திரும்பிப்பார்க்கின்றேன் 18
இசைத்தமிழ் ஆய்வில் ஈடுபட்ட இனிய நண்பன் ராஜ ஸ்ரீகாந்தன்
முருகபூபதி
“நேற்று எம்மிடம் இல்லை, நாளை எப்படியோ தெரியாது. ஆனால், கைவசம் இருப்பது ‘இன்று’. இன்று இப்படி ஒரு பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நெருங்கிய இலக்கிய நண்பர்களிடம் ஆலோசித்துவிட்டே பொறுப்பேற்கிறேன்.”
ராஜ ஸ்ரீகாந்தன் - தினகரன் பிரதம ஆசிரியர் பதவியை ஏற்றவேளையில் தொலைபேசியில் நிதானமாகச் சொன்ன அந்த வார்த்தைகள் எவ்வளவு தீர்க்கதரிசனமானவை என்பதை – அவர் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டதன் பின்புதான் புரிந்து கொள்ள முடிந்தது.
லேக்ஹவுஸ் எனப்படும் ஏரிக்கரை இல்லத்திலிருந்து மும்மொழிகளிலும் பத்திரிகைகள் வெளியானாலும் தினகரன் பத்திரிகைக்கெனவும் தனிவரலாறு உள்ளது. எட்டு தசாப்தங்களுக்கு (80 ஆண்டுகள்)
முன்பு விஜேவர்தனாவால் சிங்கள ஆங்கில பத்திரிகைகளுடன் உதயமானதுதான் தினகரன்.
இதில் பிரதம ஆசிரியர்களாக பணியாற்றியவர்களில் நாதன், கைலாசபதி, சிவகுருநாதன் ஆகியோருடனும் அவர்களுக்குப்பின்னர் ஆசிரியர்களாக பணியாற்றிய ராஜஸ்ரீகாந்தன் மற்றும் சிவா சுப்பிரமணியம் தற்பொழுது பணியாற்றும் தில்லைநாதன் ஆகியோருடனும் எனக்கு நேரடிப்பழக்கமிருந்தது.
நாதன் பின்னர் குணசேனா பதிப்பகத்தின் தந்தி மாலை இதழ் ஆசிரியரானார். கைலாசபதி பல்கலைக்கழக பேராசிரியரானார். சிவகுருநாதன் சட்டத்தரணியான பின்னரும் தொடர்ந்து பணியாற்றி ஓய்வுபெற்றார். அரசாங்க ஊழியராகவிருந்து தினகரனுக்கு வந்த சிவா சுப்பிரமணியம் ராஜஸ்ரீகாந்தனுக்குப்பின்னர் ஆசிரியராகி சில அரசாங்க அமைச்சர்களின் அழுத்தங்களை பொறுக்கமுடியாமல் பதவியைவிட்டு ஒதுங்கினார். ராஜஸ்ரீகாந்தனோ யூ என் .பி.
அரசு (ரணில் தலைமையில்)
பதவிக்கு வந்ததும் பழிவாங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பதவிக்கு வரும் ஆட்சியாளர்களை அனுசரித்துப்போனால்தான் ஆசனத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். எனவே தினகரனுக்கு இப்படியும் ஒரு வரலாறு இருக்கிறது
லேக்ஹவுஸ் நிறுவனத்தை ஸ்ரீமாவின் அரசு
1970 களில் அரசுடமையாக்கியதும் அதன் போக்கு அரசுசார்பாகவே மாறிவிட்டது.
யூ.என்.பி.
ஆட்சியிலிருந்தால் அதன் கொள்கைகளை லேக்ஹவுஸ் குழும இதழ்கள் பிரதிபலிக்கும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியிலிருந்தால் அதன்
கொள்கைகளை பிரதிபலிக்கும். அதேபோன்று - தற்காலத்தில் மகிந்தரின் ஆட்சியில் அவரது மகிந்த சிந்தனையை பிரதிபலிக்கின்றன லேக்ஹவுஸ் இதழ்கள்.
ஆட்சிகள் மாறும்பொழுது லேக்ஹவுஸ் வெளியீடுகளின் பிரதம ஆசிரியர்களினது ஆசனமும் ஆட்டம் கண்டுவிடும்.
நானறிந்த வரையில் தொடர்ச்சியாக சுமார் 34 வருடங்கள் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தபோதிலும் எந்தவொரு நாட்டுக்கும் பணிநிமித்தம் சுற்றுலா செல்லாமல் தனது ஆசனத்தை தக்கவைத்துக்கொண்டவர் சிவகுருநாதன் மாத்திரமே. அவர் வெளியே அந்நிய நாட்டுக்குப் புறப்பட்டால் அந்த ஆசனத்தை வேறு எவரும் கைப்பற்றிவிடுவார்கள் என்ற பயம் அவருக்கிருந்ததாகவும் பத்திரிகை உலகில் பலர் பேசிக்கொண்டதை அறிவேன். பாவம் அவர். வெளிநாட்டுப்பயணங்களையே தவிர்த்து வாழ்ந்தார்.
ராஜஸ்ரீகாந்தனுக்கு சந்திரிகா குமரணதுங்காவின் ஆட்சிக்காலத்தில் தினகரன் பிரதம ஆசிரியர் பதவி கிடைத்தது. அதனை அவர் பொறுப்பேற்றபொழுது
தொலைபேசி ஊடாக வாழ்த்துதெரிவித்தேன். “ ஆட்சி மாறினால் ஆசனமும் பறிபோய்விடுமே..."
என்ற எனது நியாயமான கவலையை அவரிடம் சொன்னபொழுதுதான் அவர் இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட கருத்தை வெகு நிதானமாகச் சொன்னார்.
அவரிடம் நான் கற்றுக் கொண்ட குணவியல்பு நிதானம்.
அந்தப் பொறுப்பான உயர்ந்த பதவி அவருக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தில் அவருக்கிருந்த அதே நிதானம் - பதவியிலிருந்து விலக்கப்பட்டதன் பின்பும் - நிலைத்திருந்தது.
பாராளுமன்றில் யூ.என்.பி. பதவியேற்று ஆட்சி மாறியபின்பு அவரது பதவி பறிபோனது. எனினும் ஜனாதிபதியாக பதவியிலிருந்தார். சந்திரிக்கா. ராஜஸ்ரீகாந்தன் மறைந்தவேளையில் அனுதாபச்செய்தியும் மலர்வளையமும் அனுப்பினார் சந்திரிக்கா. அத்துடன் ராஜஸ்ரீகாந்தனின் இரண்டாவது புதல்வி அனோஜாவுக்கும் தினகரனில் பத்திரிகையாளர் பணியும் கிடைத்தது. அனோஜா தற்பொழுது தமது கணவருடன் வெளிநாடொன்றில் வாழ்கிறார். மூத்தமகள் அபர்ணா ஆசிரியப்பணியில் ஈடுபட்டவாறு தமது கணவருடன் தாயாரின் அருகாமையில் கொழும்பில் வசிக்கிறார்.
ராஜஸ்ரீகாந்தனின் நிதானத்திலிருந்து நாம் இராமாயணக் காட்சியொன்றை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
இராமனை காட்டுக்குப் போ – எனச் சொன்ன போது இராமன் பதட்டமடையவில்லையாம்.
ராஜ ஸ்ரீகாந்தனை லேக்ஹவுஸ் நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பியபோதும் பதட்டமடையாமல் - எனக்கு நிதானமாகவே கடிதம் எழுதினார். அவர் எனக்கு எழுதிய கடிதங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றைத்தான் அவர் மறைந்த பின்பு எழுதிய ‘ராஜ ஸ்ரீகாந்தன் நினைவுகள்’
நூலில் பதிவு செய்துள்ளேன்.
இன்றும் எனது அவுஸ்திரேலியா இல்லத்தின் நூலகத்தில் அவரது முத்து முத்தான எழுத்துக்கள் - பாதுகாப்பாக - அவர் இப்பொழுதும் என்னுடனேயே இருக்கிறார் என்ற குருட்டுணர்வைத் தந்து கொண்டிருக்கின்றன.
நவீன தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் என நாம் கருதும் புதுமைப்பித்தன் -
மறைந்த 30-06-1949 ஆம் திகதியன்றுதான் ராஜ ஸ்ரீகாந்தன் பிறந்தார்.
கொழும்பில் அவர் இறக்கும்போது 56 வயது பிறந்திருக்கவில்லை.
1970 இற்குப் பின்புதான் இவரும் என்னைப் போன்று எழுத்துலகில் பிரவேசித்திருக்க வேண்டும். மல்லிகையில் இவரது எழுத்துக்களைப்
பார்த்துவிட்டு சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் இருந்தேன்.
எப்பொழுதும் யாத்ரீகனாக சுற்றிக் கொண்டிருக்கும்
எனக்கு இவரது அறிமுகம் அவர் பிறந்த பனந்தோப்புகள் சூழ்ந்த வடமராட்சி ‘வதிரி’யிலேயே கிடைத்தது. அவரை எனக்கு அறிமுகப்படுத்தியர் நண்பர் தெணியான்.
சுமார் மூன்று தசாப்தங்கள் - அவர் மறையும் வரையில் - நான் புலம்பெயர்ந்த பின்பும் எந்தத் தங்குதடையும் இன்றி தொடர்புகள் நெருக்கமாகவே இருந்தன. அந்த நட்புறவில் அந்நியோன்னியமும் சகோதர வாஞ்சையும் இருந்தமையால்தான் அவரது மறைவுச் செய்தி கேட்டு தாங்கும் வலிமையற்றவனாகிப் போன நான் - அந்த வலி போக்குவதற்காக அந்த ‘நினைவுகள்’
நூலை எழுதினேன்.
இலங்கையில் - கொழும்பிலும் - வடமராட்சியிலும் அந்த நூலுக்கு விழாவெடுத்து அவரைப்பற்றிய இலக்கியப் பதிவை பகிரங்கப்படுத்தினேன். அவுஸ்திரேலியாவிலும் அந்த நூல் அறிமுகப்படுத்தப்பட்டது. மெல்பனில் நண்பர் பாடும்மீன் ஸ்ரீகந்தராசா அந்த நூலை அறிமுகப்படுத்தினார்.
ராஜஸ்ரீகாந்தன் பற்றிய எனது கட்டுரையும் இடம்பெற்ற நூலான லண்டனில் வதியும் முல்லை அமுதன் தொகுத்த இலக்கியப்பூக்கள் நூலை மெல்பனில் 2009 இல் நடந்த ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் அறிமுகப்படுத்தியதும் ஸ்ரீகந்தராசா அவர்கள்தான். எல்லாம் நேற்று நடந்த தற்செயல் நிகழ்ச்சிகள் போன்று மனதில் பசுமையாக வாழ்கிறது.
எனது
நூலைப் படித்த ஒரு
விமர்சகர் - இலங்கைப் பத்திரிகையொன்றில் என்னையும் ராஜஸ்ரீகாந்தனையும் இலக்கிய இரட்டையர்கள் என்றும் விதந்து எழுதியிருந்தார்.
சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், இதழியல், ஆய்வு என இவரது எழுத்துப்பணி விரிவாக்கம் கொண்டது.
காலச்சாளரம் -
1994 இல் வெளியாகிறது. அழகு சுப்பிரமணியத்தின் ஆங்கிலக் கதைகளை மொழிபெயர்த்து ‘நீதிபதியின் மகன்’ 1999 இல் வெளியிடுகிறார். சூரன் சுயசரிதையை
2004
இல் பதிப்பிக்கின்றார்.
அழகு சுப்பிரமணியத்தின் மேலும் சில கதைகளை மொழிபெயர்த்து வைத்திருந்தார். ஆனால் வெளியிட முடியாத பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறார்.
“முத்தமிழில் ஒரு கூறாகிய இயற்தமிழில் மட்டும் நாம் அக்கறை செலுத்துகிறோம். இசைத் தமிழ் முற்றாகக் கைவிடப்பட்ட அனாதையாகிவிட்டது. தமிழர் கலாசாரத்தின் பிரதான கூறாகிய இசைத்தமிழ் முழுமையாக மீளக்கொணரப்பட வேண்டும்” என்று எனக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிட்டிருந்தார். அவரது எழுத்துப்பணியின் அடுத்த கட்டம் இசைத்தமிழ் குறித்த ஆய்வாகத் தொடங்கியது. ஒரு சில கட்டுரைகளும் எழுதினார்.
நோயின் உபாதையிலிருந்து அவர் மீண்டிருப்பாரேயானால் எமக்கு இசைத்தமிழ் குறித்த சிறந்த ஆய்வுநூலொன்று வரவாகியிருக்கும்.
வடமராட்சியில் பனந்தோப்புகளுக்கிடையே
நடமாடித்திரிந்த அவருக்கு – கொழும்பில் சோவியத் தூதுவராலய தகவல் பிரிவில் வேலை கிடைத்தது. இங்கு வந்த பின்பு கட்டிடக் காடுகளுக்கிடையே வாழத்தலைப்பாட்டார். கொழும்பில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உற்சாகமாக இயங்கிய காலப்பகுதியில்
ராஜ ஸ்ரீகாந்தன் - இ.மு.எ.ச.வின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரனுக்கு வலதுகரமாகவே விளங்கினார்.
கொழும்பில் மாதாந்த இலக்கியக்கருத்தரங்கு
சீராக நடந்த வேளைகளில் அழைப்புகளை அனுப்பும் பணிகளில் பெரும்பாலும் நாமிருவரும் ஈடுபடுவோம். பாரதி நூற்றாண்டு விழாப்பணிகளை உற்சாகமாக மேற்கொண்டோம், எமது இந்த உற்சாகமெல்லாம் - 1983 ஜுலை வரையில் நீடித்தது.
இனவாத சங்காரம் - எம்மையெல்லாம் சிதறடித்தது. மீண்டும் உயிர்ப்புடன் எழுந்தோம். ஆள்பலம், பணபலம், அரசியல்பலம் எதுவுமின்றி ஆத்மபலத்துடன் அவர் அயராமல் தொடர்ந்து இயங்கினார்.
தனது எட்டு வயது வரையில், பள்ளிக்கூடச் சூரப்பு என்று மட்டுமே தெரிந்து வைத்திருந்த வதிரிப்பெரியார் சூரன் சுயசரிதைக்கான பதிப்புரையை எழுதினார். இந் நூலை பதிப்பிக்கு முன்பு அவர் மேற்கொண்ட தேடலை பேராசிரியர் சிவத்தம்பி தமது
நீண்டதொரு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். சூரன் சுயசரிதையை பதிப்பித்ததன் மூலம் - ராஜ ஸ்ரீகாந்தன் மகத்தான சேவையை தமிழ் சமுதாயத்திற்கு செய்துள்ளார் என்றே கருத
முடிகிறது. இந்த அரிய நூல் சிலரைச் சுட்டிருக்கவும் கூடும். உண்மைகள் சுடும்தானே!
தானும் உற்சாகமுடன் இயங்கி மற்றவர்களையும் உற்சாகமுடன் இயங்கச் செய்யும் ஆற்றல் அவருக்கே உரித்தானது. அவர் இறப்பதற்கு சரியாக ஒரு
வருடத்திற்கு முன்பு – எனக்கு மாரடைப்பு வந்து சத்திரசிகிச்சைக்குப்பின்னர் வீட்டில் ஓய்வாக இருந்தேன்.
அவரிடமிருந்து ஒரு கடிதம்
வருகிறது.
அதில் எழுதுகிறார்:-
மனைவி மக்கள் அனைவருக்கும் இப்பொழுது நீங்கள் குழந்தையாகியிருப்பீர்கள். ஓயாது அர்ப்பணிப்புடன் சேவை செய்பவர்களுக்கு ஓய்வு கொடுக்கத்தான் வருத்தங்கள் வருகின்றன. படுக்கையிலிருந்துகொண்டே, விசாவோ, விமான ரிக்கற்ரோ, சுங்க அதிகாரிகளின் கெடுபிடிகளோ, அவுஸ்திரேலியாவின் நடுங்கும் குளிரோ யாழ்ப்பாணத்தின் சுட்டெரிக்கும் வெய்யிலோ இல்லாமல் நினைத்தவுடன் கணநேரத்தில் சென்று வாருங்கள்.
உயிரோடிருப்பவர்களுடன் மட்டுமன்றி உயிரோடில்லாதவர்களுடனும் உரையாடி மகிழுங்கள். வைத்தியசாலைகள் கற்றுத்தந்த அற்புதமான பாடங்கள்:
வாசிக்காதே, யோசிக்காதே, பேசாதே நடக்காதே என்ற வைத்திய நிபுணர்களின் மருத்துவத்துறை ஆணைகளுக்கு அடிபணிந்து ஒரு பத்திரிகையாளன்,
எழுத்தாளன் மட்டுமே வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடிய அற்புதமான செயற்பாடுகள் இவை.
கண்களை மூடும்போதும் மீண்டும் விழிக்கும் போதும் “எனது உடலுறுப்புகள் யாவும் சீராகச் செயற்படுகின்றன. நான் ஆரோக்கியமானவனாக இருக்கிறேன்” போன்ற Auto Suggestions களை மீண்டும் மீண்டும் பலமுறை சொல்லிக் கொள்ளுங்கள்.
இவ்வகையான Positive Commands உளவியல் ரீதியாக பிரமிக்கத்தக்க பலன்களை எனக்குத் தந்தன. உங்களுக்கும் கட்டாயம் தரும்.
நீரிழிவு, ஈரல் அழற்சி, கசம், மஞ்சட் காமாலை, சிக்கலான இருதய நோய்கள் என்பனவற்றின் கொடூரத் தாக்கங்களிலிருந்து மருத்துவத்தால் மட்டும் மீட்சி பெற முடியாது.
தனியார் மருத்துவமனையில் என்னைப் பார்வையிட வந்த Daily News Editor ஜெஃப் விஜயசிங்க கூறிச் சென்ற வார்த்தைகள்:-
“மச்சான் நீ
தண்ணியடிக்கிறதில்லை, சிகரட் குடிக்கிறதில்லை, சரக்குச் சுத்திறதில்லை, பெரீசாச் சாப்பிடறதில்லை,
பிறகேன் நீ பிழைக்க வேணும். இங்கேயே செத்துப் போயிடு” – மிகப்பலரின் பார்வைகளில் இவைகள்தான் வாழ்க்கையின் சுகந்தங்களாக உள்ளன.
மேலே
நான் குறிப்பிட்டிருக்கும்
ராஜ ஸ்ரீகாந்தனின் கடிதத்தின் வரிகள் - அவர் அருகிலிருந்து சொல்லுமாப் போன்று அமைந்துள்ளன.
இவ்வாறு நெஞ்சுக்கு நெருக்கமாக - இதமாக எத்தனை பேரால் எழுத முடியும்?
வழிகாட்டிகளுக்கு தன் வழி தெரிவதில்லை. வழிகாட்டும் கைகாட்டி மரம், அந்த வழியில் செல்வதுமில்லை.
ராஜ ஸ்ரீகாந்தன் நோயுற்ற சமயம் அவருக்கு நான் இப்படி எழுதவில்லையே என்ற குற்றவுணர்வு என்னை வாட்டுகிறது. சுமார் முப்பது ஆண்டுகாலம் என்னோடு கூட வந்த அவர் என்னை முந்திக் கொண்டு போய்விட்டார்.
அருகே பார்க்கிறேன் அவர் இல்லை. அவரது எழுத்துக்கள் என்னருகே நினைவுகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
இவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள். ஆனால் தனக்கு மூன்று பிள்ளைகள் என்று தனது மனைவியையும் சேர்த்தே வேடிக்கையாகச்சொல்வார். இலங்கைசெல்லும் சந்தர்ப்பங்களில் அவரது மனைவி பிள்ளைகளை கொழும்பு கொட்டாஞ்சேனை இல்லத்துக்குச்சென்று சந்திக்கத்தவறமாட்டேன். அங்கே ராஜஸ்ரீகாந்தன் உருவப்படமாக சுவரிலிருந்தவாறு ' வாரும் நண்பரே... வாரும்..." என அழைப்பதுபோன்ற குருட்டுணர்வைத்தரும்.
அந்தப்படத்தை தொட்டுவணங்கியபின்னரே அங்கு ஆசனத்தில் அமருவேன். அந்த இல்லத்தில் பத்திரிகையாளரும் வடமராட்சி சூரனின் (தேவரையாழி இந்துக்கல்லூரியின் ஸ்தாபகர்) பேரனுமாகிய நண்பர் ரவிவர்மாவின் குடும்பத்தினரும் வசிக்கின்றனர்.
ராஜஸ்ரீகாந்தனை தெணியான் அறிமுகப்படுத்தியதுபோன்றே ராஜஸ்ரீகாந்தன் எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள்தான் பத்திரிகையாளர் ரவிவர்மாவும் எழுத்தாளர் வதிரி சி. ரவீந்திரனும்.
இவ்வாறு நட்பு வட்டாரங்கள் வளர்ந்து பெருகி அவர்களுடனான நினைவுகளை இரைமீட்டும் இயல்பை எனக்குள் விதைத்தவர் - வளர்த்தவர் ராஜஸ்ரீகாந்தன். அந்த இயல்பைத்தான் -
உயிரோடிருப்பவர்களுடன் மட்டுமன்றி உயிரோடில்லாதவர்களுடனும் உரையாடி மகிழுங்கள். வைத்தியசாலைகள் கற்றுத்தந்த அற்புதமான பாடங்கள் என்ற அவரது கடித வரிகளும் - எனக்குள் வளர்த்தன.
திரும்பிப்பார்க்கிறேன் தொடருக்கு ராஜஸ்ரீகாந்தன் மூல ஊற்றாகவிருந்திருக்கலாமோ எனவும் யோசிக்கின்றேன்.
No comments:
Post a Comment