Saturday, April 13, 2024

ஸ்டாலினா மோடியா சூடாகும் இந்தியத் தேர்தல்களம்



 


இந்தியாவை அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆளப்போவது யார் என்ற கேள்விக்கு தேர்தல் மூலம் விடை கிடைத்துவிடும். "இந்தியா என்ற பெயரிலான  கூட்டணி, மோடி அரசுக்கு எதிராகக் களம் இறங்கி உள்ளது.

இந்தியக் கூட்டணியின்  பிரதமர் யார் என்று அறிவிக்காமல் தேர்தலில்  களப்பணியாற்றுகிறது. இந்தியக் கூட்டணி ஆரம்பமான  போது  பல முரண்பாடுகளும் தோன்றின. மோடி எதிர்ப்பு என்ற  ஒரே  ஒரு கொள்கையினால் இந்தியக் கூட்டணி ஒற்றுமையாக  உள்ளது.

பாரதீய ஜனதாவின் தலைமையில் 28 கட்சிகள்  இணைந்துள்ளன. மோடியை மட்டும் முன்னுக்கு நிறுத்தி தேர்தல்  பிரசாரங்கள் நடைபெறுகின்றன.

தமிழக தேர்தல்களம் திசை மாற்றப்பட்டுவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகமா? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமா? என்ற நிலை மாறி  ஸ்டாலினா? மோடியா என்ற வினா முன்னுக்கு எழுந்துள்ளது. மோடியா?, லேடியா? என ஜெயலலிதா  அன்று கேட்டார்.  இன்று ஸ்டாலின் கை காட்டுபவர்தான் பிரதமர் என  திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  பிரசாரம் செய்கின்றனர்.

அதற்கு ஏற்றால்போல்  மோடி எதிர்ப்புப் பிரசாரத்தை ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். பாரதீய ஜனதாக் கட்சியினரும் ஸ்டாலினையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எதிர்ப்பதில்  அதிதீவிரம் காட்டுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டும் எடப்பாடி எதிர்க்கிறார். மோடியைப் பற்றி எந்த விமர்சனத்தையும்  எடப்பாடி முன் வைக்கவில்லை. இந்த  மென்மையான  போக்கு அரசியலில் அவரின் நிலைப்பாடு தெளிவற்று  இருப்பதையே கோடிட்டுக் காட்டுகிறது.

மோடி எதிர்ப்பு அலை தமிழகத்தில் மேலோங்கி இருக்கிறது. அண்ணா   பாரதீய ஜனதாவுடன் திராவிட முன்னேற்றக் கழகம்,  கூட்டணி  சேர்ந்து தேர்தலைச் சந்தித்தபோது   விளம்பரங்களில்  மோடியின் படத்தை வெளிப்படுத்தவில்லை.எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும்  போற்றிப் புகழ்ந்து  பாரதீய ஜனதாவின  வாக்குக் கேட்கின்றனர். அண்ணாவையும்,  ஜெயலலிதாவையும் மிகக் கேவலமாகப் பேசியஅண்ணாமலை தமிழக பாரதீய ஜனதாவின் தலைவராக  இருக்கிறார்.

தமிழகத்தில் பாரதீய ஜனதா வளர்ந்து விட்டது என்பதை நிரூபிக்க வேன்டிய நிலையில் அண்ணாமலை  இருக்கிறார். அண்ணாமலையின் பேச்சால்தான் பாரதீய ஜனதா எடப்பாடையை  ஒதுக்கியது. மறு புறத்தில் இரட்டைத் தலைமையைத் தூக்கி எறிந்த எடப்பாடி தனது தலைமைத்துவத்தை உறுதிப் படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். வாரிசு அரசியல், ஊழல் அரசு என மோடியும், டப்பாடியும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கின்றனர். இந்த  இரண்டு குற்றச் சாட்டுகலும் அவர்களின் தலைமையிலான கட்சிகளில் இருப்பதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

                   காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் கட்சி  வெளியிட்ட தேர்தல் அறிக்கை,  மாநிலக் கட்சிகளுக்கு நம்பிக்கையளித்துள்ளது.நீட் தேர்வு மாநில அரசுகளின் உரிமைக்கு விடப்படும். அவர்கள் விரும்பினால் நடத்தலாம், இல்லாவிட்டால் விலக்கு பெறலாம். ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டு புதிய வரி விகிதம் அமுல்படுத்தப்படும். அக்னிபாத் திட்டம் கைவிடப்படும். மக்கள் விரோத சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளுடன் கூடிய காங்கிரஸ் தேர்தல் அறிக்கை   வெளியிடப்பட்டது.

- ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு முழு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும்.

- தேர்தல் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் பயன்பாடு மேம்படுத்தப்படும். வாக்களிப்பதில் ஒளிவுமறைவு இல்லாத நிலை உறுதிப்படுத்தப்படும்.

- தனி நபர்களின் உணவு மற்றும் உடை சுதந்திரத்தில் அரசு தலையிடாது. ஒருவரது திருமண உரிமையில் அரசு தலையிடாது. நாட்டின் எந்தப் பகுதியிலும் யாரும் பயணிக்கலாம், வசிக்கலாம். அந்த சுதந்திரம் உறுதி செய்யப்படும்.  மக்களின் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

- பாஜக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் திருத்தப்படும்.

- ஏழைப் பெண்களுக்கு வருடத்திற்கு ரூ. 1 லட்சம்  வழங்கும் மகாலட்சுமி திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

- நாடு முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

- தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி (எம்பி, எம்எல்ஏக்கள்) தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியை விட்டு விலகி வேறு கட்சியில் சேர்ந்தால் அவரது பதவி தானாகவே பறி போகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

- பாஜகவில் சேர்ந்த பிறகு யார் மீதான வழக்குகள் எல்லாம் கைவிடப்பட்டதோ அவையெல்லாம் மீண்டும் விசாரிக்கப்பட்டு தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- பாஜக அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி சட்டம் நீக்கப்படும். புதிய ஜிஎஸ்டி சட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் ஏழை மக்கள் மீது விழுந்துள்ள வரிச் சுமை சரி செய்யப்படும்.

- பாஜக அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை, மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து திருத்தப்படும்.

- தேர்தல் பத்திர முறைகேடு, பிஎம் கேர்ஸ் உள்ளிட்டவை குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.

- தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைகளைத் தொடுக்க ரோஹித் வெமுலா பெயரில் சட்டம் கொண்டு வரப்படும்.

- அடுத்த 10 ஆண்டுகளில் ஜிடிபியை இரட்டிப்பாக்கும் வகையில் காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படும்.

 - பாஜக அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் முழுமையாக கைவிடப்படும்.

 

- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முழுமையாக கைவிடுவோம்.

- சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து விசாரணை அமைப்புகளையும் நாடாளுமன்ற, சட்டமன்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மொத்தம் 25 உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டுள்ளன.  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஐந்து பிரிவினரின் வளர்ச்சி மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களை  இலகுவாகக் கவர்ந்துள்ளது.

                   பாரதீய ஜனதாவுக்கு எதிரான  போராட்டங்கள்

மூன்றாவது முறையாகப் பிரதமராகும் கனவில் இருக்கும் மோடிக்கு எதிராக கர்நாடக  லிங்காய வீர சைவர்களும் ,குஜராத்தில் ராஜபுத்திரர்களும் களம் இறங்கி உள்ளனர்.  கர்நாடகத்திலும், குஜராத்திலும் தேர்தல் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி உள்ளவர்கள் பாரதீய ஜனதாவுக்கு எதிராகக் களம்  இறங்கி உள்ளனர்.

 கர்நாடகாவில் பாரதீய ஜனதா  வேட்பாளராக களமிறங்கும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை எதிர்த்து லிங்காயத் மடாதிபதி திங்கலேஸ்வர சுவாமி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தேர்தல் வரும் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 7ஆம் திகதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்று தார்வாட் தொகுதி. இங்கு பாரதீய ஜனதா சார்பில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி போட்டியிடுகிறார்.

 மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி போட்டியிடும் தார்வாட் தொகுதியில் அவரை எதிர்த்து களமிறங்குகிறார் லிங்காயத் மடாதிபதியான திங்களேஸ்வர சுவாமி. கர்நாடக மாநிலத்தின் ஷிரஹட்டி பக்கிரேஷ்வர் மடத்தின் தலைவராக இருப்பவர் பகிரா திங்கலேஸ்வர் ஸ்வாமி. வீரசைவ லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பிரபல சாமியாரான இவர், வரும் பாராளுமன்றத் தேர்தலில், தார்வாட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

தார்வாட் தொகுதியின்  வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோஷியை கடுமையாக விமர்சித்துள்ள திங்களேஸ்வர சுவாமி, வீர சைவ லிங்காயத் மற்றும் பிற சமூகங்களை பிரகலாத் ஜோஷி ஒடுக்குவதாகவும், லிங்காயத் மடங்களை தவறாகப் பயன்படுத்தி அவமரியாதையை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.  சாதிகளுக்கு இடையே பாரதீய ஜனதா  பாகுபாடு காட்டுவதாகவும், சுயமரியாதையை காப்பாற்றுவதற்காக தான் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கூறியுள்ளார் லிங்காயத் மடாதிபதி திங்கலேஸ்வர் சுவாமி. இதனால், கர்நாடகாவில் மத்திய அரசுக்கு  புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. தார்வாட் பகுதியைச் சேர்ந்த சில சாமியார்கள், குறிப்பாக லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த சாமியார்கள் கடந்த மாதம் 27ஆம் திகதி திங்கலேஷ்வர் ஸ்வாமி தலைமையில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அப்போது, தார்வாட் மக்களவை தொகுதியில்  வேட்பாளர் பிரகலாத் ஜோஷியை மாற்றவேண்டும் என  வலியுறுத்தினர். பாரதீய ஜனதவின்   தலைமை இதனை கண்டுகொள்ளாத நிலையில், பிரகலாத் ஜோஷியை எதிர்த்து தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் திங்களேஸ்வர் சுவாமி. கர்நாடகாவில் பல தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்  பாரதீய ஜனதாவுக்கு  எதிராக களமிறங்கியுள்ளதால் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் மட்டுமல்லாது கர்நாடகத் தேர்தலிலே  பெரும்  பாதிப்பை ஏற்படுத்தும்.

ராஜபுத்திரப் பெண்களை  இழிவாகப் பேசியதால் குஜராத்தில் மத்திய  அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குஜராத்தின் 11 கிராமங்களில்  பாரதீய ஜனதாக் கட்சியினர் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக  உட்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஹரியானா ஆகிய மாநிலங்களிலும்  எதிர்ப்பு  எழுந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள  26  தொகுதிகளுக்கும் வரும் மே 7ம் திகதி  ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ராஜோட் தொகுதி வேட்பாளராக மத்திய  அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா போட்டியிடுகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன், ‘ராஜ்புத் சமூக மக்கள் ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் நெருக்கமாக இருந்தனர்என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவரது பேச்சுக்கு குஜராத், ராஜஸ்தான், ரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் வசிக்கும் ராஜ்புத் சமூக மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இவ்விவகாரத்தில் அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா மன்னிப்பு கேட்ட பின்னரும், அதனை ஏற்க மறுத்துள்ள ராஜபுத்திர மக்கள், அவர் ராஜ்கோட் தொகுதியில்   வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கொடுக்க கூடாது என்றும், வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக  இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகினர். இதையடுத்து அவர்களுக்கு பதிலாக வேறு வேட்பாளர்களை பாரதீய ஜனதா அறிவித்தது. இந்நிலையில் மேற்கு உத்தரபிரதேசத்தில் அதிகளவில் வசிக்கும் ராஜ்புத் மக்கள், பாஜக வேட்பாளருக்கு எதிராக வேலை செய்ய தொடங்கி உள்ளனர். அவர்கள் பாரதீய ஜனதா  வேட்பாளருக்கு எதிராக போட்டியிடும் வலுவான வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக முடிவு செய்துள்ளனர். குஜராத்தில் ரூபாலாவுக்கு சத்திரிய சமூகத்தின் சார்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆரவல்லி மாவட்டத்தில் சத்திரிய சமூகத்தின் சார்பில் போராட்டங்கள் நடக்கின்றன.

  மற்ற சமூகத்தினரும் சத்திரிய சமூகத்துடன் இணைந்து ரூபாலாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். துவாரகா மாவட்டத்தில் ரூபாலாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் ரூபாலாவின் வேட்புமனுவை இரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவரது வேட்பு மனுவை இரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கிராம மக்கள் எச்சரிக்கை  விடுத்துள்ளனர்.

வட  இந்தியாவில்  பரதீய ஜனதா செல்வாக்குள்ள மாநிலங்களில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால் தலைவர்கள் கதிகலங்கிப் போயுள்ளனர்.


தேர்தல் களத்தில் சினிமா பிரபலங்கள்

பாராளுமன்ற தேர்தலில் திரை உலக பிரபலங்கள் பலர் போட்டியிடுவதுடன் பிரச்சாரமும் செய்கிறார்கள்.தமிழக அரசியலையும் தமிழ் சினிமாவையும்  பிரித்துப் பார்க்க முடியாது. ராதிகா,தங்கர் பச்சன், விஜய் வசந்த், விஜய பிரபாகரன் ஆகிய சினிமா நட்சத்திரங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

நடிகை ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிவரும் மிக பெரிய புகழ் அடைந்த நடிகை ஆவார். இவர் தமிழ் சினிமா நடிகரான எம் ஆர் ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியும் ஆவார். ராதிகா சரத்குமார்  விருதுநகர் தொகுதியில் பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.


மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் இளம் நடிகர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடன்  கூட்டனி வைத்து தகப்பனின் கட்சி சர்பில் சொந்த தொகுதியான விருதுநகரில் போட்டியிடுகிறார்.


  மறைந்த தொழிலதிபர் வசந்த் & கோ உரிமையாளர் வசந்த்தின் மகனான விஜய் வசந்து  ஒரு நடிகர்தான். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கன்னியகுமரியில் போட்டியிடுகிறார். தகப்பனின் மறைவுகுப் பின்னர்  இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.


   - தமிழ் சினிமா இயக்குநரான தங்கர் பச்சன்   பல நல்ல படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பள்ளிக்கூடம், அழகி, ஒன்பது ரூபாய் நோட்டு என பல படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர், தங்கர் பச்சன்.   தங்கர் பச்சன்  விருத்தாசலம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியில் சார்பில்  பாரதீய ஜனதாவுடன் கூட்டனி சேர்ந்து போட்டியிடுகிறார்

 இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.

  நடிகைகள் ஹேமமாலினி, நக்மா, கிரண் கேர், நடிகர் ஜாவித் ஜாப்ரி உள்ளிட்டோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

  நக்மா நடிகை நக்மா உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராகக் களம் இறங்கி உள்ளார்.

  ஆம் ஆத்மி கட்சி சார்பில் சண்டிகரில் முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான குல் பனாக் போட்டியிடுகிறார்.  இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ராஷ்ட்ரிய ஆம் ஆத்மி கட்சியை துவங்கி  பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிடுகிறார்.   நடிகை ஸ்ரீதேவி தனது கணவரும், பட தயாரிப்பாளருமான போனி கபூருடன் சேர்ந்து ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி வேட்பாளர் அமர் சிங்கிற்கு ஆதராவக பத்தேஹ்பூர்சிக்ரியில் பிரச்சாரம் செய்தார். அனில் கபூர் இந்தி நடிகர் அனில் கபூர் சண்டிகரில் போட்டியிடும் பாரதீய ஜனதா  வேட்பாளரான நடிகை கிரண் கேருக்கு வாக்கு சேகரித்தார்.

 நடிகர் விவேக் ஓபராய் பாரதீய ஜனதா  வேட்பாளர் நிதின் கட்காரிக்கு ஆதரவாக நாக்பூரில் திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்தார்.

 உத்தர பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராகநடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார்.   குஜராத் மாநிலம் அகமதாபாத் தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் இந்தி நடிகர் பாரேஷ் ராவல் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார்.  தேர்தலில் போட்டியிடும் நடிகர் சத்ருகன் சின்ஹா தனது மனைவியுடன் பாட்னாவில் பிரச்சாரம் செய்தார். ரதி நடிகைகள் ரதி , பாக்யஸ்ரீ ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சாகர் மெகேவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தனர்.

அரசியல்வாதிகள் தங்களை நம்பாது சினிமாப் பிரபலங்களை நம்பத் தொடங்கி விட்டனர்.

No comments: