Thursday, April 3, 2014

சூரன் ரவிவர்மாவின் சினிமாக் கட்டுரைகள்

நண்பர் சூரன் ரவிவர்மா அவர்கள் ஒரு பத்திரிகையாளார் என்பதை அறிவேன்.ஆயினும் அவர் தன்னை முன்னிலைப்படுத்திச் செயற்படாததனால் அவர் பற்றிய முலு விவரங்களையும் நான் அறியேன்.
கடந்த நூற்றாண்டிலே வீரகேசரி நாளிதழ் ஞாயிறு பதிப்புகளின் இணை ஆசிரியராகச் சிறிது காலம் சக ஆசிரியர் ஆ.சிவநேசச்செல்வனுடன் இணைந்து பணி புரிந்த போது ரவிவர்மா அவர்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்தாரோ நான் அறிந்திருக்கவில்லை. 
அன்றைய காலகட்டத்தில் நான் 'வீரகேசரி' அலுவலகத்திற்கு ஒரு கட்டுரையாளராக அன்றைய ஞயிறு பதிப்பின் ஆசிரியர் தேவராஜ் அவர்களை சந்திக்கச் சென்ற பொழுது, ரவிவர்மா அவர்களை தற்செயலாக சந்தித்துப் பேச நேர்ந்தது.அப்பொழுது அவர் மெட்ரோ என்ற நாளிதழின் ஆசிரியராக இருந்தார் என்று நினைக்கிறேன்.
பின்னர் ஃபேஷ் புக் ஊடாக அதாவது முகநூல் என்ற இணயதளம் மூலம் நட்புக் கொண்டேன். பின்னர் தெரிந்தது அவர் மறைந்த எழுத்தாளரும், தினகரன் நாள்தழின் ஆசிரியராகவிருந்த அமரர் ராஜ ஸ்ரீ காந்தனின் உறவினர் என்பதை.
திரு.ரவிவர்மா அவர்கள் அரசியல் திறனாய்வாளராகவும் வெளிநாட்டுச் செய்திப் பகுப்பாளராகவும் மெட்ரோ இதழில் எழுதுவதை சில வேளைகளில் நான் பார்த்தும் வாசித்துமிருக்கிறேன். 
இப்படியிருக்கையில் ஒருநாள் கொழும்புத் தமிழ்ச் சங்கக் கூட்டமொன்றில் திரு.ரவிவர்மாவை சந்தித்த பொழுது தனது நூல் ஒன்று அண்மையில் வெளியிடப்பட இருக்கிறது என்றும், அந்த வெளியீட்டு விழாவிலே கலந்து கொள்ள வேண்டும் என்றும் என்னைக் கேட்டுக் கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன் உடன்பட்டேன். 
திரு.ரவிவர்மா அவர்கள் ஒரு கற்றை பத்திரிகைகளைக் கொண்டு வந்து தந்து அவற்றைப் படித்து அபிப்பிராயம் சொல்லும் படி கேட்டுக்கொண்டார். இக்கட்டுரைகளை அவர் தனது வழக்கமான ரவிவர்மா என்ற பெயரில் எழுதாமல் புனை பெயரில் எழுதியிருப்பதை அவதானித்தேன். அந்தப் புனை பெயர் "ரமணி" என்றிருக்கக் கண்டேன்.
பல்துறை சார்ந்த கலை இலக்கியங்களில் நாட்டமுடையவன் என்ற முறையில் நான் திரைப்படக் கலை பற்றியும் ஈடுபாடுடையவனாக இருந்து வருகிறேன். திரைப்படங்களைப் பற்றி நான் 1960 முதல் வானொலியிலும், ஏடுகளிலும் நான் ஒலிபரப்பியும் எழுதியும் வருகிறேன். 
உயர்தரக் கலைப்படங்கள் தொடர்பான அக்கறையுள்ளவனுக்கு "ரமணி" என்கின்ற ரவிவர்மா அவர்கள் என்னைப் பலவந்தமாக இத்தகைய கட்டுரைகளைப் பற்றியும் படிக்கும் படி பணித்திருக்கின்றார்.
இங்கு நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.ஏனெனில் ரமணி அதாவது ரவிவர்மா அவர்கள் எனக்குப் புதியதோர் எழுத்தாளராவார். 
சூரன் ரவிவர்மா, ரமணி தமது சினிமாக் கட்டுரைகளைத் தொகுத்து சீர் செய்து தனிப் புத்தகமாக வெளியிட வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் நிறைய நாம் தெரிந்து வைத்திருக்காத பல செய்திகளையும், அபிப்பிராயங்களையும், பகுப்பாய்வுகளையும் அவர் நிறையச் செய்துள்ளார்.
ரமணிபோல, பாலசங்குப்பிப் பிள்ளை, ஷண், மானா மக்கீன், யசீந்திரா போன்றவர்களும் தமிழ் சினிமா பற்றி நிறையத் தகவல்களைப் பத்திரிக்கை வாயிலாகத் தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த இடத்தில் இலங்கைத் தமிழ் சினிமா தொடர்பாக ஆதாரபூர்வமான முறையில் நூல்களையும்,கட்டுரைகளையும் எழுதிவரும் தம்பி ஐயா தேவதாஸ் வரிசையில் ரவிவர்மாவின் முயற்சியும் பாராட்டுக்குரியது.

கே.எஸ்.சிவகுமாரன். 
தினகரன் வாரமஞ்சரி 29/09/2013

உலகக்கிண்ணம் 2014

பெல்ஜியம் 
 பெல்ஜியம், ரஷ்யா, தென் கொரியா, அல்ஜீரியா ஆகியன குழு எச் இல் உள்ளன. ஐரோப்பாக் கண்டத்திலிருந்து பெல்ஜியம், ரஷ்யா ஆகியன உலகக்கிண்ணப் போட்டி யில் விளையாடத் தகுதிபெற்றன. ஆசியா கண்டத்திலிருந்து தென்கொரியாவும்,  ஆபிரிக் கக் கண்டத்திலிருந்து,   அல்ஜீரியாவும், உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. ஒரு இடம் முன்னேறி 10 ஆவது இடத்தில் பெல்ஜியம் உள்ளது. 3 இடம் முன்னேறி 19ஆவது இடத்தில் ரஷ்யா வும், ஒரு இடம் முன்னேறி 25ஆவது இடத்தில் அல்ஜீரியாவும், ஓர் இடம் முன் னேறி 60ஆவது இடத்தில் தென்கொரி யாவும் உள்ளன.

                      பெல்ஜியம்

வேல்ஸ், குரோஷியா, சேர்பியா, ஸ்கொட்லண்ட், மஸ்டோனியா ஆகிய வற்றுடன் குழு ஏ யில் தகுதிகாண் போட்டியில் விளையாடியது பெல்ஜியம். எட்டு போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தி 26 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துத் தகுதிபெற்றது. பெல்ஜியம் எட்டு கோல்கள் அடித்தது. எதிராக நான்கு கோல்கள் அடிக்கப்பட்டன. 12 மஞ்சள் அட்டைகள் பெல்ஜியத்துக்கு எதிராகக் காட் டப்பட்டன. கெவின்டி புருனி நான்கு கோல்கள் அடித்தார். ஆறு போட்டிகளில் எதிரணிகள் கோல் அடிக்கவில்லை. 

பெல்ஜியம் அணியின் முன்னாள் வீரரான மார்க் வில்மோஸ்ட் பயிற்சியா ளராக உள்ளார். பெல்ஜியம் அணிக்காக நான்கு உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியவர். மான்சிஸ்டர் அணியின் முன்னணி வீரரான வின்சென்ட் கொம்பனி தலைவராக உள்ளார். மாரோனிபெலானி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள் ளார். ஆறு அடி நான்கு அங்கு உயரமான இவர், மான்சிஸ்டர் அணியின் வீரராவார். ரொமூவுல் லுகாகு , எவரொன், பின்சென்ட் கொம்பனி, பெலானினி, ஸ்ரிவ்டெபேர், கெவின் டி புருனி ஆகியோர் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

1930ஆம் ஆண்டு முதன் முதலில் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய பெல்ஜியம்,  12ஆவது தடவையாக விளையாடத் தகுதிபெற்றுள்ளது. என்ஸோ ஸ்கொபி, ஹீன்மரி பபாப், மாக் வில்மோஸ்ட் ஆகியோர் முன்னாள் வீரர் களாவர்.
1986ஆம் ஆண்டு அரை இறுதிவரை முன்னேறி நான்காம் இடம் பிடித்தது. 1920ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சம்பியனானது.

 
                                                 ரஷ்யா

வடஅயர்லாந்து, இஸ்ரேல், போத்துகல், அஸபஜான், லக்ஸம்பேக் ஆகியவற்றுடன் குழு எப் பில் விளையாடிய ரஷ்யா ஏழு வெற்றியுடன் ஒரு போட்டியைச் சமப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. 22 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. ரஷ்யா 20 கோல்கள் அடித்தது. எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. 11 மஞ்சள் அட்டைகள்  காட்டப்பட்டன. அலெக் ஸாண்ட்ரா கெசகோவ் ஐந்து கோல்கள் அடித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான எட்டு போட்டிகளில் எதிரணிகள் கோல் அடிக்க வில்லை.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான பபியோகாபலோ அணியின் பயிற்சியாளராக உள்ளனர். ஐகோர் டெனிசோவ் உள்ளார். அலெக்ஸாண்டர் கெசகோவ் ரஷ்யாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உள் ளார். இளம் வீரரான அலன் டஸகோவ், கோல் கீப்பர், இகோர் அகின் பீவ்,  விக்ரரி பைசுனில் ஆகியோரின் பங்களிப்பு பலமாக  உள்ளது.
1958ஆம் ஆண்டு முதன் முதலில் உலகக்கிண்ணப் போட்டியில் விளை யாடிய ரஷ்யா,  11ஆவது தடவையாக விளையாடத் தகுதிபெற்றுள்ளது.  யசின்,  லெக்புளொகின் ஆகியோர் முன்னாள்  வீரர்களாவர். 1970ஆம் ஆண்டு அரை இறுதிவரை முன்னேறி நான்காம் இடம்பிடித்தது. 
அடுத்த உலகக்கிண்ணப் போட்டியை நடத்தும் நாடு என்ற பெருமையுடன் களம் புக காத்திருக்கிறது ரஷ்யா.
ரமணி 
சுடர் ஒளி 30/03/14


Tuesday, April 1, 2014

அரசியல் அநாதையான காங்கிரஸ்


தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று ஆரம்பமானது. ஏப்ரல் 5ஆம் திகதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம். தமிழகத்தில் ஐந்து முனைப்போட்டி என்று ஊடகங்கள் பரப்புரை செய்து வருகின்றன. ஆறாவது முனையை ஆம் ஆத்மி கட்சி திறந்துள்ளது. டில்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸை படுதோல்வியடையச் செய்து பாரதீய ஜனதாக்கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பறித்தெடுத்த  ஆம் ஆத்மியைப் பற்றி தமிழக அரசியல்வாதிகள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

பத்திரிகையாளர் ஞானி, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்துக்கு தலைமைவகித்த உதயகுமார் ஆகியோர்  ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிடுகின்றனர். இந்தியாவில் ஆம் ஆத்மிக்கு உள்ள செல்வாக்கு சரிந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழக அரசியலிலும் கால்  ஊன்ற ஆம் ஆத்மி முயற்சி  செய்துவருகின்றது.

அரசியலில் சரித்திரம் படைக்கப் போவதாக சபதமிட்டு அரசியல் நீரோட்டத்தில் குதித்த விஜயகாந்த் கரையேறுவதற்காக பாரதீய ஜனதாக்கட்சி எனும் துடுப்பைப் பற்றிப் பிடித்துள்ளார். தமிழகத்தில் செல்வாக்கு மிக்க நடிகரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் எனப் பல இடங்களில் இருந்தும் அழுத்தம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவ்வப்போது சில அறிக்கைகளை வெளியிட்டுவிட்டு அரசியலுக்கும் எனக்கும் எவ்வித சம்மதமும் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார் ரஜினிகாந்த்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேயுடன் இணைந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் அற்ற அரசியல் செய்யப் போவதாக பகிரங்கமாக அறிக்கைவிடுத்து டில்லி முதல்வராக அரியணை ஏறினார். ஒருநாள் முதல்வன் போன்று அதிரடியாகப் பல திட்டங்களை முன்னெடுத்த கெஜ்ரிவால் அரசியலைப்  புரிந்துகொண்ட பின்னர் டில்லி முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்தார்.
தமிழக அரசியலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத ஆம் ஆத்மி தமிழகத்தில் காலூன்ற  முயற்சி செய்துவருகிறது. பழம் பெரும் அரசியல் பெருச்சாளிகள் தனித்தனியாக தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டனர். இவர்களுடன் ஆம் ஆத்மியும் தனிக்கட்சியாக அரசியல் அரங்கில் கால் பதித்துள்ளது. அரவணைப்போர்  யாரும் இல்லாது தேர்தலில் குதித்துள்ளது ஆம் ஆத்மி.


தமிழக அரசியலில் தனக்கென ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி அரசியல் அநாதையாக ஏங்கித் தவிக்கிறது. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது இலங்கையில் இறுதியுத்தம் நடைபெற்றது. காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியுடன் தமிழ் உணர்வாளர்கள் களம் இறங்கினர். காங்கிஸுடன் கூட்டணி சேர்ந்த கருணாநிதிக்கு  எதிராகவும், 2009ஆம் ஆண்டு பலமாக எதிர்ப்புப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூரண ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.
இந்தியாவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், இலங்கைப் பிரச்சினையில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்த்தது. ஆனால், காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயற்பட்டது. தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள் காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தனர். அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதிவிட்டு தனது பணி முடிந்தது என்றுவிட்டுவிட்டார்.

இலங்கை விவகாரத்தில் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக காங்கிரஸ்   அரசு நடந்துகொண்டதனால் இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது வெற்றிபெற முடியாது என உணர்ந்த கருணாநிதி கூட்டணியிலிருந்து வெளியேறினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணையை இழந்த காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் தனித்து தேர்தலைச் சந்திக்கிறது. தமிழகத் தேர்தலில் சகல கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. கூட்டணி சேர யாரும் முன்வராததனால் வேறுவழி இன்றி தனித்து தேர்தலைச் சந்திக்கிறது காங்கிரஸ் கட்சி.

தேர்தல் நடைபெறும் முன்பே தோல்வியை உறுதிசெய்த காங்கிரஸ் கட்சி, ஜெனிவாவில் அமெரிக்கப் பிரேரணைக்கு நடுநிலை வகித்ததனால்  வேட்புமனுத்தாக்கலுக்கு முன்பே தோல்வியை உறுதிப்படுத்தியது. இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என் எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் நடுநிலை வகித்து தமிழக மக்களை ஏமாற்றிவிட்டது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைத் தூக்கி நிமிர்த்த முடியாது என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ப.சிதம்பரம் என்ன செய்வதென்று  தெரியாது புலம்பத் தொடங்கிவிட்டார்.

சோனியா, மன்மோகன்சிங் ஆகிய இருவருக்கும் மிகவும் நெருக்கமானவர் சிதம்பரம். இந்தியா நடுநிலை வகித்ததை அறிந்ததும் தப்பு நடந்துவிட்டது என உணருகிறார். ஜெனிவாவில் உள்ள அதிகாரிகளின் முடிவினால் தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் மிகவும் அவமானமான முறையில் தோல்வியடையும் என மறைமுகமான ஒப்புக்கொண்டுள்ளார் அமைச்சர் ப.சிதம்பரம்.
காங்கிஸ் கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேறியபோது வீரவனம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் படிப்படியாக உண்மையை உணர்ந்து கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் மீண்டும் கூட்டுச் சேர வேண்டும் என டில்லியிலுள்ள காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்தனர் ஸ்டாலினின் பிடிவாதமே திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டுச் சேர்வதற்குத் தடையாக உள்ளது.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை தோன்றினால் ஆதரவளிக்கலாம் என்று கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார்.  ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டதனால் இறுதிக்கட்ட வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டதாக கவலைப்படுகிறார்.காங்கிரஸ் கட்சியுடன் திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்திருக்கலாம் தானே எனக் கருதியவர்களும் இப்போது வாய்மூடி மௌனமாகிவிட்டனர். ஸ்டாலினின் பிடிவாதம் வெற்றியளித்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த அழகிரி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  எதிரான கட்சிகள் எல்லாம் அழகிரிக்கு வலை வீசுகின்றன. கருணாநிதியையும், ஸ்டாலினையும் அறவே பிடிக்காத வைகோ வீடுதேடிச் சென்று அழகிரியைச் சந்தித்துள்ளார். மதுரைப் பகுதியில் அழகிரிக்கு செல்வாக்கு உள்ளது. அழகிரியை வளைத்தால் வாக்கு பெறலாம் என்று கருதும் தலைவர்கள் அவரைத் தினமும் சந்திக்கின்றனர்.
கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி  வைக்கப்பட்டிருந்த அழகிரியை ஒரேயடியாக தூக்கி எறிந்து விட்டது திராவிட முன்னேற்றக் கழகம். அழகிரியின் அதிரடி அவரின் அரசியல் வாழ்வுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.

விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் ஆகியோருக்கிடையேயான  உட் பூசலால் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. விஜயகாந்தின் வேட்பாளர்களை  ஆதரித்து தேர்தல் பிரசாரம்  செய்யப் போவதில்லை என டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சிக்காக பிரசாரம் செய்யப் போவதில்லை என விஜயகாந்த் அறிவித்துள்ளார். விஜயகாந்துடன் கூட்டணி சேரப் போவதில்லை என ராமதஸ் பகிரங்கமாக அறிவித்தார். அவரின் மகன் அன்புமணியின் விருப்பத்துக்காக பாதி மனதுடன் கூட்டணிசேர சம்மதித்தார் ராமதாஸ். அன்புமணிக்காக விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்
.
நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் என ராமதாஸால் அறிவிக்கப்பட்டவர்கள் சோர்ந்து போயுள்ளனர். தேர்தல் கூட்டணிக்கு முன்பாக சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பே ஒரு சில வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் டாக்டர் ராமதாஸ்.  அவர்களில் பலருக்கு தொகுதி இல்லாமல் போனது.  ராமதாஸ்  அறிவித்த தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதனால் மனமுடைந்தவர்கள் கூட்டணிக் கட்சிகளுக்காக தேர்தல் பிரசாரம் செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளனர். இது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்துக்கும் , ராமதாஸுக்கும் வட மாநிலங்களில் செல்வாக்கு உள்ளது. இருவரும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தால்தான் வெற்றி பெறலாம். ஒருவர் சறுக்கினால்  தோல்வி  நிச்சயம். இந்நிலையில் கீரியும் பாம்பும் போல இருவரும் எதிரும் புதிருமாக இருப்பதனால் வெற்றி கேள்விக்குரியது.

வைகோவுக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்குள்ளது. ராஜீவின் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி  வைகோவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போகிறாராம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த வைகோ இம்மு எப்படியும் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் உள்ளார்.
ஆகையால் ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோருடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்யத் தயாராகிவிட்டார் வைகோ.
வர்மா 
சுடர் ஒளி 30/03/14