மனித
வாழ்வுடன் இரண்டறப்பிணைந்திருப்பது இசை. தாலாட்டில் ஆரம்பித்து ஒப்பாரியில் முடியும்
மனித வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களின் மனித வாழ்வை வளப்படுத்தும் காரணியாக இசை இருக்கிறது.
கோயில் திருவிழாக்கள் மூலம் நாதஸ்வரம்,தவில்,உடுக்கு,பறை போன்றவற்றை ரசிக்க நாம் பழகிவிட்டோம்.
இசைக்கச்சேரிகள் வாயிலாக வயலின்,மத்தளம்,கடம்,கெஞ்சிரா போன்றவற்றையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்.
வீணை
என்னும் அற்புதமான இசைக்கருவியின் ரசனை எமக்கு எட்டாத்தூரத்திலேயே இருந்தது. வீணை பாலசந்தர்,
சிட்டி பாபு போன்றவர்களின் வீணாகானத்தை இசையை பற்றித் தெரிந்தவர்கள் மட்டும் தான் ரசித்தார்கள்.
பக்திப் பாடல்களும் சினிமாப் பாடல்களும் வீணை இசையை நமது அருகில் கொண்டுவந்தன. ராஜேஸ்
வைத்யா என்ற அற்புதமான கலைஞனின் கையில் வீணை
சென்ற பின்னர் தான், அதற்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.
வதிரி
சைவசமய பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் வதிரி டைமன் மைதானத்தில் ராஜேஸ் வைத்யாவின்
“வீணையின் ராகங்கள்” எனும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. வீணையின் இசையை ரசிக்க
அதிகமானவர்கள் வருவார்களா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் பலருடைய மனதிலும் ஏற்பட்டது. நிகழ்ச்சி
ஆரம்பமாகி முடியும்வரை வீணையின் லயத்தில் மூழ்கிக் கிடந்த ரசிகர்களின் அங்கீகாரம் அதனை சிதறடித்தது.
வாதாபி கணபதி எனும் விநாயக வணக்கத்துடன் இசை நிகழ்ச்சி
ஆரம்பமானது. வாதாபி கணபதி எனச்சொல்லிவிட்டுத்தான்
நிகழ்ச்சியை ஆரம்பித்தார். அடுத்து என்ன பாடல் எனச்சொல்லமாட்டேன் நீங்களே கண்டு பிடியுங்கள்
என ரசிகர்களுக்கு சவால் விட்டார். இரண்டாவது பாடலுக்காக வீணையில் அவரது கரங்கள் நர்த்தனமாடியபோது,
”ஜனனி ஜனனி ஜகம் நீ” என ரசிகர்களின் வாய் முணுமுணுத்தது. ”கல்லானாலும் திருச்செந்தூரின் கல்லாவேன்” அது ரிஎம்
எஸ்ஸின் குரல் போலவே ஒலித்தது. “சின்னஞ்சிறு பெண்போல” சீர்காழியில் குரல் நெஞ்சை வருடியது. இடையில்
உள்ள வரியில் இருந்துதான் பாடல் ஒலிக்க்கும். ரசிகர்கள் உடனே கண்டுபிடித்துவிடுவார்கள்.
”
என் மனவானில் சிறகை விரிக்கும்.......” எனும் பாடலுடன் சினிமாப் பாடல்கள் ஆரம்பமானது.
அந்தக் கிறக்கத்தில் இருந்து மீழ்வதற்கிடையில் “அத்தான்ன்ன் என் அத்தாதாதான்......” ஒரு இளம் பெண் தன்னுடைய காதலனைக் கூவி அழைப்பதைப்போல
இருந்தது. அந்தக்காதல் போதையில் இருக்கும்போதே
“சித்திரம் பேசுதடி என் ....” என ரசிகர்களின்
சிந்தனையைத் திருப்பினார் ராஜேஸ் வைத்யா. சிந்தை
சிதறிய வேளையில் “உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல....” என யாரையோ தேட வைத்தார். பழைய பாடல்கள் அனைத்தையும்
சிறுவர்களும் முணுமுணுத்தனர்.
”தென்றல் வந்து தீண்டும் போது....”
அந்தத் தென்றலே ஒரு கணம் நின்று ரசித்தது. “மலரே மெளனமா......”
வை மெளனமாக ரசித்துக்கொண்டிருக்கும்
வேளையில் திடீரென அதற்குள் “முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்”
எனும் பாடலைப் புகுத்தினார். “வெண்ணிலவே வெண்ணிலவே யன்னல்
தாண்டி .,,........” சபையைக் கட்டிப்போட்டது.
கண்ணுக்குமை
எழுது,சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி,ராஜ ராஜ சோழன்
நான், சுந்தரி கண்ணால் ஒரு சேதி,வெள்ளைப்புறா ஒன்று ஆகிய பாடல்கள் ராஜேஸ் வைத்யாவின்
விரல்களால் தேனருவியாகப் பாய்ந்தது.
மண்ணில்
இந்த காதலன்றி, ஓ ரசிக்கும் சீமானே, பார்த்த ஞாபகம் இல்லையோ, நான் பார்த்ததிலே அவள்
ஒருத்தியைத் தான், செந்தமிழ் தேன் மொழியாள் ஆகிய பாடல்களைத் தொடர்ந்து இடை விடாது மீட்டி ரசிகர்களைப் பரவசப்
படுத்தினார்.
ராஜேஸ்
வைத்யாவுடன் இணைந்த பக்க வாத்தியக் கலைஞர்களும் அவருக்கு ஈடுகொடுத்து இசை நிகழ்ச்சியை
உச்சத்துக்குக்கொண்டு போனார்கள்.மிருதங்கம் மோகனராமன்,தபேலா சந்திரஜித், கடம் சாய்ஹரி,ஓகன்
விஜயன்,சிறப்பு சப்தம் சுப்பிரமணியம் ஆகியோர் இசையாலும் உடல் மொழியாலும் ரசிகர்களைக்
கிறங்க வைத்தனர்.
37 பாடல்கள் ராஜேஸ் வைத்யாவின் விரல்களில் இருந்து
ஒலித்தன. சுமார் மூன்றரை மணித்தியாலம் போனதே தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் நீடித்திருக்கலாம்
என்ற எண்ணத்துடன் மனமில்லாமல் ரசிகர்கள் மெதுவாகக்
கலைந்தனர்.
டைமன் மைதானத்தில் உள்ளக அரங்கைப் போன்று கனகச்சிதமாக அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
ஒலி,ஒளி என்பன மெருகூட்டின. ராஜேஸ் வைத்யாவுக்கான பிரத்தியேக வரவேற்புப்பாடல், அதற்கான
நடனம் என்பனவற்றுடன் இசை நிகழ்ச்சி அமர்க்களமாக ஆரம்பமானது.
நாட்கள்,மாதங்கள்,
வருடங்கள் பல கடந்தாலும் வீணையின் ராகங்கள் மனதை விட்டு அகலாது.
ரமணி
ஞாயிறு
தினக்குரல்
10/
ஜூன்/ 2018
No comments:
Post a Comment