இலங்கையில்
நடைபெற்ற யுத்தம் முடிவடைந்து விட்டது. பிரச்சினைகள் இல்லாத நாட்டில் மக்கள் நிம்மதியாக
வாழ்கிறார்கள் என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யுத்தத்துக்குப் பின்னரான சமூக
நடைமுறைகளை “அல்வாய்ச் சண்டியன்” என்ற சிறுகதைத் தொகுதி மூலம் பரணீதரன் வெளிக்கொணர்ந்துள்ளார்.
எழுத்தாளர்,ஜீவநதி
சஞ்சிகை ஆசிரியர், தொகுப்பாசிரியர் , வெளியீட்டாளர் ,உளவள ஆலோசகர் எனப் பன்முக ஆளுமைமிக்கவர் க. பரணீதரன். பரணீதரனின்
தார்மீகக் கோபம் அவரது கதைகளினூடாக வெளிப்படுவது தவிர்க்கமுடியாதது. நம்முடன் பயணிக்கும்
மனிதர்களின் உண்மையான முகங்களை நாம் அடையாளம்
காண்பதில்லை. “அல்வாய்ச் சண்டியன்” எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அவர்களை
நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
யுத்தம்
தந்த ஏக்கத்துடனும்,வடுக்களுடனும் வாழ்பவர்களை பரணீதரன் அடையாளம் காட்டுகிறார். வறுமை,
புலம் பெயர் வாழ்வு, ஏமாற்றம்,காதல், தீண்டாமை,
உளவியலால் ஏற்படும் தாக்கம், ஒடுக்கப்பட்ட மனிதனின் வாழ்க்கை முறை என்பனவற்றை “ அல்வாய்ச்
சண்டியன்” எனும் தொகுப்பில் உள்ள கதைகளின் மூலம் பகிரங்கப்படுத்தப்படுகிறது.
வங்கி முகாமையாளரான குடிகாரக் கணவனைப் பிரிந்து வாழும் ஆசிரியையின்
வாழ்க்கையை “ படமுடியாது இனித் துயரம்” சொல்கிறது. இரண்டு பிள்ளைகளின் இழப்புடன் இருக்கையில் மூன்றாவது பெண்பிள்ளை போராடப் போகிறது. இறுதி யுத்தத்தின்
பின்னர் அப்பிள்ளையின் நிலை என்னவென்று தெரியவில்லை.
மகளைத் தேடி அலையும் பெண்ணின் மன ஓட்டத்தைச் சொல்லும் கதை.
பிணத்தை
எரிக்கும் ஒருவனின் வாழ்வின் ஏற்படும் சோதனைகளை “வெட்டியான்” கதை கூறுகிறது. மரண ஊர்வலத்துடன் சுடலைக்குச்
செல்பவர்கள் பலதையும் பத்தையும் கதைப்பார்கள். இறுதிக் கிரியை முடிந்து திரும்பும்போது
பிணத்தை எரிப்பவர்களுக்கு இண்டைக்கு கொண்டாட்டம் எனச் சொல்வார்கள். “வெட்டியான்” கதையைப் படித்தபின் அவர்கள்மீது பரிதாபம்
ஏற்படும். ஆய்வுமையங்களைப் பற்றிய புதியதொரு கோணத்தை “நினைந்ததுமற்று நினையாமையுமற்று” வெளிப்படுத்துகிறது. யாருமே எளிதில் தொடமுடியாத பக்கத்தை பரணீதரன் தொட்டிருக்கிறார்.
இலங்கைத்
தமிழ் மக்களுக்கு புதியதொரு விடியலைப் பெற்றுத்தரப் போராடியவர்கள், ஒருகாலத்தில் மறைவாக
இயங்கினார்கள். பின்னர் மக்கள் மத்தியில் தம்மை அடையாளம் காட்டிக்கொண்டு மிடுக்காகப்
பவனி வந்தார்கள். யுத்தம் முடிந்த பின்னர் மிடுக்கிழந்தவர்களாகத் தமது அடையாளங்களை
மறைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண் வாழ்வதற்காகப் போராடுவதை “மீளப்பிறந்தவர்கள்” கதையில் பதிவு செய்துள்ளார் பரணீதரன். காணாமல் போவதும் இனம் தெரியாதவர்களினால் கொல்லப்படுவதும்
தொடர்ந்து கொண்டிருப்பதை “எழுதிச் செல்லும் விதியின் கை” வெளிப்படுத்துகிறது.
“ஏக்கம்”,வேர் ”கொண்ட உறவுகள்”,
:மானுடம் வென்றதம்மா” ஆகிய மூன்று கதைகளும் புலம் பெயர் நாட்டில் இருந்து தாய் நாட்டுக்குத் திரும்பியவர்களைப்
பற்றிய கதைகள். மூன்று கதைகளும் மூன்று உணர்வுகளை
வெளிப்படுத்துகின்றன. பல வருடங்களின் பின்னர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய
தம்பி, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்றதை நினைத்து வருந்தும் அண்ணனின் மனத் துயரத்தை
“ஏக்கம்” வெளிப்படுத்துகிறது.
வயது போன நிலையில் இனி தம்பியைக் காணமுடியுமா
என்ற அண்ணனின் ஏக்கம் அனைவருக்கும் பொதுவானதுதான்.
பத்து
வருடங்களின் பின்னர் தாயகத்துக்கு வரும் தவராசா,முறிகண்டியில் தன்னுடன் படித்த சிவகுமாரைப் பிச்சைக்காரனாகச் சந்திக்கிறார். தன்னுடன் வருமாறு
சிவராசா அழக்க, சிவகுமார் சொல்லும் காரணம் மண்ணின் மகத்துவத்தை எடுத்தியம்புகிறது.
கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் பணமாகவோ பொருளாகவோ கொடுக்காது அவர்களின்
வாழ்வாதரத்தை உயர்த்துவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை பரணீதரன் சுட்டிக்காட்டுகிறார்.
சாதியின் காரணமாக முறிக்கப்பட்ட காதலை “மானுடம் வென்றதம்மா” தொட்டுக்காட்டுகிறது.
“இடமாற்றம்” ”அல்வாய்ச் சண்டியன்”
ஆகிய இரு கதைகளும் உளவியல் ரீதியாகப் பாதிப்படையும்
மன ஓட்டங்களைக் காட்சிப்படுத்துகின்றன. ஆசிரியர்கள் செய்யும் தவறுகளால் மாணவர்கள் பாதிப்படைவதையும்
தப்புச் செய்யும் மாணவர்களை நல்வழி காட்டும் ஆசிரியர்களையும் இக்கதைகளினூடு சந்திக்கலாம்.
அல்வாய்ச் சண்டியன் யார்? பிறந்த உடனே அவன் செய்த சண்டித்தனம் என்ன? அவன் எப்படிப்பட்ட
மிரட்டல்களை விடுத்தான்? எத்தனை பேருக்கு அடித்தான்? அவனது மிரட்டலில் பணிந்தவர்கள்
யார்? போன்ற கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலைப் பரணீதரன் தந்துள்ளார்.
பரணீதரனின்
கதைத் தலைப்புகள் வித்தியாசமானவை. கதையை நகர்த்தும் பாங்கும் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும்
களமும் வாசிக்கும் ஆவலத் தூண்டுவதாக உள்ளன.
”அம்மாவுக்கு சித்திரைப் புது வருஷம், தீபாவளி, தைப்பொங்கல்
கொண்டாட்டம் நான்கு ஐந்து வருஷங்களுக்கு ஒரு முறைதான்வரும்...பாவம் அம்மா...அவவை நினைத்தால்
இப்பவும் எனது கண்களில் நீர் உடைப்பெடுக்கும்....... வறுமையின் வெளிப்பாடு.
”என் காதல் தோற்றிருக்கலாம்.... ஆனால்மனிதம் சாகவில்லை....மனிதம்
வென்று விட்டது......மனதினில் எந்தசஞ்சலமும் இன்றி என் மிதி வண்டியை உழக்குகிறேன்.....எனக்காகவே
வாழ்ந்த என் மனைவியின் முகம் நெஞ்சமெல்லம் நிறைந்திருக்கிறது.” மானுடத்தின் வெற்றி.
”இப்போதும் எனக்கு கந்தசாமி சேரின் நினைவே வருகிறது. அரைவிட
நான் என்ன பெரிய கவுன்சிலர் என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன்.மானசீகமாக என நெஞ்சம்
கந்தசாமி சேரை ஆராதிக்கிறது.” ஆசிரியருக்கு மரியாதை. பரணீதரனின் மனதில் இருந்து வெளிப்பட்ட அக் கருத்துகள்
சிந்தனையைக் கிளறியுள்ளன.
வர்மா
காலைக்கதிர்
ஜூன்
30
No comments:
Post a Comment