பூவரசடி என்ற அந்தக்
கிராமத்தில் உள்ள அனைவரும் கறுத்தானின் வீட்டில் குழுமி இருந்தனர். அவர்கள்
அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். பூவரசடியின் நல்ல காரியங்கள் அனைத்தும்
கறுத்தானின் வீட்டில் தான் அறிமுகமாகின. கறுத்தானின் அயராத முயற்சியினால்தான்
கிராமத்து மக்கள் அனைவரும் தலை நிமிந்து நிற்கின்றனர். பூவரசடியைப் பற்றி
பத்திரிகைகளில் செய்திகளும் படங்களும் பிரசுரமாவதற்கு கறுத்தானின் சிந்தனைதான் முக்கிய காரணம்.
சுமார் முப்பது
குடும்பங்கள் வசிக்கும் அந்தக் கிராமத்தின் தலைவராக கறுத்தானையே அனைவரும் கருதுகிறார்கள். பூவரச
மரங்கள் சூழ இருப்பதால் அந்தக்கிராமத்தை பூவரசடி என அழைக்கிறார்கள். ஆனால்,ஒரு
கிராமத்துக்குரிய அடிப்படை வசதிகள் எவையும் அங்கு இல்லை.அங்குள்ள மக்கள் அனைவரும்
கூலி வேலை செய்கிறார்கள். அங்குள்ளவர்கள் சிறு வயதிலேயே கூலி வேலைக்குப் போவதால்
கல்வியைப்பற்றிய அக்கறை அவர்களுக்கு
இருக்கவில்லை. படிக்கவேண்டும் என்ற ஆர்வம், படிக்கவில்லை என்ற கவலை எதுவுமே
அவர்களுக்கு இல்லை.
படித்தவர்களுக்குக்
கிடைக்கும் மதிப்பையும் மரியாதையையும் கண்ட கறுத்தான் தனது மகனை கூலி வேலைக்கு
விடாமல் அருகில் உள்ள கிராமத்துப்
பாடசாலைக்கு அனுப்பினார். தனது வயதுச் சிறுவர்கள் அனைவரும் கூலி
வேலைக்குப்போக தான் மட்டும் படிக்கப்போவதை அவமானமாகக் கருதினான் கறுத்தானின் மகன்
கந்தன். பாடசாலையில் அவனை யாரும் மனிதனாகக் கருதவில்லை. அவனுடைய ஊரைப்
பற்றியும் அவனுடைய சமூகத்தைப்
பற்றியும் தரக் குறைவாகக் கதைத்தார்கள்.கறுத்தான் ,கந்தன் என்ற பெயர்களைக்
கேவலப்படுத்தினார்கள்.ஆசிரியர்களும் கந்தன் மீது அக்கறை காட்டவில்லை.
பாடசாலை வாழ்க்கை
நரகலோகம் போல இருந்தது பாடசாலைக்குச் செல்லும் போதும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு
வரும்போதும் அழுதழுது அவனது கண்கள் சிவந்திருக்கும். கந்தன்படும் துயரத்தைக்கண்டு தாயார்
மனம் வெதும்பினார் கந்தனைப் படிக்கவிட
வேண்டாம். கூலி வேலைக்கு விடும்படி கணவன் கறுத்தானிடம் கெஞ்சினாள் அவளது
கெஞ்சல்களுக்கு கறுத்தானின் மனம் இரங்கவில்லை. விருப்பம் இல்லாமல் பாடசாலைக்குச்
செல்வதால் கந்தனால் படிப்பில் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை. பரீட்சையில்
கந்தன் எழுதிய விடைகள் தற்செயலாகச் சரியானதால் எல்லாப் படங்களிலும்
பத்துகுக்குறைவான புள்ளிகள் எடுத்து வகுப்பில் கடைசிப்பிள்ளையானான்.
தன்னால் படிக்க முடியவில்லை என்று கறுத்தான் கவலைப்படவில்லை.
இரண்டாம் தவணையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
பரீட்சையில் புள்ளிகள் அதிகமாகப் பெற்றான். மூன்றாம் தவணையில் அதிசயம் நிகழ்ந்தது. பன்னிரண்டாம்
பிள்ளையான கந்தன் வகுப்பேற்றம் செய்யப்பட்டான். கந்தனால் நம்பமுடியவில்லை. தான்
எதிர்பார்த்தது நடந்து விட்டதென தகப்பன் கறுத்தான் சந்தோஷப்பட்டான்.புலமைப்பரிசில் பரீட்சையில் கந்தன் சித்தியடைந்தபோது அவனுடைய
படத்துடன் பூவரசடி கிராமத்தைப் பற்றிய செய்திகள்
ஊடகங்களில் இடம் பிடித்தன. சின்ன வயதிலேயே கந்தனின் உயர் நிலையை எண்ணி வியந்த
பூவரசடிக் கிராமத்தில் உள்ளவர்கள் தமது பிள்ளைகளையும் கூலி வேலைக்கு அனுப்பாது
பாடசாலைக்கு அனுப்பினார்கள். இப்போது பூவரசடி கிராமத்துச் சிறுவர்கள் யாருமே கூலி
வேலைக்குச் செல்வதில்லை.
கந்தனைப் பார்த்து
ஏளனம் செய்த மாணவர்களும் அலட்சியம் செய்த ஆசிரியர்களும் அவனுடைய திறமையைப்
பார்த்து அதிசயித்தனர். கந்தனின் பல்கலைக்
கழகப் பிரவேசம் அந்த ஊருக்கு புதிய வெளிச்சத்தைக் கொடுத்தது. கந்தனைத் தொடர்ந்து
பூவரசடி கிராமச் சிறுவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் சாதனை செய்தனர்.
கந்தனுக்கு வேலை
கிடைத்ததால் பூவரசடிக் கிராமம் மகிழ்ச்சியில் திளைத்தது. கந்தனை வழி அனுப்புவதற்காக
அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் அங்கு கூடியிருக்கின்றனர். அழகான சற்று
விலை உயர்ந்த பேனையை கந்தனிடம் கொடுத்த கறுத்தான், அந்தப் பேனையால் முதன் முதலில்
கையெழுத்திட வேண்டும் எனக் கூறினான். கையெழுத்து வைக்கத் தெரியாத பரம்பரை என்ற
அவப்பெயரை நீக்கிய கந்தன் தகப்பனின்
வேண்டுகோளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தான்.
உயர் அதிகாரியின்
முன்னால் அமர்ந்திருந்தான் கந்தன். அவன் கொடுத்த ஆவணங்களைப் பார்த்தபின் சில
பத்திரங்களைக் கந்தனிடம் கொடுத்துத்தார். தகப்பன் கொடுத்த புதிய பேனையினால்
படிவங்களை நிரப்பிய கந்தன், கையெழுத்திடும் போது கண்கலங்கினான். கந்தனைப் பற்றி
ஏற்கெனவே அறிந்திருந்த அந்த அதிகாரி அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்து சில ஆலோசனைகளும் கூறினார். கந்தனை அழைத்துச்சென்ற அந்த உயர்
அதிகாரி அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு அவனை அறிமுகப்படுத்தினார். அறிமுகப்படலம் முடிந்தபின்னர்
கந்தனின் இருக்கையில் அவனை இருத்திவிட்டு அவர் தனது அறைக்குச் சென்றுவிட்டார்.
அந்த
அலுவலகத்துக்குப் புதியவரவான கந்தனுடன் அந்த அறையில் இருந்தவர்கள்
கதைத்துக்கொண்டிருந்தபோது உள்ளே வந்த ஒருவர்,
"சேர். நீங்கள்
தானே புதிசா வந்தவர்" என கந்தனைப் பார்த்துக் கேட்டார். கந்தன்
தலையாட்டினார்.
"சேர் .என்னுடை
ஒருக்கா காட் ரூம் வரை வரமுடியுமா?" என கந்தனிடம் கேட்டுவிட்டுப் பதிலை
எதிர்பர்க்காது சென்றான். கந்தன் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்.அலுவலக
வாயிலுக்குச்அவர் அங்குள்ள சுவரில்
பொருத்தப்பட்டிருந்த சிறு பெட்டியைக் காட்டி.
" சேர்
இதுதான் பிங்கர் பிரின்ற் மெஷின். நீங்கள்
உள்ளுக்கு வரேக்கையும் வெளியிலை போகேக்கையும் உங்கடை பெருவிரலை இதிலை பதியவேணும். இதை வைச்சுத்தான்
ரிஜிஸ்ரர் மாக் பண்ணுவினம். நேரம் பிந்தினால் நோபே விழும்" எனக்கூறிக்கொண்டே
அதில் இலக்கங்களை தெரிவுசெய்து கந்தனின் வலது கை பெருவிரலையும் இடது கை
பெருவிரலையும் மூன்று முறை பதிந்தார். கையெழுத்தை விடப் பெறுமதியானது
கைநாட்டுத்தான் என்பதை இலத்திரனியல் நிரூபித்துள்ளதை கந்தனால் உணர முடிந்தது.
கந்தன் தான் வேலை செய்யும்பகுதிக்குப் போகும்போது இடது கையால் பொக்கறைத் தடவிப்பார்த்தார். கையெழுத்து வைப்பதற்காகத் தகப்பன் கொடுத்த பேனை
முள்ளாகக் குத்தியது.
சூரன்.ஏ.ரவிவர்மா.
No comments:
Post a Comment