Monday, October 23, 2017

முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி


சதம் அடித்த லதாம்
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று  நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாம் லாதம், ரோஸ் டெய்லர் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
  
நாணயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற இந்திய அணிக் கப்டன் விராட்கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களம் இறங்கிய  செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். 

4-வது ஓவரில் டிரென்ட் பவுல்ட் வீசிய 2-வது பந்தை ஷிகர் தவான் திருப்பி விட்டு ஓட்டம் எடுக்க முனைந்தார்.ஆனால் பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் டாம் லாதம் கையில் அடைக்கலமானது. இதனால் ஷிகர் தவான் 12 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 9 ஓட்டங்கள்  எடுத்து நடையை கட்டினார். அந்த ஓவரை டிரென்ட் பவுல்ட் மெய்டனாக வீசி முடித்தார்.

அடுத்து கேப்டன் விராட்கோஹ்லி களம் இறங்கினார். 5-வது ஓவரில் டிம் சவுதி பந்து வீச்சில் அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாசிய ரோகித் சர்மா 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில்  டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் விக்கேற்றைப் பறிகொடுத்தார். இதனை அடுத்து விராட்கோஹ்லியுடன் இணைந்த கேதர் ஜாதவ் 12 ஓட்டங்களில் மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் அவரிடமே சிக்கி  வெளியேறினார்.
சதத்தைத் த‌வறவிட்ட ரெய்லர்

  தினேஷ் கார்த்திக் 37 ஓட்டங்களுடனும்  டோனி 25 ஓட்டங்களுடனும்   ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, விராட்கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்தார்.  நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 111 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதத்தை எட்டினார். 200-வது ஒருநாள் போட்டியில் ஆடிய விராட்கோலி அடித்த 31-வது சதம் இதுவாகும். அடித்து ஆடிய ஹர்திக் பாண்ட்யா 16 ஓட்டங்கள் எடுத்தபோது  டிரென்ட் பவுல்ட் வீசிய பந்தை அடித்து ஆட, அது மேல்நோக்கி எழும்பி கனே வில்லியம்சன் கையில் சிக்கியது.

கடைசி ஓவரில் டிம் சவுதி வீசிய முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி அசத்திய விராட்கோஹ்லி அடுத்த பந்தை அடித்து ஆட அந்த பந்து பவுண்டரி எல்லையில் நின்ற டிரென்ட் பவுல்ட் கையில் தஞ்சம் அடைந்தது. விராட்கோஹ்லி 125 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 121 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டம் இழந்தார். அதிரடியாக ஆடிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் அதிரடியாக 15 பந்துகளில் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்ஸர் அடங்கலாக 26 ஓட்டங்கள் எடுத்து கடைசி பந்தில் ஹென்றி நிகோல்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்கள் எடுத்தது. குல்தீப் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் நின்றார். நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெற்ககளும்  டிம் சவுதி 3 விக்கெற்களும்  சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

  281 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூஸிசிலாந்து அணி 80 ஓட்டங்களுக்குள்  3 விக்கெற்களை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ 28 ஓட்டங்களிலும்  ப்டன் கனே வில்லியம்சன் 6 ஓட்டங்களிலும்  மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 32 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு டாம் லாதம், ரோஸ் டெய்லருடன் இணைந்தார். இந்த இணை நங்கூரம் பாய்த்தது போல் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. டாம் லாதம் 95 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். அவர் அடித்த 4-வது சதம் இது. கடைசி ஓவரில் ரோஸ் டெய்லர் (95 ஓட்டங்கள்  100 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ரோஸ் டெய்லர்-டாம் லாதம் ஜோடி 200 ஓட்டங்கள் சேர்த்தது.
 31 ஆவது சதம் அடித்த கோஹ்லி

49 ஓவர்களில் நியூஸிசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 284ஓட்டங்கள்  எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாம் லாதம் 102 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 103 ஒட்ட்டங்களுடனும் , ஹென்றி நிகோல்ஸ் ஒரு பந்தில் 4 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள். நியூஸிசிலாந்து வீரர் டாம் லாதம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  இருஅணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி புனேயில் வருகிற 25 ஆம் திகதி நடக்கிறது.


No comments: