Thursday, June 7, 2018

உலகக்கிண்ணம் 2018 சீ பிரிவு


ஐரோப்பியாவின் பலமான உதைபந்தட்ட அணியான பிரான்ஸ், டென்மார்க், ஆசியாவிலிருந்து அவுஸ்திரேலியா, தென் அமெரிக்காவிலிருந்து பெரு ஆகியன சீ பிரிவில் இடம் பிடித்துள்ளன.இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் விளையாடுவதில் சந்தேகமில்லை. அடுத்த சுற்றுக்குச் செல்வதில்  டென்மார்க்குக்கும் பெருவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்படும். பிரான்ஸைத் தவிர ஏனைய மூன்று நாடுகளும் பிளேஃஓவ் போட்டியில் விளையாடி உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.

தகுதிகாண் சுற்றில் 7 போட்டிகளில் வெற்றி பெற்ற  பிரான்ஸ் இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்தது.18 கோல்கள் அடித்த பிரான்ஸுக்கு  6 கோல்கள் அடிக்கப்பட்டது. ஏ பிரிவில் 23 புள்ளிகளைப்பெற்ற பிரான்ஸ் முதல் அணியாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

தரவரிசையில் 7 ஆவது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் 1930 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை 14 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியது. 1998 ஆம் ஆண்டு சம்பியனான  பிரான்ஸ்  2006 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் இத்தாலியிடம் பெனால்ரியில் தோல்வியடைந்தது. 1958 ஆம் ஆண்டும் 1986 ஆம் ஆண்டும்  மூன்றாவது இடத்தையும் 1982 ஆம் ஆண்டு   நான்காவது இடத்தையும் பிடித்தது.

டெஸ்சாம்ப்ஸின் நீண்டகால பயிற்சியில்  பலம்வாய்ந்த உதைபந்தாட்ட அணியாக பிரான்ஸ் விளங்குகிறது. 1998 ஆம் ஆண்டு உலகக்கிண்னத்தையும் 2000 ஆம் ஆண்டு ஐரோப்பியன் ஷிப் பட்டத்தையும் பெறுவதற்கு டெஸ்சாம்ப்ஸானின் பயிற்சியே காரணம். எதிரணி வீரர்களைக் கலங்கடிக்கும்  கிரீஸ்மேன் பிரான்ஸில் இருப்பது கூடுதல் பலமாகும். அண்டோய்ன் கிரீஸ்மேன், பவுல் போக்யா,கைலியன் மாப்பே கூட்டணியை எதிரணி வீரர்கள் சமாளிப்பது சற்று சிரமமானது.

அடிலெகோ மட்ரிக் கிளப்புக்காக விளையாடும் 27 வயதான கிறீஸ்மேன் 2010 ஆம் ஆண்டு பிரான்ஸ் தேசிய அணியில் இடம் பிடித்தார். பரகுவேக்கு எதிராகத் தனது முதலாவது சர்வதேச கோலை அடித்தார். மிகச்சிறந்த முன்கள வீரரான கிரீஸ்மேன், கோல் அடித்ததும் இரண்டு கைகளையும் நெஞ்சுக்குநேரே வைத்துக்கொண்டு இரண்டு பெருவிரல்களையும் உயர்த்தும் அந்த அசைவுக்கு ரசிகர்கள் அடிமையாகியுள்ளனர்.

பிரான்ஸ், மான்செஸ்டர் யுனைட்டட் ஆகியவற்றுக்காக விளையாடும் 25 வயதான பவுல் போக்பா அனுபவம் மிக்க வீரராவார். 2011 ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்டபிரான்ஸ் அணிக்குத் தேர்வான போக்பா 17 ,18, 19, 20 வயதுக்குட்பட்ட அணிகளிலும் இடம் பிடித்தார். 2013 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் தேசிய அணியில் விளையாடிவருகிறார்.
19 வயதான இளம்புயல் கைலியன் மாப்பேயிடம் பந்து கிடைத்தால் எதிரணி கோல்கீப்பரின்  எச்சரிக்கையாகி விடுவார். 2017 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் அணியில் விளையாடுகிறார். இவரது தகப்பனான வில் பிரைட் உதைபந்தாட்டப் பயிற்சியாளர். தகப்பனின் பயிற்சியில் மாப்பே பட்டை தீட்டப்பட்டுள்ளார். இவர்களுடன் தோமஸ் லெமார், டிம்பிலே,அலெக்ஸாண்டர் லக்காஸி ஆகியோரும் எதிரணிகளுக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

 அவுஸ்திரேலியா

ஆசியாக் கண்டத்தில் இருந்து முட்டி மோதி  பிளேஓஃவ் போட்டிகளில் விளையாடி உலகக்கிண்ணப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதி பெற்றது. பலம் வாய்ந்த பிரான்ஸ்,டென்மார்க்,பெரு ஆகியவற்றுடன் சீ  பிரிவில் இடம் பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் இராண்டாவது சுற்று கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு போட்டியையாவது சமப்படுத்தினால்  அவுஸ்திரேலியாவுக்கு வெற்றிதான்

ஆசியக் குழுவில் பீ பிரிவில் இடம்பிடித்த அவுஸ்திரேலியா மூன்றாவது இடத்தைப் பிடித்ததால்  பிளேஃஓவ் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத்தகுதி பெற்றது. ஹொண்டூராஸுடனான முதலாவது  போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கோல்கள் இன்றி சம நிலையில் முடிந்தது. சிரியாவுடனான இரண்டாவது பிளேஓஃவ் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தில் விளையாடுவதை உறுதி செய்தது.

தர வரிசையில் 40 ஆவது இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியா 1974 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை நான்கு முறை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது.  32 வருடங்களுக்குப் பின்னர் 2006 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய அவுஸ்திரேலியா இரண்டாவது சுற்றில் 1-0 என்ற கோல்கணக்கில் இத்தாலியிடம் தோல்வியடைந்தது. அதன் பின்னர் இரண்டு முறையும் முதல் சுற்றுக்கு அப்பால் செல்லவில்லை.

தகுதிகாண் போட்டியின் போது  பயிற்சியாளராக இருந்த போஸ்ட்கோக்ளே, ஹொண்டூராஸை வென்று உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்தபோது பயிற்சியாளர் பதவியை ராஜினாமாச் செய்தார். இலகுவாகத் தகுதி பெற வேண்டிய அவுஸ்திரேலியா, பிளே ஓஃவ் வரை சென்றதற்கு போஸ்ட்கோக்ளேயின் நடவடிக்கைதான் என்ற விமர்சனம் எழுந்ததால் பயிற்சியாளர் பதவியை அவர் துறந்தார்.

அவுஸ்திரேலியாவின் இடைக்காலப் பயிற்சியாளராக நெதர்லாந்தைச் சேர்ந்த பெர்ட் வான்மார்விஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ன இறுதிப்போட்டியில் விளையாடியவர். பெர்ட் வான்மார்விஜ்ஜின் பயிற்சியில் நோர்வேயுடனான நட்பு ரீதியான போட்டியில் 4-1 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது. கொலம்பியாவுக்கு எதிரான போட்டியை கோல்கள் இன்றி சமப்படுத்தியது.
ஐரோப்பிய, ஆசிய கிளப்களுக்காக அவுஸ்திரேலிய வீரர்கள் விளையாடிவருவதால் அவர்களின் அனுபவம் கொகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  தகுதிகாண் போட்டியில் 11 கோல்கள் அடித்த  ரிம் சாஹில் அவுஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். கப்டன் மைல் ஜெனடிக்,கோல்கீப்பர் மேம் ரேயான்,ஆரோன் மூய்,இளம் வீரர்களான டானியல் அர்ஸானி, பிரான் கார்சிக் ஆகியோர் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
பெரு
உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத்  தகுதி பெற நாடு பெரு. நியூஸிலாந்துக்கு எதிரான  முதலாவது பிளேஃஓவ் போட்டியில்  2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியை கோல்கள் இன்றி சமப்படுத்தி உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்தது. பிரான்ஸ்,டென்மார்க், அவுஸ்திரேலியா ஆகியவற்றுடன் சீ பிரிவில் பெரு  இடம் பிடித்துள்ளது.

  தகுதிகாண் சுற்றில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று ஐந்து போட்டிகளைச் சமப்படுத்தியது. ஆறு போடிகளில் தோல்வியடைந்த பெரு, 27 கோல்களை அடித்தது. பெருவுக்கு எதிராக 26 கோல்கள் அடிக்கப்பட்டது. 26 புள்ளிகளைப் பெற்று தென். அமெரிக்க குழுவில் 5 ஆவது இடம் பெற்றது. பெருவுக்கு எதிரான போட்டியைச்  சமப்படுத்திய கொலம்பியா உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. பெரு பிளேஃஓவ் போட்டியை நோக்கித் தள்ளப்பட்டது.

தரவரிசையில் 11 ஆவது இடத்தில் இருக்கும்  பெரு, 1930 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை நான்கு உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியது. 1970,1978 ஆம் ஆண்டுகளில் கால் இறுதிவரை முன்னேறியது.
ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த ரிகாடோ கிரேகா, 2015 ஆம் ஆண்டு முதல் பெருவின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். 36 வருடங்களின் பின்னர் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட பெரு தகுதி பெற்றது.  எல் ரைகர்,எல் பல்கோ எனச்செல்லமாக அழைக்கப்படும் ஜெபர்சன் ஃபர்கான், பெருவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.

போதை மருந்து பாவித்த குற்றச்சாட்டில் தடை வித்திக்கப்பட்ட பெருவின் கப்டன் பாவ்லா குரேரோவுக்கு வித்திக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் பெருவின் வீரர்களும் ரசிகர்களும் உற்சாகமாக உள்ளனர். கிரிஸ்டியன் குவேஜா, கோல்கீப்பர் பெட்ரோ கல்லீஸ், அல்பேட்ரோ ரொட்ரிகஸ் ஆகியோர் பெருவின்  முன்னணி வீரர்களாவர். சோட் பாஸில் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் பெருவினால் எதிரணிகளுக்கு நெருக்கடியைக் கொருக்கும்.

டென்மார்க்
பிரான்ஸ்,பெரு,அவுஸ்திரேலியா அகியவற்றுடன் சீ பிரிவில் டென்மார்க் இடம் பிடித்துள்ளது.   பிளேஓஃவ் போட்டியில் விளையாடி இந்தப்பிரிவில் இடம் பிடித்த மூன்றவது நாடு டென்மார்க். அயர்லாந்துகு எதிரான முதலாவது போட்டி கோல்கள் இன்றி சம நிலையில் முடிந்தது. இரண்ட்ஃபாவது போட்டியில் 6 ஆவது நிமிடத்தில் அயர்லாந்து வீரர்ஷேன் டஃபி  கோல் அடித்ததால்  டென்மார்க், அதிர்ச்சியில் உறைந்தது. 29 ஆவது நிமிடத்தில் டென்மாரக் வீரர் அண்ட்ரியாஸ் கிறிஸ்டென்சென் கோல் அடித்து சமப்படுத்டினார். 32 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் கோல் அடித்த டென்மார்க் முன்னிலை பெற்றது.முதல் பாதியில் 2-1 என டென்மார்க் முன்னிலை பெற்றது.

63,74 ஆவது நிமிடங்களில் கிறிஸ்டியன் எரிக்சன் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடிக்க டென்மார்க்கின் நம்பிக்கை அதிகமாகியது. கடைசி நேரத்தில் நிக்லஸ் பெர்நெர் ஒரு கோல் அடிக்க 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற டென்மார்க், உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவதை உறுதி  செய்தது. அயந்லாந்துக்குக் கிடைத்த சந்தர்ப்பங்கள் தவற விடப்பட்டதால் பரிதாபமாகத் தோல்வியடைந்து வெளீயேறியது.

தகுதிகாண் சுற்றில் 6 போட்டிகளில் வெற்றி பெற்ற டென்மார்க், இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தியது. 20 கோல்கள் அடித்த டென்மார்க்குக்கு எதிராக 8 கோல்கள் அடிக்கப்பட்டன. 20 புள்ளிகளுடன்  இரண்டாவது இடத்தைப் பிடித்த டென்மார்க் பிளேஓஃவ் போட்டியில் விளையாடியது.

தரவரிசையில் 12 ஆவது இடத்தில் இருக்கும் டென்மார்க் 1986 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை நான்கு முறை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது.1998 ஆம் ஆண்டு கால் இறுதிப் போட்டியில் விளையாடியது. இம்முறையும் கால் இறுதிவரை செல்லும் நம்பிக்கையில் எழுந்துள்ளது.

நோர்வேயின் முன்னாள் வீரரான எஜ் ஹர்டேன் டென்மார்க்கின் பயிற்சியாளராவார்.கிறிஸ்ரியன் எரிக்சன் டென்மார்க்கின் நம்பிக்கைநட்சத்திரமாக இருக்கிறார்.கோல் கீப்பரான கஸ்பர் ஸ்மெசல் பாதுகாப்பு பதுகாப்பு அரணாக விளங்குகிறார். இவர், மான்செஸ்டர் யுனைட்டெட்டின் மிரபலமான முன்னாள் கோல்கீப்பர் பீற்றரின் மகனாவார். 2015 /16 சீசனில் லெசிஸ்ரர் சிற்றி சம்பியனாவதற்கு கோல்கீப்பர்  கஸ்பரின் பங்களிப்பு முக்கிகியமானதாகும். அண்ட்ரியாஸ் கிறிஸ்டென்சென்,நிக்ல்ஸ் பெர்நெர் ஆகியோரின் பலத்தில் டென்மார்க் முதல் சுற்றைத் தாண்டும் நம்பிக்கையில் உள்ளது.

No comments: