Sunday, April 28, 2024

மோடியின் வெறுப்புப் பேச்சால் கிளர்ந்தெழுந்த எதிர்க் கட்சிகள்

 இந்திய நாடாளுமன்றத்தின்  இரண்டாம் கட்டத்  தேர்தல்  பிரசாரத்தின் போது  இந்தியப் பிரதமரான மோடியின் பேச்சு   பேசு பொருளாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை  வாக்காளர்களைக் கவர்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை  விமர்சித்த மோடி, இஸ்லாமிய மக்களைப்  புண்படுத்தியதாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

ராஜஸ்தானில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில்  இல்லாததைப் பிரசாரத்தில் தெரிவித்தார்.

 "காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று பேசினார்கள். உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியவர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா?" என  பிரதமர்  கேள்வி எழுப்பினார்.

ஊடுருவல்காரர்கள், அதிக குழந்தைகள்  பெறுபவர்கள் என  மோடி சொல்லியது இஸ்லாமியர்களைத்தான் என எதிர்க் கட்சிகள் தெரிவிக்கின்றன.

மோடி பேசியது  உண்மைக்கு மாறான தகவல் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இப்படி எதையும் கூறவில்லை என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். முதல் கட்ட தேர்தல் வாக்குப் பதிவின்  போது  பாரதீய ஜனதாவுக்கு எதிரான அலை எழுந்ததால்  மோடி,  தரம் தாழ்ந்து  பிரசாரம் செய்கிறார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரதமரின்  இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, "முதல்கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடியின் பொய்களின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. பயத்தின் காரணமாக, அவர் இப்போது பொதுமக்களின் கவனத்தைப் பிரச்னைகளில் இருந்து திசைதிருப்ப விரும்புகிறார். காங்கிரஸின் புரட்சிகர தேர்தல் அறிக்கைக்கு இப்போது நாடு முழுவதும் ஆதரவு வரத் தொடங்கிவிட்டது. இந்த நாடு அதன் பிரச்னைகளில் வாக்களிக்கும். அதன் வேலைவாய்ப்பு, அதன் குடும்பம் மற்றும் அதன் எதிர்காலத்திற்காக வாக்களிக்கும்" என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் பற்றிய பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாரதீய ஜனதா  சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.   பிரதமர் மோடியின்  பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த உஸ்மான் கனி , ராஜஸ்தானில் இந்த பேச்சு காரணமாக 3 முதல் 4இடங்களை பாரதீய ஜனதா இழக்க உள்ளதாகவும், வாக்குச் சேகரிக்கும் போது, பிரதமர் மோடியின் பேச்சு குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உஸ்மான் கனி நீக்கப்பட்டுள்ளார்.

மோடியின்   சர்ச்சைக் குரிய தேர்தல் பரப்புரை தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக  பரதீய ஜனதாவின் மீது  காங்கிரஸ் 16 புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பழைய உரையை மேற்கோள் காட்டி இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர் அவர்களை 'நாட்டில் ஊடுருவியவர்கள்` என்றும் 'அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள்' என்றும் கூறியிருந்தார்.

ஆனால், பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ள மன்மோகன் சிங்கின் 18 ஆண்டுகால பழைய உரையில், இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை வழங்குவது குறித்து மன்மோகன் சிங் பேசவில்லை என காங்கிரஸ் கட்சி தெளிவு படுத்தியது. 

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுவதும் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் பிரசாரத்தின் போது மதச் சின்னங்களையோ, மதம், மதம், சாதி அடிப்படையில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கவோ கூடாது. நடத்தை நெறிமுறைகளின்படி, எந்தவொரு மத அல்லது இனம் சார்ந்த சமூகத்திற்கு எதிராகவும் வெறுப்பூட்டும் பேச்சுகளைப் பேசுவது அல்லது முழக்கங்களை எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.இந்த விதிகளை மேற்கோள் காட்டி, எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் சிலர் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோருகின்றனர்.

ஆனால், தேர்தல் ஆணையம்  மோடிக்கு எதிராகவோ அல்லது பாரதீய ஜனதாவுக்கு எதிராகவோ எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆனையமும் பாரதீய ஜனதாவின் கைப்பாவையா என எதிர்க் கட்சிகள் கேட்கின்றன.  இந்தியா சுதந்திரமடைந்த  பின்னர்  இந்தியாவில் பிரதமர் மோடியைப் போல்    வேறு எந்த பிரதமரும் இவ்வளவு தரம் தாழ்ந்து வெறுப்புப் பேச்சை வெளிப்படுத்தவில்லை  என்று எதிர்க்கட்சித் தலைவர்கள்  குற்றம் சாட்டுகின்றனர்

  எதிர்க் கட்சிகள்  கொடுத்த நெருக்கடியால் தேர்தல் ஆணையம் பாரதீய ஜனதாத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.வெறுப்புப் பேச்சைப் பரபிய மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையம் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை.

கடந்த மார்ச் மாதம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகாய், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.தேர்தல் பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக சாகேத் கோகலே கூறியிருந்தார்.

திரிணாமுல் காங்கிரஸின் இந்த புகாரின் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுத்ததா என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, நவம்பர் 2023-இல், பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் 'பனவ்தி' என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தியதால், தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

சமீபத்தில், ஹேமமாலினி குறித்து காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறிய ஆட்சேபகரமான கருத்து குறித்து புகார் எழுந்ததையடுத்து, தேர்தல் ஆணையம் அவருக்கு 48 மணி நேரம் தடை விதித்தது.

பாரதீய ஜனதா தொடர்பான விவகாரங்களில் தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மையையும், எதிர்க்கட்சி விவகாரங்களில் தீவிரமாக செயலாற்றுவதையும் சிலர் ஒப்பிடுகின்றனர்.

மூன்று மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில்   மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு  கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கேரளத்தில் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகவும்,     கர்நாடகாவில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகள், மஹாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், அசாம் மற்றும் பிஹார் மாநிலத்தில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 89 தொகுதிகளில்வாக்களிப்பு நடைபெற்றது.

 பாரதீய ஜனதாவின் 10 வருட சாதனைகளை வெளிப்படுத்தாமல், துவேசப் பேச்சுக்களை  பிரதமர் கக்குவதால் அவருக்குத் தோல்விப்பயம் வந்து விட்டது என எதிர்க்கட்சிகள் கட்டியம் கூறுகின்றன

ரமணி

No comments: