக் கொடுக்க முன் வந்தõர். மூன்றாவது அணி என்ற மிரட்டல் ஜெயலலிதாவைப் பணிய வைத்தது. கூட்டணிக் கட்சிகள் கேட்ட தொகுதிகளை விட்டுக் கொடுத்த ஜெயலலிதா வைகோவை கூட்டணியில் இணைப்பதற்கு அதிக அக்கறை காட்டவில்லை. 30 தொகுதிகளை எதிர்பார்த்த வைகோவுக்கு எட்டு தொகுதிகளையே ஜெயலலிதா ஒதுக்கினார். கூட்டணிக் கட்சியில் இருந்து வைகோ வெளியேற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா கொடுத்த சந்தர்ப்பமாகவே கருத வேண்டி உள்ளது. கூட்டணியில் வைகோ நீடிக்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பியிருந்தால் வைகோவுக்குரிய கௌரவத்தை வழங்கி இருக்க வேண்டும். வைகோவின் வெளியேற்றம் ஜெயலலிதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகள் வேண்டும் என்று அடம்பிடித்தது. 60 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் மிரட்டியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய அமைச்சர்களின் இராஜினாமாவரை சென்ற இப்பிரச்சினைக்கு கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் முடிவு கட்டினார் கருணாநிதி. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து மீளப் பெற்ற தொகுதிகளை காங்கிரஸுக்கு வழங்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் வைகோ தம்முடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார்களே தவிர அவரைக் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. வைகோவுக்காகச் சில தொகுதிகளைத் தியாகம் செய்ய கூட்டணித் தலைவர்கள் முன்வரவில்லை. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடை மொழியுடன் ஜெயலலிதா வலம் வந்தபோதும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்பட்டவர் வைகோதான். அவ்வப்போது அதை அரசியல் இருப்பை வெளிக்காட்டுவதற்காகவே ஜெயலலிதா போராட்டம் நடத்தினார். தமிழக அரசு தவறு செய்த போதெல்லாம் களத்தில் இறங்கிப் போராடினார் வைகோ. வைகோவின் போராட்டம் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சி ஒன்று இருப்பதை வெளிக்காட்டியது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆறு தொகுதிகளில் தான் வைகோவின் கட்சி வெற்றி பெற்றது. அதில் மூவர் அணி மாறி விட்டார்கள். ஆனால் 30 தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவதற்கு வைகோ உதவி செய்தார். தன் கட்சி வேட்பாளரின் வெற்றிக்காக கடுமையாகப் பிரசாரம் செய்த அதேவேளை, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராது தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரசாரம் செய்தார் வைகோ. ஜெயலலிதா நம்பிக்கைத் துரோகம் செய்ததால் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று வைகோ முடிவு செய்துள்ளார். கட்சியின் முடிவு என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டாலும் வைகோவின் விருப்பத்தையே செயற்குழு அங்கீகரித்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கட்சியின் செயற் குழு மூலம் நடைமுறைப்படுத்துவது வழமை. தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவு ஜெயலலிதாவுக்கு எதிரான முடிவாகவே கருதப்பட வேண்டியுள்ளது. ஜெயலலிதாவின் வெற்றிக் கனவுக்கு வைகோ தடை போட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் பிரசாரம் பலம் குறைந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக மக்களைத் திரட்டும் வல்லமை வைகோவுக்கு உண்டு. இடதுசாரித் தலைவர்களும் விஜயகாந்தும் தமது கட்சி வேட்பாளரின் வெற்றிக்காகப் பாடுபடுவார்களே தவிர அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரின் வெற்றிக்காக கூடிய கவனம் செலுத்தி பிரசாரம் செய்ய மாட்டார்கள். தொகுதி ஒதுக்கீட்டின் போதே ஒருவரை ஒருவர் மிரட்டி விரும்பிய தொகுதிகளைப் பெற்றவர்கள் கூட்டணிக் கட்சியின் வெற்றிக்காக முழு வீச்சில் உழைப்பார்கள் என்பது சந்தேகமே. திராவிட முன்னேற்றக் கழகத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற பொதுக் கொள்கையுடனேயே ஜெயலலிதாவின் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. தனது வெற்றியைப் பற்றியே கண்ணும் கருத்துமாக உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் இதே கொள்கையுடன் அரசியல் நடத்தும் வைகோவைக் கண்டு கொள்ளவில்லை. ஜெயலலிதாவால் வைகோ அவமானப்படுத்தப்பட்டதால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். தேர்தலைப் புறக்கணித்துள்ளதாகவே வைகோ கூறியுள்ளார். தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று அவர் கூறவில்லை. ஜெயலலிதாவையும் அவரது கூட்டணித் தலைவர்களையும் தோற்கடிப்பதன் மூலம் வைகோவின் புண்பட்ட மனதை ஆறுதல்படுத்தலாம் என்பது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நினைக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் வாதிகளின் பொதுக் கொள்கையை முறியடித்துள்ளார் வைகோ. ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்ட வைகோ வேறு கட்சியுடன் இணைந்தோ அல்லது தனியாகப் போட்டியிடுவார் என்றோ பலரும் எதிர்பார்த்தனர். தேர்தலைப் புறக்கணிக்கும் வைகோவின் முடிவு அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைகோ தனியாகக் களமிறங்கினால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியினதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியினதும் வெற்றியின் விகிதத்தைக் குறைக்க முடியுமே தவிர வைகோவால் வெற்றி பெற முடியாது. வெற்றி பெற முடியாத ஒரு காரியத்துக்காக முயற்சி செய்து வேறு கட்சியின் வெற்றிக்காகப் பாடுபட வைகோ விரும்பவில்லை. வைகோவின் தற்போதைய முடிவு ஜெயலலிதாவின் வெற்றி வாய்ப்பைக் குறைத்துள்ளது. வர்மாவீரகேசரிவாரவெளியீடு27/03/11
1 comment:
நல்ல வேடிக்கை. முறபகல் செய்யின் பிற்பகல் விளையும்.
Post a Comment