Tuesday, December 20, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 47


 எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி என்பது   ரசிகர்களுக்குத் தெரியும் ஆனால், அந்தத்திருமணம் நடப்பதற்கு பலதடைகள் உருவாகின.   ஜானகி எம்.ஜி.ஆரைக் காதலிப்பதை அவரது மாமன் விரும்பவில்லை. ஜானகி மாமனின் கட்டுப்பாட்டில் இருந்தார். ஒப்பந்தம், பணக்கொடுப்பனவு எல்லாவற்றையும் அவர் கவனித்தார்.  அவரை மீறி ஜானகியால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆரை மறக்கவும் அவரால் முடியவில்லை.

மருதநாட்டு இளவரசி படத்தில் எம்.ஜி.ஆரும் ஜானகியும் நடித்துக் கொண்டிருந்தார்கள்.‘மருத நாட்டு இளவரசி’ படம் முடிவடையாததால் ஜானகியிடம் அந்தப்   படத்தின் கால்ஷீட்டைப் பற்றி பேச படத் தயாரிப்பாளர்  முத்துசாமி  அவரது வீட்டுக்குச் சென்ற போது ”என்ன எம்.ஜி.ஆருக்காக  தூது வந்திருக்கிறீர்களா?” என்று அவரைப் பார்த்து ஜானகியின் மாமா கேட்க “எங்களுடைய “மருத நாட்டு இளவரசி” படத்தில் நடிக்கும் ஜானகியைப் பார்த்து ஷூட்டிங்கிற்கு கால்ஷீட் வாங்க வந்திருக்கிறேன்” என்று சற்று கோபத்தோடு பதில் சொன்னார் முத்துசாமி.

அவருடைய அந்தப் பதிலால் ஆத்திரமடைந்த ஜானகியின் மாமா, ”இது என் வீடு. என்னுடைய அனுமதியின்றி இங்கு இருப்பவர்களுடன் பேச முடியாது” என்று சொல்ல அவருடைய பதிலால் கோபத்தின் உச்சிக்குப் போன  முத்துசாமி, ஜானகி அவருக்கு அனுப்பியிருந்த தந்தியை  ஜானகியின் மாமா  முகத்துக்கு எதிராக  நீட்டினார்.

“இந்தத்  தந்தி எங்கள் படத்தில் நடிக்கும் நடிகை இந்த விலாசத்திலிருந்து எங்களுக்கு அனுப்பியது. அவருடன் நான் பேச நீங்கள் தடை விதித்தால்  எனது வக்கீல் மூலம் எப்படி அவரது கால்ஷீட்டை வாங்கி படத்தை முடிப்பது என்று எனக்குத் தெரியும்” என்று முத்துசாமி  சொன்னவுடன்  ஜானகியின் மாமா உடனே கீழே  இறங்கி வந்தது மட்டுமின்றி, ”சும்மா விளையாட்டாக நான் ஏதோ சொன்னால் அதற்குப் போய் இப்படி கோபப்படுகிறீர்களே” என்று அவரிடம் சொல்லிவிட்டு, ஜானகியை அழைத்து அந்தப் படத்திற்கான கால்ஷீட் தேதிகளை எல்லாம் குறித்து கொடுக்கச் சொன்னார்.

ஜானகி எழுதி கொடுத்த  கால்ஷீட் திகதிகளை வாங்கிக் கொண்டு  எம்.ஜி.ஆரை சந்திக்க வந்த முத்துசாமி ஜானகி விட்டில் நடந்தது அனைத்தையும் எம்ஜிஆரிடம் அப்படியே சொன்னார்.கால்ஷீட்டுகளை ஜானகியே எழுதிக் கொடுத்தார் என்று முத்துசாமி சொன்னதிலிருந்து  தனது படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி தானே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை ஜானகி பெற்றிருப்பதை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர் மகிழ்ச்சி அடைந்தார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் “மருத நாட்டு இளவரசி” படத்தின் படப்படிப்பு  மைசூரில் தொடங்கியது.  அந்த முறை ஜானகியுடன் அவரது மாமா வரவில்லை. அதற்குப் பதிலாக ஜானகியின் தந்தையான ராஜகோபால அய்யர்  வந்திருந்தார். 

 இனி படப்பிடிப்பின் நடுவே ஜானகியுடன் பேச தனக்கு எந்தத் தடையும் இருக்காது என்று எம்.ஜி.ஆர். நம்பினார்.ஆனால் படப்படிப்பு தளத்தில் அந்த படத்தின் வசனங்களை மீறி எம்.ஜி.ஆரிடம் ஒரு வார்த்தைகூட ஜானகி பேசவில்லை. அவருடைய அந்த நடவடிக்கை எம்ஜிஆருக்கு புதிராக இருந்தது. மறுநாள் எம்.ஜி.ஆருக்கு ஜானகியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

 எம்.ஜி.ஆரைப் பற்றியும், தன்னைப் பற்றியும் தனது தந்தையிடம் தப்புத் தப்பாக அவரது மாமா சொல்லியிருப்பதாகவும், அது உண்மை என்று தனது தந்தை நம்பிவிடக் கூடாது என்பதால்தான் தான் ஒரு வார்த்தைகூட எம்.ஜி.ஆருடன் பேசாமல் தவிர்த்துவிட்டதாகவும் அந்தக் கடிதத்தின் மூலம் எம்.ஜி.ஆருக்கு தெளிவுபடுத்தியிருந்தார் ஜானகி.

இதற்கிடையில் ஜானகியை பத்து ஆண்டுகளுக்கு தான் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும்,தனது அனுமதியின்றி அவர் எந்த புதிய படத்தையும் ஒப்புக் கொள்ளக் கூடாது என்றும், ‘மருத நாட்டு இளவரசி’ படத்தை முடிப்பதற்கான கால்ஷீட்டுகளைக்கூட அதன் தயாரிப்பாளர்கள் தன்னிடம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு கடிதத்தை எழுதி அதை பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தார் ஜானகியின் மாமா.

புதிதாக இரண்டு படங்களில் ஜானகி நடிக்க தான்  ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், அந்த படங்களில் நடிக்கவில்லை என்றால் அதற்கான நஷ்ட ஈட்டினை ஜானகி தர வேண்டும் என்ற மிரட்டலான வாசகங்களும் அந்த கடிதத்தில் இடம் பெற்றிருந்ததைப் பார்த்ததும் கலக்கத்தில் ஆழ்ந்த எம்.ஜி.ஆர். அந்த ஒப்பந்தம் பற்றி ஜானகியிடம் கேட்டபோது “அப்படி எந்த  ஒரு ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்து போடவில்லை” என்று அவரிடம் சொன்னார் ஜானகி.

மிகப் பெரிய குழப்பத்துடன் எம்.ஜி.ஆர் தனது வக்கீலை சந்தித்தபோது  அந்தக்  கடிதத்தை ஒரு முறைக்கு, இரு முறை படித்துப் பார்த்த அந்த வக்கீல்  அந்த வழக்கை சென்னையில்தான் நடத்த வேண்டும் என்றும் சென்னையில் நல்ல ஒரு வழக்கறிஞர் துணையுடன் வழக்கை நடத்துமாறும் எம். ஜி.ஆரிடம் சொன்னார்.

‘மருத நாட்டு இளவரசி’ படத்தின் படப்பிடிப்பு  முடிந்ததும் தனது தந்தையுடன் மெட்ராசிற்கு சென்ற ஜானகி இந்த முறை தனது மந்தவெளி வீட்டிலே  தங்காமல் இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்களின் மனைவியான எஸ்.டி.சுப்புலட்சுமி  வீட்டில்  தங்கினார். கே.சுப்ரமணியம் ஜானகியை முதன்முதலாக திரையிலே அறிமுகப்படுத்தியவர் என்பதற்கு அப்பாற்பட்டு தனது மகளைப் போல அவரைப் பாவித்து அன்பு செலுத்தியவர் அவர். ஆகவே  தன்னுடைய  பிரச்னைகள் எல்லாவற்றையும் அவரிடம் எடுத்துச் சொன்னார் ஜானகி.

ஜானகி சொன்ன எல்லாற்றையும் கேட்ட பின்னர் ”இந்த பிரச்னை குறித்து நீ வழக்கு தொடர்ந்தால் உன்னுடைய மாமாவுக்கு சிறை தண்டனைகூட கிடைக்கலாம். அதற்குப் பின்னர் அவர் உன்னிடம் வந்து கண்ணீர் விட்டு அழ, நீ அவருக்காக மனமிரங்கி  வழக்கை  வாபஸ் பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்தாய் என்றால் எல்லாம் தலைகீழ் ஆகிவிடும். அது மட்டுமில்லாமல்  உனக்கு உதவி செய்த பலருக்கும் சட்ட ரீதியாக பல தொல்லைகள் ஏற்படவும்  வாய்ப்பிருக்கிறது. அதனால்  நீ உறுதியாக இருப்பதாக இருந்தால் சொல். வழக்கைத் தொடரலாம்” என்று ஜானகியை எச்சரித்தார்.

அவர் சொன்னதை ஜானகி ஏற்றுக் கொண்டவுடன் அவருக்காக ஒரு பெரிய வக்கீலை அவர் ஏற்பாடு செய்து தந்தார். வழக்குத் தொடர்வதர்கு முன்னர்  பேசித்தீர்க்க  வக்கீல் முயற்சித்தார்.  ஜானகியின் மாமா  ஒப்புக்கொள்ளவில்லை. ஜெமினி அதிபரான எஸ்.எஸ்.வாசனுக்கு ஜானகியின் மாமாவைத் தெரியும் என்பதால் அவரிடம் சொல்லி தனது மாமாவிற்கு அறிவுரை கூறச் சொல்லலாம் என்ற எண்ணத்தில்  எஸ்.எஸ்.வாசனை சந்தித்த ஜானகி தன்னுடைய வாழ்க்கைப் பிரச்னையைப் பற்றி அவருக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னார். எஸ்.எஸ்.வாசன் ஜானகியின் மாமாவைச் சந்தித்து பேசிப்பார்த்தார். ஜானகியின் பணத்தில் அவர் குறியாக  இருப்பது தெரியவந்தது.

 “ஜானகியின் பணத்தில் ஒரு காசுகூட எனக்கு வேண்டாம். ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றும் ஜானகியின் உறவினரிடம் ஜானகியின் மொத்த பணத்தையும், நான் தந்து விடுகிறேன். ராமச்சந்திரனைப் பொறுத்தவரை அவர் பணத்துக்காகத்தான் ஜானகியை காதலிப்பது போல நடிக்கிறார்.ஜானகியிடம் பணம் இல்லை என்றால் அவர் பக்கம் ராமச்சந்திரன் திரும்பவே மாட்டார்” என்று வாசனிடம் கூறினார்  ஜானகியின் மாமா.

அதற்குப் பிறகு ஜானகியை சந்தித்த வாசன்  எதிர்காலத்தைப் பற்றி நன்கு சிந்தித்து அதற்குப் பின் ஒரு முடிவை மேற்கொள்ளும்படி ஜானகிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

ஜானகியின் மாமா  எந்த அளவு நாணயமில்லாதவர் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தால்தான் ஜானகியோடு அவர் போட்டுக் கொண்டதாக சொல்லப்பட்ட ஒப்பந்தம் போலியானது என்பதை அந்த நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் என்ற சூழ்நிலை ஒரு காலக்கட்டத்தில் உருவானது.

இதற்கிடையில் ஜானகியின் பணத்தை ஜெமினி ஸ்டுடியோவிலே பணியாற்றிக் கொண்டிருந்த அவரது  உறவினரிடம் கொடுத்து விடுவதாகச் சொன்ன ஜானகியின் மாமா கொடுப்பது போல கொடுத்துவிட்டு அந்தப் பணத்தை திரும்பவும் வாங்கிச் சென்றுவிட்டிருந்தார்.

“அந்த   விஷயத்தை  நீதிமன்றத்தில் தக்க சாட்சியங்களோடு நிரூபித்தால் அது நிச்சயமாக ஜானகிக்கு சாதகமாக அமையும். ஆனால், அதை நிரூபிக்க வேண்டுமென்றால் ஜெமினி ஸ்டூடியோஸ் அதிபரான எஸ்.எஸ்.வாசன் அவர்கள்  கூண்டிலேறி சாட்சி சொல்லியாக வேண்டும்” என்றார் ஜானகியின் வக்கீல்.

ஒரு நடிகையின் சொந்த பிரச்னைக்காக அவ்வளவு பெரிய ஸ்டுடியோவின் அதிபர்  நீதிமன்றத்துக்கு வந்து சாட்சி சொல்வாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தபோதிலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் “நீங்கள் நீதிமன்றத்துக்கு நேரில்  வந்து சாட்சி சொல்ல  முடியுமா?” என்று எஸ்.எஸ்.வாசனை  நேரில் பார்த்து கேட்பதற்காக ஜானகியும், அவரது தந்தையும் ஜெமினி ஸ்டுடியோவிற்கு சென்றனர்.அவர்கள் சொன்னதைக் கேட்ட அடுத்த நிமிடமே “நான் தாராளமாக வரத் தயார்” என்றார் எஸ்.எஸ்.வாசன்

“ஜானகியை கூண்டிலே நிற்க வைத்து மிகவும்  கேவலமான கேள்விகளை எல்லாம் அவரைப் பார்த்து கேட்டார்கள். நீங்கள் நீதிமன்றத்துக்கு வரும்போது அப்படிப்பட்ட கேள்விகளை அவர்கள் உங்களைப் பார்த்தும் கேட்கலாம். அதனால் நீங்கள் நீதிமன்றத்துக்கு வருவது பற்றி  ஒரு முறைக்கு, இரு முறை யோசித்து முடிவெடுங்கள்” என்று அவரிடம் சொன்னார் ஜானகியின் தந்தை.

“ஜானகியின் பணத்தை  மாமா மிகவும் தந்திரமாக அபகரித்திருக்கிறார்.   அதை நான் நீதிமன்றத்தில் சொல்லாமல் வேறு எங்கு சொல்ல முடியும்?” என்று ஜானகியின் தந்தையைப் பார்த்து கேட்ட எஸ்.எஸ்.வாசன் “தங்களுடைய தவறுகளை மறைப்பதற்காக குற்றவாளிகள் சில தந்திரங்களை செய்யத்தான் செய்வார்கள். அதற்கெல்லாம் பயந்தால் ஆகுமா?” என்று  கேட்டது மட்டுமின்றி தைரியமாக நீதிமன்றத்திற்கு வந்து, கூண்டில் ஏறி ஜானகிக்கு ஆதரவாக தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார். 

அந்த வழக்கில் ஜானகிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததற்கும் அதைத் தொடர்ந்து ஜானகி எம்.ஜி.ஆரை திருமணம் செய்ததற்கும் எஸ்.எஸ். வாசனின் அந்த சாட்சியே காரணமாக  அமைந்தது.

     

No comments: