Tuesday, October 17, 2017

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி


இலங்கைக்கு எதிராக துபாயில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.   துபாயில் நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 83 ஓட்டங்களில்  வெற்றி பெற்றது. இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  பாகிஸ்தான் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பக்கர் ஜமான் 11 ஓட்டங்களிலும், அஹமது ஷெசாத் 8  ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து பாபர் அசாமும் முகமது ஹபீசும் களமிறங்கினர். ஹபீஸ் 8  ஓட்டங்களில் வெளியேறினார். அசாம் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில்  ஆட்டமிழந்தனர்.

சோயப் மாலிக் 11  ஓட்டங்களிலும் , சர்பராஸ் அகமது 5  ஓட்டங்களிலும், இமாத் வாசிம் 10  ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 27.3 ஓவர்களில் 101 ஒட்டங்களுக்கு 6 விக்கெட்களை  இழந்து தடுமாறியது. இதையடுத்து அசாமுடன், ஷபாத் கான் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். சிறப்பாக விளையாடிய அசாம் சதம் அடித்தார். அவர் 101 ஒட்ட்டங்கள்  எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஹசன் அலி 7  ஓட்டங்களிலும், ருமன் ரயிஸ் ஓட்டம்  ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஷபாத் கான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52  ஓட்டங்களிலும் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை அணியின் லஹிரூ கமகே 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
  220 ஓட்டங்கள்  என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. 

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் டிக்வெல்லாவும், உபுல் தரங்காவும் களமிறங்கினர். பாகிஸ்தான் அணியினரின் பந்துவிச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டிக்வெல்ல்லா (3), குசல் மெண்டிஸ் (10), லஹிரூ திரிமன்னே (12), தினேஷ் சந்திமல் (2), மிலிந்தா சிரிவர்தனா (3), திசாரா பெரேரா (7), அகிலா தனஞ்ஜெயா (1) ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 28.1 ஓவரில்  7 விக்கெட்களை இழந்து  93 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.

இருப்பினும் இலங்கை அணி கப்டன் உபுல் தரங்கா நிலைத்துநின்று ஆடினார். அவருடன் ஜெஃப்ரி வண்டர்சே ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். தரங்கா அரைசதம் அடித்தார். வண்டர்சே 55 பந்துகளில் 22 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய சுரங்கா லக்மல் 2 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுடாகி வெளியேறினார். இதனால் இலங்கை அணி 172 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது.

மறுபுறம், சிறப்பாக விளையாடிய தரங்கா சதம் அடித்தார். அவர் அணியை வெற்றி பெற செய்ய தனி ஆளாக போராடினார். இருப்பினும் மற்ற வீரர்கள் சரியாக விளையாடாததால் இலங்கை அணி 187 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தரங்கா 112 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

52 ஓட்டங்கள் எடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்திய பாகிஸ்தானின் ஷபாத் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணிக்கெதிரான ஐந்து  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  பாகிஸ்தான் அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.. இரு அணிகளுக்கிடையேயான கடைசி ஒருநாள் போட்டி அபுதாபியில்  நாளைக்கு  நடக்க உள்ளது.



No comments: