Saturday, May 16, 2020

கொரோனாவை வீழ்த்திய வியட்நாம்


கொரோனா  பொதுமுடக்கத்திலிருந்து வெற்றிகரமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது வியட்நாம். பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. மோசமான பொருளாதார அழிவுகளிலிருந்து நாடு வெளியேறிவிடும் எனும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று வாசலிலேயே பரிசோதிக்கிறார்கள் சுகாதார அதிகாரிகள்.
வியட்நாமில் இதுவரை 288 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுளது. இதுவரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இவ்விஷயத்தில் வியட்நாம். அரசின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் விரிவாகவும் வெளிப்படையாகவும் செய்திகளை வெளியிடுகின்றன. அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளால்கூட சாதிக்க முடியாததை வியட்நாம். சாதித்ததன் பின்னணி குறித்து உலக அளவில் விவாதங்கள் நடக்கின்றன.

போதாமையை உணர்ந்துகொண்ட தேசம்
9
கோடி மக்கள்தொகை கொண்ட நாடு வியட்நாம். சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நில எல்லை 1,400 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டது. இதனால்,  கொரோனா  தொற்று அபாயம் அதிகம் கொண்ட நாடாகவே வியட்நாம். கருதப்பட்டது. எனினும், வியட்நாம். மேற்கொண்ட ஆக்கபூர்வ நடவடிக்கைகள் அந்த எண்ணத்தை அடியோடு மாற்றின.

வியட்நாமில் மருத்துவ ரீதியிலான வசதிகள் குறைவு என்பது கவனிக்கத்தக்க விஷயம். இப்படியான ஒரு சூழலில் கொரோனா  தொற்று பரவத் தொடங்கினால் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகும் என்பதை வியட்நாம். அரசு ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டது. இதனால், ஜனவரி மாதத்திலிருந்தே கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுக்கத் தொடங்கியது.

‘இது சாதாரணக் காய்ச்சல். பயப்பட வேண்டியதில்லை’ என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்காமல், கொரோனா அறிகுறிகள் குறித்தும், அதற்கான பரிசோதனைகளை எங்கு செய்துகொள்ளலாம் என்பது குறித்தும் மக்களுக்குத் தெளிவாக அறிவித்துவிட்டது அரசு.
ஜனவரி 22-ல், வியட்நாமில் முதல் கொரோனா  தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக, கோவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய வழிநடத்தும் குழுவை உருவாக்கியது வியட்நாம். அரசு. அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அக்குழுவுக்குத் தலைமை வகித்தார். சீனாவுக்கு வெளியே, பிற எந்த நாட்டையும்விட முன்னதாகவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது வியட்நாம்தான்.

சார்ஸ் அனுபவம் தந்த பாடம்
2003-
ல், சார்ஸ் வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வியட்நாமும் ஒன்று. அப்போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் கரோனாவையும் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியிருக்கிறது வியட்நாம். 2003 ஏப்ரல் 8-ம் தேதி வாக்கில், வியட்நாமில் 63 பேர் சார்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தனர். 5 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த வியட்நாம். அரசு, உடனடியாக அதற்காக ஒரு பணிக்குழுவை உருவாக்கியது. சார்ஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை, அப்போதைய பிரதமர் பான் வான் காய்க்கு நேரடியாக அளித்துவந்தார் சுகாதாரத் துறை அமைச்சர். போக்குவரத்துத் துறை, சுங்கத் துறை, நிதித் துறை, கல்வித் துறை, உள்துறை என்று எல்லா துறைகளையும் உள்ளடக்கிய நடவடிக்கைகளை வியட்நாம். அரசு எடுத்தது.

அந்தக் கூட்டுழைப்பு கைகொடுத்தது. வியட்நாமை சார்ஸ் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திய முதல் நாடு என்று 2003 ஏப்ரல் 28-ல் அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். “சார்ஸ் வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்று உலகத்துக்கே காட்டியிருக்கிறது வியட்நாம்” என்று அந்நாட்டுக்கான உலக சுகாதார நிறுவனச் சிறப்புத் தூதர் பாஸ்காலே புரூடான் பாராட்டினார்.

ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள்
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் இதுபோன்ற வழிமுறைகளை வியட்நாம். மேற்கொண்டது. பெப்ரவரி 1-லேயே சீனா, ஹாங்காங், தைவானிலிருந்து வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டன. எல்லைகள் மூடப்பட்டன. மார்ச் 21-ல் சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இப்படி ஆரம்பக் கட்டத்திலேயே தீர்க்கமான நடவடிக்கைகளை  வியட்நாம். எடுத்ததால்தான் கொரோனா  வைரஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடிந்தது என்று சர்வதேச நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆயிரக்கணக்கானோரைத் தனிமைப்படுத்தியது, பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது, கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களைக் கண்டறியும் வழிமுறையை நடைமுறைப்படுத்தியது என்று பல்வேறு நடவடிக்கைகளை வியட்நாம். அரசு எடுத்தது. ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டால், அவருடன் தொடர்புடையவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தாமல், அவர்களையும் அரசு மருத்துவமனைகள் அல்லது மருத்துவ முகாம்களில் தங்கவைத்தது. இதனால், வீட்டில் இருக்கும் முதியவர்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்கப்பட்டது. தொற்றுக்குள்ளானவர்களின் தொடர்புகளைத் தடமறிவதிலும் துரிதமாகச் செயல்பட்டது.

குறைந்த செலவில் பரிசோதனை
மார்ச் தொடக்கத்திலேயே கொரோனா பரிசோதனை சாதனங்களைக் குறைந்த விலையில் உருவாக்கிவிட்டார்கள் வியட்நாம். விஞ்ஞானிகள். அதிகச் செலவு பிடிக்கும் பரிசோதனை முறைகளைவிட, குறைந்த செலவிலான பரிசோதனை முறைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தது வியட்நாம். அரசு. ஜனவரியில் அந்நாட்டில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை வெறும் 3 தான். ஏப்ரல் மாதம் அது 112 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்று அதிகம் காணப்பட்ட ஹனோய் நகரச் சந்தைகளுக்குச் சென்றுவந்தவர்களுக்கு அதிக அளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஏப்ரல் இறுதியில், 2.60 லட்சம் பரிசோதனைகளை  வியட்நாம். நடத்தியிருந்தது.

தேசபக்தி எனும் ஆயுதம்
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் எனும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவே மூன்று முறை முயற்சிக்க வேண்டியிருந்தது வியட்நாமுக்கு. அம்முயற்சியில் இரண்டு முறை தோல்வியடைந்ததை அடுத்து, 2007-ல் அதை நடைமுறைப்படுத்த தீவிர நிலைப்பாட்டை எடுத்தது வியட்நாம். அரசு. இதற்கிடையே, 2.50 டொலர் மதிப்பிலான பிளாஸ்டிக் தலைக்கவசங்களை அணிந்துகொண்டு, அபராதத்திலிருந்து தப்பிக்கும் வேலைகளில் மக்கள் இறங்கிவிட்டார்கள்.
எனினும், கொரோனா விஷயத்தில் மக்கள் அரசின் உத்தரவுகளுக்குச் செவிமடுத்தார்கள். கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், மக்களின் தேசபக்தியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியிருப்பது வியட்நாமின் வித்தியாசமான அணுகுறையைக் காட்டுகிறது. ‘வீட்டில் இருப்பது என்றால் உங்கள் நாட்டை நீங்கள் நேசிப்பது போன்றது’, ‘தனிமனித இடைவெளி என்பது தேசபக்தியின் ஒரு வடிவம்தான்’ என்றெல்லாம் கோஷங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது வியட்நாம். அரசு. ‘கொரோனா வைரஸ் உங்கள் எதிரி’ எனும் வாசகத்தை மக்கள் மனதில் ஆழப் பதியச்செய்தது அரசு. அது நல்ல பலன்களைத் தந்தது.

வெளிப்படையான நடவடிக்கைகள்
கொரோனா தொற்று தொடர்பாக வியட்நாம். வெளியிட்டிருக்கும் தரவுகள் முழுமையானவை அல்ல என்றோ போலியானவை என்றோ சிலர் கருதலாம். காரணம், ஒரே கட்சியின் ஆட்சி நடக்கும் அந்த தேசத்தில், ஊடகச் சுதந்திரம் கிடையாது. அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் எழுதினாலோ, வீதிகளில் போராடினாலோ சிறைவாசம் நிச்சயம். அதையெல்லாம் தாண்டி,  கொரோனா  விஷயத்தில் வியட்நாம். அதிகாரிகள் நேர்மையுடன் செயல்படுகிறார்கள் என்று சர்வதேச சுகாதார நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

வியட்நாம் பொருளாதாரத்தில் சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்நாட்டின் ஜிடிபியில் சுற்றுலாவின் பங்கு கிட்டத்தட்ட 8 சதவீதம். இந்நிலையில், சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் வியட்நாம். சுற்றுலாத் துறை கடுமையான இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. எனினும், இப்போதைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கான தடையை வியட்நாம். விலக்கிக்கொள்ளவில்லை. மாறாக, விவசாயம், மருந்து உற்பத்தி ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. அத்துடன் தொழில் துறையில் சீனாவைச் சார்ந்திருந்த பல நிறுவனங்களின் கவனம் வியட்நாம். பக்கம் திரும்பியிருக்கிறது.

அதேசமயம், “கொரோனா அபாயம் இப்போது குறைந்திருப்பது நல்ல விஷயம். எனினும், நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று வியட்நாம். பிரதமர் நியுவென் ஷுவான் ஃபுக் கூறியிருக்கிறார். கொரோனாவை வென்றுவிட்டோம் என்றெல்லாம் வெற்று முழக்கமிடாமல் நிதானமாகச் செயல்படுவதுதான் வியட்நாமின் முக்கிய வெற்றி!

Wednesday, March 11, 2020

விஜயகாந்தைக் கைவிட்ட அ.தி.மு.க, கொந்தளிக்கும் பிரேமலதா


இந்திய ராஜ்யசபை உறுப்பினருக்காக அதிமுக தலைவர்களுடன் முட்டிமோதிய பிரேமலதா தோல்வியடைந்துள்ளார். இந்தியாவில்  பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக உள்ளனர். இந்திய மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ராஜ்யசபை எம்பியாக பதவி  வகிக்கின்றனர். 55 ராஜ்யசபை  உறுப்பினர்கலின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் திகதி  முடிவடைகிறது. புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் ஏப்ரல் 26 ஆம்திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திருக்க்சி சிவா, மாக்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் அழ்ண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சசிகலா புஷ்பா, செல்வராஜ், முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. கடந்த முறை நான்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து இம்முறை  மூவர் மாத்திரம் தெரிவு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சசிகலா புஷ்பா ஏற்கெனவே பாரதீய  ஜனதாக் கட்சியில் இணைந்துவிட்டார். கடந்த முறை கூட்டணிக்கட்சிகளின் உதவியுடன் இருவரைத் தெரிவு செய்த திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  இம்முறை மூவரைத் தெரிவு செய்யும் வாய்ப்பு உள்ளது.

முதலமைச்சர் வேட்பாளர் என்ற விலாசத்துடன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கிய அன்புமணியும், விஜயகாந்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ராஜ்யசபாப் பதவி கிடைத்ததும் அன்புமணி அமைதியாகிவிட்டார். விஜயகாந்த் முன்னரைப்போல சுறுசுறுப்பாக இல்லை. என்றாலும் தமது கட்சியின் சார்பாக ஒருவர் எம்பியாக வேண்டும் என்பதில் விஜயாந்தின் மனைவி பிரேமலதா  உறுதியாக இருக்கிறார். தமது கட்சிக்கு ஒரு எம்பிப் பதவி தரும்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி கொடுத்தார்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஏ..சி. சண்முகம், வாசன்  போன்றோரும் தமக்கு எம்பிப் பதவி வேண்டும் எனக்  கோரிக்கை விடுத்தனர். ஆனால். அவர்கள் அதனை வெளிப்படுத்தவில்லை. பிரேமலதா மட்டும் மிரட்டும் தொனியில் கோரிக்கை விடுத்தார். சட்டசபை தேர்தல் ஒப்பந்தத்தில் எம்பிப் பதவி இல்லை எனக்கூறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தட்டிக் கழித்து விட்டது.. இதே வேளை ஒப்பந்தத்தில்  இல்லாத வாசனை எம்பியாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தால் அன்புமணி எம்பியானார். மற்ற்வர்களுடன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை வாய் மூல  உறுதிமொழி வழங்கப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வார்த்தை தவறி விட்டதாக  பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.


தனது தம்பி சுதீஷை எம்பியாக வேண்டும் என்பது பிரேமலதாவின் ஆசை. தனது தாய் எம்பியாக வேண்டும் என பிரேமலதாவின் மகன் விரும்புகிறார். அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் கைவிரித்ததால் அந்த ஆசைகள் அனைத்தும் நிராசையாகின. அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருந்து  வெளியேற முடியாத நிலை இருப்பதால் பிரேமலதாவின் அடுத்த நடவடிக்கையை  அரசியல் உலகம் எதிர்பார்த்துள்ளது. உள்ளாட்சித்  தேர்தலில் அதிக இடங்கள் வேண்டும் என பிரேமலதா கேட்பார். இல்லையேல் ரஜினியின் கட்சியில் அவர் இணைவார் என்ற எதிர்பார்ப்புள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அண்னாதிராவிட முன்னேற்றக் கழகத்தவர்களும்,  முன்னாள் எம்பிக்களும் எம்பியாகும் ஆசையில் இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் மூவரின் பெயரை உடனடியாக அறிவித்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட  இழுபறியின் பின்னர் மூவரின் பெயரை வெளியிட்டது.

காலியாகும் எம்பி பதவிக்கு முன்னாள் துணைசபாநாயகர் தம்பித்துரை, கே.பி.முனுசாமி ஆகிய இருவரையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. மூன்றாவது பெயரைக் கேட்டதும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களே அதிர்ந்து போயிள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் பெயர்  முன்மொழியப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியின் தலைவரைத் தெரிவு  செய்துள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். எம்பி பதவி கேட்டு நச்சரித்த விஜயகாந்தின் கட்சியை நிராகரித்து வாசனுக்குக் கொடுத்த பின்னணியை ஆராய வேண்டியுள்ளது.
தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்  பதவியில் இருந்து  தமிழைசை  விலகியபின்னர் அந்த இடத்துக்கு வாசனை நியமிக்கப் போவதாக கிசுகிசுக்கப்பட்டது. வாசன் அதனை மறுத்துவிட்டார். 

மோடியின் சிபார்சினால்தா வாசனின் பெயர் அறிவிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்களை அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் மறுத்தாலும் அதனை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்னர் சீன ஜனாதிபதியை சந்திக்க பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது வாசனுடன் அதிக  நேரம் பேசியதும், வாசன் டெல்லியில் மோடியைச் சந்தித்ததும் எதற்காக எனும் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. தம்பித்துரைக்கு டெல்லித் தொடர்புகள் அதிகமுள்ளது. தம்பித்துரையை விட அதிக தொடர்புகளையும் அனுபவத்தையும் கொண்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் வாசன்.  அவருடைய  தெரிவு அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  பலத்தைக் கூட்டும் என்பதில் சந்தேகமில்லை.  விஜயகாந்தின் கட்சிக்கு எம்பிக்கள் யாரும் இல்லை. டெல்லியில் அரசியல் செய்வதற்கு தகுதியானவர் யாரும் இல்லை என்பதால் விஜயகாந்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்துள்ளது.

தமிழகத்தின் டெல்டா பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு செல்வாக்கு இல்லை. வாசன் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். அவரின் மூலம் முக்குலத்தோர் வாக்குகளைப் பெற முடியும் என அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர்கள்  எதிர்பார்க்கிறார்கள். வாசனை அமைச்சராக்கி தமிழகத்தில் தாமரையை மலரச்  செய்ய பாரதீய ஜனதாக் கட்சி எதிர் பார்க்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பச் செய்து ஏமாற்றிய வியஜகாந்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏமாற்றுகிறது.

திருச்சி சிவா, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரைன் பெயரை திராவிட முன்னேற்றக்  கழகம் அறிவித்துள்ள்ளது. டெல்லி அரசியலில் நீண்ட கால அனுபவமுள்ள திருச்சி சிவா  நான்காவது முறையாக எம்பியாகிறார். அவரின் தெரிவு எதிர் பார்க்கப்பட்ட ஒன்று. வைகோவுக்காக மாற்ரு வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்து வாபஸ் பெற்றவர் இளங்கோ அடுத்த முறை தருகிறேன் என உறுதியளித்த ஸ்டாலின் தன் வார்த்தையைக் காப்பாற்றியுள்ளார். அந்தியூ செல்வராஜின் பெயர் அனைவரையும் ஆச்சரியப்படுத்துயுள்ளது. 75 வருட கால இந்திய அரசியல் வரலாற்றில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது எம்பியை திராவிட முன்னேற்றக் கழகம் தந்துள்ளது. அச் சமூகத்தின்  முதலாவது எம்பி வி.பி. துரைசாமியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம்  தெரிவு செய்யப்பட்டவர்.

திராவிட முன்னேற்றக் கழகம் மூவரின் பெயரை அறிவித்தபோது இஸ்லாமியர் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இஸ்லாமியருக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. 17 மானிலங்களில் 55 உறுப்பினர்களுக்காகன தேர்தல் நடைபெற உள்ளது. பாரதீய ஜனதாக் கட்சி உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கும். ஆனால், பெரும்பான்மை பெறமுடியாது. 34 சட்டசபை உறுப்பினர்கள் ஒரு எம்பியைத் தெரிவு செய்வார்கள். தமிழக சட்ட சபையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சபாநாயகர் உட்பட125 உறுப்பினர்கள். மூவரைத் ஹெரிவு செய்வதில் எந்த சிக்கலும்  இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 98 உறுப்பினர்கள் உள்ளனர். கங்கிரஸின் எட்டு உறுப்பினர்களின் தயவினால் மூவர் தெரிவாவார்கள். மனித நேயக் கட்சியின் ஒரு உறுப்பினரும் சுயேச்சையாக தினகரனும் தமிழக  சட்ட சபையில் உள்ளனர்.