Thursday, December 26, 2013

காங்கிரஸை கைவிட்ட கருணாநிதி


இந்தியப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தமிழக அரசியல் சூடு பிடித்துள்ளது.இரண்டு இந்தியப்  பொதுத்தேர்தலிலும்  இரண்டு தமிழகச் சட்டசபைத் தேர்தல்களிலும் கை பிடித்து சூரிய உதயம் கண்ட காங்கிரஸ் கட்சியை கைவிட்டது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக்கழக பொதுக் குழு கூடியபோது வழமை போன்று முடிவெடுக்காது கலைந்து விடும் என்று எதிர் பார்க்கப்பட்டது.காங்கிரஸ் கட்சியை மிக மோசமாக விமர்சித்து  நன்றிகெட்ட காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார் கருணாநிதி.

கருணாநிதியின் உறுதியான முடிவால் திராவிட முன்னேற்றக்கழக   இரண்டாம் கட்டத் தலைவர்களும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகமடைந்தனர்.பாரதீய ஜனதாக்கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கருணாநிதி அறிவித்ததும் அனைவரும் சோர்ந்து போனார்கள். இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்தால்தான் மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்க முடியும் என்பதை சகல தொண்டர்களும் அறிவார்கள். அடுத்த பிரதமர்  மோடி என்ற எதிர்பார்ப்பு இருக்கையில் பாரதீய ஜனதாக்கட்சியையும் கருணாநிதி தவிர்த்ததை கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
2 ஜீ  ஊழலில் கனிமொழியையும் ஆர்.ராசாவையும் குற்றவாளியாக்கியதை காரணம் காட்டியே கூட்டணி உறவு முறிக்கப்பட்டது. இது போன்ற அதிரடியான முடிவை கருணாநிதி முன்னைய காலங் களில் எடுத்ததில்லை.ஆட்சி முடியும் வரை கூட்டணியில் ஒட்டி இருந்து  ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிந்தபின் கூட்டணியை கைவிடுபவர் கருணாநிதி. இரண்டு தடவை மத்தியில் தொடர்ச்சியாக ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அடுத்த தேர்தலில் மண்ணைக் கெளவும்.  என்பதை உணர்ந்து கொண்ட கருணாநிதி அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

கருணாநிதியின் இந்த முடிவால் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர்  அதிர்ந்து  போயுள்ளனர்.கருணாநிதியைப் பிடிக்காக ஞானதேசிகன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை  இவர்கள் விரும்பவில்லை. கூட்டணி சுமுகமான முறையில் இருக்கும் போதே திராவிட முன்னேற்றக்கழகத்தையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர் சித்து  வந்த இவர் கள் இப்போது எல்லை மீறி விமர்சனம் செய்கின்றனர்.
கருணாநிதியுடனான தொடர்பு இறுக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கருணாநிதியின் முடிவைப் பற்றி எவ்வித விமர்சனத்தையும் இவர்கள்  வெளியிடவில்லை. காங்கிரஸ் தலைமைப்பீடமும் இது பற்றி மூச்சுவிடவில்லை. மன்மோகன், சோனியா ஆகியோர் கருணாநிதி மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர். ராகுல் காந்நி, கருணாநிதியையும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களையும் மதிப்பதில்லை. அவருக்கு இச்செய்தி சந்தோசமாதாகவே இருக்கும்.

வட மாநிலங்களில் வலுவிழந்துள்ள  காங்கிரஸ், தென்மாநிலங்களிலும் தனது பிடியைக் கைவிட்டு வருகின்றது.காலத்தின் தேவை காரணமாக காங்கிரஸுடன் ஒட்டி இருந்த கருணாநிதி  காலம், நேரம் அறிந்து காங்கிரஸை நடுத்தெருவில் விட்டுள்ளார். கூட்டணி இல்லாது தனித்து தேர்தலில் நின்றால்    காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாது.காங்கிரஸ் கட்சி யுடன் இருந்தால் அரசியல் அநாதைகளாகி விடுவோம் என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் நன்கு உணர்ந்துள்ளனர்.அரசியலில் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்றால் காங்கிரஸில் இருந்து வெளியேறும் முடிவை சிலர் எடுக்கக்கூடும்.

காங்கிரஸ் கட்சியுடன் முரண்பட்டுக் கொண்டு 1996 ஆம் ஆண்டு மூப்பனார்,  ப..சிதம்பரம் ஆகியோர் வெளியேறியதைப் போன்று சிலர் அக்கட்சியில் இருந்து வெளியேறும்  நிலை ஏற்படும். காங்கிரஸ் பலவீனப் படவேண்டும். அல்லது உடையவே வேண்டும் என்பதே கருணாநிதியின் விருப்பம்.  பாரதீய ஜனதாக்கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று தனது முடிவை கட்சியில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்த கருணாநிதி மறுநாள் பாரதீய ஜனதாக்கட்சியுடன் சேர்வதற்கான கதவைத்திறந்து விட்டார்.
மோடி,  அத்வானி ஆகிய இருவருமே  ஜெயலலிதாவுடன்  மிகவும்  நெருக்கமான தலைவர்கள். பிரதமர் போட்டியில் ஜெயலலிதா இருப்பதனால் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வதை மோடி விரும்பவில்லை. கருணாநிதியுடன் கூட்டு சேர்வதற்கு மோடி விரும்பக்கூடும்.  ஜெயலலிதாவின்  ஆதரவுடன் ஆட்சியமைத்து  ஒரு வருடத்துடன் கவிழ்ந்த அனுபவம்  பாரதீய ஜனதாக் கட்சிக்கு உண்டு. அப்போது கருணாநிதிதான் பாரதீய ஜனதாக்கட்சிக்கு தோள் கொடுத்தார். ஜெயலலிதாவைப் போல் அவசரப்பட்ட முடிவு எடுக்காது  சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்து எதிரியை குப்புற வீழ்த்துவதுதான் கருணாநிதியின் அரசியல் தந்திரம்.

அரசியல் உச்சாணிக் கொப்பில் காங்கி ரஸை தூக்கிவைத்த கருணாநிதி பொறுத்த நேரத்தில் கைவிட்டுவிட்டார். காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு தமிழகத்தின் சிறிய கட்சிகள் கூட தயாராக இல்லை.ஆகையால் தமிழகத்தில் காங்கிரஸின்  எதிர்காலம் சூனியமாகியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் தலை எடுக்கக்கூடாது என்பதே தமிழ் உணர்வாளர்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை கருணாநிதி நிறைவேற்றி உள்ளார்.

திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் ஆகியவை இல்லாத கட்சிகளின் தலைமை யை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்பது  காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனின் ஆதங்கம். அதற்காக பாரதீய ஜனதாக்கட்சியின் தலைமையில் பலமான கூட்டணியை உருவாக்க முயற்சி செய்கிறார். பாரதீய ஜனதாக்கட்சியுடன் வைகோ இணைவார்  என்று செய்திகள் வெளிவந்தன. இதனை வைகோவும் பாரதீய ஜனதாக்கட்சித் தலைவர்களும் ஏற்கவும் இல்லை! மறுக்கவும் இல்லை.
கருணாநிதியாலும், ஜெயலலிதாவாலும் ஓரம் கட்டப்பட்ட வைகோவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அடுத்த இந்தியப்  பொதுத் தேர்தலில்  வெற்றி பெற்றால் தான் உறுதியாக இருக்கும். ஆகையால்தான் தமிழகக் கட்சித் தலைவர்களை நம்பாது டில்லித் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது.  இலங்கை அரசாங்கத்தின் நண்பனும் விடுதலைப் புலிகளின்  எதிரியுமான சுப்பரமணியன் சுவாமி பாரதீய ஜனதாக்கட்சியில் உள்ளார். இந் நிலையில் வைகோவின் முடிவு ஆச்சரியத்தை அளிக்கிறது.
வைகோவின் மீது பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களுக்கு நம்பிக்கை உள்ளது.வைகோவை நம்பாத சுப்பரமணியன் சுவாமி உள்ள கட்சியில் வைகோவின் பரிந்துரைகள் ஏற்கப்படுமா என்ற சந்தேகம் உள்ளது.பாரதீய ஜனதாக்கட்சியில் வைகோ இணைந்தால் மிகச்சிறந்த ஒரு பிரசார பீரங்கி அக்கட்சிக்கு கிடைத்துவிடும்.

திராவிட  கழகங்களுடன் கூட்டணி இல்லை. தனிவழி  என்று புலம்பிய டாக்டர். ராமதாஸையும் தமிழருவி மணியன்  தனது வழிக்குக் கொண்டு வந்துள்ளார்.பாரதீய ஜனதாக் கூட்டணியில்  பாட்டாளி மக்கள் கட்சி இணையும் என்கிறார்.தமிழருவி மணியன். இக் கூட்ட ணியில்  விஜயகாந்தையும் இணைக்கும் திட்டம் இவரிடம் உள்ளது. அதற்காக விஜயகாந்துடனும் ஆலோசனை செய்துள்ளார். ஜெயலலிதாவால் குப்புற வீழ்த்தப்பட்ட  விஜயகாந்த் மேலே வருவதற்கு ஏணி ஒன்று தேவைப்படுகிறது.
விஜயகாந்தின் கட்சியில் சேர்ந்த ஏழு தமிழக சட்டசபை உறுப்பனர்கள் ஜெயலலிதாவிடம் சரணடைந்துள்ளனர். விஜயகாந்தின் கட்சியின் சேர்ந்தவர்கள் எம்.பியானால் அணி மாறமாட்டார்கள். என்பதற்கு உத்தரவாதம் இல்லை.தொங்கு பாராளுமன்றம் என்ற நிலை ஏற்பட்டால் அமைச்சராகும் ஆசையில் அவர்கள் தடம் மாறிவிடும் சந்தர்ப்பம் உள்ளது.

பாரதீய ஜனதாக்கட்சி ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் ஒன்று சேர்ந்தால் 30 சதவீத வாக்கைப் பெறலாம் என்று தமிழருவி மணியன் கணக்கு காட்டுகிறார்.சதவீதக் கணக்குகள்  தேர்தல் சமயங்களில் பொய்த்துப் போவதுண்டு. தமிழக சட்ட மன்றத் தேர்தலில்  திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான அலை தான்  வெற்றி பெற்றது.அதே போன்றுதான் இப்போது காங்கிரஸுக்கு எதிரான அலைதான் மோடி அலையாக உருவெடுத்துள்ளது.இந்த அலையில் சங்கமமாக வைகோ, விஜயகாந்த்,டாக்டர் ராமதாஸ் ஆகியோர் தயாராகி விட்டதாக தமிழருவி மணியன் கூறுகிறார். ஆனால்,மத்தியில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் இதற்கு இன்னமும் அங்கீகாரம்  வழங்க வில்லை.அது தமிழருவி மணியனின் தனிமனித  முயற்சி என்கிறார்கள்.
பாரதீய ஜனதாக் கட்சியை ஆட்சிபீடத்தில் ஏற்றும் கனவில் சோ உள்ளார்.வைகோ,  டாக்டர். ராமதாஸ் ஆகிய இருவரையும்  சோவுக்குப் பிடிக்காது. விஜயகாந்தின் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை.கடைசித் நேரத்தில் சோ களமிறங்கினால் கருணா நிதியின் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசும்.

வர்மா 
சுடர் ஒளி 22/12/13

No comments: