Wednesday, December 21, 2022

ஷேன் வோனின் எதிர்வுகூறல் நிஜமாகியது


 பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து 3– 0 என்ற கணக்கில்  தொடரை வென்றது.

இப்போட்டியில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இளம் சுழல் பந்து வீச்சாளர் ரெஹன் அகமத் 18 வருடம் 126 நாட்களில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் விளையாடும் இங்கிலாந்து வீரர் என்ற பிரைன் க்ளோஸ் இன் 73 வருட சாதனை தகர்த்த அவர் புதிய சாதனை படைத்தார்.

லீசெஸ்டர்ஷைர் அணிக்காக கவுண்டி தொடரில் வெறும் 3 முதல் தரம், 7 லிஸ்ட் ஏ போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் வெறும் 14 விக்கெட்டுகளையும் 195 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார். அந்த வகையில்  குறைவான போட்டியில் மட்டுமே விளையாடி ஆரம்ப கட்டத்திலேயே இருக்கும் அவர் இவ்வளவு சீக்கிரமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் அந்த திறமையை சமீபத்தில் மறைந்த அவுஸ்திரேலியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் வரலாறு கண்ட மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சாளரான ஷேன் வோர்னே 5 வருடங்களுக்கு முன்பே கணித்துள்ளார். ஆம் ஒருமுறை இங்கிலாந்துக்கு பயணித்த ஷேன் வார்னே 13 வயதில் இருந்த ரெஹன் அஹமத் வலைப்பயிற்சியில் பந்து வீசுவதை நேரடியாக பார்த்துள்ளார். அவரது நுணுக்கங்களை உன்னிப்பாக கவனித்து புரிந்து கொண்ட அவர் “நீ 15 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடுவாய்” என்று அப்போதே நேரடியாக பாராட்டினார்.

அவரது வாக்கு போலவே 16 வயதில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அறிமுகமான ரெஹன் அஹமத் பாகிஸ்தானுக்கு எதிரான தன்னுடைய அறிமுக போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சாய்ந்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற அவுஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் (18 வருடம் 190 நாட்கள்) சாதனையை தகர்த்த அவர் (18 வருடம் 128 நாட்கள்) புதிய உலக சாதனையும் படைத்துள்ளார்.

No comments: