Sunday, August 23, 2020

மூன்றாவது டெஸ்ட்டில் தடுமாறும் பாகிஸ்தான்

 

 

இங்கிலாந்துக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடைபெறும் டெஸ்ட்டின் 2 ஆம் நாள் ஆட்ட நேரமுடிவில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி சமநிலையில் முடிவுற்றது. 

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி  டெஸ்ட்போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

 அதன்படி இங்கிலாந்து அணியின் ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோரி பேர்ன்ஸ் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்

 

அடுத்து வந்த ஜாக் கிராவ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டாம் சிப்லி 22 ஓட்டங்களிலும், அடுத்து வந்த ஜோ ரூட் 29 ஓட்டங்களிலும், ஒல்லி போப் 3  ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 127 ஓட்டங்களில்  நான்கு விக்கெட்களை இழந்தது. 

5-வது விக்கெட்டுக்கு கிராவ்லி உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிராவ்லி 80 பந்தில் அரைசதமும், 171 பந்தில் சதமும் அடித்தார். 

மறுமுனையில் பட்லர் 85 பந்தில் அரைசதம் அடித்தார். இதனால் இங்கிலாந்து முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 332 ஓட்டங்கள் குவித்துள்ளது. கிராவ்லி 171 ஓட்டங்களுடனும், பட்லர் 87 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

 

இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே கிராவ்லி, பட்லர் ஜோடி யின் தனது ஆதிக்கம் தொடர்ந்தது. அதிடியாக ஆடிய கிராவ்லி இரட்டை சதம் விளாசினார். பட்லரும் சதம் விளாசினார் 

கிராவ்லி 267 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஷபிக் பந்து வீச்சில் ஆட்டமிழந்து  வெளியேறினார். அடுத்து வந்த போப் 3 ஓட்டங்களில்  வெளியேறினார்.  கிரிஷ் வோக்சுடன் ஜோடி சேர்ந்த பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ஓட்டங்களை கடந்தார். பட்லர் 152 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அலாம் வீசிய பந்தில் அவரிடமே பிடி கொடுத்து வெளியேறினார். 

இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 583 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை நிறுத்தியது..

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி 267 ஓட்டங்களையும், பட்லர் 152 ஓட்டங்களையும் அடித்தனர். 

பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி, அலாம், யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர் 

இதையடுத்து இங்கிலாந்தை விட 583 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆனால், தொடக்கத்திலேயே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷான் மசூத் 4 ஓட்டங்களுடனும், அபித் அலி 1 ஓட்டத்துடனும், ஜேம்ஸ் அண்டர்சன்னின் பந்து வீச்சில் அடுத்தடுத்து  வெளியேறினர் 

பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்ட அசார் அலியுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். ஆனால் இந்த ஜோடியும் நீடிக்கவில்லை. பாபர் அசாம் 11 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஜேம்ஸ் அண்டர்சன் வீசிய பந்தில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.  பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது 24 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. 

அப்போது போட்டியின் 2 வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி 559 ஓட்டங்கள் பின் தங்கியநிலையில் உள்ளது. 

பாகிஸ்தான் அணியின் அசார் அலி 4 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் அண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

Saturday, August 22, 2020

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை, மும்பை, பெங்களூரு அணி வீரர்கள் துபாய் சென்றனர்

 

எட்டு அணிகள் பங்கேற்கும் 13-வது .பி.எல். கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ஆம் திகதி முதல் நவம்பர் 10-ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி முன்னாள் சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னை சேப்பாக்கம் எம்..சிதம்பரம் ஸ்டேடியத்தில் 5 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. கப்டன் டோனி, துணை கப்டன் சுரேஷ் ரெய்னா, முரளிவிஜய், கரண் ஷர்மா, தீபக் சாஹர், அம்பத்தி ராயுடு, ஜெகதீசன், பியுஷ் சாவ்லா, கேதர் ஜாதவ், மோனுகுமார், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
 

பயிற்சியை முடித்துக் கொண்டு டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று மதியம் தனிவிமானத்தில் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். பயிற்சி முகாமில் இடம் பெறாத சகலதுறை ஆட்டகாரர் ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் ஆகியோரும் சென்னை வந்து அணியுடன் இணைந்து பயணித்தனர். அங்கு சென்றதும் வீரர்கள் தங்களுக்குரிய ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். 6 நாட்களில் மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுமுடிவு வந்ததும் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினரும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியினரும் நேற்று துபாய் புறப்பட்டனர். ரோகித் சர்மா தனது மனைவி, மகளையும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுக்குட்பட்டு அழைத்து சென்றார். ஏற்கனவே பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணியினரும் அங்கு சென்று விட்டனர். எஞ்சிய ஐதராபாத், டெல்லி அணி வீரர்கள் ஓரிரு நாட்களில் கிளம்ப உள்ளனர்.

மும்பை அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இலங்கையைச் சேர்ந்த மலிங்கா அணியிருடன் புறப்படவில்லை. மலிங்காவின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வருகிற வாரங்களில் சத்திர சிகிச்சை செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. தந்தையை அருகில் இருந்து அவர் கவனித்து வருகிறார். இதனால் அவர் கொழும்பிலேயே தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவார். தாமதமாக புறப்படும் நிலை உருவாகியுள்ளதால் அனேகமாக அவர் ஓரிரு ஆட்டங்களை தவற விடுவார் என்று தெரிகிறது.

 

Wednesday, August 12, 2020

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு

 

புதிய அரசாங்கத்தின் அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோர் கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்த‌னர்.

 28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள், 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு பதவிகள், மாவட்ட ரீதியான தலைவர்கள், இணைத்தலைவர்கள் பதவிகள் வழங்கப்பட்டன.

 அமைச்சரவை அமைச்சர்கள் விபரம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ - பாதுகாப்பு அமைச்சர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - நிதி, புத்தசாசனம் - மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்

நிமல் சிறிபால டி சில்வா - தொழில் அமைச்சர்.

ஜீ.எல்.பீரிஸ் - கல்வி அமைச்சர்.

பவித்ராதேவி வன்னிஆராச்சி - சுகாதார துறை அமைச்சர்.

தினேஷ் குணவர்தன - வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்.

டக்ளஸ் தேவானந்தா - கடற்தொழில்துறை அமைச்சர்.

காமினி லொக்குகே - போக்குவரத்து துறை அமைச்சர்.

ப‌ந்துல குணவர்தன - வர்த்தகத்துறை அமைச்சர்.

சீ.பி.ரத்நாயக்க - வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்.

ஜனக பண்டார தென்னகோன் - அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்.

கெஹேலிய ரம்புக்வெல்ல - வெகுசன ஊடகத்துறை அமைச்சர்.

சமல் ராஜபக்ஷ - நீர்பாசன துறை அமைச்சர்.

டலஸ் அழகப்பெரும - மின்சக்தித் துறை அமைச்சர்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - நெடுஞ்சாலைகள் துறை அமைச்ர்.

விமல் வீரவன்ச - கைத்தொழில் துறை அமைச்சர்.

மஹிந்த அமரவீர - சுற்றுலாடல் துறை அமைச்சர்.

எஸ்.எம்.சந்திரசேன - காணி அமைச்சர்.

மஹிந்தானந்த அலுத்கமகே - கமத்தொழில் துறை அமைச்சர்.

வாசுதேவ நாணயக்கார - நீர் வளங்கள் துறை அமைச்சர்.

 

உதய பிரபாத் கம்மன்பில - வலுசக்தி துறை அமைச்சர்.

ரமேஷ் பத்திரன - பெருந்தோட்டத் துறை அமைச்சர்.

பிரசன்ன ரணதுங்க - சுற்றுலாத் துறை அமைச்சர்.

ரோஹித அபேகுணவர்தன - துறைமுககங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்.

நாமல் ராஜபக்ஷ - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்,

அலி சப்ரி - நீதி அமைச்சர்.

 

இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான விபரம்:‍

சமல் ராஜபக்ஷ - உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்.

பியங்கர ஜயரத்ன - வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல்.

துமிந்த திஸாநாயக்க - சூரிய சக்தி காற்று மற்றும் நீர் உற்பத்தி.

தயாசிறி ஜயசேகர ‍ பற்றிக் கைத்தறி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி.

லசந்த அழகியவன்ன - கூட்டுறவு சேவை, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, நுகர்வோர் பாதுகாப்பு.

சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே - சிறைச்சாலைகள் மறுசீரமைச்சு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு.

அருந்திக்க பெர்னாண்டோ - தென்னை கித்துல், பனை, இறப்பர் மேன்மை செயற்பாடு, அது தொடர்பான உற்பத்தி செயற்பாடு மற்றும் இறக்குமதி.

நிமல் லன்சா - கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்.

ஜயந்த சமரவீர - கொள்கலன் முனையங்கள், துறைமுக வள வசதிகள், இயந்திர படகுகள் மற்றும் கப்பல் தொழில்.

ரொஷான் ரணசிங்க - காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சி காணி மற்றும் சொத்து அபிவிருத்தி.

கனக ஹேரத் - கம்பனி தோட்டங்களை சீர் திருத்துதல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச் செய்கைகள் மற்றும் தேயிலை ஏற்றுமதி.

விதுர விக்ரமநாயக்க - தேசிய மரபுரிமை அருங்கலைகள்

ஜானக வக்கும்புர ‍ கரும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட பயிர்ச் செய்கை மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி மேம்பாடு

விஜித வேறுகொட - அறநெறி பாடசாலை, பிரிவெனாக்கள், பிக்குமார் கற்றை - பிக்குமார் பல்கலைக்கழகம்

ஷெஹான் சேமசிங்க - சமுர்த்தி வதிவிட பொருளாதாரம் நுண்நிதி, சுய தொழில்.

மொஹான் டி சில்வா - உரம் உற்பத்தி மற்றும் வளங்கள்.

லொஹான் ரத்வத்தை - இரத்தினகல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்கள்.

திலும் அமுனுகம - வாகன ஒழுங்குறுத்துகை, மோட்டார் வாகன கைத்தொழில்.

விமலவீர திஸாநாயக்க - வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி, மற்றும் வன பாதுகாப்பு நடவடிக்கை.

தாரக பாலசூரிய - பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள்.

இந்திக்க அனுருந்த - கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை மற்றும் கட்டட பொருட்கள்.

சிறிபால கமலத் - மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்பட்டமைப்பு வசதிகள்.

சரத் வீரசேகர - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி.

அனுராத ஜயரத்ன - கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி.

சதாசிவம் வியாழேந்திரன் - தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகங்கள் அபிவிருத்தி.

தேனுக விதானகமகே - கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு.

சிசிர ஜயகொடி - சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதாரம்.

பியல் நிஷாந்த டி சில்வா - மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள்.

பிரசன்ன ரணவீர - பிரம்புகள், பித்தலை, மட்பாண்டங்கள் மற்றும் மர பொருட்கள், கிராமிய பொருட்கள் மேம்பாடு.

டீ.வீ.சானக - விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி.

டீ.பீ.ஹேரத் - கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில்.

சஷிந்திர ராஜபக்ஷ - நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம்.

நாலக கொடஹேவா - நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல்.

 

ஜீவன் தொண்டமான் - தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்.

அஜித் நிவாட் கப்ரால் - நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு.

சீதா அருதேபொல - திறன் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம்.

சன்ன ஜயசுமன - ஔடத உற்பத்திகள் வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல்.

கஞ்சன விஜேசேகர - அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில், துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி

 

மாவட்ட  அபிவிருத்தி சபை தலைவர்கள்

கொழும்பு - பிரதீப் உதுகொட.

கம்பஹா மாவட்டம் - சமன் பிரதீப் விதான.

களுத்துறை - சஞ்சீவ எதிரிமான்ன.

கண்டி - வசந்த யாப்பா பண்டார.

மாத்தளை - எஸ். நாமக்க பண்டார.

நுவரெலியா - எஸ். பி. திசாநாயக்க.

 

 காலி - சம்பத் அத்துகோரள

மாத்தறை - நிபுண ரணவக்க.

ஹம்பாந்தோட்டை - உபுல் கலப்பத்தி.

யாழ்ப்பாணம் - அங்கஜன் இராமநாதன்.

கிளிநொச்சி - டக்ளஸ் தேவாநந்தா.

வவுனியா - கே. திலீபன்.

மன்னார், முல்லைத்தீவு - காதர் மஸ்தான்

அம்பாறை - டி. வீரசிங்க.

திருகோணமலை - கபில அத்துகோரள.

குருநாகல் - குணபால ரத்னசேகர.

புத்தளம் - அசோக பிரியந்த.

அனுராதபுரம் - எச். நந்தசேன.

பொலன்னறுவை - அமரகீர்த்தி அத்துகோரள.

பதுளை - சுதர்ஷன தெனிபிட்டிய 

மொனராகலை - குமாரசிறி ரத்நாயக்க

இரத்தினபுரி - அகில எல்லாவல

கேகாலை - திருமதி ராஜிகா விக்ரமசிங்க.

 

Friday, July 31, 2020

மாலவியில் கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்

 

கொரோனா பாதிப்பு காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள இந்த நேரத்தில் 7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் பல மாணவிகள் வயது 10ல் இருந்து 14 வயதுக்குள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டது. இதன்பின்னரே மாணவிகள், சிறுமிகள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளது.பலோம்பே  நகரில் மட்டும் இந்த காலக்கட்டத்தில் 1000 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர்.

கல்வி தொடர்பான சிவில் சொசைட்டி கூட்டணியின் இயக்குனர் பெனடிக்டோ கோண்டோவ் கூறுகையில், கொரோனா தொற்றுநோய் நாட்டின் இளம் பெண்களின் வாழ்க்கையை மோசமாக பாதித்துள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை, சுரண்டல் மற்றும் இளம் பருவ சிறுமிகளுக்கு எதிரான பிற வகையான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன என கவலை தெரிவித்துள்ளார்.மாலவி நாட்டில் இதுவரை 3,700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதுபோல் கென்யா அதிகாரிகள், ஜூலை தொடக்கத்தில், கொரோனா ஊர்டங்கின்  போது சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது என  அறிவித்தனர், இதில் 150,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊர்டங்கின் மூன்று மாதங்களில், 152,000 கென்ய சிறுமிகள் கர்ப்பமாகிவிட்டனர், இது மாத சராசரியில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

கென்யா உலகின் மிக அதிகமான சிறுமிகள்  கர்ப்ப விகிதங்களில் ஒன்றாகும், இங்கு 1,000 பேரில்  82 சிறுமிகள் கர்ப்பம் தரிக்கின்றனர்.