ரஷ்யாவில் நடைபெற உள்ள உலகக்கிண்ண
உதைபந்தாட்டப் போட்டியில் பலம் வாய்ந்த ஆர்ஜென்ரீனாவுடன்
உலகக்கிண்ணப் போட்டியில் முதன் முதல் விளையாடும்
ஐஸ்லண்ட், குரோஷியா, நைஜீரியா என்பன டீ பிரிவில் இடம் பிடித்துள்ளன. உலகக்கிண்ண சம்பியனாகும்
எனக் கணிக்கப்பட்ட ஆர்ஜென்ரீனா தன்னை எதிர்த்து விளையாடும் மூன்று நாடுகளையும் வென்று
மிக இலகுவாக இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கிண்ணப்
போட்டி வரலாற்றில் சிறிய நாடுகள் பலம் வாய்ந்த நாடுகளைப் புரட்டிப் போட்ட சம்பவங்கள்
உள்ளன. முதன் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் ஐஸ்லண்ட் சில வேளைகளில்
அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இரண்டாவது சுற்றுக்குச் செல்வதற்கு குரோஷியாவுக்கும் நைஜீரியாவுக்கும்
இடையே கடும் போட்டி நிலவும்.
எதிரனிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மெஸ்சியின் தலைமையிலான
ஆர்ஜென்ரீனா உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட
கடைசி நேரம்வரை காத்திருந்தது. பர்சிலோனாவுக்காக
கோல்மழை பொழிந்து சம்பியன் பட்டங்களை வென்று கொடுத்த மெஸ்ஸியால் தாய் நாட்டுக்கு உலகக்கிண்ணத்தை
வென்றுகொடுக்க முடியவில்லை.
தகுதிகாண் சுற்றில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 1 போட்டியை
சமப்படுத்திய ஆர்ஜென்ரீனா, 4
போட்டிகளில் தோல்வியடைந்தது. கடைசியாக விளையாடிய
போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியடைந்து
மூன்று போட்டிகளை சமப்படுத்தியதால் ஈக்குவடோருடனான கடைசிப் போட்டி அதன் தலை
விதியைத் தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது. ஈக்குவடோரின் குயிட்டா நகரில் நடைபெற்ற
போட்டியில் 40 ஆவது நிமிடத்தில் ஈக்குவடோர் கோல் அடித்து அதிர்ச்சியளித்தது. அணித்தலைவர்
மெஸ்ஸி மூன்று கோல்கள் அடித்து உலகக்கிண்ண போட்டியில் ஆர்ஜென்ரீனா விளையாடுவதை உறுதி செய்தார். ஆர்ஜென்ரீனா 19 கோல்கள் அடித்தது அதற்கு
எதிராக 16 கோல்கள் அடிக்கப்பட்டன. 28 புள்ளிகளுடன் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும்
தகுதியை ஆர்ஜென்ரீனா பெற்றது.
தர வரிசையில் 7ஆவது இடத்தில் இருக்கும்
ஆர்ஜென்ரீனா, 1930 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை 16 முறை உலகக்கிண்ணப் போட்டியில்
விளையாடியது.5 முறை அரை இறுதிப் போட்டிகளிலும் 5 முறை இறுதிப் போட்டியிலும் விளையாடியது. 1978,1986 ஆம்
ஆண்டுகளில் சம்பியனானது. 1986 ஆம்
ஆண்டு ம்ரடோனா தலையிலான ஆர்ஜென்ரீனா சம்பியனாகியது. அப்போது இங்கிலாந்துக்கு எதிரான
போட்டியில் கடவுள் கொடுத்த கை மூலம் மரடோனா கோல் அடித்தார்.
உலகக்கிண்ணத்தை மெஸ்ஸி முத்தமிடுவார் என ஆரஜென்ரீனா
மக்கள் நம்புகிறார்கள். கடந்த முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தவர்கள் இம்முறை சாதிப்பார்கள்
என அவர்கள் நம்புகிறார்கள். கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனா தோல்வியடைந்ததும்
பயிற்சியாளரான மார்ரினோ பதவி விலகினார். 2016 ஆம் ஆண்டு சம்போலி பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். அவரது அதிரடியான மற்றங்கள் ஆரோக்கியமானதாக
இல்லை. உலகக்கிண்ணத்தை வெல்லும் அணியாக ஆர்ஜென்ரீனா இல்லை என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
ஆர்ஜென்ரீனாவின் கப்டன் மெஸ்ஸி,
அவருக்கு உறுதுணையாக அனைத்து வீரர்களும் உள்ளனர். தாய் நாட்டுக்கு உலகக்கிண்ணத்தைப்
பெற்றுக்கொடுப்பதே அணித்தலைவரின் தலையாய கடமை. அந்தக் கடமையை மெஸ்ஸி இன்னமும் நிறைவேற்றவில்லை.
2014 ஆம் ஆண்டு 7 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய மெஸ்ஸி 4 கோல்கள் அடித்தார்.
2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரையான 10 தகுதிகாண் போட்டியில் 7 கோல்கள் அடித்தார்.
2016 ஆம் ஆண்டு 5 கோபா அமெரிக்க சம்பியன் போட்டியில் 7 கோல்கள் அடித்தார்.
2014 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஜேர்மனியிடம் 1-
0 கோல்கணக்கில் ஆர்ஜென்ரீனா தோல்வியடைந்தது.
2015 ஆம் ஆண்டும் 2016 ஆம் ஆண்டும் கோபா அமெரிக்க சம்பியன் இறுதிப் போட்டியில் சிலியிடம் பெனால்ரியில் தோல்வியடைந்தது.
மூன்று இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்ததால்
விரக்தியுற்ற மெஸ்ஸி, கனத்த இதயத்துடன் உதைபந்தாட்ட அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக
அறிவித்தார். சில மாதங்களின் பின்னர் உதைபந்தாட்ட அரங்கில் களம் புகுந்தார்.
.
மூன்று முறை உலகக்கிண்ணப் போட்டியில்
விளையாடிய மெஸ்ஸியின் கனவை மூன்று முறையும் ஜேர்மனி சிதறடித்தது. 2006 ,2010 ஆம் ஆண்டுகளில் கால் இறுதிப் போட்டியில்
ஜேர்மனியிடம் தோல்வியடைந்த ஆர்ஜென்ரீனா, தோல்வியடைந்து
வெளியேறியது. 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஜேர்மனியை எதிர்த்து ஆர்ஜென்ரீனா மோதியது.
ஆட்ட நேரம் முடிவடைந்தும் கோல் அடிக்கப்படாமையால்
மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. 113 ஆவது நிமிடத்தில் ஜேர்மனியின் வீரர் மரியேகோட்ஸே
கோல் அடித்ததால் ஆர்ஜென்ரீனா அதிர்ச்சியடைந்தது. கடை நேரத்தி ஆர்ஜென்ரீனாவுக்கு பிரீகிக்
வாய்ப்பு கிடைத்தது. மெஸ்ஸி அதனை கோல் கம்பத்துக்கு
மேலால் அடித்ததால் ஆர்ஜென்ரீனாவின் சம்பியன் வாய்ப்பு பறி போனது.
முன்கள வீரர்களான லியோனல் மெஸ்ஸி,
செர்ஜியோ அகுவேரோ, பாலோ டிபாலா, கொன்சலோ ஹிகுவைன், ஆகியோருடன் வெஸ் ஹாமின் மனுவல் லான்சினி,மான்
செஸ்டர் ஜோடியான செர்ஜியோ ரொமாரியோ,மார்கோஸ் ரோஜோ செல்சி வீரரான வொல்லி கபலரோ உட்பட
இங்கிலாந்தைத் தளமாகக்கொண்ட கிளப்களுக்காக விளையாடும் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
கோல்கீப்பரான செர்ஜிஜோ ரெமோரோ
காயம் காரணமாக அணியில் இடம் பெறாதது சற்று
பின்னடைவுதான். 2010, 2014 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப்
போட்டிகளில் விளையாடிய ரெமோரோ ஆர்ஜென்ரீனாவுக்காக 83 போட்டிகளில் விளையாடியுள்ளார். இத்தாலி லீக்கில் இன்ரர் மிலான் கழகத்துக்காக அதிக
கோல்கள் அடித்த மவுரோ இகார்டி அணியில் இடம் பெறவில்லை. காயம் காரணமாக கடந்த பருவத்தில்
நான்கு போட்டிகளில் மட்டும் விளையாடிய பின்கள வீரர் ரமியோ பியுனஸ் மோரிக்கும் இடமளிக்கப்படவில்லை.
2016 ஆம் ஆண்டுக்குப்பின்னர் ஒரு கோல்கூட அடிக்காத
ஹிகுவனைத் தேர்வு செய்திருக்கும் பயிற்சியாளர் சம்போலி, இர்காடியை வெளியேற்றியது ஆர்ஜென்ரீனாவுக்குப்
பின்னடைவு என ரசிகர்கள் கருதுகிறார்கள். இளம் வீரரான கிறிஸ்யன் பவோனைத் தேர்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1994, 2002, 2010,2014 ஆம் ஆண்டுகளில்
நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் நைஜீரியாவை எதிர்த்து விளையாடிய ஆர்ஜென்ரீனா நான்கு
போட்டிகளிலும் வெற்றி பெற்றது. 10 தகுதிகாண் போட்டிகளில் ஆர்ஜென்ரீனா 19 கோல்கள் மட்டும்
அடித்தது. அதற்கு எதிராக 16 கோல்கள் அடிக்கப்பட்டன. இந்தப்புள்ளி விபரம் ஆர்ஜென்ரீனாவுக்கு
ஆரோக்கியமானதல்ல.
No comments:
Post a Comment