Wednesday, August 26, 2020

பேயர்ன் முனிச் அணி ‘சம்பியன்’

 


ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்  போட்டியில் பேயர்ன் முனிச் அணிசம்பியன்பட்டத்தை கைப்பற்றியது. 

கிளப் அணிகளுக்கான 65-வது ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் உதைபந்தாட்டப் போட்டி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்தது. இதில்  நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் பேயர்ன் முனிச் (ஜேர்மனி)-பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இன்றி அரங்கேறிய இந்த போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தாலும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

பந்தை அதிகம் (62 சதவீதம்) கட்டுப்பாட்டில் வைத்து இருந்த பேயர்ன் முனிச் அணி 59-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. அந்த அணி வீரர் ஜோசுவா கிம்மிச் கோல் எல்லையை நோக்கி தூக்கி அடித்த பந்தை சக வீரர் கிங்ஸ்லி கோமென் தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார். சாம்பியன்ஸ் லீக் போட்டி தொடரில் பேயர்ன் முனிச் பதிவு செய்த 500-வது கோல் இதுவாகும். பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் நட்சத்திர வீரர்களான நெய்மார், கைலியன் பாப்பே ஆகியோர் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் கோலை நோக்கி அடித்த சிறப்பான ஷாட்களை பேயர்ன் முனிச் கோல் கீப்பர் மானுவெல் நீயர் அருமையாக தடுத்து நிறுத்தி அணியின் வெற்றிக்கு அரணாக இருந்தார்.



முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைனை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

பேயர்ன் முனிச் அனைத்து ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி கண்டு மகுடத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. முதல்முறையாக கோப்பையை வெல்லும் தங்கள் அணியின் கனவு மயிரிழையில் கைநழுவி போனதால் நட்சத்திர வீரர் நெய்மார் கண்ணீர் மல்க சோகத்துடன் வெளியேறினார்.

11-
வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பேயர்ன் முனிச் வென்ற 6-வது சாம்பியன்ஸ் லீக் பட்டம் இதுவாகும். ஏற்கனவே 1974, 1975, 1976, 2001, 2013 ஆகிய ஆண்டுகளில் இந்த பட்டத்தை வென்று இருந்தது. பேயர்ன் முனிச் வீரர் ராபர்ட் லெவன்டவ்ஸ்கி இந்த சீசனில் மொத்தம் 15 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவருக்கான விருதை தட்டிச் சென்றார். இந்த சீசனில் பேயர்ன் முனிச் வென்ற 3-வது மகுடம் இதுவாகும். பன்டெஸ்லிகா, ஜெர்மன் கோப்பை போட்டிகளிலும் பட்டம் வென்று இருந்தது.


வெற்றிக்கு பிறகு பேயர்ன் முனிச் அணியின் பயிற்சியாளர் ஹன்சி பிலிக் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணியை நினைத்து பெருமிதம் அடைகிறேன். கடந்த நவம்பர் மாதம் நான் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற போது அணி மோசமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதன் பிறகு அணியின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் உணர்ச்சிகரமானது. ஒரு சீசனில் மூன்று பட்டங்களை வெல்வது எளிதான காரியமல்ல. அணியினரின் அற்புதமான கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பலன் இதுவாகும்என்று தெரிவித்தார்.


தோல்வி கண்ட பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் பயிற்சியாளர் தாமஸ் துசெல் கருத்து தெரிவிக்கையில், ‘தோல்வி வருத்தம் அளித்தாலும், அணியினரின் செயல்பாடு பெருமை அளிக்கிறது. நெய்மார் மனஉறுதியுடன் சிறப்பாக செயல்பட்டார். பெரிய காயம் காரணமாக பயிற்சிகளை அதிகம் தவறவிட்ட பாப்பே எங்களுடன் இணைந்து ஆடியது அதிசயம் எனலாம். கால்பந்தை பொறுத்தமட்டில் அதிர்ஷ்டம் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். எங்களுக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை எங்களால் கோலாக்க முடியவில்லை. இதற்கு யாரேனும் ஒருவரின் தவறு காரணம் என்று சொல்ல முடியாதுஎன்றார்.

Sunday, August 23, 2020

ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்களுக்காக 150 சொகுசு அறைகள்

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெயின், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இன்று அதிகாலை துபாய் சென்றடைந்தனர். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம்திகதி முதல் நவம்பர் 10- ஆம் திகதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. 

இதற்காக ஒவ்வொரு அணிகளும் துபாய் சென்று கொண்டிருக்கின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்கள் நாடுகளில் இருந்து நேரடியாக துபாய் வந்து விடுவார்கள். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நேற்று துபாய் சென்றடைந்தார். அவர் புர்ஜ் கலிஃபாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் அணியுடன் இணைவார். 

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ், வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இன்று அதிகாலை துபாய் சென்றடைந்தனர். 

அவர்கள் நேராக சொகுசு ஓட்டல் சென்று அங்குள்ள அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் பாதுகாப்பிற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சொகுசு ஓட்டலில் 150 அறைகளை பதிவு செய்து வைத்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கிடையே தென்ஆப்பிரிக்காவில் இருந்து துபாய் வந்தது குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், 

 ‘‘நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இங்கு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. வழக்கமானதை விட பயணம் சற்று கடினமாக இருந்தது. ஆனால், என்னுடைய தென்ஆப்பிரிக்கா நண்பர்களுடன் ஆர்சிபி அணியில் இணைய வந்துள்ள மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய கொரோனா டெஸ்ட் பரிசோதனையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்’’ என்றார். 

டெல் ஸ்டெயின் கூறுகையில், 

 ‘‘மிகவும் வெப்பமான சூழ்நிலையில் விளையாடுவது சுவாரஸ்யமாக இருக்கும். நாங்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தார். அப்போது வெளியே மிகவும் வெப்பமாக இருந்தது. இன்னும் சில வாரங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும்’’ என்றார். 

கிறிஸ் மோரிஸ் இதுகுறித்து கூறுகையில், 

 ‘‘இது மிகவும் சவாலானது. இருந்தாலும் அதை நோக்கிச் செல்ல ஆர்வமாக உள்ளோம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கொஞ்சம் பதட்டமாக உள்ளது’’ என்றார்.