Wednesday, March 7, 2018

முத்தரப்பு ரி 20 தொடர் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

ஆட்ட நாயகன் குசல் பெரேரா

 

இலங்கை   சுதந்திரக்கிண்ண ரி20 சுற்றுப்போட்டியில் இந்தியா,பங்களாதேஷ்,இலங்கை ஆகியன விளையாடுகின்றன. கொழும்பு பிறேமதாஸ மைதானத்தில் நடைபெற முதலாவது  போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய  இலங்கை  ஐந்து விக்கெற் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நானயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலவர் சண்டிமால் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஐந்து விக்கெற்களை இழந்து 174 ஓட்ட்டங்கள் எடுத்தது.

ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரின் 4 ஆவது பந்தில் ரோகித் சர்மா ஓட்டம் எதுவும் எடுக்காமல் சமீரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் நுவான் பிரதீப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

3 ஆவது  விக்கெட்டுக்கு தவானுடன்  மணிஷ் பண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது.
  12.4 ஓவரில் 104 ஓட்டங்கள்  இருக்கும்போது மணிஷ் பண்டே 37 ஓட்டங்களில் (35 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்ஸ்) ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பந்த் களம் இறங்கினார். அரைசதம் அடித்த தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தவான் 49 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சர்களுடன் 90 ரஓட்டங்கள் எடுத்தார். 5 ஆவது விக்கெற்றுக்கு  ரிஷப் பந்துடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் இரண்டு பவுண்டரியும், ரிஷப் பந்த் ஒரு பவுண்டரியும் அடித்து, கடைசி பந்தில் ஆட்டமிழக்க இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு  174 ஓட்டங்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 6 பந்தில் 13 ஓட்டங்கள் சேர்த்தார்.

சதத்தைத் தவறவிட்ட  தவான்



  175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியஇலங்கை 18.3 ஓவரிகளில் ஐந்து விக்கெற்களை இழந்து 176 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 
 குணதிலகா, குஷால் மெண்டிஸ் ஆகியோர்  ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். இரண்டாவது ஓவரில்
 11 ஓட்டங்கள் எடுத்த மெண்டிசை  வாஷிங்டன்   வெளியேற்றினார்.

அடுத்து களமிறங்கிய குசல் பெரேரா அதிரடியாக ஆடினார். அதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.  மூன்றவது ஓவரில் சர்துல் தாகூரை எதிகொண்ட குசல் பெரேரா  4 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 27 ஓட்டங்கள் எடுத்தார்.இந்த ஜோடி 58 ஓட்டங்கள் சேர்ந்த நிலையில் உனத்கட், குணதிலகாவை வெளியேற்றினார். அதன்பின் இறங்கிய சண்டிமாலும் நீடித்து நிலைக்கவில்லை. சஹால் சுழலில் தனது விக்கெற்றைப்  பறிகொடுத்தார்.

அடுத்து உபுல் தரங்கா களமிறங்கினார். மறுமுனையில் பெராரா தனது அதிரடியை தொடர்ந்தார். இவர் 37 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெற்  இழப்புக்கு 127 ஆக இருந்தது. அதன்பின் இறங்கிய சனகாவும் தரங்காவும் நிதானமாக ஆடினர். ஆனாலும் சஹால் சுழலில் தரங்கா சிக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இலங்கை அணி 5 விக்கெற்இழப்புக்கு 136 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அடுத்து திசரா பெராரா களமிறங்கினார். இருவரும் பொறுமையாக ஆடினர். கடைசி 4 ஓவரில் 35 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இருவரும் ஒன்றும் இரண்டுமாக எடுத்தனர். 17வது ஓவரில் 11 ஓட்டங்களும், 18வது ஓவரில் 16 ஓட்டங்களும் எடுக்க இலங்கை அணியின் வெற்றி உறுதியானது. கடைசி 2 ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் முதல் பந்து  வைடு ஆனது. அடுத்த பந்தில் ஒரு ஓட்டமும், அதற்கடுத்த பந்தில் 2 ஓட்டங்களும், மூன்றாவது பந்தில் 4 ஓட்டங்களும்,  எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது.
 
அந்த அணியின் திசாரா பெரேரா 10 பந்தில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 22ஓட்டங்களும், சனகா 18 பந்தில் 15 ஓட்டங்களும்எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை குசால் பெரேரா பெற்றார்.

இந்திய அணியின் சார்பில் வாஷிங்டன் சுந்தர், சஹால் தலா 2 விக்கெற்களும், உனத்கட் ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினர்.


 90 ஓட்டங்கள் எடுத்த தவான்  ரி20 போட்டியில் தனது அதிக பட்ச ஓட்டத்தைப் பதிவுசெய்தார். முன்னதாக நியூஸிலாந்துக்கு எதிராக டில்லியில் 2017  ஆம் ஆண்டு 80 ஓட்டங்கள் எடுத்தார். இதேவேளை இந்திய மண்ணில் இந்திய வீரர் எடுத்த அதிக பட்ச ஓட்டமும் இதுவாகும். முன்னதாக 2017 ஆம் ஆண்டு கோஹ்லி எடுத்த 82 ஓட்டங்களே அதிகமானதாக இருந்தது.


Sunday, March 4, 2018

ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அழகான மயில் ஸ்ரீதேவி


     

இந்தியத் திரை உலகை சுமார் 20 வருடங்களாகத் தனது   வசீகரச் சிரிப்பால் கட்டிப்போட்ட அழகான மயில் ஸ்ரீதேவி. சிவாஜி- பத்மினி ,சிவாஜி -கே.ஆர்.விஜயா , எம்.ஜி.ஆர் -சரோஜாதேவி ,எம்.ஜி.ஆர் -ஜெயலலிதா ஜோடிக்குப்பின்னர் கமல் - ஸ்ரீதேவி ஜோடி சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.

 துணைவனில் முருகனாக அறிமுகமாகி மூன்று முடிச்சு மூலம் கதாநாயகியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஸ்ரீதேவி 16 வயதினிலே தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.16 வயதினிலே படத்தில் பார்த்த அதே அழகுத் தேவதையாகத்தான் இன்றும் அவர் ஜொலித்தார். காந்தப் புன்னகையின் உறைவிடமான ஸ்ரீதேவி காலமாகிவிட்டார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய  வைத்துள்ளது.

சிவாஜி,எம்.ஜி.ஆர், என்ற இரண்டு இமயங்களின் மடியில் விளையாடி, கமல்,ரஜினி ஆகிய இருவருக்கும் ஈடுகொடுத்து தன்னை முன்னிறுத்தியவர்.  ஹிந்தியில் அமிதாப் ஜிதேந்திரா,ஜெயப்பிரதா,ரேகா போன்ற  நட்சத்திரங்களுடன் போட்டிபோட்டு லேடி சுப்பர் ஸ்டாராக ஜொலித்தவர் ஸ்ரீதேவி எனும் சிரிப்பழகி.

சிவகாசி,மீனாம்பட்டிக் கிராமத்தில் 1963 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி பிறந்தார். தகப்பன் ஐயப்பன் வக்கீலாகத் தொழில் பார்த்தவர். தாயார் ராஜேஸ்வரி தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்டவர். குழந்தை நட்சத்திரமாகத் திரைப்படங்களில் ஜொலித்தபோதும்  தான்  பிறந்த கிராமத்திலேதான் வசித்தார். கதாநாயகியானபின் சென்னையில் குடியேறிய போதும் ஹிந்தியில் ஜொலித்த வேளையிலும் தனது கிராமத்தை மறக்காதவர்.

சாண்டோசின்னப்பா தேவரின் துணைவன் படத்தில்  குழந்தை முருகனாக நடிப்பதற்கு அழகான குழந்தை ஒன்றைத் தேடியபோது, காமராஜரின் சிபார்சில் கண்ணதாசனால் தேவருக்கு அறிமுகமானவர் குழந்தை ஸ்ரீதேவி.  நான்கு வயதான   முருகன் அனைவரையும் கவர்ந்தார் அதன் பின்னர் வெளியான பல படங்களில் சிறுவனாகவும் சிறுமியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். வசந்தமாளிகை, பாபு, பாரதவிலாஸ் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக சிவாஜியுடன் நடித்தார்.. நம்நாடு படத்தில் குழந்தை நட்சத்திரமாக எம்.ஜி.ஆருடன் நடித்தார். கனிமுத்து பாப்பா,திருமாங்கல்யம், அகத்தியர், ஆதிபராசக்தி ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். 23 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தபின்னர் 24 ஆவது படத்தில் கதாநாயகியாகப் பரிணமித்தார்.

குழந்தை நட்சத்திரமான ஸ்ரீதேவியை 1976 ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் மூன்று முடிச்சு படத்தின் மூலம் கதாநாயகியாக்கினார். கமல்,ரஜினி ஆகிய இருவருக்கும் ஈடு கொடுத்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். மூன்று முடிச்சு படத்தில் நடித்தபோது ஸ்ரீதேவிக்கு 13 வயது.  அப்போதும் அவர் சிறுமிதான். கமலின் காதலியாகவும் ரஜினியின் சித்தியாகவும் நடித்து முத்திரை பதித்தார். முதல் படத்தியேலே கமலின் நாயகியாகவும் ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்தார். கமலையும் ரஜினியையும் பட்டை தீட்டிய பாலசந்தர் ஸ்ரீதேவியையும் ஜொலிக்கவைத்தார்.

மூன்று முடிச்சு நாயகி  செல்வியைப்பற்றி ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டிருந்த வேளையில் 1977 ஆம் ஆண்டு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் 16 வயதினிலே பட நாயகியான மயில் ரசிகர்களின் மனதை மயிலிறகால் வருடினார். கமல்,ரஜினி  போன்றவர்களுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி சில படங்களில் சிவாஜியுடன் ஜோடியாக நடித்தார். கமல்,ரஜினி,சிவாஜி,சிவகுமார் போன்ற பலருடன் ஸ்ரீதேவி ஜோடியாக நடித்தபோதும் கமலுடனும் ரஜினியுடனும் நடித்த படங்கள்தான் அதிகமாகப் பேசப்பட்டன.

கமலும் ஸ்ரீதேவியும் இணைந்து  24 படங்களில் நடித்துள்ளனர்.   1976ம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சுதான் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்த முதல் படம். இதில் வில்லன் என்றாலும் கதாநாயனுக்கு இணையாக மிரட்டியவர் ரஜினி 16 வயதினிலே படத்தில் கமல்,ரஜினி,ஸ்ரீதேவி ஆகிய மூவரின் நடிப்பில் யாருடைய நடிப்பு உச்சத்தைத் தொட்டது என்ற பட்டிமன்றத்துக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. சிகப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா,தாயில்லாமல் நானில்லை போன்றவை உச்சம் தொட்ட படங்கள்.

வெள்ளிவிழா படமான கல்யாணராமன், வறுமையின் நிறம் சிவப்பு ஆகிய படங்கள் இருவரின் நடிப்பில் புதிய அத்தியாயத்தைப் படைத்தன. குரு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பெரு வெற்றி பெற்றது. இலங்கையில் ஒருவருடம் ஓடி தமிழ்  மட்டுமல்லாது சிங்கள ரசிகர்களின் மனதிலும் கமலும் ஸ்ரீதேவியும் இடம் பிடித்தனர். மீண்டும் கோகிலா படத்ஹ்டில் கமலும் ஸ்ரீதேவியும் போட்டி போட்டு நடித்தனர்.  சின்னஞ்சிறு வயதில் என்ற பாடல் காட்சி மனதை விட்டு  நீங்காதது.
தேவதாஸ்,வசந்தமாளிகை போன்ற காதல் படங்களுக்கு ஈடாக வெளியான படம் வாழ்வே மாயம். கமலும் ஸ்ரீதேவியும் போட்டி போட்டு நடித்த படம் மூன்றாம் பிறை. கமலுக்கு முதன்  முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம். சத்மா என்ற பெயரில் ஹிந்தியிலும் வெற்றிபெற்ற படம்.

ரஜினியுடன் 22 படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். மூன்று முடிச்சில் வில்லத்தனம் காட்டிய ரஜினி 16 வயதினிலேயும் தொடர்ந்தார். சப்பாணி,மயிலு போன்றே பரட்டையும் பட்டையை கிளப்பியது. வணக்கத்துக்குரிய காதலியே,பிரியா, தாயில்லாமல் நானில்லை, தர்மயுத்தம்,ஜானி,ராம் ராபர்ட் ரஹீம், {தெலுங்கு}, ராணுவ வீரன், தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை ஆகியன வெற்றிப் படங்கள் வரிசையில் முன்னிலை வகிக்கின்றன. 1992 ஆம் ஆண்டு வெளியான சோர் கே கார் சோர்னி என்ற ஹிந்திப் படமே இருவரும் இணைந்து நடித்த கடைசிப் படம்.

மலையாள திரைப்படங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதற்கு சான்றாக 'ஆலிங்கனம்' குட்டவும் சிக்ஷையும்' 'ஆத்ய பாடம்' ' நிமிஷம்' போன்ற திரைப்படங்களை கூறலாம்.

1975ம் ஆண்டு இயக்குநர் கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த 'ஜுலி' என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1978ல் வெளிவந்த சோல்வா சாவன்' (16 வயதினிலே) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி கண்ட 'மூன்றாம் பிறை' திரைப்படம் ஹிந்தியில் சத்மா' என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு புகழையும் தேடித்தந்தது.

அதன் பின் வெளிவந்த 'ஹிம்மத்வாலா' 'சாந்தினி' திரைப் படங்களின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஸ்ரீதேவியும் இணைந்தார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்த ஸ்ரீதேவி 1996ம் ஆண்டு நடிகர் அனில்கபூரின் சகோதரரும் திரைப்படத் தயாரிப்பாளருமான           போனிகபூரை மணமுடித்தார்இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஜான்வி சினிமாவில் நடிக்கின்றார்.

  சினிமாவை விட்டு விலகி இருந்த ஸ்ரீதேவி 14 ஆண்டுகளுக்குப் பின் 2012ம் ஆண்டு வெளிவந்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடித்தார்.    இப்படத்தில் அஜித்தும் நடித்துள்ளார்.  மாம் ஸ்ரீதேவியின் கடைசிப்படம்.  2015  ஆம் ஆண்டு   விஜயுடன் நடித்த புலி என்ற படமே இவர் கடைசியாக நடித்த தமிழ்ப்படம்.

   இந்தியாவின் 4வது உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் ஸ்ரீதேவி பெற்றுள்ளார்.

ஸ்ரீதேவி பெற்ற விருதுகள் :
  2013 ல் பத்மஸ்ரீ விருது
    சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதுகள். 4 முறை
   பிலிம்ஃபேர் சிறப்பு விருது 2 முறை
  1981 ல் மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது
  2013 ல் இங்கிலீஷ் விங்கிலீஷ்.  படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது.
 2013 ல் என்டிடிவி விருது
  2013 ல் இந்தியா டுடேவின் கலைத்துறையில் சிறந்த பெண் விருது
 2013 ல் இந்திய சினிமாவின் பேரரசி விருது
  2015 ல் புலி படத்திற்காக சிறந்த வில்லி விருது
  இந்திய சினிமாவில் இவர் அளித்த பங்களிப்பிற்காக 1990, 2003, 2009, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் 20 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கி கெளவிக்க்கப்பட்டுள்ளார்.
  2012 ல் டாப் 10 பாலிவுட் நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்
ஸ்ரீதேவியின் வாழ்வு முடிந்தாலும் அவர் நடித்த பாத்திரங்கள் ரசிகர்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும்.
வர்மா

Thursday, February 22, 2018

முருகபூபதியின் சொல்லவேண்டிய கதைகள்


  
பத்திரிகைத்துறை இலக்கிய உலகம் ஆகிய இரண்டிலும்  ஆழக்கால் பதித்து தனது ஆளுமையை வெளிப்படுத்திவருபவர் முருகபூபதி. அவர் சென்றுவந்த நாடுகளில் சந்தித்த அனுபவங்களையும், படிப்பினைகளையும், மனிதர்களையும்  பற்றி எழுதியவற்றை  "சொல்ல வேண்டிய கதைகள்" என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.  ஜீவநதி மாத சஞ்சிகையில் 2013  ஆம் ஆண்டு  தை மாதம் முதல் தொடர்ச்சியாக 20  மாதங்கள்  பிரசுரமானவற்றையே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

"இந்தப்புத்தகத்தில் எனது குடும்பத்தில்,சுற்றத்தில் நட்புகளில், ஆழ்ந்து நேசிக்கின்ற குழந்தைகளில் மற்றும் நான் அங்கம் வகிக்கும் அமைப்புகளில் கற்றதையும் பெற்றதையும்தான் பதிவு செய்துள்ளேன். 2014  ஆண்டில் எழுதப்பட்ட தொடர் என்பதால் இந்தப் பதிவுகளின்  காலத்தையும் அவதானித்துக் கொள்ளவும்"  என  முருகபூபதி குறிப்பிட்டுள்ளார்.

பயணக் கட்டுரைகள் பற்றிய தொடர்கள் பல தளங்களில் பிரசுரமாகி உள்ளன. அவற்றில் சில புத்தகமாகவும் வெளியாகி உள்ளன. முருகபூபதியின் "சொல்ல வேண்டிய கதைகள்" அவற்றைவிட தனித்துவமாகவும் வித்தியசமானதாகவும் விளங்குகிறது. அவருடன் வாழ்ந்த உறவினர்கள், பழகிய நண்பர்கள், அறிமுகம் இல்லாத புதியவர்கள் ஆகியோருடனான  அனுபவங்களைப்   பகிர்ந்து கொள்கிறார். அவற்றில் சில வாசகர்களுக்கு எச்சரிக்கையாகவும் படிப்பினையாகவும் அமைகின்றன. ஒரு சில வாசகருக்கு ஏற்பட்ட அனுபவம் போல் தெரிகின்றன. இந்தப் புத்தகத்தில் 20  கட்டுரைகள் உள்ளன. சிலவற்றில் தனது அரசியல் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளர்.

  முருகபூபதியின் தாயின் தகப்பன்   பொலிஸ்காரர். ஆகையால் தாயை  பொலிஸ்காரன் மகள்  என முதலாவது கட்டுரையில் அறிமுகப்படுத்துகிறார். அவர் மீது தாய் அவைத்திருந்த அன்பையும் தாயுடைய உள்ளுணர்வையும் அறிய முடிகிறது. சாகித்திய விருது பெறுபவர் செய்தியின் மூலமாகத்தான் அதனைத் தெரிந்து கொள்ளமுடியும் என்பதையும் பதிவு செய்துள்ளார்.
முருகபூபதி



முருகபூபதியின் கொள்கையைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு குலதெய்வம் எனும் அடுத்த பந்தியின் தலைப்பு  முரணாகத் தெரிந்திருக்கும். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை  இப் பந்தியின் வாயிலாகத் தெளிவு படுத்துகிறார். பல வீடுகளில்  தேடுவரர்றுக் கிடக்கும் அம்மி, ஆட்டக்கல்லு என்பனதான் தனது குல தெய்வம் என்பதை அடுத்த சந்ததிக்கு உணர்த்தும் பதிவு. மதிக்கப்படுபவர்களில் ஒருவராக உயர்ந்த இடத்தில் இருக்கும் முருகபூபதி, "தோசை சிறுக்கன்" என்ற பெயரை பெருமையாக நினைவு படுத்துகிறார்..



 வெளிநாட்டில் வசித்து விட்டு  நாட்டுக்குத் திரும்புபவர்கள் இலங்கையில் நிற்கும் நாட்களில்  திட்டமிடாது செயற்பட்டு, உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்காமல் சென்றுவிடுவார்கள். ஆனால், முருகபூபதி,  ஒரு ஊருக்குச்செல்லும்  போது அங்குள்ள தனது உறவினர் நண்பர், சந்திக்க வேண்டிய  புதியவர் பற்றிய விபரங்களுடன் தான் செல்வார்.  ஜீவநதியில் பிரசுரமான குந்தவையின் கதையைப் படித்தபின் இலங்கைக்குச்சென்றபோது குந்தவையைச் சந்தித்து  நாற்சார் வீட்டைப்பற்றிய குறிப்பைப் பதிவு செய்துள்ளார்.
காவியமாகும் கல்லறைகள் எனும் கட்டுரையின் வாயிலாக  தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை,எம்.ஜி.ஆர்,  கே.டானியல்,லெனின்,ஹென்றி  லோசன்,கிறின் சேகுவேரா, கார்ல் மாக்ஸ்  ஆகியோரை ஞாபகப்படுத்துகிறார். தான் தரிசித்து அஞ்சலி செலுத்திய கல்லறைகளை உணர்வுபூரமாகவும் தரிசிக்காதவற்றை கவலையுடனும் தெரியப்படுத்துகிறார்.

இலங்கை,இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் தேர்தல் என்றால் கலவரமும் வன்செயல்களும் முன்னிலை பெறுகின்றன. அவுஸ்திரேலியாவில் நடைபெறும் தேர்தலை "எங்கள் நாட்டில் தேர்தல்" என முருகபூபதி பதிவிட்டுள்ளார்.  அங்கு தேர்தலில் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்.  வெளிநாட்டில் இருந்தால் அங்குள்ள தூதரகத்தில் வாக்களிக்க வேண்டும். கள்ள வாக்கு, ஆள்மாறாட்டம் எதுவுமே அங்கு  இல்லை. இந்தக் கட்டுரையின் மூலம் இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் தேர்தல் காலத்தில் தனது அனுபவங்களை வெளிப்படுத்துகிறார். இலங்கையில் தனது தேர்தல் பிரசாரங்களையும் நினைவு படுத்துகிறார்.

படித்தவற்றை என்ன செய்வது? புத்தகங்களை  அவதானமாக  பாதுகாத்து வைத்திருப்பது பெரிய பிரச்சினைதான். பத்திரிகையாளரும் எழுத்தாளருமான முருகபூபதிக்கும் இந்தபிரச்சினை இருக்கிறது. இலங்கையில் இருக்கும் போது சிலவற்றை புதுவைக்குக் கொடுத்திருக்கிறார். புதுவைக்கும் புத்தகங்களுக்கும் என்ன நடந்தது என தெரியாத நிலையில் இருக்கிறார். சில பாடசாலைகளுக்கும் வசிகசளைகளுக்கும் அவர்  தன்னிடம் இருந்த புத்தகங்களைக் கொடுத்துள்ளார்.

அவுஸ்திரேலிய ஜேர்மனி போன்ற நாடுகளில் பழைய புத்தகங்கள் எங்கே போகின்றன என்பதை தனது அனுபவ வாயிலாக வெளிப்படுத்துகிறார். ஒருசிலர் கெளரவத்துக்காக புத்தகங்களை வாங்குகிறார்கள். அதனை அவர்கள் படிக்கிறார்களா இல்லையா என்பது பரம இரகசியம். பிரபலமான ஒருவருக்கு முருகபூபதி  கையெழுத்துப் போட்டுக் கொடுத்த புத்தகம், அவுஸ்திரேலிய நூலகத்தில்  இருப்பதை அவர் கண்டுள்ளார். இலக்கியத்தை நேசிப்பவர்களால் இதனைச் சகித்துக்கொள்ள முடியாது.
 பல எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய தொடர்கதை, நாவல் நெடுங்கதை  என்பனவற்றைப் பற்றி இலக்கியத்தில் கூட்டணி எனும் தலைப்பில் விபரிக்கிறார்.  இலங்கைப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியான இலக்கியக்  கூட்டணி பற்றிய விபரங்களையும் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியான அக்கினிக்குஞ்சு எனும் இனிய இதழில் சுவிட்ஸர்லாந்து ,பிரான்ஸ்,டென்மார்க்,ஜேர்மனி,கனடா,நோர்வே,அவுஸ்திரேலியா,இலண்டன், யாழ்ப்பாணம், ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இணைந்து எழுதிய  தொடர்கதையைப் பற்றிய விபரத்தையும் பதிந்துள்ளார்.

 சொல்ல வேண்டிய கதைகள் என்ற புத்தகத்தில் உள்ள 20 கட்டுரைகளும். ஏதோ ஒருவகையில் வாசிப்பவரின் வாழ்க்கையில் வந்து போன சம்பவங்களில் எச்சமாக இருக்கின்றன. முருகபூபதி,   அனுபவத்தில் சந்தித்த சொல்ல வேண்டிய கதைகள் இன்னமும் உள்ளன. சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவற்றை அவர் பதிவு செய்து வருகிறார். அவருடைய பட்டறிவு அனைத்தும்  அனைவருக்கும் பிரயோசனமாக உள்ளன.
நன்றி; ஜீவநதி




Thursday, February 15, 2018

ஏபரல் 7 ஆம்திகதி ஐபிஎல் ஆரம்பம்


எட்டு  அணிகள் பங்கேற்கும் 11–வது .பி.எல். 20 ஓவர் கிறிக்கெற் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஏப்ரல் 7 ஆம் திகதி தொடங்கும் .பி.எல். திருவிழா மே 27 ஆம் திகதி வரை நடக்கிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க போட்டியில்  நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.
ஒன்பது நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகள் என ஒட்டுமொத்தமாக 64 போட்டிகள் இடம்பெறுகின்றன

இந்த சீசனில் நேரம் மாற்றப்பட்டு மாலை 5.30 மணி, இரவு 7 மணிகளில் ஆட்டங்கள் தொடங்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. போட்டி நேரத்தை மாற்றுவதற்கு அணிகளின் உரிமையாளர்களும், ஒளிபரப்பு நிறுவனத்தாரும் எதி£ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேரத்தை மறுபடியும் .பி.எல். நிர்வாகம் மாற்றியுள்ளது. முந்தைய ஆண்டுகள் போலவே இரவு 8 மணிக்கு தொடங்கும். ஒரே நாளில் இரண்டு போட்டிகள்  இடம்பெறும் போது ஒரு ஆட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும்.