Saturday, June 2, 2018

உலகக்கிண்ணம் 2018 ஏ பிரிவு ரஷ்யா, சவூதி அரேபியா,எகிப்து,உருகுவே


உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக்கிண்ண உதைபந்தாட்டம் ஜூன் 14 ஆம் திகதி முதல் ரஷ்யாவில் ஆரம்பமாகிறது. ஐரோப்பா,ஆசியா,ஆபிரிக்கா,வட  அமெரிக்கா கரிபியன் தீவுகள் ஓசியானிக் ஆகியவற்றிலிருந்து  209 நாடுகள் உலகக்கிண்ன தகுதிகாண் போட்டிகளில் விளையாடின.  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட 32 நாடுகள் தகுதி பெற்றன. அவை எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு நாடுகள் இடம் பிடித்துள்ளன. புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப்பிடிக்கும் நாடுகள் அடுத்த சுற்றில் விளையாடுவதற்குத் தகுதி பெறும்.

பிரிவில் ரஷ்யா, சவூதி அரேபியா,எகிப்து,உருகுவே ஆகிய நாடுகள்  உள்ளன. உலகக்கிண்ணத்தை நடத்தும் நாடான ரஷ்யா தகுதிகாண் போட்டிகளில் விளையாடாமல் நேரடியாகத் தகுதி பெற்றுவிடும். ஆகையால் ரஷ்யாவின் அண்மைக்கால விளையாட்டு எப்படி இருக்கும் எனக் கணிக்கமுடியாதுள்ளது.   தர வரிசையில் ரஷ்யா 65 ஆவது இடத்தில்  உள்ளது. 1958 ஆம் ஆண்டு முதல்2014 வரை 10 முறை உலகக்கிண்ணப் போட்டியில் ரஷ்யா விளையாடியது.  1966 ஆம் ஆண்டு அரை இறுதிப் போட்டியில் விளையாடி 4 ஆவது இடத்தைப் பெற்றது.
 
  முன்னாள் உதைபந்தாட்ட வீரரான ஸ்ரனிஸ் செஸ்சோவ்  2016 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் பயிற்சியாளராகக் கடமையாற்றுகிறார். 1994, 2002 ஆம்  ஆண்டு  உலகக்கிண்ணப் போட்டிகளில் ரஷ்ய அணிக்காக விளையாடியவர் ஸ்ரனிஸ்  செஸ்சோவ்.  ரஷ்ய அணிசார்பாக 100 போட்டிகளில் விளையாடிய இக்கோ அக்பீவ் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். உலகக்கிண்ணப் போட்டியை நடத்தும்  நாடான ரஷ்யா அடுத்த சுற்றுக்குச் செல்லும் நம்பிக்கையில் இருக்கிறது.

சவூதி  அரேபியா

ஆசியாவிலிருந்து உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் சவூதி அரேபியா தரவரிசையில் 67 ஆவது இடத்தில் இருக்கிறது. 1990. 2006,1994 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்னப்போட்டிகளில் விளையாடிய சவூதிஅரேபியா நான்காவது முறையாக உலகக்கிண்னப் போட்டியில் விளையாடுகிறது. 1994 ஆம் ஆண்டு இரண்டாவது சுற்றுவரை முன்னேறியது. ஏ பிரிவில் உள்ள ரஷ்யா, எகிப்து,உருகுவே ஆகியன பலமான நாடுகளாக இருப்பதால் சவூதியின் அடுத்த சுற்றுக் கனவு நிறவேறுவது சற்று சிரமமானது. 

10 போட்டிகளில் விளையாடிய சவூதி  ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு  போட்டிகளைச் சமப்படுத்தி  மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. சவூதி அரேபியா 17 கோல்களை அடித்தது. சவூதிக்கு எதிராக 7 கோல்கள் அடிக்கப்பட்டன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு எதிராக சவூதி தலா மூன்று கோல்கள் அடித்தது. 19 புள்ளிகளுடன் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட சவூதி அரேபியா தகுதி பெற்றது.

ஆர்ஜென்ரீன வம்சாவளியான ஜுன் அன்ரனி ஓ பிசா சவூதி அரேபியாவின் பயிற்சியாளராக 2017 ஆம் ஆண்டு நவம்பர் முதல் கடமையாற்றுகிறார். 1996 ஆம் ஆண்டு ஐரோப்பிய லீக் போட்டியிலும் 1998 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியிலும் இவர் ஸ்பெய்ன் அணிக்காக விளையாடியவர்.
தகுதிகாண் போட்டியில்சவூதி சார்பாக 16  கோல்கள் அடித்த முன்கள வீரரான அல்- சலாவியின் மீது அந்த நாட்டு வீரர்கள் நம்பிக்கை  வைத்துள்ளனர்.

உருகுவே

பிரிவு ஏயில் பலமான அணியாக உருகுவே இருக்கிறது. தர வரிசையில் 17 ஆவது இடத்தில் இருக்கும் உருகுவே 13 ஆவது முறை உலகக்கிண்ணப்  போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலகக்கிண்ணப் போட்டியில் சம்பியனான உருகுவே 1950 ஆம் ஆண்டும் சம்பியனாகியது. இரண்டு முறை இறுதிப் போட்டியில் விளையாடிய உருகுவே இரண்டு முறையும் சம்பியனாகியது.ஐந்து முறை அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது உருகுவே.


18 போட்டிகளில் விளையாடிய உருகுவே ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு போட்டிகளைச் சமப்படுத்தி ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்தது.  உருகுவே 32  கோல்கள் அடித்தது உருகுவேக்கு எதிராக 20 கோல்கள் அடிக்கப்பட்டன. 31 புள்ளிகளுடன் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட உருகுவே தகுதி பெற்றது. பொலிவியா பரகுவே ஆகியவற்றுக்கு எதிராக தலா நான்கு கோல்கள் அடித்தது


  ஒஸ்கார் வொஷிங்டன் தபரெஸின் பயிற்சியில் எகிப்து பலசாதனைகளைப்  புரிந்தது. 2011ஆம் ஆண்டு கோபா அமெரிக்கக் கிண்ணத்தை  இவரின் பயிற்சியில் எகிப்து  வென்றது. பர்சிலோனா அணிக்காக விளையாடும் சுவாரஸ் உருகுவேயின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார் உருகுவேயை அவர் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது.

எகிப்து 

 உதைபந்தாட்ட ரசிகர்களின் மனதைக் கவர்ந்த முகமது சாலாவின் தலைமையில் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட எகிப்து தகுதி பெற்றது. தரவரிசையில் 46 ஆறாவது இடத்தில் இருக்கும் எகிப்து 1934, 1990 ஆம் ஆண்டுகளில் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது. ஆறு போட்டிகளில் விளையாடிய எகிப்து நான்கு வெற்றிகளைப்பெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. 13  புள்ளிகளுடன் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட எகிப்து தகுதி பெற்றது.

வலென்சியாவின் முன்னாள் பயிற்சியாளரான ஹெக்டர்  கோபர்  2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எகிப்தின் பயிற்சியாளரானார். இவரின் பயிற்சியில் 2017 ஆம் ஆண்டு ஆபிரிக்கக் கிண்ணத்தைப் பெற்றது.    உலகக்கிண்ணப் போட்டியில்   இரண்டு முறை விளையாடிய எகிப்து முதல் சுற்றுடன் வெளியேறியது.  இம்முறை அடுத்த சுற்றுக்குச் செல்லும் நம்பிக்கையுடன் இருந்தது. அணித் தலைவர் சாலாவின் வெளியேற்றம் அந்த நம்பிக்கையைத் தகர்த்துள்ளது.

லிவர்பூலுக்கு  எதிராக நடைபெற்றஐரோப்பா சம்பியன்லீக் இறுதிதிப்போட்டியில் ரியல் மட்ரிக் அணிக்காக விளையாடிய எகிப்தின் அணித் தலைவர் முகமது சாலா காயமடந்துள்ளார். உலகக்கிண்ணப் போட்டியில் அவர்   விளையாட முடியாத நிலை உள்ளது.  இதனால்  எகிப்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தகுதிச்சுற்று  மூன்றாம் கட்ட ஆட்டத்தில் ஐந்து கோல்கள் உட்பட 31 கோல்கள் அடித்து அசத்தியவர் முகமது சாலா.  லிவர்பூல் அணிக்காக விளையாடிய சாலா 51 போட்டிகளில் 44 கோல்கள அடித்துள்ளார். எகிப்துக்காக 57  போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் அடித்துள்ளார். 25 வயதான சாலா ஐரோப்பிய பிமியர் லீக் தொடரில் 36 போட்டிகளில் 32  கோல்கள் அடித்து ஆலன் ஷீரர், ரொனால்டோ,சுவாரஸ் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார். இதனால் இந்த ஆண்டின் சிறந்த வீரர் விருது முகமது சாலாவுக்கு  வழங்கப்பட்டது. 

எகிப்தின் கோல்கீப்பர் எஸ்ஸாம் அல் - ஹடாரிக்கு 45 வயது. வயது கூடிய கோல்கீப்பர் என்ற பெருமையுடன் உலகக்கிண்ணப் போட்டியில் அவர் கலந்துகொள்கிறார். முன்னதாக 2014 ஆம் ஆண்டு  43 வயதுடைய கொலம்பியாவின் கோல்கீப்பர் விளையாடியதே சாதனையாக இருந்தது.
ஏ பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்குச் செல்லும் முதல் அணியாக உருகுவே தெரிவாவதில் சந்தேகம் இல்லை. இரண்டாவது அணி எது என்பதில் எகிப்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது. உலகக்கிண்ணப் போட்டியை நடத்தும் ரஷ்யா, அடுத்த சுற்றுக்குச் செல்வதற்குக் கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.

No comments: