Wednesday, July 29, 2020

மேற்கு இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றது இங்கிலாந்து

மான்செஸ்டரில் நடைபெற்ற மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் 269 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து  2-1  என்ற கனக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து ‍ மேற்கு இந்தியா ஆகியவற்றுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 24‍ந்திக‌தி மான்செஸ்டரில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 369 ஓட்டங்களும், மேற்கு இந்தியா 197 ஓட்டங்களும் எடுத்தன. அடுத்து 172 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 226 ஓட்டங்களுடன் ஆட்டத்தை நிறுத்தி 399 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு இந்திய‌ அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 10 ஓட்டங்கள் எடுத்தது. 4-வது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்திய‌ அணி, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 37.1 ஓவர்களில் 129 ஓட்டங்கலில் வீழ்ந்தது. மூன்று முறை மழை குறுக்கிட்டும் சிறிது நேரத்தில் நின்று போனதால் மேற்கு இந்திய வீரர்கள் ஏமாந்து போனார்கள். அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 31 ஓட்டங்களும், ஜெர்மைன் பிளாக்வுட் 23 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர். பிராட் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

இதன் மூலம் 269 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற‌ இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீசும், 2-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றிருந்தது. அரைசதத்துடன் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகளை அள்ளிய ஸ்டூவர்ட் பிராட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடர் நாயகனாக ஸ்டூவர்ட் பிராட்டும், மேற்கு இந்திய சகலதுறை வீரர் ரோஸ்டன் சேசும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.3 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் 50 விக்கெட்டுகள் வீழ்த்துவது 1912-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் நிகழ்வாகும்.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் வெற்றிக்கு இங்கிலாந்து அணி 40 புள்ளிகளை வசப்படுத்தியது. கொரோனாவின் கோர தாண்டவத்துக்கு மத்தியில் துணிச்சலுடன் உயிர்பாதுகாப்பு மருத்துவ சோதனைகளுடன், ரசிகர்கள் இன்றி இந்த தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பது மற்ற நாட்டு கிரிக்கெட் சபைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Monday, July 27, 2020

மேற்கு இந்தியா 197 ஓட்டங்கள் எடுத்தது

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் மேற்கு இந்திய அணி சகல விக்கெட்களையும் இழந்து 197 ஓட்டங்கள் எடுத்தது. 

இங்கிலாந்து - மேற்கு இந்தியா ஆகியவற்றுக்கு  இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து 369 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கு இந்திய அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 137 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.

 

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மேற்கு இந்தியா ஒரு வழியாக பாலோ-ஆன் (170 ஓட்டங்கள்) ஆபத்தை தவிர்த்தது. கப்டன் ஜாசன் ஹோல்டர் 46 ஓட்டங்களிலும், விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச் 37 ஓட்டங்களிலும் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சில் வீழ்ந்தனர். முடிவில் மேற்கு இந்தியா அணி 65 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து  197 ஓட்டங்கள் எடுத்ததுஎந்த ஒரு வீரரும் அரைச் சதத்தைதாண்டவில்லை.. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 14 ஓவர்களில் 31 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இன்னிங்சில் அவர் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட் சாய்ப்பது இது 18-வது முறையாகும்.

 

அடுத்து 172 ஓட்டகள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்சும், டாம் சிப்லியும் அருமையான தொடக்கம் உருவாக்கித் தந்தனர். உள்ளூரில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்த முதல் இங்கிலாந்து தொடக்க ஜோடி என்ற பெருமையை பர்ன்ஸ்-சிப்லி பெற்றனர். அணியின் ஓட்ட எண்ணிக்கை 114 ஓட்டங்களை எட்டிய போது சிப்லி (56 ஓட்டங்கள்) எல்.பி.டபிள்யூ.ஆனார். 

ரோரி பர்ன்ஸ் தனது பங்குக்கு 90 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 58 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 226 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டத்தை நிறுத்தியது. அப்போது கப்டன் ஜோ ரூட் 68 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் மேற்கு இந்தியாவுக்கு 399 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 

Saturday, July 25, 2020

இங்கிலாந்து வீரர்கள் பர்ன்ஸ், போப்,பட்லர் அரைசதம்

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரானமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து நான்கு விக்கெட்கலை இழந்து 258 ஓட்டங்கள் எடுத்தது. 

இங்கிலாந்து - மேற்குஇந்தியத் தீவுகள்  ஆகியவற்றுக்கு இடையேயான 3-வது  கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நேற்று தொடங்கியது. மேற்கு இந்திய அணியில்   ஒரே ஒரு மாற்றமாக அல்ஜாரி ஜோசப்புக்கு பதிலாக அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரரான சுழற்பந்து வீச்சாளர் ரகீம் கார்ன்வால் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் சாம் கர்ரன், ஜாக் கிராவ்லி நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜோப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன் திரும்பினர்.

தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்த டெஸ்டில் நாணயச் சுழற்சியில்  ஜெயித்த மேற்கு இந்திய கப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். துடுப்பாட்டத்தைத் தொடங்கிய    முதல் ஓவரிலேயே இங்கிலாந்து தொடக்க வீரர் டாம் சிப்லி (0) கெமார் ரோச்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 

அடுத்து ரோரி பர்ன்சும், கப்டன் ஜோ ரூட்டும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்பதற்காக தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். மேற்கு இந்திய பந்து வீச்சை சமாளிப்பதில் தடுமாறிய ஜோ ரூட் (17 ஓட்டங்கள், 59 பந்து) ரன்-அவுட்டில் வீழ்ந்தார். முந்தைய டெஸ்டின் 2-வது இன்னிங்சிலும் ஜோ ரூட் ரன்-அவுட் ஆகியிருந்தார். இங்கிலாந்து கப்டன் ஒருவர் அடுத்தடுத்த இன்னிங்சில் ரன்-அவுட் ஆவது 1995-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

3-வது விக்கெட்டுக்கு இறங்கிய கடந்த டெஸ்டின் கதாநாயகன் ஆல்-ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் (20 ஓட்டங்கள்) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. கெமார் ரோச் வீசிய பந்து வீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். மறுமுனையில் அரைசதத்தை கடந்த ரோரி பர்ன்ஸ் 57 ஓட்டங்களில்களில் (147 பந்து, 4 பவுண்டரி) வெளியேறினார்.

 

இதன் பின்னர் ஆலிவர் போப்பும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்கள் சேர்த்து இருந்தது. அப்போது ஆலிவர் போப் 91 ஓட்டங்களுடனும், பட்லர் 56 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.