Saturday, April 6, 2024

கச்சதீவைக் கையில் எடுத்த பா.ஜ.க பதிலடி கொடுக்கும் தமிழகக் கட்சிகள்

இந்தியத் தேர்தல்களம்  மிகுந்த பரபரப்பாக  உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின்  அனுசரணை இன்றி  வேறு எந்தக் கட்சியும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. இரண்டு திராவிடக் கட்சிகளையும்  கைவிட்டு  புதிய கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்த தமிழக அரசியல் கட்சிகளும், இந்தியத் தேசியக்  கட்சிகளும் மண்ணைக் கெளவியது வரலாற்றுச் சான்றாக  உள்ளது.

கருணாநிதி  - எம்.ஜி.ஆர்,  கருணாநிதி - ஜெயலலிதா  எனும்  பரம அரசியல் விரோதங்களுடன் தேர்தலைச் சந்தித்தபோது   தனிமனிதத் தாக்குதல்  இல்லாமல் அரசியல் பிரசாரங்கள்  அமைந்தன. இன்றைய அரசியல் நிலை முற்று முழுதாக மாறிப்போயுள்ளது.  பொய்களும், கற்பனைக் குற்றச் சாட்டுகளும் சமூக வலைத்தளங்களை ஆகிரமித்துள்ளன. தம்மைப் புகழ்வதற்கும், எதிர் அரசியல் தலைவர்களை  இழிவாகச் சித்திரிப்பதற்கும்  சிலர்  சமூக வலைத் தளங்களை  உருவாக்கி உள்ளனர். தமது கட்சியைச் சேர்ந்தவர்களை வசைபாடுவதற்கும் சமூக வலைத் தளங்களைச் சிலர் பயன் படுத்துகின்றனர்.

தமிழக அரசியலில் அவ்வப்போது  பேசு பொருளாக  இருந்த  கச்சதீவு விவகாரம்  இப்போது  இந்திய அரசியலில்  பரபரப்பாகப் பேசப்படுகிறது.  தமிழக மீனவர்களை  இலங்கைக் கடற்படை சுட்டுக்கொல்லும்போதும்,  தமிழக மீனவர்கள் சித்திரவதைப்படுத்தப்படும்போதும், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதும் காங்கிரஸ் கட்சியின் மீதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் குற்றம் சுமத்தப்படும்.

கச்சதீவை  காங்கிரஸ்கட்சி இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டது.  அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழகம்  துணை போனது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  குற்றம் சுமத்தியது. ஏனைய தமிழக   அரசியல் கட்சிகளும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதனை வழிமொழிந்தன.திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் , காக்கிரஸ் கட்சிக்கும் எதிராக கச்சதீவு விவகாரத்தை பாரதீய ஜனதா கையில் எடுத்துள்ளது.சுமார் 50 வருடங்களுக்கு முன்பு நடந்த  விவகாரத்தை  பாரதீய ஜனதா கிண்டிக் கிளறியுள்ளது.

தமிழக அரசு   செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கிறது.   10 வருடங்கள் மத்தியில் ஆட்சி செய்த பாரதீய ஜனதா, 50 வருடங்களுக்கு முன்பு நடந்த  பிரச்சனையைக் கூறி வாக்குக் கேட்கிறது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும்  பதிலடி கொடுக்கின்றன. காங்கிரஸ் கட்சியும்  மோடியை  நோக்கிக் கேள்விகள் எழுப்புகின்றது.

2016-ம் ஆண்டு கச்சதீவு விவகாரம் தமிழ்நாடு சட்டசபையில் வெடித்த போது அப்போதே முன்னாள் முதல்வர் கருணாநிதி மிக நீண்ட விளக்கம் ஒன்றை விரிவாகவே வெளியிட்டிருந்தார். 2016-ல் தமிழ்நாடு சட்டசபையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, கச்சதீவு பிரச்சனையில் 1974-ல் ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சித்தார். இன்றைக்கு பாரதீய ஜனதாவும்  அதே விமர்சனத்தை முன்வைக்கிறது.

  கச்சதீவு பிரச்சனையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்தது என்பதை விவரித்து 2016-ல் கருணாநிதி வெளியிட்ட மிக நீண்ட அறிக்கையில், 

  "1974ஆம் ஆண்டு ஜூன் 27ம் திகதி திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இது பற்றி எந்தவிதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்க வில்லை. 27ம்திகதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன். சில பேருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தேன். சில தலைவர்களுக்கு அதிகாரிகளையே அனுப்பினேன். அவ்வளவு அக்கறையோடு இந்தக் காரியத்தில் நாங்கள் செயல்பட்டிருக்கிறோமே அல்லாமல் இதில் தமிழக அரசு கச்சதீவை இலங்கைக்கு அளிப்பதில் எந்த விதத்திலும் உடந்தையாக இல்லை என்பதை நான் மனப் பூர்வமாகச் சொல்லிக் கொள்கிறேன்." அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு, 24.7.1974 அன்று தி.மு. கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டு, தஞ்சை, பாபநாசம் ஆகிய இடங்களில் நானே கண்டன கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறேன்.

 பின்னர் ஒரு முறை செய்தியாளர்கள் "கச்சதீவு" பற்றி என்னைக் கேட்ட போது கூட, கச்ச தீவை விட்டுக் கொடுக்கும்போது, தமிழ்நாடு தி.மு.. அரசு அதனை வன்மையாக மறுத்திருக்கிறது. அப்போது இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்தார். அவர்கள் சமாதானம் செய்து - கச்ச தீவிலே நமக்குள்ள உரிமைகளுக்கெல்லாம் வழி வகுத்து விதிகள் செய்யப்பட்டன. அந்த உரிமைகள் - தேவாலயத்திற்கும், கிறித்தவ ஆலயத்திற்கும் சென்று வருவதற்கான உரிமை, மீன்களை காய வைப்பதற்கும், மீன் பிடிப்பதற்குமான உரிமை, நம்முடைய மீனவர்கள் அங்கே தங்கள் வலைகளை காய வைப்பதற்கான உரிமை என்று பல உரிமைகள் நமக்கு இருந்தன. ஆனால் நெருக்கடி நிலைக்குப் பிறகு 1976இல் நம்முடைய ஆட்சி இல்லை. ஆளுநர் ஆட்சி தான் இருந்தது. ஆளுநர் ஆட்சியில் அந்த விதிகள் எல்லாம் மாற்றப்பட்டு விட்டன. அது தொடர்ந்து இப்போதும் இருக்கிறது. அதை நாமும் பல முறை அந்த விதிமுறைகளை யெல்லாம் கொண்டு வர வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போது அதற்குரிய நேரம் வந்து விட்டதாகவே கருதுகிறேன்" என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

  1991 அன்றே "தினமணி" நாளேடு எழுதிய தலையங்கத்தில், "1974இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி திருமதி பண்டார நாயகவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட, கச்ச தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கப் பட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்னர் இதைப்பற்றி தமிழக மக்களிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை" என்று அப்போதே தினமணி எழுதியிருந்தது.

1974ஆம் ஆண்டு இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போதே  இந்திய  நாடாளுமன்றத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  அன்று அந்த ஒப்பந்தத்தின் நகலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுவரண்சிங் தாக்கல் செய்த போது, தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தி.மு. கழகத்தின் சார்பில் இரா. செழியன் நாடாளுமன்றத்தில் கூறினார். பார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினராக இருந்த   மூக்கையா தேவர், "எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது" என்றார். "இலங்கையின் நட்பை பெறுவதற்காகவே ரகசிய பேரம் நடத்தி கச்சதீவைத் தானமாக வழங்கியுள்ளது" என்று வாஜ்பாய் பேசினார். இப்படிப்பட்ட கருத்துக் களை மாநிலங்களவையில் கழகத்தின் சார்பில் எஸ்.எஸ். மாரிசாமி, சோஷலிஸ்ட் கட்சி சார்பில் ராஜ்நாராயண், முஸ்லீம் லீக் சார்பில்  அப்துல் சமது ஆகியோர் தெரிவித்தனர்.

  50 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னார் வளைகுடாவின் தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சதீவு, இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. கச்சதீவு விவகாரத்தை தற்போதைய தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்  , காங்கிரஸுக்கும் எதிரான ஆயுதமாக பயன்படுத்த பாஜக முயற்சிக்கப் போய் புதிய புதிய விவாதங்கள் கிளம்பி இருக்கின்றன. அதில் ஒன்றுதான் 'வெட்ஜ் பேங்க்'  எனும்  கடல் பரப்பு  1974-ம் ஆண்டு இலங்கையில் பாகிஸ்தான் விமானப் படை தளம் அமைக்க முயற்சித்தது. இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி சிறிமாவோ பண்டாரநாயகவும் பாகிஸ்தானுடன் இணைந்து செயற்பட்டார். இது இந்தியாவுக்கு பேராபத்து என்பதால் பிரதமராக இருந்த இந்திரா காந்தி களமிறங்கினார். இலங்கையில் பாகிஸ்தான் விமான படை தளம் அமைப்பதைத் தடுக்கவே அப்போது இலங்கைக்கு தமிழ்நாட்டின் கச்சதீவு கொடுக்கப்பட்டது என்பதுதான் 50 ஆண்டுகாலமாக பேசப்பட்டு வரும் வரலாற்றின் சாராம்சம் என்கிரார்கல் காங்கிரஸ் கட்சித்தலைவர்கள்.

  தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு அருகே இருப்பது வெட்ஜ் பேங்க் எனப்படும் மணல் திட்டு தீவு. இது இலங்கைக்கு சொந்தமானதாக இருந்தது. கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கமாக இருக்கக் கூடியது. வங்க கடலும் அரபிக் கடலும் இந்திய பெருங்கடலும் சங்கமிக்கும் மணல் திட்டு தீவு பகுதி. இதனால் இயற்கை வளம் கொட்டிக் கிடக்கக் கூடிய தீவு. இத்தீவை இலங்கையிடம் இந்தியா பெற்றது 1970களில். அப்படிச் செய்தவர் அப்போதிய பிரதமர்  இந்திரா காந்தி தான். அதுவும் கச்சதீவு கொடுக்கப்பட்ட காலத்தில்தான் வெட்ஜ் பேங்க் தீவையும் இலங்கையிடம் இந்தியா பெற்றது. கச்சதீவில், தமிழ்நாட்டு தமிழர்களுக்கான உரிமையை நிலை நிறுத்தக் கூடிய ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் வெட்ஜ் பேங்க் தீவுக்கும் இலங்கை நாட்டவருக்கு எந்த தொடர்புமே இல்லை. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கப்பட்டதாகவே ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இருந்த போதும் கச்சதீவுக்கு பதில் வெட்ஜ் பேங்க் என்பதாகவே இப்போது பேசப்பட்டு வருகிறது.

 

கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி  கொடுத்ததே, வெட்ஜ் பேங்க் தீவைப் பெறுவதற்குதான் என்கிறது காங்கிரஸ் கட்சி. இந்தியாவின் நலனுக்காகவே கச்சதீவு கொடுக்கப்பட்டதாகவே நியாயப்படுத்தப்படுகிறது. கச்சதீவுடன்  ஒப்பிடுகையில் வளம் கொழிக்கக் கூடிய வெட்ஜ் பேங்க் தீவு பொக்கிஷமானது என்றெல்லாம் கொண்டாடப்படுகிறது

 வெட்ஜ் பேங்க் என்பது 10,000 சதுர கிமீ கொண்டது. ஆழமற்ற கடல் பகுதி; மீன்வளத்தால் நிறைந்தது; சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதி என்றெல்லாம் மகுடம் சூட்டப்படுகிறது. இங்கே எண்ணெய் வளம் கொட்டிக் கிடக்கிறது. ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு நிறைந்த பகுதியாக கணிக்கப்படுகிறது. இதனால் கச்சதீவுக்கு பதிலாக வெட்ஜ் பேங்க் பெறப்பட்டது எனவும் சொல்கின்றனர்.

  600,000 நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை மற்றும் வாட்ஜ் வங்கியின் மீதான இறையாண்மை ஆகியவை இந்திரா காந்தியின் மிகப்பெரிய சாதனைகளாகும், அதை   இப்போது சிதைத்து அழிக்க முயற்சிக்கிறார்கள் என  காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ருவிட்டரில்  இல் பதிவிட்டுள்ளார். கச்சதீவு குறித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுமத்திய குற்றச் சாட்டுகள் அவருக்கு எதிராகத் திரும்பி உள்ளன. அந்தச் சம்பவம் நடைபெற்ற போது வெளியுறவுத்துறைச் செயலாளராக  ஜெய்சங்கர்  இருந்தார்.

இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த   முன்னாள் நிதியமைச்சர் .சிதம்பரம், “1974ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி அவர்கள் இப்பொழுது ஏன் கிளப்புகிறார்? கச்சதீவின் பரப்பளவு 1.9 சதுர கி்.மீ. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி.” என்று கூறியுள்ளார்.

 மோடி செய்தது என்ன? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. "எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை" என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பை  மோடி நியாயப்படுத்தினார்

மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது. நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு.” என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.இந்தியாவின் எல்லையை சீனா ஆக்கிரமித்துள்ளது. அங்கு தலையை காட்டாத மோடி கச்சதீவு விவகாரத்தில் மூக்கை நுழைத்துள்ளார் என காங்கிரஸ் கட்சி  பதிலடி கொடுத்துள்ளது.

கச்சதீவு விவாகத்தைக் கையில் எடுத்தால்  மீனவர்களின்  வாக்கு வங்கியைக் கவரலாம் என பாரதீய ஜனதா நம்பியது.  10 வருடங்களாக மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா, தமிழக  மீனவர்களின்  பிரச்சனையைத் தீர்க்காது  தேர்தல் சமயத்தில்  மீனவர்கள்  மீது அக்கறை காட்டுவது போல் நடிக்கிறது.   மோடி விரும்பியிருந்தால்  மீனவர்கள்  மீதான தாக்குதலை நிருத்தியிருக்கலாம்.

காலம் மாறிப் போச்சு.  தேர்தல் பிரச்சாரக் களமும், உத்திகளும் கூட இப்போது மாறிப் போய்விட்டது.  விதம் விதமான புது டெக்னிக்குகளை பிரசாரத்தில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் அரசியல்வாதிகள்.

தமிழ்நாட்டில், தேர்தல்  பிரசாரம் தொடங்கி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் வேட்பாளர்கள் மக்களிடம் வாக்கு சேகரிக்க  மேடைப் பேச்சுகளும் ,வீடு  வீடாகச் சென்றும், மக்களை சந்தித்தும் வாக்கு சேகரிப்பார்கள். இதனால் ஊரே பரபரப்பாக பிசியாக இருக்கும்.  ஊரையே ஒன்று திரட்டி வாக்குகள் சேகரிப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் எல்லாருக்கும் செம கிராக்கி இருக்கும். அவர்களைத் தேடித் செல்வார்கள்  தலைவர்கள்.

 . மக்கள் அனைவரும் தேர்தல் காலம் என்றாலே  அன்றையகாலத்தில் செய்தித்தாள்களையும், வார மற்றும் மாத இதழ்களையும் ஏன்  தொலைகாட்சிகளில் செய்திகள் மூலம் அறிவர். ஆனால் "அந்த காலம் அது அது... வசந்த காலம்"... இப்போது வேற லெவலுக்கு மாறி விட்டது பிரச்சாரம். செல்போன்களும், சோசியல் மீடியாவும் இன்று முக்கிய ஊடகமாக மாறியுள்ளன

உலகத்தையே கைக்குள் அடக்கும் செல்போன் காலம் இது. சமுக வலைதளங்கள் கோலோச்சும் காலம் இது. மழலை முதல் பெரியவர்கள் வரை இதில்தான் குவிந்து கிடக்கிறார்கள். எந்தப் பக்கம் போனாலும் ரீல்ஸ்கள்தான் சுற்றிக் கொண்டுள்ளன. இந்த ரீல்ஸ்களைத்தான் தற்போது அரசியல் கட்சிகளும் கையில் எடுத்துள்ளன. தங்களது தலைவர்களின் பேட்டிகள், பேச்சுக்கள், முக்கிய அம்சங்களை ரீல்ஸ்களாக மாற்றி சுற்றி விட்டு வருகின்றனர்.

வேட்பாளர்கள் சிலர் தையல் மிஷினில் உட்கார்ந்து தைத்துக் கொடுத்து அக்கா வாக்குப்  போடுங்க.. அம்மா வாக்குப்  போடுங்க என்று கேட்கின்றனர். ஒரு வேட்பாளர், நாமக்கல் பக்கம் பிரச்சாரம் செய்தபோது, கோழிப் பண்ணைக்குள் புகுந்து முட்டைகளை சேகரித்துக் கொடுத்து வாக்கு சேகரித்தார். டீ கடையில் டீ விற்பது, காய்கறி விற்பது என்று முன் கூட்டியே ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து விட்டு, பிரச்சாரக் களத்திற்கு செல்கின்றனர்.

தற்போது உள்ள அரசியல்வாதிகள் தங்கள் வாக்குகளை சேகரிக்க சமுக வலைதளத்தையே அதிகம் விரும்புகின்றனர். மக்களிடம் வாக்குகளை சேகரிக்க இது ஈஸியாகவும் இருக்கிறது.. ஏதாவது ஒரு வீடியோ வைரல் ஆனால் அது பிளஸ் பாயிண்ட் ஆகி விடுகிறது. இது போக விதம் விதமான நகைச்சுவைகளையும் வேட்பாளர்கள் அரங்கேற்றுகிறார்கள்.

. சிதம்பரத்தைப் பேச விடாது  ஆவேசமாகத் தடுத்த   பெண்மணி  மறுநாள் காலையில் அண்ணா  திராவிட முன்னேறக் கழக வேட்பாளரை ஆரத்தி எடுத்து வரவேற்றது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கச்சதீவைக் கொடுத்ததைக் குற்றமாக வெளிப்படுத்திய  மோடி,  அதற்குரிய தீர்வு எதனையும் தெரிவிக்கவில்லை. பிரதமரானால் கச்சதீவை மீட்பேன் என வாக்குறுதியளிக்கவில்லை.  10 வருடங்களாகப் பேசாமல் இருந்த மோடியும் அவரது கூட்டாளிகளும் தேர்தல் முடிந்ததும் மெளனசாமியாகிவிடுவார்கள்

No comments: