Monday, October 16, 2017

சாதனையுடன் வென்றது தென்.ஆபிரிக்கா



தென்ஆப்பிரிக்காவுக்குச்சென்றுள்ள பங்களதேஷ் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்  நடைபெறுகிறது.
முலாவது ஒரு நாள் போட்டி கிம்பெர்லியில் நேற்று முன்தினம் நடந்தது. புற்கள் இன்றி முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்படுத்தடிய  பங்களாதேஷ் 7 விக்கெட்டுக்கு 278 ஓட்டங்கள் எடுத்தது.. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வங்காளதேச அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 5-வது சதத்தை பூர்த்தி செய்த முஷ்பிகுர் ரஹிம் 110 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த முதல் பங்களாதேஷ்  வீரர் என்ற சிறப்பை முஷ்பிகுர் ரஹிம் பெற்றார்.

அடுத்து களம் புகுந்த தென்ஆப்பிரிக்க வீரர்களான குயின்டான் டி காக்கும், அம்லாவும் பதிலடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான இவர்கள் வேட்டை நடத்தினர். எந்த சலனமும் இல்லாத இந்த ஆடுகளத்தில் பங்களாதேஷ் வீரர்களால்  வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த டி காக் 13-வது சதத்தையும், அம்லா 26-வது சதத்தையும் எட்டினர். ஏழுபேர் பந்து வீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
தென்ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 282 ஓட்டங்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குயின்டான் டி காக் 168 ஓட்டங்களுடனும்  (145 பந்து, 21 பவுண்டரி, 2 சிக்சர்), அம்லா 110  ஓட்டங்களுடனும் (112 பந்து, 8 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.


தென்ஆப்பிரிக்கா புதிய சாதனை

 தென்ஆப்பிரிக்க வீரர்கள் டி காக்கும், அம்லாவும் முதல் விக்கெட்டுக்கு 282 ஓட்டங்கள் திரட்டி மலைக்க வைத்தனர். ஒரு விக்கெட்டுக்கு தென்ஆப்பிரிக்க ஜோடி எடுத்த அதிகபட்சம் இதுதான். இதற்கு முன்பு டுமினி-மில்லர் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 256 ஓட்டங்கள்  (ஸிம்பாப்வேக்கு எதிராகஇ 2015-ம் ஆண்டு) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
 தென்ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இது 7-வது நிகழ்வாகும். அதே சமயம் ஒரு நாள் போட்டி வரலாற்றில் விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக விரட்டிபிடிக்கப்பட்ட (சேசிங்) அதிகபட்ச ஸ்கோர் இது தான். அந்த வகையில் இது புதிய உலக சாதனையாகும். இதற்கு முன்பு இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிராக (2016-ம் ஆண்டு) விக்கெட் இழப்பின்றி 256 ஓட்டங்கள்  எடுத்து வெற்றி கண்டதே சிறந்த சாதனையாக இருந்தது.
 பங்களாதேஷ் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் 29 ஒட்டங்களில் ஆட்டம் இழந்தார். முன்னதாக 17 ஓட்டங்கள் எடுத்த போது 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் இதுவரை 5,012 ஓட்டங்களும், 224 விக்கெட்டுகளும் (178 ஆட்டம்) எடுத்துள்ளார். இதன் மூலம் 5 ஆயிரம் ஓட்டங்கள் ,200 விக்கெட்டுக்கு மேல் எடுத்த 5-வது வீரர் என்ற பெருமையை அல்-ஹசன் பெற்றார். ஏற்கனவே சனத் ஜெயசூர்யா (இலங்கை), அப்ரிடி, அப்துல் ரசாக் (இருவரும் பாகிஸ்தான்), ஜக் கலிஸ்  (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் இச்சாதனையை செய்துள்ளனர்.
அம்லா - டி காக் ஜோடி 3664 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது. கிப்ஸ் - ஸ்மித் ஜோடி 3607 ஓட்டங்கள்  . கிப்ஸ் - கல்லீ்ஸ் ஜோடி 3166 ஓட்டங்கள்   . அம்லா - டி வில்லியர்ஸ் ஜோடி 2955 ஓட்டங்கள் , கிப்ஸ் - கிர்ஸ்டன் ஜோடி 2906 ஓட்டங்கள்  குவித்துள்ளது.



No comments: