Monday, December 30, 2013

ஜீவநதி மார்கழி

கலை இலக்கிய மாத சஞ்சிகையான ஜீவநதி மார்கழி மாத இதழ் மலையகச் சிறப்பிதழாக  வெளியிடப்பட்டுள்ளது. ஜீவநதியின் சிறப்பிதழ்கள் பற்றி ஆசிரியர் தனது பக்கத்தில் விரிவாகக் குறிப்பட்டுள்ளார். பெண்கள் சிறப்பிதழ், சிறுகதை சிறப்பிதழ், கவிதை சிறப்பிதழ், எழுத்தாளர் மாநாட்டுச் சிறப்பிதழ், உளவியல் சிறப்பிதழ், கே.எஸ். சிவகுமாரனின் பவள விழாச் சிறப்பிதழ், இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ், அவுஸ்திரேலியச் சிறப்பிதழ், கனடாச் சிறப்பிதழ் வரிசையில் மலர்கிறது மலையகச் சிறப்பிதழ். முன்னைய  சிறப்பிதழ்களின் வெற்றியே இச்சிறப்பிதழ் வெளிவர உந்து சக்தியாக இருந்தது எனலாம
மலையகப் படைப்பாளிகள் அனை வரையும் உள்ளடக்கிய பெரிய தொரு மலையகச் சிறப்பிதழை வெளியிடும் எண்ணம் இருப்பதாக ஆசிரியர் கட்டியம் கூறுகிறார்.

தோழர் இளஞ்செழியன் பற்றிய லெனின் மதிவானம் எழுதிய பதிவு காத்திரமாக உள்ளது.மலையக மக்களின் எழுச்சிக்காவும் அவர்களின் வாக்குரிமைக்காகவும் தோழர்  இளஞ்செழியன் நடத்திய   போராட்டங்களை லெனின் மதிவானம் ஞாபகப்படுத்துகிறார்.சாதி ஒழிப்புக்காக அவர் முன்னின்று நடத்திய சுயமரியாதை சடங்குகளை அறியக் கூடியதாகஉள்ளது. இளஞ்செழியனைப் பற்றிய ஆய்வுகளும்,  மதிப்பீடுகளும் முழுமையானவையாக இல்லை என மதிவானம் குறிப்படுகிறார். அவருடைய கடிதங்கள், நூல்கள், குறிப்புகள், ஆவண மாக்கப்படவில்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

காமன் கூத்து பன்முகநோக்கில்  ஓர் ஆய்வு. அ.லெட்சுமனன் இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதி உள்ளார். காமன் கூத்து மலையகத்தில் எப்படி அறிமுகமானது? அதன் வரலாறு, நடிப்பவர், உடை, ஒப்பனை பற்றி   விலாவாரியாக எழுதியுள்ளார்.காமன் கூத்துக்கும், சிலப்பதி காரத்துக்கும் உள்ள தொடர்பு.கிரேக்கம், ரோமானியா ஆகிய நாடுகளில் உள்ள தெய்வங்களுக்கும்  காமனுக்கும் உள்ள தொடர்பு என்பவற்றை இக்கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.

எஸ் .ராமையா எழுதிய நாட்டார் பாடல்கள் மூலம் அடையாளம் காணப்படும் மலையக மக்கள் என்னும் கட்டுரையின் மூலம் மலையக மக்களின் நாட்டார் பாடல்களை அறியக்கூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில்  41ஆவது இலக்கியச் சந்திப்புக்கான பயணத்தை முன்னிறுத்திய ஒரு நினைவுப் பதிவு. மல்லியப்பு சந்தி திலகரின் இந்தப்பதிவு  விறு விறுப்பாக உள்ளது. மலையகம்,  வன்னி, யாழ்ப்பாணம் என்று முக்கோணத்தில்  தான்பட்ட அவஸ்தைகளை ஆற்றொழுக் காகத்தந்துள்ளார்.பெற்றோரின் தூரநோக்கில் மொழி மாறிப்படித்ததை சுவைப்படுத்தி யுள்ளார்.
வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்  மலரன்பன். சுதர்மமகாராஜன் கேட்ட கேள்விகளுக்கு உண்மையைக் கூறி  மலையக அறிஞர்களின்  மாணவர்களின் போக்கை வெளிப்படுத்தியுள்ளார்.வாசிப்பின் அவசியத்தை விரிவாக்கியுள்ளார்.இலக்கிய உலகில் உயரத்தில் இருந்த மாத்தளை இன்று நலிவுற்றிருப்பதை எண்ணி கவ லைப்படுகிறார். என்றாலும் மீண்டும் பழைய நிலைக்கு வருவோம் என்று நம்பிக்கை யுடன் கூறுகிறார்.

பதுளை சேனாதிராஜா, மு.சிவலிங்கம், அல் அஹுமத், மொழிவரதன், சுதர்மமகா ராஜன், திண்ணனூரான் ஆகியோரின் சிறு கதைகளும் கெ.ஜெ. பபியான், நேரு, கருணாநிதி, மு.கீர்த்தியன், எஸ்.ப. பாலமுருகன், எஸ் திலகவதி, சு.தவச்செல்வன், சண்முகம் சிவகுமார், வே.தினகரன், சுமுரளிதரன், கிசோக்குமார், ஜெயதர்மன் ஆகியோரின் கவிதைகளும் இதில் உள்ளன.
அல் அசோமட் பற்றி சாரல் நாடனும் கவிஞர்.குறிஞ்சித் தென்னவன் பற்றி அந்தனி ஜீவாவும் எழுதியுள்ளனர். 
சூரன்
சுடர் ஒளி

26/12/13

No comments: