ஜீவநதியின் 28 ஆவது வெளியீடாக ப.விஷ்ணுவர்த்தினியின் நினைவு நல்லது வேண்டும்என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. நினைவு நல்லது வேண்டும் என்ற தலைப்பே வாசிக்கத் தூண்டுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உளவியற்றுறை இறுதி வருட மாணவியான விஷ்ணுவர்த்தினியின் கதைகள் அனைத்தும் படித்து முடித்ததும் உளவியல் சிந்தனையை ஏற்படுத்துகின்றன. மனதில் உறுதி வேண்டும் என்ற இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.
போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவிகள் மட்டுமல்ல,போர் எதற்காக நடைபெறுகிறது என்பதை அறியாத சிறுவர்களும் இப்போரினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வதற்காக தம்மைச் சிதைத்துக் கொள்வதையும் யதார்த்த பூர்வமாக தனது கதைகளினூடாக வெளிப் படுத்தி உள்ளார்.
உறவினர்கள் இல்லாத வயதான பெண்ணுக்கும் பெற்றோரை இழந்த மூன்று சிறு பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும் உறவுப்போராட்டம் சொந்தமில்லா பந்தங்கள் என்ற சிறுகதை மூலம் வெளிப்படுகிறது. பெற்றோர் இல்லாத அவர்களை அந்த அம்மம்மா நன்றாகப் பராமரிப்பார் என்று நிம்மதிப்பெருமூச்சு விடுகையில் முகாமைவிட்டு வெளியேறும் அம்மம்மாவின் செயல் மனதை உறுத்துகிறது.தனது சீவியத்துக்கே வருமானம் இல்லாத அப்பெண் இரண்டு குழந்தைகளை முகாமிலே தவிக்கவிட்டு ஒரு குழந்தையை மட்டும் தன்னுடன் கூட்டிச் செல்கிறார்.
மூன்று குழந்தைகளையும் அழைத்துச் சென்று நிர்க்கதியாக இருப்பதைவிட ஒரு குழந்தையை நன்கு பராமரிக்கலாம் என்று அப்பெண் நினைத்ததால் அவளின் முடிவு சரிதான்.இரண்டு குழந்தைகளைக் காப்பாற்ற அவள் இறைவனிடம் இறைஞ்சும் போது வாசகர்களும் சேர்ந்து விடுவார்கள்என்பது திண்ணம்.
உதயன் வெள்ளிவிழா எழுத்தாக்கப் போட்டியில் மூன்றாம் பரிசுபெற்ற கதை இது.
கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் வாழும் இளம் பெண்ணின் கதைதான் திருப்பம்.அவளது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்த மறுமணம் செய்து வைக்க தாய் முயற்சிக்கிறாள். தாயின் விருப்பத்தை மறுத்து கணவனின் நினைவாக வாழும் இளம் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களை இக்கதை வெளிப்படுத்துகிறது. யுத்தத்தில் இழந்து முகாமிலிருந்து வெளியேறியவள் கணவனின் ஊறுகாய் வியாபாரத்தை கையில் எடுக்கிறாள்.
இளம் பெண்களையும் கணவனை இழந்த பெண்களையும் சுற்றிவரும் வல்லூறுகள் அவளையும் சுற்றி வட்டமிட்டன. அவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு புதுமைப் பெண்ணாக மிளிர்கிறாள் இக் கதையின் நாயகி.
கியூடெக் 2011 பெண்கள்தின சிறு கதைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற கதை இது.
சத்திர சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கும் அங்கு கடமைபுரியும் தாதிக்கும் இடையேயான போராட்டம் தான் நினைவு நல்லது வேண்டும். நோயாளியான தாய்க்கும் மகளுக்கும் சிங்களம் தெரியாது. தாதிக்குத் தமிழ் தெரியாது. எல்லோருடனும் சிரித்து அன்பாக ஆதரவாகப் பழகும் தாதி தங்களை மட்டும் ஏன் முறைக்கிறார் என்பது தெரியாது தாயும் மகளும் தவிக்கின்றனர்.
தாதியின் கணவன் இராணுவத்தில் இணைந்ததாகவும் யுத்தத்தில் அவன் இறந்ததாகவும் அங்கு வேலை செய்யும் தமிழ்ப் பெண் மூலம் தாயும், மகளும் அறிகின்றனர். யுத்தத்தில் சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அந்தத் தாதிக்கு உணர வைக்கின்றனர். புரிந்துணர்வு இல்லாததால் தான் பிரச்சினை என்பதை இக்கதை உணர்த்துகிறது.
முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவரை அறிமுகப்படுத்துவதுடன் ஊமைக் காயம் என்ற சிறுகதை ஆரம்பமாகிறது. பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள்தான் முதியோர் இல்லத்தில் இருப்பார்கள் என்ற எண்ணத்துடன் கதையைத் தொடர்ந்து படிக்கும்போது பெற்ற தாயின் பாசத்தால் பிரான்ஸில் இருந்து தாய் நாட்டுக்கு வந்து அநாதையானவரின் கதை தான் இது என்ற உணர்வு பிறக்கிறது.
சொந்தத்துக்குள்ளேயே அந்தஸ்து பார்க்கும் சமூகம் வெள்ளைக்காரியை மருமகளாக ஏற்றுக்கொள்ளாது. பிரான்ஸில் உள்ள மகனுக்கு ஊரில் பெண் பார்க்கிறாள் தாய். மகன் பிரான்ஸில் திருமணம் செய்ததை அறிந்து தொடர்பை துண்டிக்கிறாள்.தாயைச் சமாதானப்படுத்த புதுக்குடியிருப்புக்கு திரும்புகிறான் மகன். அப்போது நடந்த யுத்தத்தில் சொந்த பந்தங்களையும் உடைமைகளையும் இழந்து பிரான்ஸுக்கு திரும்ப வழி தெரியாது முதியோர் இல்லத்தில் தஞ்சமடைகிறான்.
அப்பாவின் விருப்பத்துக்காக தனது சுகத்தைத் துறக்கும் இளைஞனின் கதை மெழுகுவர்த்தி. மகன் பல்கலைக்கழகத்துக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார் தந்தை. பல்கலைக்கழகத்துக்குச் சென்றால் நல்ல விக்கு விற்கலாம் என துணிக்கடை வியாபாரி நினைக்கிறார். கல்வியை வியாபார மாக்கும் தந்தைக்காக தன் காதலைத் துறக்கிறான் மகன்.
அநாதைக் குழந்தைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள்தான் என்பதை கடவுளின் குழந்தைகள் என்ற கதையின் மூலம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைக்கு தான் அநாதை என்ற எண்ணம் வரக்கூடாது என்பது பெற்றோரின் விருப்பம்.
ஆனால்,நம் சமூகம் அதற்கு இடம் கொடுப்பதில்லை. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களை அநாதை என்ற உண்மையை வெளிப்படுத்தி பிஞ்சுமனங்களில் நஞ்சை விதைத்து விடுகிறது. பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு இக்கதை உதாரணம்.
வெளிநாட்டுக்குச் சென்றால் வசதியாக வாழலாம் என்பதுதான் பொதுவான அப்பிப் பிராயம். யுத்தத்தில் கணவரையும் சொந்தங்களையும் இழந்த இளம் பெண் மகளின் எதிர்கால வாழ்க்கைக்காக கனடாவில் தஞ்சமடைவதே எந்தையும் தாயும் கதையின் கரு. தாய் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்ற பெண்மணியை யுத்தம் அகதியாக்கி நாட்டை விட்டு வெளியேற வைக்கிறது.
பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்க் கையில் ஏற்படும் நட்பு, தியாகம் என்பவற்றை விட்டுக்கொடுப்பு என்ற கதை கூறுகிறது. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவனின் குடும்பப் பிரச்சினை, அதனால் அவன் எதிர் நோக்கும் சிக்கல் ஆகியவை மனதை நெருக்கு கின்றன.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை விழித்திரு.சிறுவர் துஷ்பிரயோகம், அதனால் ஏற்படும் பாதக விளைவுகள், பருவமறியாச் சிறுமி ஒருத்தி என்ன நடந்தது என்றே தெரியாது தாயாகும் அவலம், சட்ட விரோத கருக்கலைப்பு என்பவற்றை நாசூக்காக கூறியுள்ளார்.
பெற்றோரை இழந்த அம்மாவுடன் வாழும் இரண்டாம் வகுப்பு மாணவனின் மன உணர்வு களை வெளிப்படுத்தும் கதை நாதி யில்லாப் பிறவியிலே. நேர்த்தியை நிறைவேற்ற குமரனின் தகப்பனும், தாயும், தங்கை யும் கிளிநொச்சிக்குப் போய் சண்டையில் இறக்கிறார்கள். அம்மாவுடன் நின்ற குமரன் உயிர் பழைக்கிறான். குமரனின் நிலையை அறிந்த ஆசிரியை அன்பு காட்டுகிறார். அன்பு அம்மம்மா இறந்ததால் அநாதை இல்லத்தில் சேர்க்கப்படுகிறான் குமரன்.
நெல்லியடி மத்திய மகா வித்தியாலய 90 ஆவது ஆண்டு நிறைவு சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதை இதுவாகும்.
மறப்பேனோடி என்ற சிறுகதையும் மறுமணம் பற்றிய கதைதான்.முள்வேலி முகாமில் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள். காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள். தவிர உண்மைச் சொன்னால் தப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் ஒரு நாள் பயிற்சி எடுத்து இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்களும் அடங்குவர்.
முகாம் வாழ்க்கை முடிந்து வீடு திரும்பிய பின்னும் குழந்தையுடன் கணவனைத் தேடி அலைகிறாள் அந்த இளம் பெண். கணவனைத் தேடி அலையும் வேளையில் தவற விட்ட பல்கலைக்கழக படிப்பையும் தொடர்கிறாள். நாட்டு நடப்புகளையும் கூறி அவளை மறுமணத்துக்கு சம்மதிக்க வைக்கிறாள் தாய். காணாமல் போன கணவனா புதிய கணவனா என்ற மனக்குழப்பம் ஏற்படுகிறது. அவள் மனதில் இருந்து காணாமல் போன கணவனை அகற்ற முடியவில்லை. இறுதியில் தெளிவு பெற்று மறு மணத்தை நிராகரிக்கிறாள்.
பிள்ளைகளுக்காக தன்னை இழக்கத் தயாராகும் பெண்ணின் கதை விட்டில்கள். இரண்டு கதைகளைத் தவிர ஏனைய கதைகள் அனைத்தும் யுத்தத்துடன் சம்பந்தப்பட்டவை. ஒவ்வொரு கதையிலும் யுத்தத்தின் வடுக்கள் ஆழமாகப்பதியும் வகையில் எழுதியுள்ளார்.
ஆர்ப்பாட்டம் இல்லாத இலகுவான மொழி நடை.சொல்ல வேண்டிய அனைத்தையும் கனக்கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். வயதை மீறிய மொழிநடை, இவரது வெற்றிக்கு காரணம்.
சூரன்
சுடர் ஒளி 19/12/13
No comments:
Post a Comment