உலகின் மிகச்சிறிய நாடு, அதன் மக்கள் தொகை
3,33,000, சிறிய நாடு மக்கள் தொகை எல்லாம் பெரிதல்ல திறமை இருந்தால் உலகத்தில் சாதிக்கலாம்
என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது ஐஸ்லண்ட்.
உலகக்கிண்ணப் போட்டியில் ஆர்ஜென்ரீனா, குரோஷியா,நைஜீரியா
ஆகியவற்றுடன் டீ பிரிவில் உடம் பிடித்துள்ளது ஐஸ்லண்ட்.. டீ பிரிவை “டெத் ஒஃவ் குரூப்” என்று சொல்லலாம்.
ஐரோப்பிய
தகுதிகாண் போட்டியில் குரோஷியா, உக்ரைன், துருக்கி, பின்லாந்து கொசோவா ஆகியவற்றுடன்
ஐ பிரிவில் இடம் பிடித்தது. 7 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தி
2 போட்டிகளில் தோல்வியடைந்து 22புள்ளிகளுடன்
ஐ பிரிவில் முதலிடம் பிடித்து உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது .ஐஸ்லண்ட்
16 கோல்கள் அடித்தது. எதிராக 7 கோல்கள் அடிக்கப்பட்டன. 10 தகுதிகாண் போட்டிகளில் விளையாடிய
ஐஸ்லண்ட்டுக்கு எதிராக 7 போட்டிகளில் கோல்கள்
அடிக்கப்படவில்லை.
2014 ஆம்
ஆண்டு நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் குரோஷியாவுக்கு எதிரான பிளேஓஃவ் போட்டியில்
தோல்வியடைந்த ஐஸ்லண்ட் உலகக்கிண்ணத்தில்
விளையாடும் வாய்ப்பைத் தவறவிட்டது. இம்முறை நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் பிளேஓஃவ் போட்டியில் விளையாடி தகுதி பெறும்
நிலைக்கு குரோஷியாவை, ஐஸ்லண்ட் தள்ளியது. தரவரிசையில் 22 ஆவது இடத்தில்
இருக்கும் ஐஸ்லண்ட் முதன் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடக்
காத்திருக்கிறது.
2011 ஆம்
ஆண்டு முதல் உதவிப் பயிற்சியாளராக கடமையாற்றிய ஹால் கிரிம்சன்
2014 ஆம் ஆண்டு முதல் பிரதம பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். சுவீடனைச் சேர்ந்த
லாஸ் லெகம்பக் பயிற்சியாளர் பதவியில் இருந்து வெளியேறியதும் ஹால் கிரிம்சன்
பயிற்சியாளரானார்.
தாகுதல் ஆட்டத்தில் அசத்தும்
28 வயதான கில்பி சிகுர்ட்ஸன் காயமடைந்துள்ளார். எனினும் ஆர்ஜென்ரீனாவுடனான போட்டிக்கு
முன்னர் அவர் குணமடைந்துவிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவன்ரோன் கழகத்தில் இருந்து
அதிக தொகைக்கு சுவன்சேயால் வாங்கப்பட்டவர் கில்பி சிகுர்ட்ஸன். கப்டனும் மத்திய கள
வீரருமான ஆரோன் குனர்சன் உட்பட யூரோ கிண்ணத்தில் விளையாடிய பலர் உலகக்கிண்ண அணியில்
இடம் பிடித்துள்ளனர்.
யூரோ கிண்ணப் போட்டியில்
2-0 என்ற கோல்கனக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஐஸ்லண்ட். கால் இறுதிப் போட்டியில்
5-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. ஐஸ்லண்ட் தோல்வியடைந்தாலும் பிரான்ஸுக்கு
எதிராக இரண்டு கோல்கள் அடித்து தனது திறமையை
நிரூபித்தது.
ஐஸ்லண்டுக்கு எதிரான நான்கு
உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகளில் குரோஷியா வெற்றி பெற்றது. ஆனால், கடைசிப் போட்டியில்
ஐஸ்லண்டிடம் குரோஷியா தோல்வியடைந்தது. 1981 ஆம் ஆண்டு நைஜீரியாவுக்கு எதிரான நட்பு
ரீதியான போட்டியில் 1-0 என்ற கோல்கணக்கில் ஐஸ்லண்ட் தோல்வியடைந்தது. ஆர்ஜென்ரீனாவும்
ஐஸ்லண்டும் ஒருமுறைகூட நேருக்கு நேர் மோதவில்லை.
பிரான்ஸில் இரண்டு வருடங்களுக்கு
முன்னர் நடைபெற்ற யூரோ கிண்ணப் போட்டியில் விளையாடிய ஐஸ்லண்டுக்கு ஆதரவாக அந்த நாட்டைச்சேர்ந்த
33 ஆயிரம் ரசிகர்கள் சென்றார்கள். அவர்கள் எழுப்பும் “வைகிங் கிளாப்” மிகப் பிரபலமானது. உலகக்கிண்ண ரசிகர்களுக்கு புதியதொரு அனுபவம் காத்திருக்கிறது.
குரோஷியா
ஆர்ஜென்ரீனா,ஐஸ்லண்ட், நைஜீரியா
ஆகியவற்றுடன் டீ பிரிவில் குரோஷியா இடம் பிடித்துள்ளது. இந்தப் பிரிவில் உள்ள நான்கு
நாடுகளும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவை.
பலம் வாய்ந்த நாடாக ஆர்ஜென்ரீனா இருக்கிறது. அடுத்த சுற்றுக்குச்செல்லும் இரண்டாவது அணி எது
என்பதைக் கணிக்க முடியாதுள்ளது.
ஐரோப்பாக்கண்டத்தில் இருந்து
உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற குரோஷியா 7 போட்டிகளில் வெற்றி பெற்று
ஒரு போட்டியைச் சமப்படுத்தியது. 16 கோல்கள் அடித்த குரோஷியாவுக்கு எதிராக 7 கோல்கள்
அடிக்கப்பட்டன. 22 புள்ளிகளுடன் ஐ பிரிவில்
இரண்டாவது இடம் பிடித்ததால் பிளேஓஃவ் போட்டியில் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.கிரீஸை
எதிர்த்து நடைபெற்ற அப்போட்டியில் பெனால்ரியில்
4-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி
பெற்றது.
தர வரிசையில் 20 ஆவது இடத்தில் இருக்கும் குரோஷியா 1998 ஆம் ஆண்டு முதல்
2014 ஆம் ஆண்டு வரை நான்கு முறை
உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது. 1998 ஆம் ஆண்டு மூன்றாவது இடத்தைப்
பிடித்தது. 1930 முதல் 1990 வரை யூகஸ்லோவியா
8 முறை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது. 1991 ஆம் ஆண்டு யூகஸ்லோவியாவிலிருந்து
பிரிந்த நாடுதான் குரோஷியா.
2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் குரோஷியாவில்
பயிற்சியாளராக டலிக் பொறுப்பேற்றார்.ரியல் மட்ரிக்குக்காக விளையாடும் கப்டன்
லூக்கா மொட்ரிக் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். பர்சிலோனா வீரர் இவான் ராகிடி,
இன்ரமிலானில் கலக்கும் இவான் பெரிசிக்,மார்செலோ புரோசோவிக்,ஜுவண்டசின் மரியோ
மாண்ட்ஜுகிக்,மிலானின் ஆம் நிகோலா காலினிக்,ஆந்திரஜ் கிராமரி ஆகியோர் அணியின்
தூண்களாவர். 1998 ஆம் ஆண்டு முதன் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய
குரோஷியா பலமான நாடுகளை வீழ்த்தி அரை
இறுதிவரை முன்னேறியது. அந்தப் போட்டியில்
பிரான்ஸிடம் தோல்வியடைந்த பின்னர் குரோஷியாவால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
நைஜீரியா
சுப்பர் ஈகிள் என செல்லமாக அழைக்கப்படும் நைஜீரியா, ஆபிரிக்காவில் இருந்து
உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. ஆர்ஜென்ரீனா,குரோஷியா,ஐஸ்லண்ட்
ஆகியவற்றுடன் கடினமான டீ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இரண்டாவது குற்றுக்குச்
செல்வதற்கு கடினமாகப் போராட வேண்டிய நிலையில் நைஜீரியா இருக்கிறது.
ஆபிரிக்கக்கண்ட தகுதிகாண் போட்டியில் பீ பிரிவில் விளையாடிய நைஜீரியா 4
போட்டிகளில் வெற்றிபெற்று ஒரு போட்டியைச்
சமப்படுத்தியது. ஒரு போட்டியில் தோல்வியடைந்த
நைஜீரியா 11 கோல்கள் அடித்தது. எதிராக 6 கோல்கள் அடிக்கப்பட்டன. 13 புள்ளிகளைப் பெற்று பீ பிரிவில் இருந்து
முதல் அணியாக உலகக்கிண்ணப் போட்டியில்
விளையாடத் தகுதி பெற்றது.
தர வரிசையில் 48 ஆவது இடத்தில் இருக்கும் நைஜீரியா 1994 ஆம் ஆண்டுமுதல்
2014 ஆம் ஆண்டுவரை ஐந்து உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியது.நைஜீரியாவின்
பயிற்சியாளர்களாக குறுகிய காலத்தில் பலர் கடமையாற்றினார்கள். ஜேர்மனியைச் சேர்ந்த
ஜெனொட் ரோர் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்
பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.
சீனாவின்
கிளப்புக்காக விளையாடும் ஜோன் ஒபி மைக்கலை அந் நாட்டு ரசிகர்கள் நம்பி இருக்கிறார்கள்.
செல்சியின் வீரரான விக்ரர் மோஸ் நான்கு தகுதிகாண் போட்டிகளில் மூன்று கோல்கள் அடித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஆபிரிக்க சம்பியன் கிண்ணத்தை நைஜீரியா பெறுவதற்கு இவரது பங்களிப்பு
முக்கியமானதாக இருந்தது. மொஸ்கோ சி.எஸ்.கேஏஅணியின் வீரரான அஹமட் மூஸாவை லெசெஸ்ரர் சிற்றி
வாங்கியது. அவருக்கு விளையாடசந்தர்ப்பம் கொடுக்கப்படாமையால் மொஸ்கோ சிஎஸ்கேஏ அவரை திரும்பப்பெற்றது.
முன்கள வீரர் கெலெச்சி இஹனசோ, மத்தியகளவீரர் டிடி ஆகியோர் நைஜீரியாவுக்கு பலம் சேர்க்கும்
வீரர்களாவர்.
No comments:
Post a Comment