Tuesday, May 19, 2020

திறமையற்ற ஜனாதிபதி ஒபாமா டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு


அமெரிக்காவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி ட்ரம்பின் அரசு தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி  பராக் ஒபாமா சமீபத்தில் ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அமெரிக்காவில் இணைய தளம் மூலம் நடந்த ஒரு பள்ளி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஒபாமா பேசும்போது, “கொரோனா தொற்று இறுதியாக நாட்டின் திரைசீலையை கிழித்து விட்டது. அதிகாரிகளும் தாங்கள் ஒரு பொறுப்பில் இருப்பதை உணரவில்லை. நாட்டின் தலைமையிடம் இருக்கும் தோல்விகளை இந்த பெருந்தொற்று காட்டி விட்டது. குறைந்தது கொரோனாவை கட்டுப்படுத்துவது போல நடிக்க கூட தெரியவில்லை. அமெரிக்காவின் மானத்தை வாங்கும் வகையில் தாறுமாறான கேள்விகளை ஆட்சிகள் இருப்பவர்கள் எழுப்புகின்றன” என்று ஜனாதிபதி ட்ரம்பை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி  ட்ம்ப் பதிலடி கொடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒபாமா தெரிவித்த கருத்து குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து ட்ரம்பு கூறும்போது, “ஒபாமா ஒரு திறமையற்ற  ஜனாதிபதியாக இருந்தார். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அவர் முற்றிலும் திறமையற்றவர்” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல்  நடைபெற உள்ளது. ட்ரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோபீடனுக்கு ஆதரவாக ஒபாமா தீவிரமாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்தே அவர் ட்ரம்பின் அரசை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸை கண்டுபிடிக்குமா மோப்ப நாய்?


கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸை உலகில் இருந்து அடியோடு ஒழித்துக்கட்டுவதற்கு உலகமெங்கும் உள்ள விஞ்ஞானிகள் கணக்கற்ற ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் இந்த கொலைகார கொரோனா வைரஸ் தினமும் காட்டுத்தீ போல மனிதர்களை குறிவைத்து தாக்கி வருகிறது.

 
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு, அதிலும் அவர்களுக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதற்கான வெளி அடையாளங்கள் தெரிவதற்கு முன்பே கண்டுபிடிப்பதற்கு, மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

 இதற்கான சோதனையை லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மருத்துவ கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் நடத்துகின்றனர். அவர்கள் மருத்துவ மோப்ப நாய்கள் மற்றும் டர்ஹாம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை நடத்துகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் முதல்கட்ட நோக்கம், ஒருவரின் உடலில் ஏற்படுகிற மணத்தின் அடிப்படையில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா? என்பதை தீர்மானிப்பது ஆகும்.இந்த சோதனையானது பல்கலைக்கழகங்களின் முன்னணி நோய் கட்டுப்பாட்டு வல்லுனர்களையும், மருத்துவ மோப்ப நாய்களையும் ஒன்றிணைக்கிறது. இந்த நிபுணர்கள் ஏற்கனவே இத்தகைய நாய்களை புற்றுநோய், மலேரியா, பார்கின்சன்ஸ் டிசீஸ் என்று அழைக்கப்படுகிற நடுக்குவாத நோய் பாதித்தவர்களை அவர்கள் உடலில் உள்ள வாசனை மூலம் கண்டறிய வெற்றிகரமாக பழக்கியவர்கள் ஆவார்கள்.

இதுபற்றி இங்கிலாந்து புதுமையான கண்டுபிடிப்புகள் துறை மந்திரி லார்டு பெத்தேல் கூறும்போது, “இத்தகைய நாய்கள் ஏற்கனவே குறிப்பிட்ட புற்றுநோய்களை கண்டறிந்துள்ளன. மேலும், இந்த கண்டுபிடிப்பு எங்கள் பரந்த பரிசோதனை முறையில் வரைவான முடிவுகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.


மேலும், “இதில் துல்லியமான முடிவுகள் அவசியம். எனவே இந்த சோதனை, கோவிட்-19 மோப்ப நாய்களால் கொரோனா வைரசை நம்பத்தகுந்த முறையில் கண்டறிந்து, பரவுவதை நிறுத்த முடியுமா என்பதை நமக்கு தெரிவிக்கும்” என்றும் அவர் கூறினார்.

கொரோனா அறிகுறிகள் இல்லாத அதே நேரத்தில் அந்த வைரஸ் பாதிப்புள்ளவர்களை அடையாளம் கண்டறிய மோப்ப நாய்களை பயிற்றுவிக்க முடியுமா? என்பது இந்த சோதனை முடிவில் தெரியவரும். கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு சோதனைகளில் இதுவும் ஒன்றாக அமையும்.